மக்களை மரணக்குழியில் தள்ளிவிட்டு, பதுங்கு குழியில் மோடியும் அமித்ஷாவும் – அ. பாக்கியம்மோடியின் பொறுப்பற்ற தடுப்பூசி கொள்கையால் இந்திய மக்கள் மரணக்குழிக்கு சென்றுகொண்டிருக்கின்றனர். ஜூலை இறுதி வரை எந்த அமெரிக்க மருந்து கம்பெனிகளும் இந்தியாவிற்கு தடுப்பூசி கொடுப்பதற்கு முன் வரவில்லை. ஜூலைக்கு பிறகாவது கிடைக்குமா என்றால் தெரியாது.

வெளியுறவுத்துறை அமைச்சர் அமெரிக்காவில் அலைந்து கொண்டிருக்கிறார். இதற்கு காரணம் என்ன? மோடி அரசாங்கத்தின் பொறுப்பற்ற தடுப்பூசி கொள்கை தான்.

மாநிலங்களின் அதிகாரங்களையெல்லாம் மத்திய அரசு பறித்துக்கொண்டு, நிதிஆதாரங்களையும் சுரண்டிக்கொண்டு தற்போது பெரும்தொற்று நோயால் மக்கள் செத்துக் கொண்டிருக்கிற பொழுது தடுப்பூசியை மாநிலங்களே வாங்கிக் கொள்ளுங்கள் என்று மோடி பொறுப்புதுறப்பை அறிவித்து விட்டார். அதாவது மத்திய அரசு பொறுப்பற்றதனமாக மாறிவிட்டது.

பல மாநிலங்கள் அந்நிய நாட்டு கம்பெனிகள் அணுகிய பொழுது தனித்தனியாக விற்பதற்கு தயாராக இல்லை. மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்ற முறையில் அந்த கம்பெனிகள் தெரிவித்துவிட்டனர்.

ஆகவே எந்த மாநிலங்களுக்கும் இதுவரை தடுப்பூசி வழங்குவதற்கான ஒப்பந்தம் ஏற்படவில்லை. முதன்முதலில் பலவெளிநாட்டு கம்பெனிகளை அணுகிய மகாராஷ்டிரா மாநிலத்திற்கு இதுவரை எந்த ஒப்பந்தமும் ஏற்படவில்லை.

பஞ்சாப் மாநிலம் அமெரிக்க மார்டனா தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் கேட்டபோது நாங்கள் மத்திய அரசுடன் ஒப்பந்தம் போடுவதற்குதான் முன்னுரிமை தருவோம் என்று மறுத்துவிட்டார்கள்.

மக்கள் மடிந்து கொண்டிருக்கிற பொழுது ஒவ்வொரு நாடும் தன்னுடைய மக்கள் தொகையைவிட அதிகமான அளவிற்கு தடுப்பூசியை வாங்கி குவித்துக் கொண்டு விட்டனர். ஆனால் மோடி ஏற்றுமதி பண்ணியது மட்டுமல்ல தடுப்பூசியில் வாங்குவதற்கும் ஒரு சரியான கொள்கையை உருவாக்க முடியவில்லை. இன்று தடுப்பூசி கிடைக்கவில்லை.

பாஜக அரசின் முட்டாள்தனமான அறிவிப்புகளுக்கு மாறாக ஆப்பிரிக்க நாடுகள் ஆப்பிரிக்கன் யூனியன் டிரஸ்ட் என்ற அமைப்பை ஏற்படுத்தி ஒட்டுமொத்த ஆப்பிரிக்க நாடுகளுக்கும் ஜான்சன் அண்ட் ஜான்சன் கம்பெனியிடம் இருந்து 22 கோடி மருந்துகளை வாங்கி குவித்து விட்டார்கள். மேலும்
வாங்கிங்கொண்டிருக்கிறார்கள். வளர்ந்த ஐரோப்பிய நாடுகள் கூட 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய யூனியன் மொத்தமாக வாங்கி தங்கள் நாடுகளுக்கும் பிரித்துக் கொள்கிறார்கள்.சுமார் 150 நாடுகளுக்மேல் தங்கள் மக்கள் தொகைக்கு ஏற்ற அளவில் மருந்துகளை வாங்குவதிலும் உற்பத்தி செய்வதிலும் தீவிரம் காட்டினார்கள்.
விற்பளைநிறுவனங்களும், உற்பத்தி தொழிற்சாலைகளும் குறைந்தஅளிவில் இருப்பதை கணக்கில் கொண்டு இறையாண்மை படைத்த தனித்தனிநாடுகள் கூட ஒப்பந்தம் போடும் காலத்தை கருதி கூட்டணி அமைத்து மருந்துகளை வாங்கினார்க்ள். ஆனால் நமது நாட்டு பிரதமரோ இதற்கு எதிர் திசையில் பயணித்து மக்களை மரணக்குழிக்கு அனுப்பிக்கொண்டு நீலிக்கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிறார்.

எனவே இந்திய மக்கள் தற்போது கிடைக்கிற கோவாக்சின், கோவிஷீல்ட்,ஆகியவற்றையும் சிறிதளவே இறக்குமதி செய்யப்படுகிற ரஷ்யாவின் ஸ்புட்னிக்கை நம்பித்தான் இருக்க வேண்டும். இந்த இருநிறுவனங்களின் மருந்துகள் இந்தியாவில் போதுமான அளவுக்கு உற்பத்தி செய்யப்படுகிறா என்றால் அதுவும் இல்லை.
ஆனால் நமது பிரதமர் தான் இப்படி இருக்கிறார் என்றால் நமது நாட்டின் நிதி ஆயோக் உறுப்பினர்(சுகாதாரம்) யு.கே பவுல் இந்தியா அடுத்த ஐந்து மாதத்தில் அதாவது ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை 220 கோடி மருந்துகளை தயார் செய்து விடும் என்று அறிவிக்கிறார். இது எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை.?
கோவாக்சின் நிறுவனம் தற்போது ஐதராபாத், பெங்களுர், அங்கலேஷ்வர் ஆகிய முன்று இடங்கலில்தான் உற்பத்தி செய்கிறது. ஜீலை மாதத்திற்கு பிறகுதான் ஆண்டுக்கு 100 கோடி மருந்துகள் உள்பத்தி செய்யமுடியும் என்று தெரிவித்துள்ளது.

அதாவது மாதத்திற்கு சுமார் 10 கோடி என்று வைத்துக்கொள்ளலாம். அதுவும் மதிப்பீடு தான். கோவிஷீல்ட் இதேபோன்று ஜீலை மாதத்திற்கு பிறகு மாதத்திற்கு 12 கோடி உற்பத்தி செய்யலாம் என்று மதிப்பீடு செய்துள்ளது.

எந்த கணக்கை வைத்து இந்த நிதி ஆயோக் உறுப்பினர் 220 கோடி தயாராகிவிடும் என்று சொல்கிறார் என்று தெரியவில்லை. மோடி அரசுக்கு விஞ்ஞானத்தில் தான் நம்பிக்கையில்லை என்று நினைத்தால் கணக்கிலும் நம்பிக்கை இல்லை. மாட்டுமுத்திரம் வைத்தியம் போல வாய்க்கு வந்த எண்ணிக்கையை அவிழ்த்துவிடுகிறார்கள்.பாஜகவின் முன்னாள் தலைவரும் தற்போதைய மத்திய அமைச்சருமான நிதின் கட்காரி மேலும் 12 நிறுவனங்களுக்கு தடுப்பூசி தயாரிப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று அறிக்கை விடுத்தார். இதற்கான தொழில்நுட்பத்தை அளித்திட வேண்டும் என்று சொன்னார். தொழில்நுட்பத்தை கொடுக்காமல் இருப்பதிலிருந்து பாரத் பயோடெக் நிறுவனத்திற்கும், மத்திய அரசிற்கும் ஏதோ இருக்கிறது என்று அனைவரும் சந்தேகப் படுகின்றனர்.

மக்கள் உயிரை காக்க வேண்டிய மோடி அரசு உள்ளடி வேலைகளை செய்வது எப்படி சரியாகும். மோடியும் அமித் ஷாவும் பாஜக தலைவர்களும் நாட்டு மக்களை மரணக் குழியில் தள்ளி விட்டு பதுங்கி கொண்டிருக்கக்கூடிய அவல நிலை ஏற்பட்டிருக்கிறது. பாஜக ஆட்சியில் இருந்து விடுபடுவதும் கொரோனாவிலிருந்து விடுபடுவதும் இந்திய மக்களின் உயிர் தேவையாக மாறிவிட்டது.

அ. பாக்கியம்
தகவல்∶ தி வயர்