MN Roy Or Arasiyal Vazhkai Varalaru Book By Samaren Roy in tamil Translated By Ramachandra vaidyanath Bookreview By V. B. Ganesan நூல் அறிமுகம்: சமரேன் ராயின் எம்.என். ராய்  ஓர் அரசியல் வாழ்க்கை வரலாறு தமிழில்: ராமச்சந்திர வைத்யநாத் | வீ. பா. கணேசன்



போராட்ட நாயகன் எம். என். ராய்
                         – வீ. பா. கணேசன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவை ஒட்டி கட்சியின் பயணத்தை சித்தரிக்கும் நூல்கள் மட்டுமின்றி தொடக்க காலத்தில் அதன் அடிவைப்புக்கு ஆதாரமாக இருந்த ஆளுமைகள் பற்றிய நூல்களும் வெளிவரத் தொடங்கியுள்ளன. அந்த வரிசையில் தாஷ்கெண்ட் நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளையை தொடங்கி வைத்த எம். என். ராயின் வாழ்க்கைச் சித்திரத்தை பாரதி புத்தகாலயம் “ எம். என். ராய் ஓர் அரசியல் வாழ்க்கை வரலாறு” என்ற சமரேன் ராயின் எழுத்தை தமிழில் கொண்டு வந்துள்ளது பாராட்டுதலுக்கு உரியது. 

வெகுமக்களால் பெரிதாக விரும்பப்படாது எதிர்நிலையில் நின்றபோதிலும் மக்களுக்கு அதிர்ச்சியூட்டி, அவர்கள் அதுவரை தூக்கிப் பிடித்துவந்த லட்சியங்களையும் விழுமியங்களையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்ற உறுதியுடன் தன் வாழ்நாளின் இறுதிவரை செயல்பட்டவர் எம்.என். ராய். விடுதலைக்கான முன் நிபந்தனையாக இந்தியாவில் ஒரு தத்துவார்த்தப் புரட்சி நடத்த வேண்டும் என முன்மொழிந்து அதற்கான பரப்புரைகளிலும் ஈடுபட்டவர்.

1918இல் வெளியான ராஜத் துரோகக் குழுவின் அறிக்கை திலகரையும் ராயையும் முதன்மையான (Principal) ராஜத் துரோகிகளாக அடையாளம் காட்டியது. இத்தகையோரின் செயல்களை தடுத்தும்பொருட்டே பிரிட்டிஷ் காலனி அரசு 1919இல் ரவ்லட் என்ற அடக்குமுறை சட்டத்தையும் இயற்றியது. அவ்வகையில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க வழக்குகளான ஹவுரா குண்டுவெடிப்பு வழக்கு (1910), கான்பூர் (1924), மீரட் (1929) சதிவழக்குகள் ஆகியவற்றில் குற்றம் சாட்டப்பட்டவராகவும் ராய் இருந்தார். மேலும் ருஷ்யாவிலிருந்து இந்தியாவிற்கு ராய் அனுப்பி வைத்த தூதுவர்களின் மீதே (1922 முதல் 1924 வரை) பெஷாவர் சதிவழக்குகள் போடப்பட்டன.

இந்தியாவின் விடுதலைக்காக பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்ட அனுசீலன் சமிதியில் தொடங்கி அவரது இறுதிநாட்களில் நடத்தி வந்த இந்திய மறுமலர்ச்சி நிறுவனம் வரையில் ராயின் வாழ்க்கைப் பயணம் எண்ணற்ற மாற்றங்களைக் கொண்டு வந்ததும் உண்மையே.

அவரது 14 வயதிற்கும் 67 வயதிற்கும் இடைப்பட்ட காலத்தில் ஜதீன் முகர்ஜி, ராஷ் பிகாரி போஸ், காந்தி, நேரு, சுபாஷ் சந்திர போஸ் போன்ற இந்திய ஆளுமைகள், மைக்கேல் பொரோடின், லெனின், ட்ராட்ஸ்கி, ஜினோவியேவ், ஸ்டாலின், புகாரின் போன்ற ருஷ்ய ஆளுமைகள், சன் யாட் சென், மாவோ போன்ற சீன ஆளுமைகள், ஹோ சி மின் போன்ற எண்ணற்ற தலைவர்கள் பலரோடும் பல்வேறு சூழல்களில், பல்வேறு தகுதிகளுடன் இணைந்தும் முரண்பட்டும் செயல்பட்டவராகவும் அவர் இருந்தார். 

ஐரோப்பாவிற்கு வெளியே முதல் கம்யூனிஸ்ட் கட்சியை மெக்சிகோவில் உருவாக்கி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளையை தாஷ்கெண்ட்டில் நிறுவி, மூன்றாவது அகிலத்தின் தலைவர்களுள் ஒருவராக உயர்ந்து, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி நாடுகளில் செயல்பட்டு வந்த  கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வழிகாட்டிய பெருமை மிக்கவராகவும் ராய் இருந்தார். 

தன் தாய்மொழியான வங்காளி தவிர, ஆங்கிலம், ஸ்பானிஷ், ஜெர்மன், ருஷ்யன் என பல மொழிகளிலும் கூர்மையோடு எழுதிய, சுமார் 35 ஆண்டுக்காலம் தொடர்ந்து ஆசிரியராய், பதிப்பாளராய் ஏதேனும் ஓர் இதழின் உயிர்மூச்சாய் விளங்கிய பத்திரிக்கையாளராகவும் அவர் இருந்தார். 

மூன்றாவது கம்யூனிஸ்ட் அகிலத்தின் இரண்டாவது காங்கிரஸில் மெக்சிகோ கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதியாக ராய் கலந்து கொண்டார். அதில் காலனி நாடுகளைப் போன்ற பின் தங்கிய நாடுகள் முதலாளித்துவம் அல்லாத பாதையிலும் வளர்ச்சி பெற முடியும் என்ற கருத்தாக்கத்தை லெனின் முன்வைத்தபோது “சோவியத் அரசு அவர்களுக்கு சகல விதத்திலும் உதவிபுரியத் தயாராக இருக்கும்போது பின் தங்கிய மக்கள் முதலாளித்துவ வளர்ச்சியின் ஊடே செல்வதைத் தவிர்க்க முடியாது என்ற அனுமானம் தவறாகி விடும்” என்று குறிப்பிட்டார். 

தேசிய மற்றும் காலனியப் பிரச்சனைகள் பற்றிய அறிக்கை குழுவின் முன் வைக்கப்பட்டபோது அது லெனினுடைய கோட்பாட்டையும் ராயின் பிற்சேர்க்கையையும் திருத்தங்களுடன் ஏற்றது. எனினும் இரண்டாவது காங்கிரஸின் நடவடிக்கைகளை உள்ளடக்கிய அறிக்கையில் ஜெர்மன் மற்றும் ருஷ்யப் பதிப்புகளில் காங்கிரஸின் குழுவில் திருத்தங்களுடன் ஏற்கப்பட்ட கோட்பாட்டிற்கு மாறாக, ராய் முன்வைத்த கோட்பாட்டின் மூல வரைவு இடம்பெற்று விட்டது. 1934வரை இந்தத் தவறு கண்டறியப்படவில்லை. இதனால் ராயின் ஆய்வுரை போதிய கவனத்தைப் பெறத் தவறியதோடு, இதுபற்றிய சர்ச்சையும் தொடர்ந்தது.

அந்நாளில் பெரும்பாலானவர்களால் கிழக்கத்திய நாடுகளின் பிரச்சனை என்று கூறப்பட்டு வந்த காலனி நாடுகளின் பிரச்சனையை ராய் ஏற்கனவே தான் கொண்டிருந்த தேசியவாதத்திலிருந்து அகன்று மார்க்சிய அடிப்படையில் அணுகினார்.  புரட்சியானது முன்னேறிய முதலாளித்துவ (metropolitan) நாடுகளில் தொடங்கும்; அல்லது காலனி நாடுகளில் புரட்சிக்கு அது தூண்டுதலாக இருக்கும் என்ற சோஷலிச அகிலத்தின் படிப்படியான புரட்சி என்ற கோட்பாட்டினை ராயின் இந்த ஆய்வுரை நிராகரித்தது. 

“காலனி நாடுகள் ஏகாதிபத்திய நாடுகளின் முதலாளித்துவத்திற்கு வலுச் சேர்க்கிறபடியால் காலனி நாடுகளில் நடைபெறுகிற புரட்சியால் மட்டுமே முன்னேறிய நாடுகளின் முதலாளித்துவத்தைத் தூக்கியெறிய ஏதுவாக்கும். காலனியாதிக்கப் பேரரசை அழித்திடாமல் ஐரோப்பாவில் முதலாளித்துவ அமைப்பு முறையை தூக்கியெறிவது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. இதை நிறைவேற்றும் வகையில் காலனி நாடுகளில் ஏகாதிபத்தியத்தைத் தூக்கியெறியும் பொருட்டு செயல்பட்டு வரும் சக்திகளுடன் கம்யூனிஸ்ட் அகிலம் உறவுகளை ஏற்படுத்திக் கொள்வது அவசியமாகும். இத்தகைய ஒட்டுறவு என்பது தேசியவாதத்தைத் தூக்கிப் பிடிப்பதாக இருக்காது…

“காலனி நாடுகளில் உள்ள மக்கள் முதலாளித்துவ ஜனநாயக கட்டத்தைக் கடந்துதான் செல்ல வேண்டும் என்ற கருத்தோட்டம் தவறானது. காலனி நாடுகளில் நடைபெறக்கூடிய புரட்சியானது முதல் கட்டத்தில் ஒரு கம்யூனிஸ்ட் புரட்சியாக இருக்கப் போவதில்லை. துவக்கநிலையிலேயே புரட்சியின் தலைமையானது கம்யூனிஸ்ட் முன்னணிப் படையின் கைகளில் இருக்குமானால் புரட்சிகரமான வெகுஜனங்கள் வழிதவறிய பாதையில் செல்ல முடியாது. அந்நிலையில் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் பின் வர்க்கப் போராட்டமாக மாற வேண்டியது கட்டாயமாகும். மேலும் காலனி நாடுகளில் ஆரம்ப காலங்களிலேயே வர்க்கப் போராட்டத்தைத் துவக்கி வைப்பது என்பது ஐரோப்பாவில் தூக்கியெறியப்பட்டு ஆசியாவில் தஞ்சம் புக விழையும் இடம்பெயர்ந்த ஐரோப்பிய முதலாளித்துவத்தின் ஆபத்திற்கு எதிராய் மக்களை விழிப்புணர்வு கொள்ளச் செய்வதும் ஆகும்.”

விடுதலை இயக்கங்களின் சமூக குணப்பாங்கு என்பது எல்லா இடங்களிலும் ஒரேமாதிரியாக இருப்பதில்லை. முதலாளித்துவம் வளர்ச்சியடைந்த காலனி நாடுகளில் வெளிநாட்டு முதலாளித்துவத்திற்கு எதிராக மிகவும் பலவீனமான தேசிய முதலாளித்துவம் போராடி வருவதைக் குறிப்பிட்ட ராய், அதனால் தேசிய முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான போராட்டத்தை நடத்தவில்லை என்றார். மேலும் இத்தகைய நிலப்பிரபுத்துவ சக்திகளிடமிருந்து தனக்குத் தேவையான வலுவையும் ஆதரவையும் பெற்று வருவதால் அந்த சக்திகளுடன் அது அணிசேர்க்கையைக் கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டார். 

வேறொரு அம்சத்தில் கிழக்கத்திய நாடுகளில் இருந்து வரக்கூடிய கம்யூனிஸ்ட் கட்சிகளும் அவற்றின் வரலாற்றுப் பாத்திரமும் அதிமுக்கியத்துவம் பெறுகின்றன என்றும் ராய் வற்புறுத்தினார். காலனி நாடுகளில் 150 ஆண்டுகளுக்குப் பிறகு முதலாளித்துவம் வந்திருப்பதால் ஒரு விடுவிப்பாளராக அது தன் பங்கை ஆற்றுவதற்கு காலம் கடந்து விட்டது. எனவே தற்போதைய நிலைமையில் ‘என்னதான் சிறு குழுக்களாக இருப்பினும் விடுதலை இயக்கத்தின் பொருட்டு கம்யூனிஸ்ட் குழுக்கள் தேவைப்படுகின்றன.’ என்றும் அவர் குறிப்பிட்டார். 

இந்தத் திசைவழியில் அவர் பயணித்த காலத்தில் எண்ணற்ற எதிர்ப்புகளை  எதிர்கொண்ட போதிலும், அவர் மேற்கொண்டிருந்த கருத்துகள், அதன் காலம் ஆகியவற்றிற்குப் பொருத்தமான வகையில் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.  நூலின் ஆசிரியர் சமரேன் ராய் குறிப்பிடுவது போல “ வெற்றிகரமான மனிதர் என்ற சாதாரணப் பொருளில் பார்க்கையில் அவர் அத்தகையவரல்ல. தான் முன்வைத்த கருத்துக்களிலிருந்து மாறுபட்டு அவர் செயல்பட்டிருந்தால், அவர் ஒரு சந்தர்ப்பவாதியாக சித்தரிக்கப்பட்டிருப்பார். தனது கருத்துக்களை மாற்றிட மறுத்திருப்பாரேயாகில், வறட்டுத் தத்துவவாதியாகவோ, யதார்த்தத்திற்குப் புறம்பானவராகவோ இருந்திருப்பார். எப்படியிருப்பினும் 1954 ஜனவரியில் அவர் மரணமடைந்தபோது பெரும்பாலோரால் மறக்கப்பட்ட ஒரு மனிதராகத்தான் இருந்தார். தன் வாழ்வை முழுமையான சர்வதேசியத்திற்கு அர்ப்பணித்து, அதன் பொருட்டு எந்தவொரு அங்கீகாரத்தையும் பெற்றிடாத இவரைப் போன்று அநேகமாக வேறெந்த இந்தியரும் இருந்திருக்க முடியாது” என்ற முடிப்புரை மிகவும் பொருத்தமானதே ஆகும்.

இந்நூலை தமிழில் இயல்பாக மொழிபெயர்த்துள்ள ராமச்சந்திர வைத்யநாத் நமது பாராட்டுக்குரியவர். 

நன்றி: தமிழ் இந்து (22.01.2022)

நூல்: எம்.என். ராய்  ஓர் அரசியல் வாழ்க்கை வரலாறு
ஆசிரியர்: சமரேன் ராய்
தமிழில்: ராமச்சந்திர வைத்யநாத்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: ரூ. 200/-
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்: thamizhbooks.com

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



One thought on “நூல் அறிமுகம்: சமரேன் ராயின் எம்.என். ராய்  ஓர் அரசியல் வாழ்க்கை வரலாறு தமிழில்: ராமச்சந்திர வைத்யநாத் | வீ. பா. கணேசன்”
  1. தங்களின் விமர்சனம் புத்தகத்தின் மீது நல்ல மதிப்பை உண்டாக்கி படிக்கும் ஆவலை தோற்றுவிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *