நிகழ்காலம் பிரதமர் நரேந்திர மோடியிடம் கருணையோடு இருக்கலாம், ஆனால் அவரைப் பொறுத்தவரை, வரலாறு நிச்சயம் மிகக்கடுமையாகவே இருக்கும். மோசடிகளை உள்ளடக்கிய தனது விவேகமற்ற முடிவுகள் அனைத்திலிருந்தும், மோடி தன்னை விலக்கி வைத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஆதரவாக இருக்கின்ற வாக்காளர்கள், எல்லாவற்றையும் விட அவரது மகத்தான சக்தியின் மீது பிரமிப்பைக் கொண்டிருப்பதால், வருகின்ற ஆண்டுகளிலும், இவ்வாறே அவர் தொடர்ந்து செய்து வரலாம். எவ்வாறாயினும் பெரிய அளவில் வாக்குகளை வென்றவராக, ஆனால் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் உண்மையான பங்களிப்பை வழங்கத் தவறிவிட்ட பிரதமராகவே மோடியை வரலாறு என்றென்றும் அவரை நினைவில் வைத்திருக்கப் போகிறது.
2020 ஜுன் 22 திங்கள்கிழமையன்று பிரதமர் மோடியின் கால்வான் குறித்த அறிக்கையை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விமர்சித்த போது,’சமகால ஊடகங்களைவிட அல்லது அந்த விஷயத்தில் பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சிகளை விட வரலாறு என்னிடம் கனிவாகவே இருக்கும்’ என்று மன்மோகன் சிங் 2014ஆம் ஆண்டு தனது பதவிக் காலத்தின் முடிவில் கூறியிருந்த புகழ்பெற்ற கருத்தை நினைவுபடுத்திக் கொள்ள முடிந்தது.
மோடியைப் பொறுத்தவரை, அது வேறு வகையிலேயே இருக்கப் போகிறது – இப்போது வேண்டுமானால் அவர் பிரச்சனைகளின்றி சுமுகமாகப் பயணம் செய்யலாம். ஆனால் வரலாறு ஒருபோதும் அவரிடம் கருணை காட்டப் போவதில்லை. இதே வழியை அவர் தொடர்ந்தால், இப்போதிருப்பதற்கு மாறாக, அவரை மிகவும் குறுகிய பார்வை கொண்டிருந்தவராக, நல்லதை விட அதிக தீங்கு விளைவிக்கின்ற நடவடிக்கைகளை மேற்கொண்டவராக மட்டுமே வரலாற்றில் அவர் நினைவு கொள்ளப்படுவார்.
தவறான அறிவுறுத்தலால் மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கையிலிருந்து, 370ஆவது பிரிவை நீர்த்துப்போகச் செய்தது, அதற்குப் பின்னர் காஷ்மீரில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது, சர்ச்சைக்குரிய மற்றும் துருவமுனைப்பாக்கும் சட்டங்களை அறிமுகப்படுத்தியது போன்ற முடிவுகளின் மூலம், அரசியல் சூழலை மோடி களங்கப்படுத்தியதோடு, அண்டை நாடுகளுடனான இந்தியாவின் உறவையும் மோசமடையச் செய்துள்ளார். அவரைக் குறித்து வரலாறு எழுதப்படும்போது, தன்னைப் புகழ்ந்து பேசுகின்ற வகையில் இல்லாத பல சாதனைகளை பிரதமர் நிகழ்த்தி இருக்கின்றார்.
மோடி : நிகழ்காலம்

சுதந்திர இந்தியா இதுவரையில் பார்த்திராத வழிபாட்டு முறையைப் பின்பற்றி, மிகவும் பிரபலமான தலைவர்களில் ஒருவராக மோடி இருக்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை. தேர்தல்கள் மற்றும் பிற நிகழ்வுகளைப் பற்றி எழுதுவதற்காக நான் விரிவாகப் பயணம் செய்திருக்கிறேன். பாலினம், புவியியல் பகுதி, சமூக-பொருளாதார பின்னணியைக் கடந்ததாக மிகப்பெரிய அளவில் அவருடைய புகழ் பரவியிருப்பதை நான் கண்டிருக்கிறேன்.
பரந்த அளவிலான நல்லெண்ணமும், வெகுஜனங்களுடன் தன்னை இணைத்துக் கொள்ளும் வினோதமான திறமையும், மோடியை நல்ல நிலையிலேயே தொடர்ந்து நிலைத்து வைத்திருக்கிறது. அவருடைய தவறுகள் ஒரு பொருட்டாக இருப்பதில்லை. எதிரணியினரின் புத்திசாலித்தனமான தாக்குதல்கள் அவரது நாடகத்தனமான நடவடிக்கைகளின் முன்பு மங்கிப் போய் விடுகின்றன. மேலும் தன்னைப் பற்றிய சித்திரத்தை உருவாக்கிக் கொள்ளக்கூடிய அவரது திறன் மூலமாக, அவரால் மிகவும் சவாலான சூழ்நிலைகளையும் வெல்ல முடிவதைக் காண முடிகிறது.
2016 நவம்பரில் அதிக மதிப்புள்ள பணத்தாள்களை மதிப்பு நீக்கம் செய்த தவறான சிந்தனை அல்லது ஜிஎஸ்டியை அவசரம் அவசரமாக நடைமுறைப்படுத்தியது போன்ற நடவடிக்கைகள் இதுவரை அரசியல் ரீதியாக மோடியைப் பாதித்திருக்கவில்லை. அந்த இரண்டு நடவடிக்கைகளுமே வாக்காளர்களை மிக மோசமாகப் பாதித்திருந்தன. ஆனாலும் தாக்கப்படும்போது, மேலும் மேலும் பலமடைகிறவராகவே மோடி இருக்கிறார். மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ’சௌக்கிதார் சோர் ஹை’ பிரச்சாரம், ரஃபேல் ஒப்பந்தத்தில் மோடி மீது வைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் இரண்டும் மோடியை நேரடியாகத் தாக்கிய போதிலும், பின்னர் அவை தாக்கியவர்களையே திருப்பித் தாக்கியதை யாராலும் மறக்க முடியாது. கேள்வி கேட்காத வாக்காளர்கள் பிரதமர் சொல்லும் எதனையும் ஏற்றுக் கொள்பவ்ர்களாக இருக்கின்றனர். மோடியின் மிகப்பெரிய பலமாக பிளவுபட்ட, பொருத்தமற்ற, பெரும்பாலும் பயந்து போயிருக்கின்ற எதிர்ப்பு இருக்கின்றது. ஆக, நிகழ்காலம் பிரதமரிடம் கருணை காட்டுவதாகவே இருக்கிறது. ஆனால் எதிர்காலத்தில் அவர் எதற்காக நினைவு கூரப்படுவார், அவர் விட்டுச் செல்கின்ற மரபு என்னவாக இருக்கும்? என்ற கேள்வி இங்கே முக்கியமாகிறது.
வரலாறு நிச்சயம் மோடியிடம் கருணை காட்டாது

குறிப்பாக பொருளாதார விஷயங்களில் எடுக்கப்பட்டிருக்கும் பாதகமான கொள்கை முடிவுகளைப் பொறுத்த வரை, பணமதிப்பு நீக்கம், அதைத் தொடர்ந்து குறைபாடுகளுடன் அவசரம் அவசரமாகக் கொண்டு வரப்பட்ட ஜிஎஸ்டி அந்த பட்டியலில் முதலிடத்தில் இருக்கும். அவற்றின் எதிர்மறையான தாக்கம் பொருளாதாரத்தின் மீது இன்னமும் நீடிக்கிறது. அந்த நடவடிக்கைகளை முறையே, கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்துவதையும், மறைமுக வரி முறையை முறைப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட பெரிய பொருளாதார சீர்திருத்தங்களாக நாட்டு மக்களிடம் மோடி கொண்டு சென்றிருந்தார். ஆனால் நடந்த உண்மை என்றால், அதுவரை நன்றாக இயங்கிக் கொண்டிருந்த பொருளாதாரத்திற்கு அவை இரட்டை அடியாக இருந்தன.
அவையிரண்டும் அவருடைய முதல் ஆட்சிக்காலத்தில் நடந்தன. இன்னும் அதிக அளவு ஆதரவுடன் தனது இரண்டாவது ஆட்சிக்காலத்திற்கு திரும்பியபோது, இந்தியாவின் சமூக கட்டமைப்பைச் சீர்குலைக்கும் வகையில் பல சட்டங்களை இயற்றிய மோடி அரசாங்கம், முன்னெப்போதும் இல்லாத விதத்தில், நாட்டில் துருவமுனைப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல மாநிலங்களிலும், துருவமுனைப்பு அரசியலை நடைமுறைப்படுத்தியுள்ள கட்சியின் அரசாங்கத்திற்கு தலைமை தாங்கியதற்காக, வருங்காலத்தில் மோடி பிரபலமாக நினைவுகூரப்படுவார். சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை கறையான்களுடன் ஒப்பிட்டு, வங்காள விரிகுடாவில் அவர்கள் தள்ளப்படுவார்கள் என்று அமித்ஷா கூறியபோது, இந்தியாவின் பிரதமராக இருந்தவர் மோடிதான் என்பதை வரலாறு ஒருபோதும் மறக்கப் போவதில்லை.
இனப்பிரச்சனையை வகுப்புவாத பிரச்சனையாக மாற்றுவதற்காக அசாமின் (என்ஆர்சி) தேசிய குடிமக்கள் பதிவேடு பிரச்சனையை திசைதிருப்பியதற்காக, சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்டத் திருத்தத்தைக் (சிஏஏ) கொண்டுவந்ததற்காக மோடியிடம் வரலாறு ஒருபோதும் கருணை காட்டப் போவதில்லை.
முத்தலாக் சட்டம், தகவல் அறியும் உரிமை சட்டம் மற்றும் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம் போன்றவற்றில் கொண்டு வரப்பட்ட சர்ச்சைக்குரிய திருத்தங்கள் மற்றும் ‘வெளிநாட்டவர்’ குறித்த தேசபக்தி நிறைந்த சொல்லாடல்கள் – இவையனைத்தும் மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்காத தன்னுடைய பார்வையை நிறைவேற்றுவதில் மட்டுமே மோடி அரசாங்கம் முக்கியத்துவம் காட்டிர்யிருப்பதையே காட்டுகின்றன.
கோவிட் நெருக்கடி இதற்கு முன்னெப்போதுமில்லாதது, கடுமையானது என்றாலும், மோடி அரசாங்கம் தொழிலாளர் பிரச்சனைகளைக் கையாண்ட விதமும், அதன் சிந்தனையற்ற தன்மையும், மாநிலங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதன் மூலம் கூட்டாட்சி கட்டமைப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்த முயற்சித்ததும் என்றைக்கும் கேள்விக்குரியவையாகவே இருக்கும்.
அரசிலும், பாஜகவிலும் மிகமோசமாக இருக்கின்ற ஆளுமைகள், இரண்டாம் நிலைத் தலைவர்களை முன்னிறுத்தவோ அல்லது உண்மையான திறமைகளைத் தக்க வைத்துக் கொள்ளவோ முடியாத அவரின் இயலாமை போன்றவை மோடியின் பெரிய பலவீனங்களாக இருக்கின்றன.
இந்திய வெளியுறவுக் கொள்கையை மிகமோசமாக கையாண்டிருப்பது, மோடியை இக்கட்டான நிலமைக்குத் தள்ளியிருக்கின்ற மற்றொரு அம்சமாகும். எல்.ஏ.சி-யில் சீனாவுடனான தொடர்ச்சியான மோதல்கள் 20 இந்திய வீரர்களின் மரணத்திற்கு வழிவகுத்திருப்பது, நேபாளம் ஒருதலைப்பட்சமாக இந்தியப் பகுதிகளை உள்ளடக்கி தனது வரைபடத்தை மாற்றியமைத்திருப்பது, காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மீது இடைவிடாத தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவது போன்ற நிகழ்வுகள், அண்டை நாடுகளால் இந்தியாவிற்கு முன்பை விட, அடிக்கடி சவால் விடுக்கப்படுவதையே காட்டுகின்றன.
அனைத்து கட்சிக் கூட்டத்தில் கால்வான் பற்றி மோடி கூறியது பரபரப்பை உருவாக்கியது, பூகோள ரீதியிலான உத்தியுடன் செயல்படுகின்ற தலைவராக சிந்திப்பதை விடுத்து, வாக்காளர்களைத் திருப்திப்படுத்துகின்ற அரசியல்வாதியாக தன்னை அவர் கருதுவதையே அவரது பேச்சு காட்டியது.
வங்கதேசத்தவர் ஊடுருவல் பிரச்சனை வங்கதேசத்துடனான உறவுகளைப் பாதித்திருக்கிறது. ராஜபக்சே சகோதரர்களின் கீழ் உள்ள இலங்கையும் இந்தியாவுடன் நட்பாக இல்லை. அந்த நாடு சீனாவுடன் நெருக்கமாக இருப்பதாகவே அறியப்படுகிறது.
வரலாறு எப்போது கருணை காட்டும்

மோடி எதையும் சாதிக்கவில்லை என்று ஒருவரால் உறுதியாகச் சொல்ல முடியாது. முதலாவது ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட மக்கள்நலன் சார்ந்த தளம் – கிராமப்புற வீடுகளை வழங்குவதிலிருந்து, சமையல் எரிவாயு இணைப்புகள், கிராமப்புற மின்சாரம், சுகாதார காப்பீடு, திட்டங்களைச் செயல்படுத்தலில் உள்ள குறைபாடுகளை நீக்குவதற்கு ஆதாருக்கு தரப்பட்ட முக்கியத்துவம், ஏழைகளுக்கு மிகவும் பயனளிக்கின்ற வகையில் சமூகப்பொருளாதார ரீதியிலான சாதி கணக்கெடுப்பின் வலுவான பயன்பாடு – மிகவும் பிரபலமான, பயனுள்ள, சிறந்த கொள்கை முடிவுகளாக இருந்தன. ராஜதந்திர ரீதியாக, அதிகரித்து வரும் இந்திய அமெரிக்க உறவுகள் மோடி அரசாங்கத்தின் முக்கிய வெளியுறவுக் கொள்கை சாதனையாக இருக்கிறது. 2016இல் நடத்தப்பட்ட துல்லிய தாக்குதல், 2019இல் நடத்தப்பட்ட பாலகோட் வான்வழித் தாக்குதல்கள் மோடியின் ஆதரவை அதிகரிக்க உதவின.
இருந்தாலும், மோடி அரசாங்கத்தின் மக்கள்நலன் மற்றும் ஆளுகை மீதான கவனம் அனைத்தும் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் முற்றிலும் மறைந்து விட்டதாகவே தெரிகிறது. மோடியைச் சுற்றி பெரும்பான்மைவாத, தேசியவாதத் தூண்டுதலை நிறைவேற்றுவது, மற்றும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளைத் தவிர்த்து விட்டு, அவரது சித்தாந்தத்திற்கு முக்கியத்துவம் தருகின்ற வரலாற்றுச் சிக்கல்களை ஏற்படுத்துகின்ற குறுகிய பார்வைக்கு உதவுவதாகவே, இரண்டாவது ஆட்சிக்காலத்தின் கடந்த ஒரு வருடம் முழுவதும் அமைந்திருக்கிறது.
இன்னும் சிறிது காலம் தொடர்ந்து மோடி தேர்தலில் வெற்றி பெறக்கூடும். வாக்குகளைப் பெறுகின்ற அவரது அற்புதமான திறனைத் தவிர்த்து, உண்மையில் நீண்ட காலத்திற்கு அவர் எதைக் கொண்டு நினைவில் கொள்ளப்படுவார்? தன்னை ஒரு தேசத்தைக் கட்டியெழுப்பியவராக வரலாறு நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுமா அல்லது தேர்தலில் வெற்றிபெறுகின்ற வகையில் தந்திரமாகப் பேசுகின்ற இயந்திரமாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுமா என்பதே மோடியைத் துளைத்தெடுக்கும் கேள்வியாக இருக்கும்.
https://theprint.in/opinion/modi-is-sailing-smooth-now-but-history-wont-be-kind-to-him/446796/
தி பிரிண்ட் இணைய இதழ், 2020 ஜூன் 23
நன்றி: தி பிரிண்ட் இணைய இதழ்
தமிழில்: தா.சந்திரகுரு

