Discover the importance of Modern Agriculture and Environment. (நவீன வேளாண்மையும் சுற்றுச் சூழலும்) Modern Agriculture and Environment - https://bookday.in/

நவீன வேளாண்மையும், சுற்றுச் சூழலும்

நவீன வேளாண்மையும், சுற்றுச் சூழலும்

வேளாண்மை என்பது மண்வளத்தைப் பாதுகாத்து, பயிர்களையும் கால்நடைகளையும் வளர்த்து உணவு, உடை, இருப்பிடம் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியத் தேவைகளைப் பெற்றிடும் ஒரு அறிவியல் கலையாகும். நிலமின்றி சூழலோ, சூழலின்றி வேளாண்மையோ, வேளாண்மை இன்றி உணவோ, உணவின்றி உயிரோ சாத்தியமில்லை.

மனிதகுல வளர்ச்சியில் முதன்மையான சிந்தனையாக, செயலாக, வாழ்வியலாக உருவெடுத்தது வேளாண்மையேயாகும். வேட்டைச் சமூகமாகவும், கிடைப்பதை சேகரித்து உண்ணும் அலைகுடிகளாகவும் இருந்த மனித இனம் 10000 ஆண்டுகளுக்கு முன்புதான் விதைக்கும் சமூகமாக, நெறிப்படுத்திய வேளாண் முறைகள் மற்றும் பயிரிடும் உத்திகளை உருவாக்கி சமூக வாழ்வை நோக்கி பயணிக்கத் தொடங்கியது.

அதற்கென இயற்கையான தாவரங்களையும், விலங்குகளையும் அவர்கள் வசப்படுத்தினார்கள். சாதகமான இடங்களில் குறிப்பாக நதிக்கரைகளில் வாழ்வை அமைத்துக் கொண்டனர். வேளாண்மை முறையில் பற்பல வழிமுறைகளை கண்டறிந்து செயல்படுத்தினர்.

கி.பி. 5500 ஆம் ஆண்டுகளில் எகிப்து, சீனா உள்ளிட்ட நாடுகளில் நீர்ப்பாசன முறைகளை வடிவமைத்து செயல்படுத்தத் தொடங்கினர். ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் கி.பி.6000 ஆண்டுகளில் தரமான விதைகளைச் சேகரித்து பாதுகாத்தனர். ரோமானியர்கள் படையெடுப்புக்களின்போது ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் தாங்கள் கண்ட வேளாண் நுட்பங்களை பதிவு செய்துள்ளனர். வியட்நாமின் குறுகியகாலப் பயிர்களையும், வேளாண் கருவிகளையும் சீனர்கள் பின்பற்றலானார்கள். கி.பி 1000 ஆண்டுகளில் வேளாண்மை அறிவியலாகப் பரிணமித்தது. 15 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகளில் புதிய பல தாவரப் பயிர்கள் கண்டறியப்பட்டது.

சில மில்லி கிராம் அளவே உள்ள விதை நூற்றுக் கணக்கான கிலோ எடை கொண்ட இலைகளாக, கிளைகளாக, பூவாக, காயாக, கனியாக பேருருவம் எடுப்பது மண்ணில் உள்ள தாதுக்களாலும், தாவரங்களின் ஒளிச்சேர்க்கையாலும்தான் என்பதை நாம் தற்போது அறிந்திருக்கிறோம்.

ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்கள் இதனை முழுமையாக அறிந்திருக்கவில்லை. தாவரங்கள் நிலத்திலுள்ள தாதுக்களை உறிஞ்சுவதால் நிலத்தின் தாதுக்களின் அளவு குறைகிறது என்பதை உணராமல் சாகுபடி செய்யும் இடத்தை மட்டும் மாற்றிப் பயிரிடும் நிலையே அப்போது இருந்து வந்துள்ளது.

கி.பி 1700களில் வேளாண்மையில் அடுத்தடுத்த மாற்றங்களும் வளர்ச்சியும் தொடங்கியது. நீர் நிலைகளில் இருந்து சாகுபடி நிலங்களுக்கு பாசன முறைகளை கட்டமைத்தார்கள். பின்னர் நிலத்தடியில் இருந்து எண்ணெய் எந்திரங்களின் மூலமும், மின்சார கண்டுபிடிப்புக்கு பின்னர் மின் எந்திரங்களைக் கொண்டும் நீர் பாசன வசதிகளை ஏற்படுத்திக் கொண்டனர். 18ம் நூற்றாண்டில் உழுவதற்கும், நடுவதற்கும், உணவை பதப்படுத்தவும், தோல் மற்றும் நாரிழைகளைக் கொண்டு உடைகளைம் தயாரிக்கவும், தேர்வு செய்யப்பட்ட கால்நடைகளை வளர்க்கவும் பல புதிய வழிமுறைகளை பயன்படுத்தினர். மூடாக்கு, பயிர் சுழற்சி முறை போன்ற
வேளாண்மை நுணுக்கங்களையும், மண்வளத்தைப் பாதுகாக்கும் முயற்சிகளையும் மேற்கொண்டனர். கி.பி. 1000 ஆம் ஆண்டுகளில் இயற்கையான உரங்களையே விவசாயிகள் சார்ந்திருந்தனர்.

நிலவளங்களை ஆய்வு செய்த புவியியல் நிபுணர்களும், பொருளாதார மேதை காரல் மார்க்ஸ் அவர்களும் தொடர்ந்த பல ஆய்வுகளுக்குப் பிறகு நிலவளத்தைச் சுரண்டுவதற்கும் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டுவதற்கும் வேறுபாடு இல்லை என்றதோடு, நிலத்தின் வளம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கிறார்கள்.

வேளாண்மை என்பது தானியங்களைப் பயிரிடுவதும், நிலத்தில் இழந்த தாதுக்களை ஈடாக இடுவது மட்டுமல்ல, காணுயிர்களை பேணி, அதன் உப மற்றும் துணைப் பொருட்களை பயன்படுத்துவதற்கான கால்நடை வளர்ப்பும் வேளாண்மையின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டதை அவர்கள் உறுதிப்படுத்தினர். மீன் பிடித்தலையும் ஒரு விவசாயமாகவே கருதினர்.

1866ல் ஜான் கிரிகர் மெண்டல் அவர்களின் சந்ததிப் பண்புகளை கடத்தும் மரபியல் கண்டுபிடிப்புக்கள் உயிரி தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பெரிதும் வழிவகுத்தது. மக்கள் தொகை அதிகரித்துவந்த சூழலில் பழைய வேளாண் முறைகளால் போதிய உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்ற இயலாத நெருக்கடி ஏற்பட்டது.

அதீத எந்திரப் பயன்பாடுகளோடும், உரம், பூச்சிக்கொள்ளிகள் உள்ளிட்ட இடுபொருட்களோடும்”பசுமைப் புரட்சி” என்ற பெயரில் நவீன வேளாண்மை பெரும் பாய்ச்சலைக் கண்டது. இன்று புவியைப் பெரிதும் அச்சுறுத்தும் நீர், நில, காற்று மாசு, புவி வெப்பமயமாதல், கால நிலை மாற்றம், அடிக்கடி தோன்றும் பேரிடர்கள் என பல சூழலியல் பிரச்சனைகளுக்கு நவீன வேளாண்மையும் காரணமாக இருக்கிறது. வேளாண் உற்பத்தி மற்றும் சூழலியல் பிரச்சனைகளுக்கானத் தீர்வை, பசுமை தொழில் நுட்பத்தை மையப்படுத்தி, வளங்குன்றா வளர்ச்சி மூலம் எட்டிட அறிவியலாளார்கள் ஆய்ந்தறிந்து வருகிறார்கள்.

இயற்கை வேளாண்மை அல்லது பாரம்பரிய வேளாண்மை முறைகள்:

நியூக்ளிக் அமிலம் அல்லது புரதத்திலிருந்து ஒரு செல் உயிரிகள் தோன்றி, அவை பல செல் உயிரிகளாக, பூஞ்சைகளாக, தாவரங்களாக, விலங்குகளாக சமூக விலங்குகளாக பரிணமித்த வரலாறு நீண்ட நெடியது.

நற மாமிசங்களையும், செடி கொடி, காய், கனிகளையும் உண்டு தனித்தனியே வாழ்ந்தவர்கள் கூட்டாக வேட்டையாடி வென்றதும், தமக்கான சமூகக் குழுக்களை உருவாக்கி உடைமைகளை ஏற்படுத்திக் கொண்டு ஆதிக்க அமைப்புகளாக வளர்ந்த வரலாறும் தனித்துவமானது. அவர்கள் பின்பற்றிய உணவுதேடும் முறைகளும், உண்ணும் முறைகளும் மாற்றங்களுக்கு உள்ளாகி வந்தது. இது அவர்களின் அனுபவ மற்றும் அறிவு வளர்ச்சியின் பகுதியாகவே பார்க்கப்படுகிறது.

அதில் முதிர்ந்தவைதான் வீசி எறிந்த விதை முளைப்பதையும், அவை காய் கனிகளைத் தருவதை அறிந்து சேகரித்து விதைத்ததும், பலவீனமான
மனித கூட்டத்தை அடிமைப்படுத்தியதும், வனவிலங்குகளை வசப்படுத்தி வேளாண்மைக்கு பயன்படுத்தியதும், சமூக ஏற்றதாழ்வுகளும், ஆண்டான் அடிமை, மன்னராட்சி உள்ளிட்டவைகளும் தோன்ற காரணமாக அமைந்தது என அறிவியல்பூர்வமாக அறிகிறோம். வேளாண்மையின் வரலாறு மனிதகுல வளர்ச்சியின் வரலாறாகவே பார்க்கப்படுகிறது.

வளமான மண், மழை, தண்ணீர், சூரிய ஒளி, மனித உழைப்பு மற்றும் தரமான இயற்கைச் சூழலில்; செயற்கை உரம் மற்றும் பூச்சிக்கொள்ளி மருந்துகள் பயன்பாடில்லாமல், மக்கள் தங்களின் நுண்ணிய அணுகுமுறை மற்றும் அனுபவ அறிவைக் கொண்டு, தலைமுறை தலைமுறையாக மேற்கொண்ட வேளாண்மையையே இயற்கை வேளாண்மை என்கிறோம். தானியங்கள் நீங்களாக பயிரின் மிச்சங்கள் கால்நடை வழியாகவும், நேரடியாகவும் மண்ணில் சேர்ந்து மக்கி மண்ணை வளம்பெற செய்வது”இயற்கை விவசாயம்” அல்லது “ஒன்றும் செய்யா விவசாயம்” என்றழைக்கப்படுகிறது. பயிர்களுக்கு தொழு உரம், பசுந்தாழ் உரம், மூலிகைப் பூச்சி விரட்டிகள், மண்புழு உரம், நுண்ணுயிரிகள், பறவைகள் மற்றும் விலங்குகளின் பயன்பாடு, திட்டமிட்ட நீர் பயன்பாடு, உடலுழைப்பு, உழவு, நடவு, களைப்பறி, அறுவடை போன்ற அம்சங்கள் என இயற்கை விவசாயம் எந்திரமோ, அதிக செலவோ, ரசாயன உரங்களோ இல்லாத வேளாண்முறையாக இருக்கிறது. இரு உலகப்போர்களின் முடிவில் ரசாயனங்களை வேளாண்மைக்கு பயன்படுத்தும் முறைகள் துவங்கியது. உலகின் வெடி மருந்து உற்பத்தியாளர்கள் வேளான் இடுபொருள் உற்பத்தியாளர்கள் ஆனார்கள்.

அவர்கள் தங்களின் லாப வேட்டைக்கு வேளாண்மையை இலக்காக்கினார்கள். அதுவரை வாழ்வியலாக இருந்த வேளாண்மையானது, பெரும் உற்பத்தி நிறுவனங்களின் சந்தையைச் சார்ந்ததாக மாறத் தொடங்கியது. அதுவே வேளாண்மை புதிய வடிவமெடுக்கக் காரணமாக அமைந்தது.

நவீன வேளாண்மை:

ஏர் கலப்பைகளுக்கு பதிலாக டிராக்டர் எந்திரக் கலப்பையும், மக்கிய தாவர மற்றும் விலங்கு கழிவுகள் அடங்கிய தொழு உரங்களுக்கும், பசுந்தாழ் உரங்களுக்குப் பதிலாக விரைந்து செயலாற்றும் ரசாயன உரங்களும், நுண்ணுயிர் உரங்களும், இரவை பாசனத்திற்கு பதிலாக ஆழ்குழாய் அதிவேக எந்திரப் பாசனமும், பூச்சிகளை அழித்தொழிக்க நச்சுப் பூச்சி மருந்துகளும், நோய் மற்றும் பூச்சிகளை கொள்ளும் மரபணு மாற்று தொழில் நுட்பமும், பாரம்பரிய அல்லது அங்கக வேளாண்மையை பின்னுக்குத் தள்ளியது. மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப குறந்த நிலப்பரப்பில் அதிகமான உணவு உற்பத்தியை மேற்கொள்ள வேண்டிய
சூழலில் அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியின் துணைகொண்டு உணவு உற்பத்தி விரைவு படுத்தப்பட்டது. செயற்கையான முறைகளில் ஒட்டு ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டது. இயற்கையில் இணை சேர முடியாத வெவ்வேறு உயிரிகளின் மரபணுக்களை இணைத்து புதிய பண்புகளைக் கொண்ட விதைகளை உற்பத்தி செய்து வேளாண்மை மேற்கொள்ளப்பட்டது. சொட்டு நீர் பாசன முறை, மின் ஆற்றலை பயன்படுத்தி நீர் மூழ்கி மோட்டார்கள் மூலம் நிலத்தடி நீரைக் கொண்டு பாசனம், களைகளை அழிக்க களைக்கொல்லிகள், உணவுப் பற்றாக்குறையைப் போக்க பெரும் நிலப்பரப்பில் ஒரே விதமான தானியங்களை அதிக அளவில் உற்பத்தி செய்தல் என நவீன வேளாண்மை மனித உழைப்பையும் இயற்கை வளங்களின் பயன்பாட்டையும் குறைத்து உற்பத்தியை அதிகரிக்க வழிகோளியது.

இதனால் உணவு உற்பத்தி அதிகரித்தது. குறுகிய கால பயிர்கள், நோய் எதிர்ப்பு சக்தி பெற்ற பயிர்கள், உவர்ப்பு, வறட்சி, வெள்ளம் உள்ளிட்ட ஒவ்வாத சூழலுக்கு தகவமைத்துக் கொண்ட பயிர்கள் என பல புதிய பயிர் ரகங்கள் தோன்றிய வண்ணம் இருந்தன. வேளாண்மை வாழ்வாதாரம் என்ற நிலை மாறி வணிகமயமானது, கார்ப்பரேட் நிறுவனங்கள் வேளாண்மையில் கால்பதிக்கத் தொடங்கினார்கள்.

கால்நடை வளர்ப்பு பண்னைமயமானது. பால், முட்டை, மாமிசத் தேவைகளுக்காக நவீன முறைகளை பயன்படுத்தி செயற்கையான சூழலில் உற்பத்தி செய்யும் முறைகள் உருவாயின. இயற்கைச் சூழலுக்கு மாறாக இயந்திர மீன் பிடியும், ரசாயன மீன்வளர்ப்பும் அதிகரித்து. இதன் விளைவுகள் குறித்து ஆய்வுகளும், விவாதங்களும் தொடர்கிறது. நவீன வேளாண்மையில் அதிகப்படியான ரசாயன உரப் பயன்பாட்டால் நிலங்கள் தங்களின் இயல்பை இழந்தது. மேல்மண் உப்புக்கள் நிறைந்ததாகி, இறுகி, மண்ணின் உயிரான நுண்ணுயிர்களை இழந்து, வெறும் கட்டாந்தரையாக மாறியது. மூடாக்கோ, ஊடுபயிரோ பயிர்
சுழற்சியோ இல்லாமல், சூரிய ஒளி, காற்று மற்றும் வெள்ளத்தால் மேல் மண் அரிப்புக்கு உள்ளாகியது. மண்ணில் வளரும் புழு பூச்சிகளும் அழிந்து வருகிறது.

நிலத்தில் இடப்பட்ட செயற்கை ரசாயன உரத்தில் மூன்றில் ஒரு பங்கே பயிர்கள் எடுத்துக்கொள்ளத்தக்க வகையில் உள்ளது. மீதமுள்ளவை வெறும் உப்பாகவே மண்ணில் படிகிறது. அது நிலத்தை செயலற்றதாக்குகிறது. அங்கு மீண்டும் சாகுபடி மேற்கொள்ளவேண்டுமென்றால் கூடுதலாக உரமிட்டால்தான் பயிர்
விளைவிக்க முடியும். ஒரு நிலையில், கூடுதலாக உரமிட்டாலும் செயல்படாத நிலையையும் நிலம் எட்டி விடுகிறது. எந்தப் பயிரையும் அங்கு பயிரிட இயலாத சூழல் உருவாகி விடுகிறது.

பூச்சித் தாக்குதல் இல்லாமல் அதிக விளைச்சளைப் பெற பூச்சிகளை அழிதொழிக்கும் மரபணுவை புகுத்தி தயாரிக்கப்பட்ட விதைகள் பூச்சிகளை மட்டுமல்லாமல், அதனை உட்கொள்ளும் மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியதை மரபணு மாற்று பி.டி கத்தரிக்காய் போன்றவைகள் மூலம் அறிந்தோம். கொடியப் பூச்சி மருந்துகளும், மரபணு தொழில் நுட்பத்தின் தவறான பயன்பாடும் உயிரினங்களை மட்டுமல்லாது, அவைகள் பயன்படுத்தப்படும் நிலங்களையும் பாதிப்புக்கு உள்ளாக்குகின்றது.

நவீன வேளாண்மை என்பது வேளாண் வர்த்தகம், அதிதீவிர சாகுபடி, அங்கக விவசாயம், மற்றும் வளங்குன்றா வேளாண்மை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இது குறைந்த இயற்கை வளங்களைக் கொண்டு உற்பத்தித் திறனை அதிகரித்து அனைவருக்கும் உணவு எரிபொருள் மற்றும் நாரிழைகளை உத்திரவாதப்படுத்துகிறது. அதே நேரத்தில் நவீன வேளாண்மையானது மிகுதியான ரசாயன உரங்கள், கொடிய பூச்சிக்கொல்லிகளைக் கொண்டும், தங்கு தடையற்ற நீர்ப் பாசனம் மற்றும் பராமரிப்பைக் கொண்டும், ஆற்றல் வளங்களைக் கொண்டும், புதிய விதை வகைகளைக் கொண்டும் மேற்கொள்ளப்படுகிறபோது அது சுற்றுச் சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இவற்றுடன் உணவு தானிய பகிர்விலும் ஏற்றத் தாழ்வுகள் இருந்து கொண்டே இருந்தது. வேளாண் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து வீடுகளை விட்டும், ஊரை விட்டும் புலம்பெயற நேர்கிறது. அது நகர்மயமாதலை விரைவுபடுத்தி நகர்ப்புற நெருக்கடிகளை உருவாக்குகிறது.

ஒருபுறம் நீர் நிலைகளில் உள்ள சவுடு மண் வழியாக கார்பன் உமிழ்வு காற்றை மாசுபடுத்தியது, மறுபுறம் வேளாண் நிலங்களில் பயன்படுத்தப்படும் நைட்ரேட் வகை ரசாயன உரங்கள் மண்ணில் கசிந்து நிலத்தடி நீரை பாழ்படுத்துகின்றன. 25மி கிராமிற்கு மேல் நைட்ரேட் கலந்த நீர் குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தாக அமைந்து விடுகிறது.

நிலங்களில் வடிகால் வசதிகளை சரியாக பராமரிக்காததால் நிலம் உவர்ப்பாகி, வேர்கள் சுவாசிக்கும் தன்மையை இழந்து மகசூல் குறைகிறது. நீர் நிலைகளில் ஏரி குளங்களில் பச்சை நீர்வாழ் தாவரங்கள் களைகளாக பெருக்கமடைய வழிகோள்கிறது. அது வளிமண்டளத்தில் பெரும்பாதிப்பை ஏற்படுத்துகிறது. மிகையான பூச்சிக் கொள்ளிகளின் பயன்பாடு அங்குள்ள நன்மை பயக்கும் பல பூச்சிகளையும் அழித்து மனிதர்களுக்கும் பாதிப்பை ஏர்படுத்துகிறது.

ஊட்டங்களைக் கலந்து நீரில் மேற்கொள்ளப்படும் ஹைட்ரோபோனிக்ஸ் வேளாண்மையில் ஒரு ஏக்கர் நிலத்தில் கிடைப்பதைக் காட்டிலும் 50 மடங்கு கூடுதலான கீரை போன்ற காய்கறிகளை உற்பத்தி செய்ய முடிகிறது. மீன் மற்றும் இறால் வளர்ப்பு போன்றவை முக்கியமான வேளாண்மைத் தொழிலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நன்னீரில் அதிவிசையோடு மேற்கொள்ளப்படும் நீர் வேளாண்மையின் நிலத்தையும், நிலத்தடி நீரையும் பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளது, அதே போல
கடலோரங்களிலும், கடலிலும் மேற்கொள்ளப்படும் மீன் வளர்ப்பு போன்ற வேளாண்மையால் கடல் வாழ் உயிரினங்கள் பாதிப்புக்குள்ளாகி அவை தங்களின் வாழ்விடங்களைவிட்டு வெவ்வேறு சூழலை நோக்கி இடம் பெயர்கின்றன. இவைகள் கால நிலை மாற்றத்தில் பெரும் பங்காற்றுகிறது.

மரபணு மாற்றுத் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி குறைந்த பரப்பில் அதிக இடுபொருட்களைக் கொண்டு பல பண்பியல்புகளோடு உற்பத்தி செய்யப்படுகிற உணவும், தானியங்களும்; அதிகப்படியான நோய் எதிர்ப்பு மருந்துகள், வளர்ச்சி ஊக்கிகளான ஸ்டீராய்ட்ஸ் மற்றும் நொதிகளை அளித்து அதிக பால், மாமிசங்களுக்காக புலம் பெயர்த்து வளர்க்கப்படும் கால்நடைகளும், அதே போன்ற வேதிப் பொருட்களை பயன்படுத்தி உற்பத்திச் செய்யப்படுகிற கோழி இனங்களும், மீன் வளர்ப்பும், உடல் பருமன், மாரடைப்பு, சர்க்கரை நோய் போன்ற பல நோய்களை தோற்றுவித்து மனிதர்களுக்கு பெரும் பாதிப்பை
ஏற்படுத்துகின்றது. நுண்ணிய வேளாண் சாகுபடி முறைகளான கொம்புச் சாணம், சொட்டு நீர் பாசனம் போன்றவற்றைக் கொண்டு, செயற்கைச் சூழலில் மேற்கொள்ளப்படும் வேளாண்மையும் பெரும்பான்மையான வேளாண்மையாளர்களுக்கு உகந்ததாக இல்லை.

சிறு குறு விவசாயிகளைக் கொண்ட வளரும் நாடுகளில், அதிகமான வேலைவாய்ப்பை அளித்திடும் ஒரு முக்கிய தொழிலாக வேளாண்மை உள்ளது. அவரவருக்கு சாத்தியமான பயிர்களை அவர்கள் பயிரிடுகிறபோது ஒருங்கிணைந்த பண்ணையம், ஒருங்கிணைந்த பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகள், அங்கக வேளாண்மை, இணையவழி வேளாண்மை என்பதெல்லாம் அவர்களுக்கு உகந்ததாக இருக்க வாய்ப்பு மிகவும் குறைவு, வளர்ந்த நாடுகள் உணவு தானிய உற்பத்திக்கு பதிலாக விலங்குகளுக்கான உணவைப் பயிரிட்டு லாபம் ஈட்டுகின்றன. வளரும் நாடுகளின் உணவு தானிய உற்பத்திதான் உலக மக்களின் உணவுப்

பாதுகாப்பையும், உணவு உத்திரவாதத்தையும் உறுதிப்படுத்தும். அதிநவீன முறைகளில் மேற்கொள்ளப்படும் வேளாண்மை மற்றும் வேளாண் துணைப் பொருட்கள் உற்பத்தி முறைகள் உயிரி பல்வகைமையை பாதிப்புக்குள்ளாக்கி ஏனைய உயிரினங்களையும் அழித்து இயற்கைப் பேரிடர்களை தோற்றுவிக்க வாய்ப்பு இருக்கிறது. அது மனித ஆற்றலை பலவீனப்படுத்தி மலினப்படுத்தியுள்ளது.

எதிர்காலத்துக்கான வேளாண்மை முறை

மண்வளம் மற்றும் உயிரி பல்வகைமையை அழித்து வேளாண்மையை வளர்க்கும் செயல்பாடு தற்போது உலகில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. சுற்றுச் சூழலின் தரத்தை உயர்த்திப் பாதுகாத்து, உயர்தரமான விளைச்சலை பெருக்குவதன் மூலம்தான் வேளாண்மை வளர்ச்சி சாத்தியமாகும். மனிதனும் இயற்கையும் ஒன்றோடொன்று சமமாக பரிவர்த்தனை செய்து கொள்கிறபோதுதான் இந்த புவியில் மனிதர்களின் நலவாழ்வு சாத்தியமாகும் என காரல் மார்க்ஸ்
குறிப்பிடுகிறார்.

தற்காலத்திற்கும் எதிர்காலத்திற்குமான உணவுத் தேவையை அளிப்பதில் வேளாண்மை முக்கிய பங்கு வகிக்கிறது. வேளாண் வளர்ச்சியானது ஆராய்ச்சி மற்றும் புதிய தொழில் நுட்பங்களின் மூலம் உற்பத்தியை அதிகரித்துள்ளது. இருப்பினும் உற்பத்திக் குறித்த தற்போதைய மதிப்பீடு சுற்றுச் சூழலின் அவசியத்தையும், இயற்கை வள பயன்பாட்டு அளவையும் கணக்கில் கொள்ளவில்லை. வளங்குன்றா வளர்ச்சியை உறுதிப்படுத்த எதிர்கால வேளான் தொழில் நுட்பங்கள் இயற்கை வளம் மற்றும் சூழலியல் பயன்களை கவனத்தில் கொண்டு,லாபத்தை மட்டுமல்லாமல் சுற்றுச் சூழல் மீதான விளைவுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

ரசாயனம் சார்ந்த வேளாண்மையை குறைத்து சுற்றுச்சூழல் பாதுகாப்பை உள்ளடக்கிய வளங்குன்றா வேளாண்மையை வளர்த்தெடுக்க வேண்டும்.
சுற்றுச் சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை களைகிற பசுமைத் தொழில் நுட்பங்களை முன்னெடுக்க வேண்டும். புதுப்பிக்கவல்ல வளங்களை பயன்படுத்தும் தொழில் நுட்பங்கள், தரமான மகசூலை அதிகரித்து மண்வளத்தைப் பாதுகாப்பதாக இருக்க வேண்டும். அங்கக விவசாயம், வேளாண் காடுகள், சூரிய ஆற்றல், கலப்பு பண்ணையம், உயிரி எரிசக்தி, பல்பயிரிடுதல், பயிர் சுழற்சி, ஒருங்கிணைந்த பூச்சிக் கட்டுப்பாடு

முதலியவை பசுமைத் தொழில் நுட்பத்தின் அமசங்களாக இருக்க வேண்டும். பன்னெடுங் காலமாக மேற்கொள்ளப்படும் அங்கக வேளாண்மையில் இருந்து வரும் நடைமுறைகளான பசுந்தாழ் உரம், பயிர் சுழற்சி, தொழுவுரம், உயிரி பூச்சிக் கட்டுப்பாடு, களையெடுத்தல் உள்ளிட்ட அம்சங்கள் மண்ணின் வளத்தையும், சுற்றுச்சூழல் மற்றும் மனித நலனையும் பாதுகாக்க வல்லதாக இருந்துள்ளதால் அந்த புரிதலோடான வேளாண்மையை மேற்கொள்வது அவசியமாகிறது.

வேளாண் காடுகள் மரங்களையும், பயிர்களையும் கால்நடைகளையும் அதே நிலத்தில் ஒருங்கிணைத்துப் பொருளாதார மற்றும் சூழலியல் தொடர்பை வலுப்படுத்தும். இது உணவு, வருமானம் மற்றும் ஆரோக்கியத்தை உத்திரவாதப்படுத்தும். காற்றின் வேகத்தைக் கட்டுபடுத்தும். உயிர் வேலியாகவும், கால்நடைகளுக்கான உணவை அளிப்பவையாகவும் இது பயன் தரும்.

நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட பயிர்களை வளர்த்தல், பல வழிகளில் பூச்சிகளை கட்டுப்படுத்துதல்,, ஒருங்கிணைந்த பூச்சிக் கட்டுப்ப்பாட்டு
முறைகளை மேற்கொள்தல் சவாலானது என்றாலும் சாத்தியமானதுதான். சூரியனின் ஒளி மற்றும் வெப்பத்திலிருந்து பெறப்படும் மின் ஆற்றலைக் கொண்டு, தண்ணீர் இறைப்பது, கிராமப்புற வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்குவது உள்ளிட்டவற்றை மேற்கொள்வதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும். வேளாண் கழிவுகளிலிருந்து உரமும், உயிர் ஆற்றலும் கிடைப்பதோடு, மண்வளமும் மேம்படும். கலப்பு பண்ணையம் கால்நடைகளுக்கு உணவையும், அவற்றின் கழிவுகள் மண்ணிற்கு வளத்தையும் அளிக்கும். ஒரே விதமான பயிர்களை வளர்ப்பதற்கு பதிலாக பல பயிர்களை வளர்ப்பது உணவு உற்பத்தியை
பெருக்கவும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் உதவும்.

வேளாண்மையில் பயிர் சுழற்சி முறையை பின்பற்றுவதன் மூலம் பயறு வகை தானியங்கள் வளர்க்கப்பட்டால் மண்வளம் மேம்படும். இதன் மூலம் நிலத்திலிருந்து பசுங்குடில் வாயு வெளியேற்றம், ரசாயன உரப் பயன்பாடு முதலியன குறையும். வேளான் உயிரி தொழில்நுட்பமானது மரபணு மாற்றுத் தொழில் நுட்பத்தைக் கொண்டு புதிய பண்புகளை கொண்ட தாவரங்களை உருவாக்கி உணவு பற்றாக்குறைய போக்கவும், அவசியமான உணவை உற்பத்தி செய்யவும் பெரிதும் உதவிடும். மண்ணின் தன்மை, ஈரம், வானிலை, பயிரின் தேவை முதலியவற்றை நவீன தொழில் நுட்பங்கள் மற்றும் கருவிகளைப் பயன்படுத்தி
நுணுக்கமாக அறிந்து நீர்ப்பாசனத்தைத் திட்டமிடுதலும், சொட்டு நீர் பாசனம் உள்ளிட்ட நுண்ணியப் பாசன முறைகளைப் பயன்படுத்துவதும், நீர் நிலைகள் மாசுபாட்டை தவிர்ப்பதும், சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத பாதுகாப்பான நீர்ப்பாசன முறையாகும்.

நானோ தொழிநுட்ப வளர்ச்சியானது மேற்கண்ட அத்தனை வேளாண்மை செயல்பாடுகளிலும் அதனை விரைவுபடுத்தவும், எளிதாக்கவும் பல
வழிமுறைகளை அளித்து வருகிறது. முறையாக திட்டமிட்டு, விவசாயிகளுக்கு பசுமைத் தொழிநுட்பங்களை பயிற்றுவித்து, இயற்கை வளங்களை அளவோடு பயன்பாட்டுக்கு உள்ளாக்கி, வேளாண்மையாளர்களின் வாழ்வாதாரத்தை உத்திரவாதப்படுத்தி, சுற்றுச்சூழலை பாதுகாத்து மேற்கொள்ளப்படும் வேளாண்மையே இந்தப் புவியில் மனிதகுலமும், இதற அனைத்து உயிரினங்களும் பாதுகாப்பாக வாழ வழிவகுக்கும். செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டையும்
நெறிப்படுத்தி வேளாண்மையை வளர்த்தெடுக்க வாய்ப்புக்கள் நிறைய உள்ளன. எந்த தொழிலும், தொழில் நுட்பமும் அது யார் கையில் இருக்கிறது என்பதைப் பொறத்தே அது யாருக்கு பயனளிக்கும் என்பது அமைகிறது. அப்படி வேளாண்மையானது வேளாண்மையாளர்கள் கையில் இருக்கும்வரை வேளாண்மையும், சுற்றுச் சூழலும் பாதுகாப்பானதாகவே இருக்கும்.

ஆதாரம்:

1. புர்புடே (2021) வளங்குன்றா இந்திய வேளாண்மை வளர்ச்சியை ஊக்குவிக்கும் பசுமைத் தொழில் நுட்பமும், சாதனங்களும்

2. இரவானி., அக்பரி. சோகூரி (2017) பசுமைத் தொழில்நுட்பத்தின் சாதகங்களும், பாதகங்களும்;

3. Jarraud M., Agriculture and Environment: Climate Change challenges and Policy options. World Meteorological Organisation, High level segment of the CSD – 16, New York, USA, 2008, 14 -16
May

4. Foster, Marx’s Ecology, and Paul Burket. Marx and Nature: A Red and Green perspective (Chicago: Haymarket BOOKs, 2014; Original Edition1999), Chapter 9.

5. Leibig’s Optimism in the Fourth Edition of Agricultural Chemistry

6. The Emergence of Marx’s Critique of Modern Agriculture

7. Marx’s London Note books and Critique of the “Law of Diminishing Return”

8. ‘Iyarkai Velaanmai” by Nammazvaar G., Murugan Publisher, (2001)

9. Nothing Doing Farming, Masanbo Fukuoka

10. Impact of Green Revolution on Environment, Calud Alwaris

கட்டுரையாளர் :

Discover the importance of Modern Agriculture and Environment. (நவீன வேளாண்மையும் சுற்றுச் சூழலும்) Modern Agriculture and Environment - https://bookday.in/

பேரா. முனைவர். வெ. சுகுமாரன்
மதியுரைஞர், அறிவுசார் மையம், தஞ்சாவூர் – 613005

 



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *