நேற்று ஒரு தொலைக்காட்சியில் ‘மோ’ என்ற திரைப்படம் பார்த்தேன். 2016இல் வெளியான இத்திரைப்படம் புதிய தொழில்நுட்ப கலைஞர்களால் உருவாக்கப்பட்டதாம். கைவிடப்பட்ட பாழடைந்த ஒரு பள்ளிக் கட்டிடத்தை விலைக்கு வாங்க இரண்டு ரியல் எஸ்டேட் புள்ளிகள் மத்தியில் போட்டி ஏற்படுகிறது. அங்கே பேய் இருப்பதாக பயங்காட்டி ஒருவரை மற்றொருவர் விரட்டப் பார்க்கிறார். அதற்காக அவர் ஒரு திரைப்படக் குழுவை ஏற்பாடு செய்கிறார். கணக்கு ஆசிரியராக பணி புரிய ஆர்வம் கொண்ட பெண் ஒருவர் அது நிறைவேறாமல் இறந்து போய் பேயாக அங்கே உலவுகிறார். திரைப்படக் குழுவினர் தன்னிடம் கணக்கு பாடம் கேட்டால் தான் அங்கிருந்து போய்விடுவதாக அந்தப் பேய் சொல்கிறது. அவர்களும் ஒத்துக் கொள்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க முடியாமல் அது ஓடிவிடுகிறது. இதுதான் கதை. வழக்கமான அடிதடியோ காதலோ இல்லை. மற்ற பேய்க் கதைகளிலிருந்தும் சற்று மாறுபட்ட கதை.
படத்தின் இறுதிக் காட்சி பல ஆண்டுகளுக்கு முன் ஆனந்தவிகடனில் வந்த ஒரு கதையை நினைவுபடுத்துகிறது.. ஒரு தகப்பனார். அவரது மகன் வகுப்பில் மீண்டும் மீண்டும் தேர்ச்சி பெறாமல் தவறுகிறான். அவரது வருத்தத்தைக் கண்ட நண்பர் ஒருவர் தான் டியூஷன் சொல்லிக் கொடுத்து அவனை எப்படியாவது தேர்ச்சி பெற வைக்கிறேன் என்கிறார். ஆனால் அவராலும் முடியவில்லை. அவனைக் கண்டாலே ஓடி ஒளியும் நிலமைக்கு வந்து விடுகிறார். திரைப்படத்தின் முடிவையும் இந்தக் கதையையும் நகைச்சுவையாகப் பார்க்கலாம் என்றாலும் நமது கல்வி முறையும் தேர்வு முறைகளும் விமர்சனங்களுக்கும் விவாதங்களுக்கும் உட்படுத்தப்படாததையே இப்படிப்பட்ட கதைகள் காட்டுகின்றன.
ஒரு அருமையான திரைக்கதையை படக் குழுவினர் தவற விட்டுவிட்டார்கள் என்று தோன்றுகிறது. அந்தப் பெண்ணின் படிப்பு, கணித ஆர்வம், ஆசிரியராக பணி புரிய விருப்பம்,இறப்புக்குக் காரணமான அவரது நோய் ஆகியவை மிக சுருக்கமாக இரண்டு மூன்று நிமிடங்களில் நிழலுருவாக காட்டப்பட்டு முடிந்துவிடுகிறது. அதை ஒரு முழுமையான பிளாஷ் பேக்காக காட்டியிருந்தால் படம் சிறப்பாக அமைந்திருக்கும். அல்லது அந்தப் பள்ளியை தன்னை விரட்ட வந்த திரைப்படக் குழுவினரைக் கொண்டே சீரமைத்து மாணவர்கள் சேர்க்கப்பட்டு கணித வகுப்புகள் நல்ல முறையில் நடத்துவதைப் பார்த்துவிட்டு அந்தப் பேய் ஓடுவதாகக் காட்டியிருக்கலாம்.
நகைச்சுவையும் ரசிக்கும்படியாக இல்லை. பயமுறுத்தும் காட்சிகளும் அலுப்பு தட்டுவதாக இருக்கிறது. சந்திரமுகி படத்தில் ரஜினியும் வடிவேலுவும் நடிக்கும் காட்சிகளைப் பார்த்துவிட்டு இதைப் பார்க்கும்போது மிக சாதாரணமாக தோன்றுகிறது. ஆனால் பேய் என்றால் அறைவது, சீலிங் பேன் மேல் போய் உட்காருவது போன்ற வழக்கமான பேய் திரைப்படங்களில் திரும்ப திரும்ப பார்த்த காட்சிகள் இல்லாதது ஆறுதல். கணித ஆசிரியராக பணி புரியும் விருப்பம் நிறைவேறாததால் பேயாக அலைந்து கொண்டிருப்பது என்பது புதிய கற்பனை. பாராட்டலாம். நீட் தேர்வினால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் ஆவிகள் நம் கல்வி நிலையங்களை சுற்றிக் கொண்டிருக்கக்கூடும். அதற்கு என்ன பரிகாரம் செய்யப் போகிறோம்?