Modi Atchiyil Seerazhindha TriuppurModi Atchiyil Seerazhindha Triuppur

அறிமுகம்
வேலையில்லாத் திண்டாட்டம் பற்றிய பிரச்சனை குறித்துதமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியபோது, அன்றைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா குறுக்கிட்டு, (வேலையில்லை என்பவர்கள் திருப்பூருக்குப் போகட்டும், அங்கே வேலை தாராளமாகக் கிடைக்கும்!) என்று பதில் கொடுத்தார். தமிழகத்தில் வேலைவாய்ப்பின் அடையாளமாக முன்னிறுத்தப்பட்ட திருப்பூர் இப்போது கேள்விக்குறியாகி நிற்கிறது! வேலைவாய்ப்பு சுருங்கிக் கொண்டிருக்கிறது. இனி என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வியோடு சிறு, குறு உற்பத்தியாளர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நவீன தாராளமயம் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது என்பதற்கு இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் சரியான முன்னுதாரணமாக திருப்பூர் இருக்கிறது! சமீப காலம் வரை ஒரு விரிவான கிராம கட்டமைப்புடன் இருந்துவந்த திருப்பூர், கடந்த 30, 40 ஆண்டுகளில் சில பெருநகரங்களைக் கடந்து வேகமான வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது. இதைத்தான் வளர்ச்சியின் முன்னோடி, டாலர் நகரம், குட்டி சிங்கப்பூர் என பலர் வர்ணிக்கின்றனர். ஆனால் கடந்த 10 ஆண்டு கால நிகழ்வுப் போக்குகள், திருப்பூர் குறித்துக் கட்டமைக்கப்பட்ட பல மாயைகளை தூள் தூளாக உடைத்துக் கொண்டிருக்கிறது.

அதிலும் குறிப்பாக கடந்த ஐந்தாண்டு கால பாரதிய ஜனதா ஆட்சிக் காலத்தில் ரூ.500, ரூ.1000 பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரிவிதிப்பு என்ற அவர்களின் இரு பெரும் செயல்கள், விரைவாக ஓடிக்கொண்டிருக்கும் மனிதனின் கால்களுக்கு இடையே கம்பை வீசினால் என்ன விளைவை ஏற்படுத்துமோ அதே விளைவை திருப்பூருக்கு ஏற்படுத்தி இருக்கின்றது.

திருப்பூரின் மொத்தப் பின்னலாடை வர்த்தகத்தை ரூ.1லட்சம் கோடியாக உயர்த்துவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பிரதமர் ஆவதற்கு முன்பே ஆலோசனை கேட்ட மோடி, ஆட்சிக்கு வந்தபிறகு இப்படிச் செய்வார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

1வரலாறு
2000 ஆண்டுகளுக்கு முன்பே கொங்கு மண்டலத்தில் இருந்து ரோமாபுரிக்கும், கிரேக்கத்துக்கும் வாணிபத் தொடர்பு இருந்ததை கொடுமணல் அகழ்வாய்வுச் சான்றுகள் தெரிவிக்கின்றன. அதே நொய்யல் கரையில் இருக்கும் திருப்பூர் இப்போது அமெரிக்காவுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி வர்த்தகம் செய்து வருகிறது.
திருப்பூரின் பூகோள அமைவிடம், அதைச் சுற்றிலும் ஏறத்தாழ 50, 60 கிலோமீட்டர் தொலைவில் கோவை, சத்தியமங்கலம், கோபி, ஈரோடு, பவானி, தாராபுரம், உடுமலை, பொள்ளாச்சி என ஒரு நகரத்தை இணைப்பதால் வர்த்தகப் போக்குவரத்துக்கும் உகந்த இடமாக இருக்கிறது. இங்கு ஒரு பெரிய விவசாய சந்தை இயங்கியது. அரிசி வியாபாரம், (ஒரு வீதிக்குப் பெயர் அரிசிக்கடை வீதி) காய்கறி மட்டுமின்றி கால்நடை சந்தையும் தமிழகத்தில் பெரிய சந்தைகளில் ஒன்றாக இருந்திருக்கிறது.
வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் சுற்று வட்டாரக் கிராமங்களில் பருத்திக் காடுகளில் விளைந்த பஞ்சுப் பொதிகளை சந்தைப்படுத்தும் மையமாக உருவானது. கோவை நூற்பாலைகளுக்கு பஞ்சு வியாபாரம் செய்யும் இடமாக திருப்பூர் இருந்தது. தமிழகத்தில் பெரிய காட்டன் மார்க்கெட்டுகளில் ஒன்று திருப்பூர். இப்போதும் இங்கு காட்டன் மார்க்கெட் என்ற பெயரில் மிகப்பெரிய வளாகம் இருக்கிறது. வர்த்தக தளமாக உருமாறிய சிறுநகரம் தான் அடுத்த கட்ட வளர்ச்சியாக தொழில் நகரமாகவும் மாறியது. ஆஷர் மில், தனலட்சுமி மில், எஸ்ஆர்சி மில், திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் மில் என பல மில்கள் இங்கு உருவாகிச் செயல்பட்டன.

பஞ்சு வியாபாரமும், பஞ்சாலைத் தொழிலும் வர்த்தக, தொழில் முதலாளிகளை இங்கே உருவாக்கியது. அவர்களே இங்கு தேசிய விடுதலை இயக்கத்தின் காங்கிரஸ் தலைவர்களாக இருந்தனர். பஞ்சு வியாபாரம் செய்யும் ஒரு மண்டியில், சென்னிமலை என்ற பக்கத்து சிற்றூரில் இருந்து வேலைக்கு வந்தவர்தான் குமாரசாமி. விடுதலை இயக்கத்தில் காந்தியடிகளின் சத்யாகிரகப் போராட்டத்தில் பங்கேற்று காவல்துறையின் காட்டுமிராண்டித்தனமான தடியடித் தாக்குதலில் உயிர்நீத்த அந்த குமாரசாமிதான் தியாகி கொடி காத்த குமரன்! அப்போராட்டத்துக்கு தலைமை ஏற்ற பி.எஸ்.சுந்தரம் காவல் துறையின் தடியடி தாக்குதலில் 17க்கும் மேற்பட்ட எலும்பு முறிவுகளைப் பெற்றும் செவிப்புலன் பாதிக்கப்பட்டும் கடைசி வரை மாற்றுத்திறனாளியாகவே வாழ்ந்து மறைந்தார். திருப்பூரில் ஜெய்வாபாய் பள்ளி, கேஎஸ்சி பள்ளி, நஞ்சப்பா பள்ளி உள்ளிட்ட பெயர்களில் உள்ள அரசு, நகரவை பள்ளிகளுக்கு இடம் கொடுத்தவர்கள் அப்போதைய வர்த்தக முதலாளிகளே.

இங்கு நவீன தொழிலாளி வர்க்கமும், 1940களில் வீரஞ்செறிந்த போராட்டங்களின் ஊடாக தொழிற்சங்க இயக்கமும் உருவானது. சுதந்திரப் போராட்டத்துடன் வர்க்கப் போராட்டமும் இணைந்தது. இரண்டாம் உலகப் போர் காலத்தில் பஞ்ச கால அலவன்ஸ் கோரி தொழிற்சங்கம் நடத்திய போராட்டம் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும். கம்யூனிஸ்டுகள் ஒரு அரசியல் சக்தியாக வளர்ந்தபோது அதன்மேல் கடும் அடக்குமுறைகள் ஏவப்பட்டு, 1950ல் ஆஷர் மில் தோழர் பழனிச்சாமி என்கௌண்டரில் கொல்லப்பட்டார்.

1940களில் இங்கிருந்து, சினிமா கருவி ஒன்றை வாங்கும் நோக்கத்தில் கொல்கத்தா நகரத்துக்குப் பயணமான குலாம் காதர் மற்றும் அவருடைய சகோதரர் சத்தார் சாஹேப் எனும் இஸ்லாமியர்கள், விநோதமான ஒரு இயந்திரத்தை வாங்கி வந்தார். நூற்பாலைகளில் நெசவு செய்யும் துணிகளுக்கு மாறாக பருத்தி நூல்களை பின்னி, பின்னலாடை தயாரிக்கும் அந்த இயந்திரத்தை அவர் இங்கு கொண்டு வந்தபோது, திருப்பூரின் வருங்காலத்தை இந்த இயந்திரம் அசுரவேகத்தில் மாற்றி அமைக்கப்போகிறது என்பது அவருக்குத் தெரியாது!

இங்கு சிறு, குறு விவசாயிகளாக, மானாவாரி விவசாயத்தை நம்பி இருந்த ஒரு பகுதியினர் நிச்சயமற்ற தங்கள் வருமானச் சூழலில் பனியன் தொழிற்சாலைகளைத் தொடங்கினர். சுற்றுப்புற கிராமங்களில் பாரம்பரிய கைத்தறி தொழில்களில் இருந்து விசைத்தறித் தொழிலும் பரவலானது.

2 பின்னலாடை தொழில்
நேரு காலத்திய கலப்புப் பொருளாதாரத்தின் பொற்காலம் எனச் சொல்லப்பட்ட 1960 – 70களில், ஏற்றத்தாழ்வும், முரண்பாடுகளும் நிரம்பிய நிலையிலும், ஒரு வரம்புக்கு உட்பட்ட அளவு இந்தியாவின் நகர்ப்புற சந்தை விரிவடைந்தது. ஆகவே சீரான வேகத்தில் திருப்பூர் உள்நாட்டு பனியன் தொழில் வளர்ச்சி அடைய காரணமாக இருந்தது.

இத்தாலிய வர்த்தகர் ஒருவர் இங்குவந்து பின்னலாடை ஆர்டர் கொடுத்ததைத் தொடர்ந்து 1980-களில் இங்கு ஏற்றுமதி பின்னலாடைத் தொழில் காலூன்றியது.. வளர்ந்த நாடுகளின் சந்தையில் அளவுக் கட்டுப்பாட்டு (கோட்டா) அடிப்படையில் பின்னலாடைகளை அனுப்ப இந்தியா உள்பட மூன்றாம் உலக நாடுகள் அனுமதிக்கப்பட்டன. ஏற்கெனவே திருப்பூரில் உள்நாட்டு பின்னலாடைத் தொழிலுக்கு அமைக்கப்பட்ட கட்டுமானமும், விவசாய நெருக்கடி கடுமையானதால் பரவலாக அதிகரித்த வேலையில்லா திண்டாட்டமும் ஏற்றுமதி தொழில் வளர்வதற்கு தேவையான தொழில் கட்டமைப்பையும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களையும் வழங்கியது.

இதன் விளைவாக 1984ல் ரூ.10 கோடியாக இருந்த ஏற்றுமதி, அடுத்த 22 ஆண்டுகளில், 2006 – 07ல் ரூ.11 ஆயிரம் கோடியாக பாய்ச்சல் வேகத்தில் உயர்ந்தது. 1991ஆம் ஆண்டு உலகமயக் கொள்கை அமலாக்கப்பட்டதன் தொடர்ச்சியாக உலக அளவில் வர்த்தகக் கட்டமைப்பில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. பின்னலாடை ஏற்றுமதிக்கான அளவுக் கட்டுப்பாடு (கோட்டா) முறை இந்தியாவில் 2004ஆம் ஆண்டு நீக்கப்பட்டது. அடுத்தடுத்த ஆண்டுகளில் பதிவான ஏற்றுமதி வளர்ச்சி, திறந்த போட்டியுள்ள உலகச் சந்தையில் திருப்பூர் தன்னை தக்க வைத்துக் கொண்டதை காட்டியது.
ஆனால் 2008ஆம் ஆண்டு அமெரிக்க நிதி நிறுவனங்கள் திவாலாகிச் சரிவை சந்தித்தபோது, உலக அளவில் பொருளாதார தேக்கநிலை ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக 2007-08 ஒரே ஆண்டில் ஏற்றுமதி ரூ.1050 கோடி சரிந்து ரூ.9,950 கோடியாக குறைந்தது. அதன் பிறகு கடந்த 10 ஆண்டுகளில் ஏற்றுமதி தொழில் நிச்சயமற்ற நிலையிலேயே தொடர்கிறது. கடந்த ஐந்தாண்டு கால புள்ளிவிபரம் கீழே உள்ளது:

ஆண்டு ஏற்றுமதி ரூபாயில்
2013 – 14 18 ஆயிரம் கோடி
2014 – 15 21 ஆயிரம் கோடி
2015 – 16 23 ஆயிரம் கோடி
2016 – 17 26 ஆயிரம் கோடி
2017 – 18 24 ஆயிரம் கோடி

மீண்டும் 2017 – 18ஆம் ஆண்டு ரூ.2 ஆயிரம் கோடி ஏற்றுமதி சரிந்திருக்கிறது. மோடி ஆட்சியின் தவறான கொள்கைகள்தான் இந்த பாதாளச் சரிவுக்கு காரணம். இந்த 2018 – 19 நிதியாண்டு முடிவதற்கு ஒரு மாதமே உள்ளது. இந்த ஆண்டும் பழைய நிலையே தொடரும் எனக் கூறப்படுகிறது. புள்ளிவிபரங்கள் என்னதான் சரிவை வெளிப்படுத்தினாலும், உண்மையான பாதிப்பின் ஆழத்தை, அதன் தீவிரத்தை இந்தப் புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்தப் போவதில்லை..

திருப்பூரில் ரூ. 1 கோடி மதிப்புள்ள பின்னலாடைகளை ஏற்றுமதி செய்ய சராசரியாக 100 தொழிலாளர்கள் ஒரு மாதம் உழைக்க வேண்டும். இதன்படி ரூ.2 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது என்றால், 2 லட்சம் தொழிலாளர்களின் ஒரு மாத கால வேலை பறிபோய்விட்டது என அர்த்தம். எனினும் இங்கே தொழிலாளர் வேலை இழப்பு வெளியே தெரியாது. மொத்தமுள்ள 6 லட்சம் தொழிலாளர்களுக்கும் வேலை நாள் குறைந்து, அவர்கள் சராசரியாகப் பெற்றுவந்த வேலை அளவு, வருமானம் சுருங்கி விட்டது.

3 ஏற்றுமதி சந்தை
“முதலாளித்துவ வர்க்கம் தன்னுடைய பண்டங்களின் மலிவான விலைகள் என்னும் வலிமை மிக்க பீரங்கிகளைக் கொண்டு, சீன மதிலையொத்த தடைச்சுவர்களை எல்லாம் தகர்த்தெறிகின்றது”

இது கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் இருக்கும் வாசகங்கள். உலக வணிகத்தில் எந்தப் பண்டமாக இருந்தாலும் “மலிவு விலை” என்ற ஆயுதம்தான் தீர்மானிக்கக்கூடியதாக இருக்கிறது.

இந்நிலையில் வளரும் நாடுகள் தங்கள் நாடுகளில் வேலைவாய்ப்பை பெருக்கவும், அந்நியச் செலாவணியை ஈட்டவும், பின்னலாடை ஜவுளித் தொழிலுக்குத் தேவையான வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகின்றன.

இந்தியாவில் அரசு பொது முதலீட்டிற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்வதில்லை. இன்று இந்திய ஏற்றுமதி தொழில்கள் சந்திக்கும் பிரதான பிரச்சனையே மலிவு விலையில், அதாவது கட்டுபடியான விலையில் பண்டங்களை உற்பத்தி செய்து தர சிரமப்படுவதுதான். வெளிநாட்டு வர்த்தகர்கள் விலையைக் குறைத்து கேட்கின்றனர். ஆனால் உள்நாட்டிலோ மூலப்பொருளில் இருந்து எல்லாவற்றின் விலையும் ஏறிக் கொண்டே போகிறது. இதில் எப்படி கட்டுப்படியான விலையை நிர்ணயிப்பது என்பதே உற்பத்தியாளர்களுக்குப் பெரும் பிரச்சனையாக உள்ளது.

இந்த விலை நிர்ணயப் பிரச்சனையைத் தீர்மானிப்பது தனிப்பட்ட முதலாளிகள் அல்ல. மாறாக ஆளும் அரசின் கொள்கைகளே தீர்மானிக்கின்றன. மோடி அரசைப் பொறுத்தவரை விலை நிர்ணயப் பிரச்சனையில் பெருமுதலாளிய கார்ப்ரேட் நிறுவனங்களுக்கும், பன்னாட்டு புரோக்கர்களுக்கும் சாதகமான கொள்கையைத்தான் பின்பற்றி வருகிறது..

விவசாயிகள் உற்பத்தி செய்யும் பருத்தியில் இருந்து பஞ்சு உற்பத்தி, நூல் உற்பத்தி என எல்லாவற்றிலும் விலையைத் தீர்மானிப்பது அதன் உற்பத்தியாளர்கள் அல்ல. உலகச் சந்தையில் முன்பேர வர்த்தகத்தில் ஊக வணிக கும்பல்தான் இதன் விலைகளைத் தீர்மானிக்கும் நிலை உள்ளது. இதனால் உள்நாட்டுத் தொழில்களுக்கு தேவையான மூலப்பொருள், நியாயமான விலையில் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது. விவசாயிகள், ஜவுளித் தொழில் துறையினர் இரு தரப்பினரும் பாதிக்கப்படாமல் விலை நிர்ணயிப்பதற்குத்தான் இந்திய பருத்திக் கழகம் (காட்டன் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா) ஏற்படுத்தப்பட்டது. ஆனால் தாராளமய கொள்கை அமலாக்கப்பட்ட பின்னணியில் இந்த பருத்திக் கழகமே தனது அடிப்படை நிலைக்கு மாறாக, ஊக வணிக வியாபாரிகளுக்கு உகந்த முறையில் செயல்படுவதாக மாற்றப்பட்டு விட்டது.

பின்னலாடை ஏற்றுமதித் தொழிலில் பஞ்சு, நூல், துணி உள்ளிட்ட மூலப்பொருட்கள் மட்டுமின்றி சாயப் பொருட்கள், பட்டன், ஜிப், இதர உப பொருட்கள் என எல்லா விலையும் ஏறிக்கொண்டே போகிறது. மின்சாரம், பெட்ரோல், டீசல் என எரிபொருள் கட்டணமும் ஏறிக் கொண்டே போகிறது. வங்கிக் கடன், வட்டி அதிகமாகி இருப்பதுடன், கெடுபிடியும் அதிகரிக்கிறது. எனவே பின்னலாடை உற்பத்திச் செலவு வெளிநாட்டு வர்த்தகர்கள் கேட்கும் விலைக்கு கட்டுபடியாக இல்லை. சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர் இத்தொழிலில் இருந்து தாக்குப்பிடிக்க முடியாமல் வெளியேற்றப்படுகின்றனர். அதன் உடன் விளைவாக வேலைவாய்ப்பும், வருமானமும் சுருங்கி தொழிலாளர்களும் நெருக்கடிக்குள் தள்ளப்படுகின்றனர்.

மலிவு விலைக்கு உழைப்பைத் தரக்கூடிய தொழிலாளர்களை பெறுவதற்காக ஊர் விட்டு ஊர், மாநிலம் விட்டு மாநிலம் வரக்கூடியோரைக் கொண்டு கூலியைக் குறைத்து உற்பத்திப் பொருளின் விலையைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் தொழில் துறையினர் ஈடுபடுகின்றனர். இந்த நீடித்த நெருக்கடி தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில்தான் பின்னலாடைத் தொழில் பயணிக்கிறது..இந்த நெருக்கடிக்கான தீர்வு கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை. இருக்கும் தொழிலைக் காப்பாற்ற வேண்டுமானால் கூட மோடி அரசு நீடிக்கக் கூடாது என்பதே பலரின் கூற்றாக உள்ளது.. மோடி மீதான 2014ஆம் ஆண்டு மாயையில் இருந்து தொழில் துறையினர் விடுபட்டுள்ளனர். தேர்தலில் தங்கள் வாக்கின் மூலம் பதில் அளிக்கக் காத்திருக்கிறார்கள்.

4 உள்நாட்டு சந்தை
உள்நாட்டுச் சந்தைக்கு உள்ளாடைகள் மற்றும் பனியன் ஆடைகள் உற்பத்தி செய்து தந்த திருப்பூரின் பங்களிப்பு தோராயமாக ரூ.15 ஆயிரம் கோடி எனப்படுகிறது. உலகமய கால கட்டத்தில் இந்தியாவின் பெருநகரங்கள், சிறுநகரங்களில் ஆடை அணிவதில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. டி சர்ட், பெர்முடாஸ், சார்ட்ஸ் உள்ளிட்ட பின்னலாடைகள் அணியும் நுகர்விய பண்பாட்டின் தாக்கம் அதிகரித்திருக்கிறது. இவையெல்லாம் உள்நாட்டு பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களுக்கு வாய்ப்பாக உள்ளன. ஏற்றுமதி தொழில் நெருக்கடி அதிகரிப்பதன் ஒரு பகுதியாகவும் இங்குள்ள பல நிறுவனங்கள் உள்நாட்டு சந்தையில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளனர்.
இந்திய மொத்த பின்னலாடை உற்பத்தியில் திருப்பூரின் பங்களிப்பு 75 சதவிகிதத்திற்கு மேல். தெருவோரக் கடைகள் முதல் மல்டி பிராண்ட் செயின் ஸ்டோர்கள் வரை அலங்கரிக்கும் ஆடைகளில் ஆகப்பெரும்பாலானவை திருப்பூர் தயாரிப்புகளே.

ஆரம்பத்தில் நூல் விலையேற்றம், விற்பனை வரி விதிப்பு, மாநிலங்களுக்கு இடையிலான விற்பனைக்கு சி படிவம் தாக்கல் செய்யும் கட்டாய நடைமுறை என பலவிதமான சிக்கல்களைச் சந்தித்தே உள்நாட்டுத் தொழில் வளர்ந்தது. ஆனால் நெருக்கடிக்கு இடையே வளர்ந்த திருப்பூரின் வளர்ச்சிக்கு மோடி அரசு தடைச் சுவரை எழுப்பிவிட்டது. குறிப்பாக மோடி ஆட்சியில் வேலையின்மை, விவசாய நெருக்கடி காரணமாக மக்களின் வாங்கும் சக்தி குறைந்து சந்தை சுருங்கிவிட்டது. இதனால் பின்னலாடை விற்பனை குறைந்தது. பல நிறுவனங்களில் அடுத்த இரு ஆண்டுகளுக்கு விற்கும் அளவுக்கு உள்ளாடைகள், பின்னலாடைகள் குடோன்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

5 பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி
பணமதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாக உள்நாட்டு பின்னலாடை தொழில் சுனாமியின் தாக்குதலைப் போன்ற ஒரு நிலையைச் சந்தித்தது. 2016 நவம்பர் 8 இரவில் நிகழ்த்திய அந்த தாக்குதல் நீடித்த பேரழிவை ஏற்படுத்தியது. திருப்பூரின் சரி பாதி தொழில், வர்த்தக நடவடிக்கைகள் வீழ்ச்சி அடைந்தன. பின்னல் துணி, சாயமேற்றல், காம்பேக்டிங் என ஒவ்வொரு உபதொழில் நிலையிலும் வர்த்தக நடவடிக்கை முழுக்க ரொக்கப் பணத்தை அடிப்படையாக கொண்டு நடைபெறுவதாகும். ஆனால் ரூ.500, ரூ.1000 செல்லாது என்றதால், இந்த தொழிலகங்களுக்கு இடையிலான பரிவர்த்தனை முடங்கியது.

பணப்பரிவர்த்தனை முடங்கியதால் தொழில் உற்பத்தியும், தொழிலாளர்களுக்கு சம்பளம் தருவதும் பாதித்தது. இதனால் டீக்கடைகள், தள்ளுவண்டி வியாபாரம் மற்றும் சிறுவணிகம் வரை சகலமும் பாதிக்கப்பட்டது. நவம்பர் தாக்குதலின் முதல் ஒரு மாத காலத்தில் ஏறத்தாழ 80 சதவிகித திருப்பூர் பொருளாதாரம் முடங்கியது. வங்கிகள் எங்கும் மக்களின் நீண்ட வரிசை. பிறபகுதிகளை விட திருப்பூரில் பணப் பொருளாதாரம் அதிகம் நடைபெறும் நிலையில் திடீரென ஏற்பட்ட முடக்கத்தால் வங்கிகளும், ஏடிஎம் மையங்களும் மக்கள் கூட்டத்தில் திணறின.

இந்நெருக்கடி முற்றியபோது நேரடி ரொக்கப் பரிவர்த்தனைக்கு மாறாக டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யுமாறு பிரதமர் மோடி கூறினார். ஏற்கெனவே திருப்பூரில் ஒரு பகுதி நிறுவனங்கள் வங்கிகளில் சம்பளத்தைச் செலுத்தி ஏடிஎம் கார்டுகள் மூலம் எடுத்துக் கொள்ளும் நடைமுறையை வைத்திருந்தன. ஆனால் அப்போதும் வங்கிகளில் பணம் இல்லாமல் திரும்பும் நிலைதான் ஏற்பட்டது.

2016 நவம்பருக்குப் பிறகு இந்த 28 மாத காலத்தில் திருப்பூரின் மொத்த தொழில் வியாபாரம் 30 சதவிகிதம் மீள முடியாத அளவுக்கு நிரந்தரமாக முடங்கியதுதான் பணமதிப்பு நீக்கத்தின் துல்லியத் தாக்குதலாகும்.

2017 ஜூலை 1ஆம் தேதி ஜிஎஸ்டி அமலுக்கு வந்தபோது, இந்த வரி விதிப்பை நாடு முழுவதும் பல தரப்பினரும் ஆதரித்ததைப் போலத்தான் பின்னலாடை உள்ளிட்ட ஜவுளித் தொழில் துறையினரும் வரவேற்றனர். ஒருமுனை வரி விதிப்பு எனும்போது தேவையில்லாத கூடுதல் வரி விதிப்பு இருக்காது என்பதுதான் வரவேற்புக்குக் காரணம். ஆனால் தொழில் துறையினர் எதிர்பார்த்ததும் நடக்கவில்லை, அனுபவத்தில் தவறுகளும் சரி செய்யப்படவில்லை.

திருப்பூர் பின்னலாடைத் தொழிலைப் பொறுத்தவரை ஜிஎஸ்டி ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பு இந்த நகரின் பின்னலாடை தொழில் முறையை புரட்டிப் போட்டுவிட்டது. இதை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான சிறு, குறு தொழில் துறையினரின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறி ஆக்கிவிட்டது.  விசைத்தறி ஜவுளி ஏற்றுமதி அமைப்பின் நிர்வாகியாக இருந்து, அரசின் கொள்கைகள், தொழில் மற்றும் சந்தையின் அனைத்து வளர்ச்சிப் போக்குகளையும் உன்னிப்பாக கவனித்து வரக்கூடிய முக்கிய பிரமுகர் கூறுகையில்: ஜிஎஸ்டி வரி விதிப்பில் மத்திய அரசுக்கு ஜவுளித்தொழில் பற்றி அடிப்படை புரியவில்லை. வரி ஒரே சீராக இருந்தால் நல்லது, ஆனால் நூலிழைக்கு 18 சதவிகிதம், நூலுக்கு 12 சதவிகிதம், காட்டன் பேப்ரிக் 5 சதவிகிதம், பருத்தி நூலுக்கு 5 சதவிகிதம் என உள்ளது. மூலப்பொருள்களைப் பொறுத்தவரை வரிவிதிப்பில் நெகிழ்வுத்தன்மை இருக்க வேண்டும். ஆனால், இப்போது அது இல்லை. ரிலையன்ஸ் மூலப்பொருளுக்குத் தீர்வை அதிகமாக உள்ளது.

அதை ஈடு செய்வதற்காக அடுத்தடுத்த நிலையில் வரியைக் குறைவாக வைத்திருக்கின்றனர்! அதாவது ரிலையன்ஸ் கார்ப்பரேட் நிறுவனத்தின் நலனுக்கு ஏற்ப வரி விதிப்பை தீர்மானித்துள்ளனர்.  வரித்தொகையை திரும்பப்பெறும் நடைமுறையும் தெளிவாக இல்லை. செலுத்திய வரியைத் திரும்ப பெற்றுக் கொள்ளலாம் எனச் சொல்கிறார்கள். ஆனால் எங்கள் நிறுவனத்தில் கணக்குப் பார்த்தால் செலுத்திய வரித்தொகையில் 73 சதவிகிதம்தான் திரும்பக் கிடைக்கிறது. பல பொருட்களுக்கு வரியைத் திரும்பப் பெறத் தகுதி இல்லை என்கின்றனர். மூலதனப் பொருட்கள், ஸ்டேஷனரி என தகுதியில்லா பட்டியல் புதிது புதிதாக வருகிறது.

இதனால் ஏற்றுமதியில் போட்டியிட முடியாத நிலை உள்ளது. ஜிஎஸ்டி வரி செலுத்திய தொகை திரும்ப தராததால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஒர்க்கிங் கேபிடல் எனப்படும் நடைமுறை முதலீடு பாதிப்பு, வெளிநாடுகளுடன் போட்டியிட முடியாமை, வேலைவாய்ப்பு குறைவு ஏற்படுகின்றன. அரசுக்கு தொழிலைக் காப்பாற்றும் ஆர்வம் இல்லை. புள்ளிவிபரங்களைக் காட்டி புதிய தொழில் வருவது போல் காட்டுகிறார்கள் என்றார்.

ஆக, வரி விதிப்பிலும் பாரபட்சம், அந்த வரி வசூல் நடைமுறையிலும் குளறுபடி என இரு விதத்திலும் ஜவுளித் தொழில் பாதிக்கிறது. மத்திய பாஜக ஆட்சியாளர்கள் சொன்னதுபோல் இதில் எந்த சிக்கலும் தீர்க்கப்படவில்லை. ஆனால் கடந்த டிசம்பர் மாதம் ஐந்து மாநில தேர்தலில் தோற்ற பிறகு தற்போது சில பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியைக் குறைத்திருக்கிறார்கள். ஆனால் குளறுபடி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என தொழில் துறையினர் கூறுகின்றனர்.

ஆண்டுக்கு சுமார் ரூ.400 – 500 கோடி ஏற்றுமதி செய்யும் ஒரு முன்னணி நிறுவனத்தின் உரிமையாளர் ஜிஎஸ்டி பிடித்தம் செய்ததில் 2018 பிப்ரவரி வரை 8 மாதத்தில் எங்களுக்கு ரூ.10 கோடி வர வேண்டியுள்ளது என்றார்.

ஆனால் ரூ.2 கோடி அளவுக்கு மெர்சன்டைஸ் ஏற்றுமதி தொழில் நடத்தி வந்த சுந்தர்ராஜன் என்பவர் தனது வங்கிக்கடன் மற்றும் ஜிஎஸ்டி வரித்தொகை திரும்பக் கிடைக்காதது என சிலந்தி வலை போன்ற நெருக்கடியில் சிக்கி அவரது மொத்த கடன் ரூ.1 கோடியாக உயர்ந்தது. எனவே தனது நிறுவனத்தை அடிமாட்டு விலைக்கு விற்றுவிட்டார். அதன் பிறகும் மொத்த கடனை அடைப்பதற்கு வழியின்றி ஒரு பணியாளராக மாறிவிட்டார். தன் பிள்ளைகளின் கல்விக் கட்டணத்தைச் செலுத்தவும் வழியில்லாமல் திண்டாடிக் கொண்டிருந்தார். ஆனால் இவர் ஒருவர் மட்டுமே அல்ல, இதுபோன்ற நிலையைச் சந்தித்த சிலர் தற்கொலை செய்து கொண்டனர் என்பதும் கசப்பான உண்மை.

திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதித் தொழிலில் இழப்பு ஏற்பட்டு பெரும் கடன் வலையில் சிக்கியதால் தொழிலதிபர் கண்ணன் என்கிற சீனிவாசன் (51) தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கடந்த 2017ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு முன்பாக நடைபெற்றது. இவர் ஃபேர் அன்ட் ஃபிளேர் என்ற பெயரில் அண்ணாநகர், அய்யம்பாளையம், போயம்பாளையம், கணக்கம்பாளையம் உள்ளிட்ட ஆறு இடங்களில் பனியன் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வந்தார்.

மொத்தம் 1500 தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். இவருக்குத் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு, சுமார் ரூ.40 கோடி கடன் ஏற்பட்டது. தீபாவளியின்போது, கடன் தொந்தரவு அதிகமானது. மனஉளைச்சல் ஏற்பட்டு ஊசி மூலமாக தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது. இச்சம்பவம் தொழில் துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தொழில் நஷ்டம், கடன் அதிகரித்த நிலையில் ஏற்றுமதிக்கு வழங்கும் ஊக்கத் தொகை (டிராபேக்) 7.6 சதவிகிதத்தில் இருந்து வெறும் 2 சதவிகிதமாக மத்திய அரசு குறைத்துவிட்டது. அதாவது ஏற்றுமதித் தொழிலை ஊக்குவிப்பதற்காக அவர்கள் உற்பத்தி நிலையில் செலுத்தும் வரித் தொகையில் 7.6 சதவிகிதத்தை அரசு அவர்களுக்குத் திரும்பத் தருவதே டிராபேக் எனப்படும் ஊக்கத்தொகை. இதை வெட்டிச் சுருக்க உலக வர்த்தக ஒப்பந்தம் நிர்பந்திக்கிறது. அதன்படி ஒரு காலத்தில் 26, 27 சதவிகிதம் வரை இருந்த டிராபேக் படிப்படியாகக் குறைக்கப்பட்டு வந்தது. மோடி ஆட்சிக் காலத்தில்தான் மிக மோசமான அளவுக்கு இந்த தொகை வெட்டப்பட்டுள்ளது. டிராபேக் குறைப்பு திருப்பூருக்கு மரண ஓலம் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் அறிக்கை வெளியிட்டது.

கடும் போட்டி நிலவும் உலக பின்னலாடை சந்தையில், டிராபேக் தொகை கிடைத்தாலே போதும் என்று இங்குள்ள சிறு, நடுத்தர ஏற்றுமதியாளர்கள் 40 சதவிகிதம் பேர் தொழில் நடத்தி வருகின்றனர், எனவே டிராபேக் குறைப்பு என்பது கணிசமான உற்பத்தியாளர்களுக்கு மரண அடியே!

6 தொழிலாளர் நிலை
திருப்பூரின் தொழிலாளர் தன்மையில் வேகமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் உள்ளூர் தொழிலாளர் என்றிருந்தது, அடுத்ததாக சுற்று வட்டார கிராமப்புற தொழிலாளர்கள் என்பதைத் தாண்டி, தமிழக அளவில் பிற மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், கேரள, ஆந்திராவில் இருந்து வந்தவர்கள் என பின்னலாடைத் தொழில் சுவீகரித்துக் கொண்டே இருந்தது. இப்போது வட மாநிலங்களில் இருந்தும் – உபி., பீஹார், ஜார்கண்ட், வங்கம், வடகிழக்கு மாநிலங்கள், ராஜஸ்தான், குஜராத் என – குட்டி இந்தியாவே திருப்பூரில் சங்கமித்துள்ளது.
திருப்பூர் பின்னலாடைத் தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் குறைந்தது 12 மணி நேரத்தில் இருந்து 16 மணி நேரம் வரை கடுமையாக பாடுபடும் தொழிலாளர்கள் தங்களுடைய வாழ்க்கைச் செலவினங்களை ஈடுக்கட்ட வேறுவழியின்றி ஞாயிறு வார விடுமுறை நாட்களில் கூட வேலைக்குச் சென்று வருவதுண்டு.

தொழிலாளர் குடும்பங்களுக்கு வீட்டு வாடகை, மருத்துவம், கல்வி, போக்குவரத்து என்பது மிகப்பெரும் சுமையாக உள்ளது. ஒரு தொழிலாளி மட்டும் வேலை செய்து மொத்த குடும்பத்தையும் காப்பாற்றிவிட முடியாது. எனவே கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டும், வயது வந்த தங்கள் பிள்ளைகளும் வேலைக்குச் செல்ல வேண்டும். அப்போதுதான் அன்றாட அடிப்படைத் தேவைகளை ஈடுகட்டி வாழ்க்கையை நகர்த்த முடியும். வருமானம் சுருங்கிவிட்ட நிலையில் கந்துவட்டி, மைக்ரோ பைனான்ஸ் கடன்களை நம்பி பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் தேவைகளைச் சமாளித்து வருகின்றனர்.

ஒப்பந்த சம்பள அடிப்படையில் கணக்கிட்டால் கூட ஓவர்டைம் உள்பட ஒரு மாதத்தில் தொழிலாளிகள் சராசரியாகப் பெறக்கூடிய சம்பளம் குறைந்தபட்சம் ரூ.8 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சம் ரூ.12 ஆயிரம் வரை கிடைக்கும். ஆனால் திருப்பூர் மாநகரம், சுற்று வட்டாரப் பகுதிகளில் வாழ்க்கைச் செலவு (காஸ்ட் ஆப் லிவ்விங்) அதிகம். வீட்டு வாடகை குறைந்தது ரூ.3 ஆயிரம், அதுபோக தண்ணீர் கட்டணம், மின்கட்டணம் தனி. குடும்ப உறுப்பினர் எண்ணிக்கையைப் பொறுத்து வீட்டு வாடகை அதிகமாகும். இத்துடன் வாகனங்களுக்கு எரிபொருள், போக்குவரத்து கட்டணம், குழந்தைகளுக்கான பள்ளி கல்விக் கட்டணம், மருத்துவச் செலவு, உறவினர் வீட்டு விசேஷங்கள், செல்போன் உள்ளிட்ட இத்யாதி செலவு என கணக்கிட்டால் ரூ.15 ஆயிரம் கூட போதாது.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல் பண்டிகைகள் திருப்பூரின் நிலைமையை உரசிப் பார்த்துக் கொள்வதற்கான வாய்ப்பாக இருக்கும். வேலை குறைந்துவிட்ட சூழலில் அண்மையில் பண்டிகைக்கு ஊருக்குச் சென்றவர்கள் திருப்பூருக்குத் திரும்பி வந்தாலும் வேலை குறைவாக இருக்கும் என்பதால் கணிசமானவர்கள் வரவில்லை. பெரிய ஏற்றுமதி நிறுவனங்கள் உள்பட முன்னணி உற்பத்தி நிறுவனங்களைப் பொறுத்தவரை கணிசமான வெளி மாநிலத் தொழிலாளர்களை விடுதியில் தங்க வைத்து வேலை வாங்குகின்றனர். ஆனால் சிறு, குறு நிறுவனங்கள்தான் பாதிக்கின்றன.

திருப்பூரைப் பொறுத்தவரை ஏறத்தாழ 40 சதவிகிதம் பெண் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். பெண்கள் மீது பண மதிப்பு நீக்கம் மறக்கவே முடியாத கடும் தாக்குதலைத் தொடுத்தது. அப்போது நுண்கடன் நிறுவனங்கள் கொடுத்த நெருக்கடி எப்போதும் மறக்கவே முடியாது.

ஒரு “மாசம் பொறுத்துக்கோங்கய்யா, கெஞ்சிக்கேக்குறேன், அடுத்த மாசம் கட்டாயம் தவணையக் கட்டீற்றேன்!” என்றார் மாலதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) அதெல்லாம்” முடியாது, பணம் வராமல் இங்கிருந்து நகரமாட்டேன். நீ பொம்பளதான! உன்னால எப்பிடியாச்சும் சம்பாதிக்க முடியும்ல?” கண்களில் கொடூர வக்கிரத்துடன், சொல்கிறான் கடன் வசூலிக்க வந்தவன்.

ஏங்க, “எங்களுக்கே வேலையில்ல, கையில காசு இல்ல, இதுவரைக்கும் பாக்கியில்லாம கடன கட்டியிருக்கோம். ஒரு தவணைதான பாக்கி இருக்கு!, இதுக்கு வந்து இப்பிடி நாக்கப் பிடுங்குற மாதிரி கேக்குறீங்களே, எங்களுக்கு சாகுறதத்தவற வேற வழியில்லீங்க!” என்று ஆற்றாமையோடு கண்ணீர் மல்க கெஞ்சுகிறார் ராசாத்தி. அப்பிடியா, சரி இந்த ரோட்டுல போற பஸ்சில விழுந்து செத்துப் போ! அப்ப இன்சூரன்ஸ் காசு கிடைக்கும், அதல நான் கடனை கழிச்சுக்குரேன்! என அலட்டிக் கொள்ளாமல் பேசுகிறான் வேறொரு வசூல்காரன்.

பல்லாயிரக்கணக்கான பெண்கள் வேலைவாய்ப்பை இழந்து நிற்கும் நிலையில்தான் நுண்கடன் (மைக்ரோ பைனான்ஸ்) கொடுத்தவர்கள் மேற்கண்டவாறு நடந்து கொண்டனர். திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் நேரங்காலம் பார்க்காமல் கடுமையாகப் பாடுபட்டு மாதம் ரூ.7 ஆயிரம், ரூ.8 ஆயிரம் சம்பாதிக்கின்றனர். இதில் கடனும், வட்டியுமாக ஒரு பெண் மாதத்திற்கு ரூ.3 ஆயிரம் வரை செலுத்த வேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்வதெனில் அவர்கள் உழைப்பைச் செலுத்தி சம்பாதித்த தொகையில் மூன்றில் ஒரு பங்கு (33 சதவிகிதம்) நுண்கடன் நிறுவனங்களுக்குப் போய்விடுகிறது!

ஏன்“, இந்த கடன் பெறாமல் நீங்கள் வாழ முடியாதா?” என்ற கேள்விக்கு, முடியாது“, குடும்பத்தில் எதிர்பாராத மருத்துவம், குழந்தைகளுக்குப் படிப்பு, உறவுகளில் திருமணம், இறப்பு என செலவுகளுக்கு வேறுயார் எங்களுக்குப் பணம் கொடுப்பார்கள்? என பதில் கேள்வி வந்து விழுகிறது. ஒவ்வொரு பெண்ணும் பல ஆண்டுகளாக நுண்கடன் பெற்று முறையாகச் செலுத்துகின்றனர். முடிவில்லாத இந்த கடன் உறவு தொடர்ந்து கொண்டிருக்கிறது. சிலந்தி வலைப்பின்னலில் ஈர்க்கப்பட்டு சிக்கிக்கொள்ளும் ஈக்களைப் போல இப்பெண்கள் நிலை உள்ளது.

பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திருப்பூர், சிவகாசி உள்ளிட்ட ஊர்களில் அவர்கள் ஈட்டும் வருமானத்தின் ஒரு பகுதி மைக்ரோ பைனான்ஸ் கந்துவட்டி“ முறை மூலம் கார்ப்ரேட் நிதி நிறுவனங்களுக்குப் போய்ச் சேருகிறது. ஏறத்தாழ 10 கோடி இந்தியக் குடும்பங்கள் ரூ.1லட்சம் கோடி கடன் கட்டமைப்பில் பிணைக்கப்பட்டுள்ளன.
தற்போதைய மோடி அரசு “முத்ரா வங்கி” திட்டத்தில் நுண்கடன் நிறுவனங்கள் கடன் அளிக்கும் விதிமுறைகளைச் சேர்த்துள்ளது. ஆனால் இவை கடன் பெறும் பெண்களுக்குப் பாதுகாப்பளிப்பதைப் பற்றி கவலைப்படவில்லை. கடன் கொடுக்கும் நிறுவனங்களின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவே உள்ளது. திருப்பூர் பெண்கள் கடன் வலையில் சிக்கிய வாழ்க்கை மோடி அரசின் தாக்குதலால் மேலும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டது.

பொருளாதாரப் பிரச்சனை மட்டுமின்றி, உறவுச் சிக்கல்கள், சமூக, பண்பாட்டு நெருக்கடி காரணமாகவும் உழைப்பாளிகள் உள்பட சாமானிய மக்கள் சந்திக்கும் அழுத்தம் அதிகம். இதனால் தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக தற்கொலைகள் அதிகம் நடக்கும் பகுதியாகவும் திருப்பூர் மாவட்டம் உள்ளது. இம்மாவட்டத்திலும் குறிப்பாக திருப்பூர்தான் தற்கொலை மிக அதிகம் நடைபெறுகிறது.

7 யாருக்கு வளர்ச்சி?
உலகச் சந்தையில் கணிசமான பங்களிப்புச் செய்யும் சுமார் 10 பெரிய பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் திருப்பூரில் இருக்கின்றன. ஒரே கூரையின் கீழ் செயல்படும் பெரிய நிறுவனங்களாக அவை இருக்கின்றன. திருப்பூரில் மட்டுமின்றி இந்தியாவின் வேறு பல ஊர்களிலும் தங்கள் தொழிலகங்களை வைத்திருக்கின்றன. சமீபத்தில் ஐந்தாறு பெரிய நிறுவனங்கள் எத்தியோப்பியா, சூடான் உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் தங்கள் தொழிற்கிளைகளைத் தொடங்கியுள்ளன. அங்கிருந்து ஐரோப்பிய சந்தை மிக அருகில் இருப்பதுடன், அங்கு ஆப்பிரிக்க நாடுகளின் தயாரிப்புகளுக்கு இறக்குமதி வரி இல்லை என்ற அனுகூலம், குறைவான கூலியில் தொழிலாளர்கள் கிடைப்பது, அந்த நாட்டு அரசுகள் வழங்கும் நிலம், மின்சாரம், நீர் உள்ளிட்ட சலுகைகள் ஆகியவை காரணமாக மேற்படி நிறுவனங்கள் ஆப்பிரிக்காவில் கால் பதித்துள்ளன.

10 ஆயிரம் தொழிலாளர்களுக்கு மேல் வேலை செய்யும் நிறுவனங்களாக உச்சநிலையில் இருக்கும் இதுபோன்ற குறிப்பிட்ட சில நிறுவனங்கள் இக்காலத்தில் செழிப்பாக வளர்ந்திருக்கின்றன. மோடி ஆட்சியின் காரணமாக யாராவது பலனடைந்தார்கள் என்று சொல்வதென்றால், கார்ப்ரேட் தன்மையை நோக்கி செல்ல முடிந்த மேல்மட்டத்தைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்க முடியும்.

நடுத்தர, சிறு, குறு தொழில் பிரிவினர், டில்லி, மும்பை, கொல்கத்தா உள்பட இதர மாநிலங்களுக்கும், ஈரோடு சந்தைக்கும், காதர்பேட்டை சந்தைக்கும் உற்பத்தி செய்து அனுப்பக் கூடியவர்கள், இரண்டாம் தர பனியன் ஆடைகள் தயாரித்து சாலையோர வியாபாரத்துக்கு விற்கக்கூடியோர், இவர்களுக்கும் கீழ்நிலையில் வீட்டுத் தொழிலாக சிறுஅளவு ஜாப்ஒர்க் செய்யும் (குடிசைத் தொழில்) பிரிவினர் என பல பிரிவினரும் கடல் அலையின் ஏற்ற இறக்கங்களில் விடாமல் தொடர்ச்சியாக அலைக்கழிக்கப்படக் கூடியவர்களாக தத்தளிக்கும் நிலையிலேயே உள்ளனர்.

நெருக்கடியின் சுமை முழுவதும் கடைசியாக ச் சென்று சேருவது தொழிலாளர்கள், முறைசாரா தொழிலில் இருக்கும் உழைப்பாளிகளின் வாழ்க்கையில்தான். அது பற்றி ஏற்கெனவே மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  திருப்பூர் ரயில் நிலையத்திலும், பேருந்து நிலையங்களிலும் பெட்டி படுக்கையுடனும், வீட்டு சாமான்களுடனும் கண்களில் மிரட்சியுடனும், ஏதோ ஒரு நம்பிக்கையுடனும் ஒவ்வொரு நாளும் குடும்பமாக வந்து இறங்கிய கூட்டத்தை கடந்த பல ஆண்டுகளாகப் பார்க்க முடிகிறது. தொலைதூர ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் வறண்ட தலைகளுடன், அழுக்கு ஆடைகளுடன் கண்களில் ஏதோ சில கனவுகளைச் சுமந்து கொண்டு வரும் நூற்றுக்கணக்கான வட மாநில இளைஞர்கள், இளம் பெண்கள் ரயில் நிலையத்தைக் கடந்து குமரன் சாலையில் வரிசையாக நடந்து செல்வதை வாரம் தவறாமல் பார்க்க முடிகிறது. சமீபகாலமாக பலர் இனிமேலும் திருப்பூரில் வேலைச் செய்து பிழைக்க முடியாது என்ற விரக்தியில், ஏமாற்றத்துடன் தன்களுடைய ஊர்களுக்கு திரும்பிச் செல்லும் கொடுமையையும் காணமுடிகிறது.

அவர்கள் பெறும் ஊதியம், வசிப்பிடம் தலித் மக்கள் நிலைகூட பரவாயில்லை என்று சொல்லக்கூடிய வகையில்தான் இருக்கின்றன. (8க்கு 10) மற்றும் (10க்கு 10) அளவுள்ள ஒரு அறையில் ஆறு பேருக்குக் குறையாமல் எட்டு, பத்து பேர் கூட வசிக்கிறார்கள் என்பதை நம்ப முடிகிறதா? இதுபோன்ற லைன் வீடுகள், ஓரிரு கழிப்பறைகள், குளியலறைகள் பத்து இருபது பேர் குடியிருக்கும் பகுதியில் இருக்கும். அதுதான் அவர்கள் வாழும் வீடு! இல்லை கூடு!!

ஒருபுறம் தொழிலகங்களில் சொற்பக் கூலி என்றால், மறுபுறம் இவர்கள் வாங்கி வரும் வாரச் சம்பளத்தை ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி பறித்துக் கொள்ளும் காவல் துறையினரின் மாமூல் கொடுமை மறுபுறம். சமூக விரோதிகள், இந்து முன்னணி என்ற பெயரில் அடைக்கலமானோர் இந்த தொழிலாளர்களிடம் வருமானத்தைப் பறிப்பது, செல்போன், வாகனம் உள்ளிட்டவற்றை பறிப்பது போன்ற சம்பவங்களும் தொடர் கதையாக உள்ளன.

8 சமூக அரசியல் இயக்கங்கள்
சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்தே தேசிய இயக்கம், பொதுவுடமை இயக்கம், திராவிட இயக்கம் என முப்பெரும் இயக்கங்களிலும் தனக்கே உரிய தனித்த செயல்களத்தை திருப்பூர் கொண்டிருந்தது. தாராளமய காலத்தின் இந்த 30 ஆண்டுகளில் தொழிலாளர் வாழ்க்கை, தொழிலாளர் பிரச்சனைகள் முன்போலவே மாற்றமின்றி தொடர்கின்றன. கடந்த காலத்தில் பெற்ற உரிமைகள் கூட கண்ணுக்குத் தெரியாமல் பறிக்கப்படுகின்றன. இவை போராட்டங்களை கிளர்த்தும் காரணிகளாக இப்போதும் தொடர்கின்றன.

இதுவரை இல்லாத புதிய விளைவு என்பது, வலதுசாரி போக்கு தலையெடுத்து இருப்பதுதான். ஆனால் அவை சமூகத்தின் அடிப்படை வர்க்கங்கள், சமூகக் குழுக்களிடம் பெரிய செல்வாக்குப் பெற்று நிலை கொண்டுவிட்டன என்று சொல்ல முடியாது. அதற்கான தீவிர முன்னெடுப்புகளை அவர்கள் மேற்கொண்டாலும் திருப்பூரின் ஜனநாயக, முற்போக்கு, இடதுசாரி சக்திகள் அதற்கெதிரான செயல்பாடுகளையும், போராட்டத்தையும் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.

மற்றொரு பக்கம் மதரீதியான அணிதிரட்டலுக்கு அக்கம் பக்கமாக சாதிரீதியான அணிதிரட்டல் நடந்து கொண்டிருக்கிறது. உணவகங்கள், தேநீர்க்கடைகள், ஆட்டோ நிறுத்தங்கள், சாலையோர மக்கள் கூடுமிடங்கள், சுவர் விளம்பரங்கள், பெயர் பலகைகள் என எல்லா பகுதிகளிலும் நுட்பமாக சாதி, மத அரசியல் போக்குகள் அடையாளப்படுத்தப் படுகின்றன. இவையும் ஒரு வகையில் வலதுசாரி போக்குகள்தான்.

2011ஆம் ஆண்டு சாயஆலைகளை மொத்தமாக மூடும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் திருப்பூரின் தொழில் துறை கடுமையாக பாதிக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான மக்களின் வேலைவாய்ப்பு பறிபோனது. அந்த சூழலில்தான் திடீரென “தொழில் பாதுகாப்புக் குழு” என்ற அமைப்பு முளைத்தது. பல்வேறு அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், உற்பத்தியாளர் சங்கங்கள் செயல்பட்டு வந்தபோதும், திடீரென முளைத்த தொழில் பாதுகாப்புக் குழு, ஏதோ மாய மந்திரம் நிகழ்த்த வந்தவர்கள் போல் நடந்து கொண்டனர். இந்த அமைப்பின் பின்னணியில் இந்து முன்னணியும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் இருப்பதை தொழில் துறையினர் தாமதமாகப் புரிந்து கொண்டனர். திருப்பூரில் “ஸ்ரீபுரம் அறக்கட்டளை” என்ற பெயரில் ஒரு அமைப்பு தொடங்கப்பட்டது. “மாற்றத்துக்கான அணி” என்ற பெயரில் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தேர்தலிலும் ராஜா சண்முகம் தலைமையிலான குழுவினர் போட்டியிட்டனர்.

இக்குழுவில் ஏற்றுமதியாளர் சங்கப் பொதுச் செயலாளராக தேர்வான விஜயகுமாரும், துணைத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பழனிச்சாமியும் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள். திருப்பூரில் கடந்த 10 ஆண்டு காலமாக அடுத்தடுத்து நடந்து வரும் சம்பவங்களைச் சங்கிலித் தொடர் போல இணைத்துப் பார்த்தால், திட்டமிட்டு விரிக்கப்பட்டுள்ள காவி அமைப்புகளின் வலைப்பின்னலை அறிய முடியும்.
ஏற்றுமதியாளர் சங்கத்தில் பதவிக்கு வந்த இக்குழுவினர் ஏற்றுமதி தொழில், ஏற்றுமதியாளர் பிரச்சனைக்காக உருப்படியாக குரல் கொடுக்கவில்லை. பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, டிராபேக் ஊக்கத்தொகை குறைப்பு, ஏற்றுமதி வீழ்ச்சி, மூலப்பொருட்கள் விலை ஏற்றம் என எந்த தீவிரமான பிரச்சனைகளிலும் வாய் திறக்கவில்லை, வாய் திறந்தபோது மோடி அரசின் மீதான அவர்களது விமர்சனம் மயிலிறகின் மென்மையாகவே இருந்தது.

2013ஆம் ஆண்டு செப்டம்பரில் பிரதமர் பதவி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நரேந்திரமோடி திருச்சி வந்தபோது அவரைச் சந்திக்கவும், அவரிடம் மனுக் கொடுக்கவும் இங்குள்ள ஏற்றுமதியாளர்களை அணிதிரட்டியதில் “மாற்றத்துக்கான அணியின்” உண்மை நோக்கம் வெளிப்பட்டது.

இந்து முன்னணி அமைப்பு திருப்பூர் சுற்று வட்டாரத்தில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதாக மதரீதியான அணிதிரட்டலில் ஈடுபட்டு வருகிறது. ஒரு பகுதி முதலாளிகளின் ஆதரவும், திருப்பூரில் நிலம் மற்றும் நிதித் தகராறுகளிலும் தலையிட்டு கட்டப் பஞ்சாயத்து செய்வதால் கிடைக்கும் பல கோடி ரூபாய் பண பலத்தையும் கொண்டு, இந்து முன்னணி காவி மதவெறி பண்பாட்டு அரசியலை முன்னெடுக்கிறது. மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் அவர்களது நியாயமற்ற எல்லாவித நடவடிக்கைகளுக்கும் ஒத்துப் போனதைக் காண முடிகிறது.

கடந்த டிசம்பர் மாதம் இந்து முன்னணி சோடஷ மகாலட்சுமி யாகம் என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியை நடத்தியது. இந்த யாகத்திற்கு மொத்தம் ரூ.8 கோடி செலவிட்டதாக இந்து முன்னணி தெரிவித்தது. அப்போது பள்ளி மாணவர்களிடமும், பெண்கள் உள்ளிட்ட பொதுவான கடவுள் நம்பிக்கையுள்ள பக்தர்களிடமும் தங்கள் கருத்தை கொண்டு செல்ல முயன்றனர். மத நம்பிக்கையை, திட்டமிட்ட மதவாத அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்குப் பயன்படுத்தினர்.

இந்த யாகத்தில் பங்கேற்றால் தொழில் வளம், விவசாயம் செழிக்கும் என்று இந்து முன்னணி விளம்பரம் செய்தது. குறிப்பாக திருப்பூர் பின்னலாடை சிறு, குறு தொழில் துறை மோடி அரசின் பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி அமலாக்கம் காரணமாக முதுகெலும்பு முறிக்கப்பட்டுக் கிடக்கிறது. இதே வட்டாரத்தில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் மூன்று விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். குறிப்பாக தாராபுரம் அருகே கெத்தல்ரேவ் கிராமத்தில் தனது தாயையும், பெற்ற இரு குழந்தைகளையும் கொன்றுவிட்டு விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட துயரச் சம்பவம் நெஞ்சை உலுக்குவதாகும். கடன் தொல்லையால் இந்த சம்பவம் நடந்தது.

இந்த வட்டாரத்தில் தொழிலும், விவசாயமும் நிர்க்கதியாய் இருப்பதற்கு மோடி ஆட்சி பின்பற்றிய கொள்கைகளே மூலகாரணம். இதற்கு எதிராக மக்களின் கோபம் அரசியல்ரீதியாக அவர்கள் மீது திரும்பாமல் இருக்க மடை மாற்றும் உத்தியாக யாகம் மேற்கொண்டனர். சமூக நெருக்கடி முற்றும் சூழலில் அதற்கு காரணத்தைச் சொல்லி சரியான தீர்வை மக்களிடம் முன்வைக்காமல் குறுகிய இன, மத உணர்வுகளைத் தூண்டிவிட்டு ஆதாயம் அடைய முயற்சிப்பதே பாசிச சக்திகளின் வேலை. திருப்பூரில் கடந்த 8 ஆண்டு காலத்தில் இந்துத்துவ ஆர்எஸ்எஸ் சார்பு அமைப்புகளின் அணுகுமுறை இதற்கு ஒத்துப் போகிறது.

கல்வி நிலையங்களில் குழந்தைகளின் மனங்களை காவிமயப்படுத்த, தொடர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இதிகாச சங்கலான் சமிதி என்ற பெயரில் அண்மையில் இவர்கள் இம்மாவட்டத்தின் பள்ளி ஆசிரியர்களைத் திரட்டி வைத்து அறிவியல், வரலாறுக்கு மாறாக புனைவையும், இதிகாசத்தையும் முன்னிலைப்படுத்தி பயிற்சி அளித்தனர். இது மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியின் மூலமே ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

உலக வரைபடத்தில் இடம் பிடித்திருக்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் ஏற்றுமதி மாநகரமான திருப்பூரில் இந்துத்துவ சக்திகளின் மேலாதிக்கத்தை ஏற்படுத்த கடுமையாக முயன்று வருகின்றனர். குறிப்பாக இந்த ஐந்தாண்டு மோடி ஆட்சியில் அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்துத்துவ அமைப்புகள் செல்வாக்கை வளர்த்துக் கொள்ள முயன்றன. பல லட்சம் மக்கள் உழைப்பால் உயர்ந்த திருப்பூரையும், இதன் தொழிலையும் பாதுகாக்க, அதன் ஜனநாயக வாழ்வைப் பாதுகாக்க இங்குள்ள சமூக நல்லிணக்கத்தை விரும்பும் ஜனநாயக சக்திகள், வேற்றுமையில் ஒற்றுமையாக வாழும் மக்கள் ஒன்றுபட்டு முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

9 எதிர்காலம் என்ன?
கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி திருப்பூர் அருகே பெருமாநல்லூரில் பல லட்சம் ரூபாய் மக்கள் வரிப்பணத்தில் நடத்தப்பட்ட அரசு நிகழ்ச்சியில் 10 நிமிடங்கள் மட்டுமே பெயரளவில் தலை காட்டிவிட்டு, அதன் பக்கத்திலேயே தனது கட்சி பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றார் நரேந்திர மோடி. திருப்பூர் வர்த்தகத்தை ரூ.1லட்சம் கோடியாக உயர்த்துவது பற்றி ஏற்கெனவே தான் சொன்னதைப் பற்றி இக்கூட்டத்தில் மறந்தும் அவர் வாய் திறக்கவில்லை. தனது அரசு திருப்பூர் தொழிலுக்கு என்னென்ன திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறது, என்ன சாதனைகளைச் செய்திருக்கிறது என்று ஒரேயொரு விசயத்தைக்கூட அவரால் சொல்ல முடியவில்லை. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி ஏதேனும் புதிய திட்டங்களை அறிவித்தார என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட போது அப்படி எந்த ஒரு புதிய திட்டத்தையும் அறிவிக்கவில்லை என்கிற பதில் தான் கிடைக்கிறது.

ஆனால் அவர் வந்து சென்றதற்குப் பின் சமூக ஊடகங்களில் பாஜகவைச் சேர்ந்தோர் ஏராளமான கதைகளைப் பரப்பி வருகின்றனர். சிறு,குறு தொழில்களுக்கு எந்த உத்தரவாதமும், பிணையும் கேட்காமல் ரூ.2 கோடி கடன் தொகையை வங்கிகளில் உடனுக்குடன் அனுமதிப்பதாகவும், ஏராளமானோர் இந்த கடன் பெற்றுள்ளதாகவும் செய்தி பரப்பப்படுகிறது. ஆனால் இதுபற்றி திருப்பூர் தொழிலதிபர் ரவிச்சந்திரன் என்பவர் கூறும்போது, இப்படி கடன் பெற்ற ஒரு தொழிலதிபரையாவது எனக்கு காட்டுங்கள் என்றார். மேலும், தனது தொழிலுக்கு நடப்புக் கணக்கு வைத்திருக்கும் வங்கி கிளையில், ஏற்கெனவே பெற்ற கடனை முறையாக தவணை செலுத்தி முழுமையாக அடைத்த பிறகும், மீண்டும் கடன் கேட்டால் தர மறுக்கின்றனர். அத்துடன் பல மடங்கு சொத்து மதிப்பை பிணையாக காட்டினால் கடன் தருவதாக சொல்கின்றனர். இதுதான் தற்போதைய நிலை.

மோடி ஆட்சி வருவதற்கு முன்பு தொழில் துறையினர் வங்கி கடன் பெறுவது எளிதாக இருந்தது. ஆனால் நீரவ் மோடி போன்றவர்கள் பல ஆயிரம் கோடி மோசடி செய்த பிறகு, அவர்களை தண்டிப்பதற்கு மாறாக எங்களைப் போன்ற தொழில் துறையினருக்கு வழங்கும் கடன் நடைமுறையை ரிசர்வ் வங்கி கடுமையாக்கி விட்டது. இப்போது தொழில் துறையினர் அரசின் பல விசயங்களால் பாதிக்கப்பட்டிருப்பது மட்டுமின்றி வங்கிகளின் கெடுபிடி கஷ்டத்தையும் சேர்த்து சந்தித்து வருகிறோம் என்றார். உண்மை இப்படி இருக்க, இப்போதும் பாஜகவினர் மட்டுமின்றி ஊடகங்களும் கூசாமல் பல பொய்களைப் பரப்பி வருகின்றனர்.

பல வண்ண ஆடைகளை உற்பத்தி செய்யும் திருப்பூர், அதே போன்ற பல வண்ண சிந்தனைகள் கொண்ட மக்கள் வாழும் நகரம்தான். இந்த நகரம் தனித்துவமான அடையாளத்தைப் பெற்றதற்கு முக்கிய காரணம் மக்களின் கடும் உழைப்பு. மத்திய, மாநில அரசுகளின் உதவியும், ஒத்துழைப்பும் இல்லாமலே இந்நிலைக்குச் சுயமாக வளர்ந்தது. ஆனால் சுதேசி, சுயசார்பு என பெரிதாகப் பேசிய பாரதிய ஜனதா அரசு அமைந்த பிறகு இந்நகரின் வாழ்வு கேள்விக்குறியாகி நிற்கிறது.

ஏற்றுமதி வீழ்ச்சி, உள்நாட்டு சந்தை தேக்கம் ஆகியவற்றால் இத்தொழிலை நம்பி இருக்கும் ஆயிரக்கணக்கான சிறுதொழில் முனைவோர், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மோடி ஆட்சிக் காலத்தில் கடும் பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். டிராபேக் தொகையை வெட்டியது, விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி குளறுபடிகள், பணமதிப்பு நீக்கம் போன்ற மோடி அரசின் தவறான கொள்கைகள்தான் இந்நிலை ஏற்படுவதற்கு பிரதான காரணம்.

இதனால் ஒரு பகுதி தொழில் முனைவோர் இத்தொழிலைக் கைவிட்டு வெளியேறியுள்ளனர். மாற்றுத் தொழில்களை நாடிச் செல்வது, பிற பகுதிகளுக்கு தொழிலை இடம் மாற்றுவது ஆகியவை தற்போது அதிகரித்துள்ளன.
இதுபோன்ற நெருக்கடியை சந்தித்த தருணங்களில் தொழில் அமைப்புகள் குறைந்தபட்சம் அரசுக்கு கோரிக்கை, வேண்டுகோள் விடுவது, நேரில் முறையிடுவது, தேவைப்பட்டால் தொழில் அமைப்புகளும், தொழிற்சங்கங்களும் கரம் கோர்த்து போராட்டங்களில் ஈடுபடுவது போன்ற செயல்களில் கடந்த காலங்களில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் ஆர்எஸ்எஸ்காரர்களின் கட்டுப்பாட்டில் பிரதான தொழில் அமைப்பு சிக்கியிருக்கும் நிலையில், பிற தொழில் அமைப்புகளை ஒன்று சேர்த்து, தொழிற்சங்கங்களுடன் இணைந்து பிரச்சனைகளைப் பேசுவது என்ற நடைமுறை கவனமாக க் கைவிடப்பட்டுவிட்டது.

அதேசமயம் ஆர்எஸ்எஸ் சார்பு அமைப்புகளைச் சேர்ந்தோர் தொழில் பிரச்சனைகளில் மிகவும் இழிவான மதவெறி கண்ணோட்டத்துடன் தனித்தனி உற்பத்தியாளர்களைத் தங்களுடன் சேர்ப்பதற்கு முயற்சிக்கின்றனர். இது பல ஆண்டு காலமாக நிலை பெற்றிருக்கும் அமைப்புரீதியான ஜனநாயக நடைமுறையை சிதைக்கக்கூடியதாக இருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, சமூக வாழ்வில் மதவெறியைத் திணிக்கவும், காவி மேலாதிக்கத்தை ஏற்படுத்தவும் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். அரசியல் இயக்கங்கள், பொதுநல அமைப்புகள் தங்கள் நிலைபாடுகளில் சுதந்திரமாகச் செயல்படுவதும், தேவைப்படும் பிரச்சனைகளில் ஒன்றுபட்டு இணங்கிச் செயல்படுவதும் காலம் காலமாக திருப்பூரில் இருக்கும் பண்பட்ட நடைமுறை ஆகும்.
ஒரு குட்டி இந்தியாவாக வேற்றுமையில் ஒற்றுமை காணும் திருப்பூரில் இந்த மேம்பட்ட விஷயங்களை சிதைத்துச் சீர்குலைக்கவும் அதற்கு மாற்றாக மதவாத அரசியலை நிலைநிறுத்தவும் முயற்சி நடைபெறுகிறது. ஒருபுறம் சில முதலாளிகளின் நிதி ஆதரவும், மறுபுறம் உதிரி கழிசடை பிரிவினரை உணர்ச்சிகரமாகத் தூண்டி கும்பல் சேர்ப்பதும் இந்த அரசியலுக்கான வழிமுறையாக பின்பற்றப்படுகின்றன.

ஆனால் ஆபத்தான இந்த போக்கினை எதிர் கொண்டு முறியடிக்க அடிப்படை உழைக்கும் மக்கள் பிரிவினர் மோடி ஆட்சியின் தீங்குகளை அனுபவத்தில் மிகத் தெளிவாகவும், ஆழமாகவும் உணர்ந்துள்ளனர். வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் தங்கள் தீர்ப்பை வலுவாக வெளிப்படுத்துவார்கள் என்பது உறுதி! இதன் மூலம் திருப்பூரின் பின்நோக்கிய சரிவை தடுத்து நிறுத்தி முன்னோக்கிச் செல்வதற்கான பயணம் தொடரும் என நம்பிக்கை வைக்கலாம்.

விலை – ரூ.10/-
நூல் கிடைக்கும் இடம்:
எண்: 7, இளங்கோ சாலை,
தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
தொ: 044 2433 2924

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *