ஏற்காடு இளங்கோ எழுதிய "மாதிரி செவ்வாய்க் கிரக வாழ்க்கை" அறிவியல் கட்டுரை | அனலாக் நிலையம் | Model Of Life on Mars | www.bookday.in

அறிவியல் கட்டுரை: மாதிரி செவ்வாய்க் கிரக வாழ்க்கை – ஏற்காடு இளங்கோ

  மாதிரி செவ்வாய்க் கிரக வாழ்க்கை     

– ஏற்காடு இளங்கோ

விண்வெளி என்பது ஒரு கடுமையான சூழலைக் கொண்டுள்ளது. விண்வெளியில் வாழும் போதும், பணிபுரியும் போதும் விண்வெளி வீரர்கள் பல ஆபத்துக்களை எதிர்கொள்கின்றனர். பொதுவாக விண்வெளி கதிர்வீச்சு, தனிமை/அடைப்பு, பூமியிலிருந்து உள்ள தூரம், புவியீர்ப்பு புலன்கள் மற்றும் கடுமையான சூழல்கள் ஆகிய ஐந்து வகையான ஆபத்துக்களைச் சந்திக்கின்றனர். இந்த ஆபத்துக்களைச் சமாளிப்பதற்காக பூமியில் ஒப்புமை நிலையத்தில் பயிற்சி எடுக்கின்றனர். இது அனலாக் திட்டம் (Analog Mission) என அழைக்கப்படுகிறது.

அனலாக் நிலையம்

இது ஒப்புமை விண்வெளி நிலையம் எனலாம். இது சந்திரன், செவ்வாய்க் கிரகம், சிறுகோள்கள் மற்றும் பிற நட்சத்திரங்களைச் சுற்றிவரும் புறக்கோள்களை உருவகப்படுத்தியது போலவே இருக்கும். அங்கு நிலவும் கடுமையான சூழல்களை உருவாக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டது ஆகும். இது பூமியில் உருவாக்கப்பட்ட ஒரு அதிநவீன பூமி சார்ந்த வசதியாகும். இது மனித விண்வெளிப் பயணங்களுக்கு முன்னதாக விரிவான ஆராய்ச்சி மற்றும் சோதனைகளை மேற்கொள்ள உதவுகிறது.

படம் -1 அனலாக் மிஷன்

விண்வெளி வீரர்களுக்கு நிலவு மற்றும் செவ்வாய்க் கிரகம் போன்ற கடுமையான சூழல்களில் வாழ்வது, வேலை செய்வது மற்றும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது போன்றவற்றை பூமியிலேயே உருவாக்கி பயிற்சி அளிக்கிறது. இங்கு விண்வெளிப் பயணத்திற்கு தேவையான மன உறுதி, வாழ்விட மேலாண்மை மற்றும் ரோபோட்டிக் கருவிகளைக் கையாளும் திறனைகளைப் பெறுகின்றனர். மேலும் புதிய வாழ்விட வடிவமைப்பு, உயிர் காக்கும் அமைப்புகள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் சோதிக்கப்படுகின்றன.

இங்கு நிலவு மற்றும் செவ்வாய்க் கிரகங்களில் மனிதர்கள் நீண்ட காலம் தங்குவதற்கான சாத்திய கூறுகளை ஆராய்கின்றனர். தனிமைப்படுத்தல் என்பது மனித ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது, குறைந்த ஈர்ப்பு விசை மனித உடலை எவ்வாறு பாதிக்கிறது ஆகிய பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.

அனலாக் விண்வெளி வீரர்

அனலாக் ஆய்வு நிலையங்கள் பொதுவாக தீவிர விண்வெளி சூழல்களுடன் கூடிய இயற்பியல் ஒற்றுமைகளின் அடிப்படையில், பூமியில் அடையாளம் காணப்பட்ட இடங்களில் மட்டுமே செயல்படுகின்றன. அதே சமயத்தில் பூமியில் உள்ள எந்த அனலாக் நிலையமும் மனித விண்வெளிப் பயணத்தின் அனைத்து அம்சங்களையும் உண்மையிலேயே உருவகப்படுத்த முடியாது. இருப்பினும் பரந்த அளவிலான அனலாக் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சந்திரன் அல்லது செவ்வாய்க் கிரகத்தில் நிலவும் நிலமைகளை பிரதிபலிக்கும் பாலைவனங்கள், குகைகள் அல்லது சிறப்பு வாழ்விடங்கள் போன்ற பூமியில் கடுமையான சூழல்களில் உருவகப்படுத்தப்பட்ட நிலையத்தில் ஆய்வுகள் நடத்துகின்றனர். இது விண்வெளிப் பயணத்திற்கு சமமானது. இது மனித அனலாக் பயணமாகும். இதில் ஆய்வு மேற்கொள்ளும் ஒரு ஆராய்ச்சியாளரை அனலாக் விண்வெளி வீரர் என அழைக்கப்படுகிறார்.

இந்த அனலாக் நிலையம் விண்வெளி வீரர் பயிற்சி மையமாகச் செயல்படுகிறது. இது பல்வேறுபட்ட சூழல்களில் பயிற்சிகளையும், பணிகளையும் வழங்குகிறது. இதில் விண்வெளி உடை, புதிய உபகரணங்களை மதிப்பீடு செய்தல், உளவியல், உயிரியல் மற்றும் பொறியியல் ஆகிய துறைகளில் பணி செய்கிறார்கள். இங்கு சில நாட்கள் முதல் ஒரு மாதத்திற்கு மேலாக அனலாக் பயணம் நடைபெறுகிறது. அனலாக் வீரர்கள் பூமியை விட்டு வெளியேறாமலேயே எதிர்கால மனித விண்வெளி ஆய்வுகளுக்கு உதவுகிறார்கள்.

உருவகத் தளம்

அனலாக் எனப்படும் உருவகத் தளம் (Simulation) ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் உள்ளது. இந்தியாவில் மனித அன்லாக் திட்டம் 2024 ஆம் ஆண்டு நவம்பர் 1 அன்று தொடங்கப்பட்டது. இது லடாக் பகுதியில் அமைந்துள்ளது. இது சந்திரன் மற்றும் செவ்வாய்ப் பயணங்களுக்கு அனலாக் விண்வெளி நடவடிக்கைகளைச் செய்யும் நோக்கத்துடன் செயல்படுகிறது.

படம்-2: இந்திய அனலாக்

நாசா

நாசா அமைப்பு ஜான்சன் விண்வெளி மையத்தில் CHAPEA (Crew Health and Performance Exploration Analog) என்ற அனலாக் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டம் செவ்வாய்க் கிரகத்தை உருவகப்படுத்தி அதில் ஆய்வு செய்ய உருவாக்கப்பட்டது. இது மூன்று ஓராண்டு கால CHAPEA திட்டமாகும். ஒவ்வொரு திட்டத்தின் போதும் நான்கு தன்னாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த ஆய்வாளர்கள் இங்கு ஒரு வருடத்திற்கு விண்வெளி வீரர்கள் போல் வாழ்ந்து பணியாற்றுவர். இது 1,700 சதுர அடி பரப்பளவு கொண்ட ஒரு வாழ்விடம் ஆகும்.

இது செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பு போலவே இருக்கும். இது செவ்வாய்க் கிரகத்தில் என்ன மாதிரியான கால நிலைகள் இருக்குமோ அதைக் கிட்டத்தட்ட மறு உருவாக்கம் செய்யப்பட்ட இடமாகும். இது முப்பரிமாணத்தில் (3D) அச்சிடப்பட்ட மார்ஸ் டியூன் ஆல்ஃபா (Mars Dune Alpha) என அழைக்கப்படுகிறது. இதில் தங்கி செவ்வாய்க் கிரகத்தின் சவால்களை சமாளித்து வாழ்வார்கள். இதில் தங்கும் இடங்கள், உடற்பயிற்சி பகுதி, 4 படுக்கை அறைகள், ஒரு சாப்பாட்டு அறை, வரவேற்பறைப் பகுதி, ஒரு மருத்துவ அறை, ஒரு பணி அறை, ஒரு பொழுதுபோக்கு பகுதி மற்றும் ஒரு பயிர் பகுதி ஆகியவை அடங்கும்.

படம்-3: தனி அறைகள் | PHOTO DATE: 11-30-22
LOCATION: Bldg. 220 – CHAPEA
SUBJECT: Photography of Crew Health and Performance Exploration Analog (CHAPEA) facility
PHOTOGRAPHER: BILL STAFFORD

பயிர் பகுதி என்பது செங்குத்து பண்ணையுடன் கூடியது ஆகும். இதில் மிளகாய், தக்காளி மற்றும் பிற காய்கறிகளை வளர்க்க பயன்படுத்தப்படுகிறது. இதன் வாழ்விடத்தின் வெளிப்புறம், செங்குத்துப் பாறைகளின் பின்னணி மற்றும் சிவப்பு மண்ணால் ஆன தரையுடன் செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பை உருவாக்குகிறது. இது ஒரு மாதிரி செவ்வாய்க் கிரகம் போன்றது. இதில் தொடர்ச்சியாக நடத்தப்படும் ஆய்வானது, எதிர்கால ரோபோ மற்றும் மனிதப் பயணங்களைத் திட்டமிட நாசாவிற்கு உதவுகிறது.

மாதிரி செவ்வாய்க் கிரகம்

இந்த மாதிரி செவ்வாய்க் கிரகத்தில் ஆய்வுகள் செய்வதற்காக இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் என நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டனர். 10 ஆயிரம் பேரில் கெல்லி ஹாஸ்டன் (Kelly Haston), ராஸ் ப்ராக்வெல்(Ross Brockwell), நேதன் ஜோன்ஸ் (Nathan Jones) மற்றும் அன்கா செலாரியு (Anca Selariu) ஆகியோர் தேர்வானார்கள். இவர்கள் ஒரு வருடத்திற்கு இந்த மாதிரி செவ்வாய்க் கிரகத்தில் ஒரு விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டனர். இது உண்மையில் ஓராண்டு கால சிறைவாசம் தான்.

செவ்வாய்க் கிரகத்துக்கு செல்லும் மனிதர்கள் அங்கு என்ன மாதிரியான உடல், உளவியல் ரீதியான சிக்கல்களை எதிர்கொள்வார்கள் என்று தெரிந்து கொள்ளவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். கெல்லி ஹாஸ்டன் என்ற பெண் வீரர் இதன் தளபதி ஆவார். இவர் மனித நோய்களைக் கண்டுபிடிப்பதில் ஒரு அனுபவம் வாய்ந்த ஆராய்ச்சி விஞ்ஞானி.

ராஸ் ப்ராக்வெல் என்பவர் இதன் விமானப் பொறியாளர் ஆவார். நேதன் ஜோன்ஸ் என்பவர் ஒரு மருத்துவ அதிகாரி மற்றும் தீவிர மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்றவர். அன்கா செலாரியு என்ற பெண் இதன் அறிவியல் அதிகாரியாகச் செயல்பட்டார். வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிப்பு மற்றும் உற்பத்தி, மரபணு சிகிச்சை மேம்பாடு மற்றும் தொற்றுநோய் ஆராய்ச்சித் திட்ட மேலாண்மை ஆகியவற்றில் இவருக்கு அனுபவம் உண்டு.

பயணம்

இந்த நான்கு விண்வெளி வீரர்கள் 2023 ஆம் ஆண்டு ஜூன் 25 அன்று தங்களது பயணத்தைத் தொடங்கினர். இந்த ஆய்வில் பங்கேற்ற நான்கு பேரையும் விஞ்ஞானிகள் தொலைதூரத்தில் இருந்து கண்காணித்து வந்தனர். அவ்வப்போது அவர்களுக்கு பணிகளைக் கொடுத்தனர். அவர்களின் உடல் மற்றும் உள நலன் குறித்த தகவல்களைச் சேகரித்து வந்தனர்.

செவ்வாய்க் கிரகத்திற்கு மனிதர்கள் உண்மையாக  பயணம் செய்ய வேண்டுமென்றால் 6 முதல் 9 மாதங்கள் ஆகும். இந்த நீண்ட நெடிய பயணத்தில் தனிமையில் இருக்கும் போது மனிதர்களுக்கு என்ன பாதிப்புகள் ஏற்படலாம் என்று கண்டறியவே இந்தத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. செவ்வாய்க் கிரகம் பூமியில் இருந்து சராசரியாக 225 (56 – 401 மில்லியன் கி.மீ.) மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. எனவே பூமியிலிருந்து கட்டுமானப் பொருட்களை அங்கு கொண்டு செல்வது சாத்திய மற்றது.

படம்-4: ஆய்வுப் பகுதி | PHOTO DATE: 11-30-22
LOCATION: Bldg. 220 – CHAPEA
SUBJECT: Photography of Crew Health and Performance Exploration Analog (CHAPEA) facility
PHOTOGRAPHER: BILL STAFFORD

செவ்வாய்க் கிரகத்தில் வாசிப்பிடங்கள் 3D தொழில்நுட்பம் மூலம் கட்டுவதே சாத்தியம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். ஆகவே தான் 3D தொழில்நுட்பத்துடன் கூடிய  வசிப்பிடத்தில் தங்கி ஆய்வு செய்கின்றனர். இந்த நீண்ட நெடிய பயணத்தின் போது மனிதர்கள் தனிமையில் இருக்க வேண்டி உள்ளது. அப்போது என்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதைக் கண்டறியவே இந்த ஆய்வு நடத்தப்படுகிறது. மேலும் அங்கு செல்பவர்கள் இந்த 3D தொழில்நுட்ப வசிப்பிடங்களைக் கட்ட வேண்டும்.

உணவு

ஒரு வெற்றிகரமான பயணத்திற்கு உணவு, ஊட்டச்சத்து மற்றும் உடல் எடை பராமரிப்பு ஆகியவை மிகவும் முக்கியமானது. பயணத்தில் கால அளவு அதிகரிக்கும் போது குழுவினருக்கு உணவுத் தேர்வு முக்கியத்துவம் பெறுகிறது. இந்த ஆய்வாளர்கள் ஓராண்டு காலம் பதப்படுத்தப்பட்ட உணவுகளையே சாப்பிட்டனர். அதாவது நீண்ட விண்வெளிப் பயணத்தில் சாப்பிடக்கூடிய பதப்படுத்தப்பட்ட உணவை உண்டனர்.

இந்தப் பயணத்தில் சில பயிர் வளர்ச்சி சோதனைகளையும் செய்தனர். இதில் உள்ள பயிர் வளர்ப்பு அமைப்பானது, வீட்டுக்குள் தோட்டம் அமைக்க பயன்படுத்தப்படும் அமைப்புகளைப் போன்றது. இது இலைப் பயிர்கள், மூலிகைகள் மற்றும் சிறு பழங்களின் வளர்ச்சிக்கு தேவையான நீர், ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஒளியை வழங்குகிறது. இவர்கள் பயிர் பகுதியில் உள்ள கண்ணாடி கூண்டில் உற்பத்தி செய்த உணவுகளையும் சாப்பிட்டனர்.

தகவல் பரிசோதனை

செவ்வாய்க் கிரகத்தில் சுவாசிக்க முடியாத காற்று, நுண் புவியீர்ப்பு மற்றும் வலுவான கதிர்வீச்சு உள்ளது. பூமியிலிருந்து ஒரு தகவல் செவ்வாய்க் கிரகத்திற்கு ஒளியின் வேகத்தில் பயணிக்கும் ரேடியோ அலைகள் மூலம் அனுப்பப்படுகிறது. அது செவ்வாய்க் கிரகத்திற்கு சென்று அடைவது அதன் தூரத்தைப் பொறுத்து மாறுபடும். பூமி மற்றும் செவ்வாய் மிக நெருக்கமாக இருக்கும்போது 4 நிமிடமும், அதிக தொலைவில் இருக்கும் போது 22 நிமிடமும் ஆகிறது. ஆகவே ஒரு கேள்வியைக் கேட்டு அதற்கு பதில் கிடைக்க 8-44 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். இந்தச் சவால்களை எதிர்கொள்வது பற்றிய சோதனைகளும் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. மன நலன்

இவர்கள் நீண்ட காலம் வாழும் போது எப்படி ஒன்றாக வாழ்கிறார்கள் மற்றும் ஒற்றுமையுடன் எப்படி தங்களுக்குள் மோதல்கள் இல்லாமல் இருக்கிறார்கள் என்பது கண்டறியப்படுகிறது. தங்கள் குடும்பங்களைப் பிரிந்து மன நலனில் பாதிப்புகள் ஏற்படாமல் எப்படி சமாளிக்கிறார்கள் என்ற ஆய்வும் செய்யப்பட்டது.

படம்-5: ஆய்வாளர்கள்

ஒராண்டு வாழ்க்கை

இந்த நான்கு வீரர்களும் செவ்வாய்க் கிரக வாசத்தை 2024 ஆம் ஆண்டு ஜூலை 6 அன்று பூர்த்தி செய்தனர். இவர்கள் 378 நாட்கள் முற்றிலும் தனிமையில் இருந்தனர். இந்த நான்கு பேரும் கடைசியாக வானத்தைப் பார்த்து ஓராண்டு காலம் முடிந்து விட்டது. இவர்கள் பூமியில் ஒரு செவ்வாய்க் கிரக வாழ்க்கையை வாழ்ந்தனர். உண்மையில் இது ஒரு சாதனையாகும். என்றாவது ஒரு நாள் செவ்வாய்க் கிரகத்தில் மனிதர்கள் வாழ இது வழிவகுக்கும்.

தொடரும் ஆய்வுகள்

நாசாவின் இரண்டாவது CHAPEA திட்டத்திற்காக நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 19 அன்று மாதிரி செவ்வாய்க் கிரகத்தில் வாழ்க்கையைத் தொடங்கினர். இது 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 31 அன்று முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாவது மற்றும் இறுதி திட்டமிடப்பட்ட CHAPEA பணி 2026 ஆம் ஆண்டில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாதிரி செவ்வாய்க் கிரக வாசமும் வெற்றி பெறும். இதன் பிறகு நாசா அமைப்பு, மனிதர்களைச் செவ்வாய்க் கிரகத்திற்கு அனுப்பும் என உறுதியாக நம்பலாம்.

📚 எழுதியவர் : 

✍️ – ஏற்காடு இளங்கோ

Reference

1.விக்கிபீடியா
2.நாசாவின் செவ்வாய்க் கிரகத்தில் ஒரு வருடம் வாழ்ந்த 4 பேர் – பூமியில் ஒரு விண்வெளி வாழ்க்கை (BBC)

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *