வரலாற்றின் தவறான படிப்பினைகளையே நரேந்திர மோடி பின்பற்றுகிறார் – சமர் ஹலர்ங்கர் (தமிழில் தா.சந்திர குரு)

வரலாற்றின் தவறான படிப்பினைகளையே நரேந்திர மோடி பின்பற்றுகிறார் – சமர் ஹலர்ங்கர் (தமிழில் தா.சந்திர குரு)

அனைத்து தலைவர்களுமே பொய் சொல்கிறார்கள், தவறு செய்கிறார்கள். ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்காக தங்களுடைய பொய்களை சிறந்த தலைவர்கள் பயன்படுத்துகிறார்கள், தங்களுடைய தவறுகளிலிருந்து அவர்கள் பாடம் கற்றுக் கொள்கிறார்கள், சமரசம் செய்யக் கற்றுக் கொள்கிறார்கள். மோடியும் கூட அவ்வாறு கற்றுக் கொள்ள வேண்டும்.

ஸ்க்ரோல்.இன் இணைய இதழ் 

சமர் ஹலர்ங்கர்

மகாபாரதப் போரை 18 நாட்களில் வென்றதாக இந்திய மக்களுக்கு மார்ச் 25 அன்று நினைவுபடுத்திய நரேந்திர மோடி, கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் வெற்றி பெற 21 நாட்கள் மட்டுமே ஆகும் என்று கூறியிருந்தார். 

மோடியின் ‘பொய்மை சோதனைகள்’ இப்போது நிறுவப்பட்டு விட்டன. 2014ஆம் ஆண்டு துவங்கி ஐந்து ஆண்டுகளில் சந்தேகத்திற்குரிய வகையில் மோடி பேசிய பொய் பேச்சுக்களைப் பதிவுசெய்கின்ற வகையில் இணையதளம் ஒன்றை (https://factsmodified.factchecker.in/) நாங்கள் உருவாக்கியிருந்தோம். அந்த இணையதளத்தில், மோடியின் மோசமான பேச்சுக்கள் குறித்த நீண்ட பட்டியலை உங்களால் காண முடியும். 

ஆனாலும் இந்த விஷயத்தில் மோடியை மட்டும் தனிமைப்படுத்துவது நியாயமற்றது. அவரது நண்பர் டொனால்ட் ட்ரம்பும் உலகெங்கிலும் உள்ள பல வலிமையான தலைவர்களைப் போலவே உண்மையின் மீது ஆழ்ந்த வெறுப்பைக் கொண்டவராகவே இருக்கிறார். இவர்களைப் போன்ற வாய்வீச்சாளர்களால் மட்டுமல்லாது ஜனநாயகவாதிகளாலும் அதிக விளைவை ஏற்படுத்தும் வகையில் பொய்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவர்கள் அனைவரும் நல்லதும் கெட்டதும் செய்திருக்கிறார்கள் என்றாலும், தலைவர் ஒருவரின் பெருமையை உயர்த்துவதற்கு வெறுமனே பொய்களும், அவர்களுடைய பிரபலமும் மட்டுமே போதாது என்பதையே வரலாறு நமக்கு நினைவூட்டுகிறது. மோடியால் விரும்பப்படுகின்ற இதுபோன்ற செயல்கள் மாறுபட்ட, பிளவுபட்ட நாடுகளை ஒன்றிணைத்து செழிப்பை நோக்கி அவற்றை முன்னேற்றுவதற்கு நிச்சயமாகப் பயன்படாது. 

வளமான நிலங்கள், சட்டத்தின் ஆட்சியால் ஒன்றுபட்ட ஜனநாயகங்கள்,   ஏற்றுக்கொள்ளக்கூடிய தேசியத் தன்மை, பெரும்பாலும் மிதமான அரசியல்வாதிகள் என்று இன்று இந்தியாவிற்கு அறிமுகம் ஆகியிருக்கின்ற கனடா, ஜெர்மனி மற்றும் அமெரிக்கா (டிரம்பிற்கு முந்தைய) போன்ற எடுத்துக்காட்டுகளைக் கவனியுங்கள். அவை எப்போதுமே இதுபோன்று இருந்தவையல்ல.

பிரிந்திருந்த கனடா

1940களின் முற்பகுதியில், பிரெஞ்சு மற்றும் ஆங்கிலம் பேசுபவர்களிடையே மிகஆழமாகப் பிரிக்கப்பட்டிருந்த கனடாவில் துண்டு துண்டாகிப் போகும் தன்மை தெளிவான சாத்தியத்துடனே இருந்தது. 1870களில், ஜெர்மன் தேசம் என்ற ஒன்றே இல்லை; ஓயாது சண்டையிட்டுக் கொண்டிருந்த ஜெர்மன் பேசுகின்ற கூட்டம் மட்டுமே இருந்தது. 1930களில், பெரும் மந்தநிலையால் அமெரிக்கா பிளவுபட்டு பேரழிவிற்கு உட்பட்டிருந்தது. இந்த நாடுகளின் வரலாறுகளில் அந்த காலகட்டத்தில் இருந்த நல்வாய்ப்பு மற்றும் சூழ்நிலை காரணமாக, ஜெர்மனிக்கு ஓட்டோ வான் பிஸ்மார்க், கனடாவிற்கு வில்லியம் லியோன் மெக்கென்சி கிங் மற்றும் அமெரிக்காவிற்கு பிராங்க்ளின் டெலானோ ரூஸ்வெல்ட் ஆகியோர் கிடைத்தனர். முதலாமவர் தேசத்தைக் கட்டியமைத்தவராகவும், மற்ற இருவரும் தேசத்தைக் கட்டிக் காத்தவர்களாகவும் இருந்தனர் என்று வரலாற்றாசிரியர் மார்கரெட் மேக்மில்லன் குறிப்பிடுகிறார்.

மிக நீண்ட காலம் கனடாவின் பிரதமராகப் பணியாற்றிய மெக்கென்சி தனது நாட்டை ஒன்றாக இணைத்து வைத்திருந்ததில் வெற்றி கண்டவராக இருந்தார். சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் குறித்த விவாதங்களை அவர் தவிர்த்தார். தனது அரசியல் எதிரிகளை அரசாங்கத்திற்குள்ளே கொண்டு வந்தார் அல்லது அவர்களை வென்றெடுக்க மெக்கென்சி முயன்றார் என்று மெக்மில்லன் எழுதுகிறார். இரக்கமற்றவராக, கொந்தளிப்பு நிரம்பியவராக, தயக்கமின்றி பொய் சொல்பவராக இருந்த பிஸ்மார்க், எதிர்க்கட்சிகள் தங்களுக்கிடையே எதிர்த்து விளையாடிக் கொள்ளுமாறு பார்த்துக் கொண்டார். அந்த மோதல்களை அடிக்கடி தனது நலன்களை அவர் அடைவதற்காகப் பயன்படுத்திக் கொண்டார். மூன்று தடவைகள் அதிபராக இருந்த ரூஸ்வெல்ட், உண்மைகளை மீறுபவராக, அல்லது பொதுமக்களின் அங்கீகாரத்தை நாடியபோது வெளிப்படையாக பொய் சொன்னவராகவே இருந்தார். அவர் தான் கட்டமைத்த கூட்டணிகளையும், ஒருமித்த கருத்தையும் பாதிக்கக்கூடிய எதையும் செய்வதைத் தவிர்ப்பவராக இருந்தார். 

தங்களுக்கென்று சிறந்த குறிக்கோள்கள் மற்றும் திறமை, திறன்களுடனான உறுதிப்பாடு, தங்கள் நாடுகளை தங்களுடனே அழைத்துச் செல்கின்ற திறன் போன்ற திறமையான தலைவர்களை உருவாக்குகின்ற மிகமுக்கிய குணாதிசயங்களை, அந்த மூன்று பேரும் தங்களுக்கிடையே பகிர்ந்து கொண்டிருந்தனர் என்று மேக்மில்லன் குறிப்பிடுகிறார். 

சமரசங்களை உருவாக்கிக் கொள்ளுதல்

’அவர்கள் தவறுகளே செய்யவில்லை என்று அதற்குப் பொருளல்ல’ என்று எழுதுகின்ற மேக்மில்லன் ’அனைவருமே தவறுகள் செய்தார்கள், ஆனால் அந்த தவறுகளிலிருந்து அவர்களால் கற்றுக் கொள்ள முடிந்தது. அனைத்திற்கும் மேலாக, சமரசம் செய்வது எப்போது என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. பெரும்பாலும் அதிகாரம்மிக்க தலைவர்கள் எளிதில் வீழ்ந்து விடக்கூடிய வலையைத் தவிர்த்து அவர்கள் சமாளித்தனர் – அதுவே அவர்களை எப்போதும் சரியானவர்கள் என்று நம்மை நினைக்க வைத்த ஒன்றாக உள்ளது’ என்கிறார். 

சுதந்திரத்திற்குப் பிந்தைய வரலாற்றில் ஏற்பட்டிருக்கும் மிகப் பெரிய நெருக்கடிகளில் ஒன்றின் போது இந்தியாவை நிர்வகிக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் வேளையில், தனது மனதில் மோடி கொள்ள வேண்டிய பாடங்களாக இவை இருக்கின்றன. இவ்வாறான நெருக்கடிகளே ஒருவரிடமிருக்கின்ற ஊக்கம், தன்மை மற்றும் திறன் குறித்த சோதனைகளாக இருக்கின்றன. மீட்டெடுக்கவும், புத்துணர்வு பெறவும், புதிய தொடக்கத்தைத் தேடுவதற்குமான வாய்ப்பாகவும் அவை இருக்கின்றன. 

நிபுணர்களின் ஆலோசனைகளைக் கவனித்துக் கேட்பது, தொலைநோக்கு கொண்டிருப்பது, நல்ல நிர்வாகத்தை வழங்குவது ஆகியவற்றில் தனது இயலாமையைக் காட்டியிருப்பதன் மூலம் இந்த பெரும்தொற்றுநோய் ஏற்படுத்திய சோதனையில் நரேந்திர மோடியால் சிறப்பாகத் தேர்வாக முடியவில்லை. தொடர்ந்து அதிகரித்து வருகின்ற தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருவதிலிருந்து தன்னுடைய அபிமானத் தொண்டர்களைத் திசைதிருப்புவதற்காக புதிதாக சோதனை செய்யப்பட்ட உத்தியைப் பயன்படுத்தி, மகிழ்ச்சியான பண்டிகை கொண்டாட்டங்களின் மூலமாக அவர்களிடம் நேர்மறையான மற்றும் எதிர்மறை உணர்வுகளைத் தூண்டி விடும் வகையில் மோடி குழப்பத்துடனே   செயல்பட்டிருக்கிறார். இந்தியப் பிரதமரால் – மனதை மாற்றிக் கொள்ளவோ அல்லது எளிதில் மன்னிக்கவோ தெரியாத ஒரு மனிதரால்  – இந்த நெருக்கடி மூலமாக தனக்கு வழங்கப்பட்டிருக்கும் வாய்ப்பை வேறு எவ்வாறு பயன்படுத்திக் கொண்டிருக்க முடியும்?

கடந்த காலத்தின் வடுக்களைக் கீறி, மீண்டும் புண்களை உருவாக்கி இந்த பரந்த, மாறுபட்ட நாட்டில் பிளவுகளை அதிகரிப்பதன் மூலம் இந்தியக் குடியரசின் உடலையும் ஆன்மாவையும் பலவீனப்படுத்துகின்ற வகையில் கடந்த ஆறு ஆண்டுகளில் தன்னால் இழைக்கப்பட்ட மிகப் பெரிய தவறு எதையாவது சரிசெய்வதற்கு மோடி அமைதியாக முயற்சித்திருக்கலாம். துருவமுனைப்பில் தன்னுடைய விடாமுயற்சி மூலமாக, தனது அன்புக்குரிய நாட்டிற்கு ஏற்படுகின்ற தீங்கை அவர் அமைதியாக ஒப்புக் கொண்டிருக்கலாம். இந்த தொற்றுநோய்க்கு முன்னதாக, மதத்தால் இந்தியா பிளவுபடுத்தப்படுவதை எதிர்த்து தெருக்களில் இறங்கிய  இளைஞர்கள் மற்றும் அதிருப்தியாளர்களுடன் அமைதியை அவர் ஏற்படுத்திக் கொண்டிருக்கலாம். 

பின்வாங்கலுக்கான உத்தி 

சம்பந்தப்பட்ட அனைவரிடமும் கலந்தாலோசிக்காமல், எந்தவொரு குடிமக்கள் தேசிய பதிவேடும் இறுதி செய்யப்படாது என்ற உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கூற்றை மறுபரிசீலனை செய்வதற்கான சந்தர்ப்பம் மோடிக்கு கிடைத்திருப்பதாகத் தெரிகிறது. இந்த இருவரின் முரட்டுத்தனமான நிலைப்பாட்டின் தனித்துவமான மாற்றமாக அது இருந்திருக்கும். ஆனால் பெரும்பாலும் பின்வாங்குவது என்பது மீண்டு வருவதற்கான இடைநிறுத்தத்தைத் தேடுகின்ற உத்தியாகவே இருக்கும். 

தொற்றுநோய்க்கு முந்தைய ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கலவரங்கள் குறித்த உண்மைகள் மற்றும் கூற்றுக்களை மாற்றுவதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கு நடுவே அந்த முயற்சி வந்ததால், அவ்வாறு உறுதியளிப்பதை நம்புவது கடினமாக இருந்தது. நாடு கோவிட்-19 மீது செலுத்தியிருக்கும் கவனத்தையும், பெரும்பாலான நீதிமன்றங்கள் மூடப்பட்டிருப்பதையும் கொண்டு, சதித்திட்டத்தின் விரிவான பின்னணியை அரசாங்கம் உருவாக்குகிறது. மேலும் யதார்த்தத்தைப் பொருட்படுத்தாமல் தனக்கான பாத்திரங்களை ஒதுக்கிக் கொள்கிறது.

எதிர்ப்பாளர்கள் பெரும்பாலும் முஸ்லீம்கள் என்றாலும் அவர்கள் மட்டும் பிரத்தியேகமாக இல்லாமல் பலரும் தொடர்ச்சியாகச் சிறைக்கு அணிவகுத்துச் செல்வதை நாம் கண்டோம். அதே நேரத்தில், புராணக்கதைகளில் வேரூன்றிய ஹிந்து தேசக் கனவுடன் மோடியை ஆதரித்து வருகின்ற கலவரக்காரர்களும், அதைத் தூண்டியவர்களும் சுதந்திரமாக வெளியே சுற்றித் திரிந்தனர். சுதந்திரமான பேச்சுரிமைக்கான தங்கள் ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்தியவர்கள், விளிம்புநிலையில் இருப்பவர்களுக்காக குரல் கொடுத்த, உதவிக்கரம் நீட்டிய போராட்டக்காரர்கள், கீழ்மட்டத்தில் உள்ள அமைப்பாளர்கள் இப்போது அரசின் எதிரிகளாக நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். பலருக்கு எதிராக தேசத்துரோக குற்றச்சாட்டு மற்றும் தீவிரவாதிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகின்ற சட்டங்கள் பிரயோகப்படுத்தப்பட்டுள்ளன. டெல்லி நீதிமன்றத்தில், பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட 24 வயது மாணவரை நீதித்துறை காவலில் எடுக்க வேண்டும் என்று காவல்துறை விண்ணப்பித்த போது, ​​’வழக்கு நாட்குறிப்பை ஆராய்ந்த போது குழப்பமான உண்மை தெளிவாகிறது’ என்று கூறிய அமர்வு நீதிபதி ’விசாரணை ஒரு பக்கத்தை மட்டுமே இலக்காகக் கொண்டிருப்பது தெரிகிறது’ என்று கருத்து தெரிவித்திருந்தார். 

ஐஸ்வாலில் குண்டுவெடிப்பு

பொதுமக்களிடம் இருக்கின்ற கருத்துக்கு மாறாக, காங்கிரஸ் தலைமையில் இருந்த  முந்தைய அரசாங்கங்கள் மென்மையான அரசை வழிநடத்தவில்லை. ஐஸ்வாலில் தனது சொந்த மக்கள் மீதே இந்திரா காந்தி குண்டுவீச்சு நடத்தினார். அந்த ஒருமுறைதான் இந்திய மண்ணில் விமானப்படை தனது ஆயுதங்களை இந்திய மண்ணின் மீதே வீசியிருந்தது. போரை வென்ற இந்திரா காந்தி தனது எதிரிகளை சிறையில் அடைத்தார். இரண்டு ஆண்டுகளாக ஜனநாயகத்தை முடக்கி வைத்த அவர், பஞ்சாபில் நூற்றுக்கணக்கான அப்பாவிகளைக் கொன்ற கடினமான முடிவிற்கு ஒப்புதல் அளித்தார். ராஜீவ் காந்தி வெளிநாடுகளில் ராணுவத் தலையீடுகளில் இந்தியாவை ஈடுபடுத்தினார். பல உள்நாட்டு யுத்தங்களை நடத்தி காஷ்மீர் மற்றும் பிற இடங்களில் சுதந்திரம் மற்றும் நீதி இடைநிறுத்தப்பட்டதற்கு காரணமாக மன்மோகன் சிங் இருந்தார். 

ஆனால் நெருக்கடிநிலை காலத்தின் போது தவிர, கணிசமான சுதந்திரத்துடன் தங்கள் பாத்திரங்களை அந்த காலங்களில் ஜனநாயக அமைப்புகள் கொண்டிருக்க முடிந்தது. பேசுவதற்கும், மனசாட்சியுடன் எதிர்ப்பவர்களாக இருப்பதற்கும், தங்களை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்வதற்கும் எவ்வித தடையுமின்றி இருப்பதற்கான போதுமான இடமும் வாய்ப்பும் பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், கோபமடைந்த மாணவர்கள், நீதிபதிகள் என்று அனைவருக்குமே கிடைத்தன. 

இப்போது அது முற்றிலும் வேறாக இருக்கிறது. தேச விரோதிகள், நகர்ப்புற நக்சல்கள் மற்றும் முஸ்லீம்களுக்கு எதிரான போரின் சகாப்தமாக இன்றைய நிலைமை இருக்கிறது. ஊடகங்கள் மற்றும் நீதித்துறை போன்று எதிராக அல்லது கண்காணிப்புக் குழுக்களாகச் செயல்படுபவர்களை வென்றெடுக்கும் வகையில் அல்லது வற்புறுத்துகின்ற வகையில் அரசாங்கத்தால் அவர்கள் மீது சாதாரணமாக வழக்குத் தொடரப்படுகிறது.. சுதந்திரம் மக்களிடமிருந்து காவல்துறையை நோக்கி நகர்ந்து சென்றிருக்கிறது.

கருத்து வேறுபாடு குறித்த அச்சம் 

மாணவர்கள், அறிவுஜீவிகள், பத்திரிக்கையாளர்கள், முஸ்லீம்களைக் கண்டு அரசாங்கம் ஏன் அஞ்சுகிறது? அதிருப்திகளையும், அதிருப்தியாளர்களின் வாதங்களையும் கண்டு அது ஏன் பயப்படுகிறது? புதிய இந்தியாவில் உண்மையான ஆற்றலும், செல்வாக்கும் இல்லாத எதிரிகள் இவர்கள், இவ்வாறான எதிரிகள் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே  இருப்பதாகத் தோன்றினாலும், வளர்ந்து வருகின்ற மோடியின் ஹிந்துத்துவ ஒழுங்கியலுக்கு எதிராக இவர்கள் முன்வைக்கின்ற அச்சுறுத்தல்கள் உண்மையானவையாகவே இருக்கின்றன.  

’உண்மையில் எதிரிகள் குறைவான எண்ணிக்கையில் இருக்கும் போதுதான், அச்சுறுத்தல் அதிகமாக இருக்கிறது. ஏனென்றால் பலவீனமானவர்கள் அடைகின்ற வாகை, தொற்றுநோயைப் போன்று மிகவும் வெற்றிகரமான எடுத்துக்காட்டாக உருவாகக்கூடும்’ என்று ஜான் பில்கர் என்ற பத்திரிகையாளர், அதிகாரம் மற்றும் அதன் திட்டங்கள் குறித்து 1998ஆம் ஆண்டு எழுதிய மறைக்கப்பட்ட திட்டங்கள் (Hidden Agendas) என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். 

ஆனால் எதிரிகளை உருவாக்குவது, இறுதியில் தன்னையே தோற்கடித்துக் கொள்ளும் குறுகிய நோக்கத்திற்கே உதவும் என்று வரலாறு நமக்குச் சொல்கிறது. மோடியைப் பொறுத்தவரை, எதிரிகளைத் துன்புறுத்துவதற்கான தேவை, ஒற்றைக்கலாச்சார ஹிந்து கடந்த காலத்தில் வேரூன்றி இருக்கின்ற நாகரிக கருத்தியலுடன் இணைந்திருக்கும் அவரது சொந்த கருத்தியலின் வெளிப்படையான நம்பிக்கையால் உந்தப்படுவதாகவே இருக்கிறது. அதுவே அவருக்கு சரியென்றும் தோன்றுகிறது. 

வரலாற்று கற்பனைகளையும், உண்மைகளையும் பலவந்தமாக மாற்றியமைக்க முற்படுகின்ற அந்தப் பாதையில் வலியும், முடிவற்ற பிளவும் மட்டுமே இருக்கும்  என்பதை மோடி ஏற்றுக் கொள்ளவில்லை. ’மறைந்த தலைமுறையினரின் பாரம்பரியம், இன்றைய தலைமுறையின் மூளையில் தோன்றுகின்ற கொடுங்கனவாக இருக்கும்’ என்று கார்ல் மார்க்ஸ் ஒருமுறை எழுதினார். இந்த தொற்றுநோய் வழங்கியிருக்கும்  இடைநிறுத்தத்தை பிரதிபலிப்பு மற்றும் நல்லிணக்கத்திற்காக பயன்படுத்த மறுப்பதன் மூலம், நாட்டைக் கட்டமைத்தவர்களை விடுத்து, அதனைக் குழப்பத்தில் தள்ளியவர்களின் பாதையை பின்பற்றும் ஆபத்தான செயலே மோடியிடம் இருக்கிறது.

https://scroll.in/article/964004/narendra-modi-is-adopting-the-wrong-lessons-of-history 

நன்றி: ஸ்க்ரோல் இணைய இதழ் 

தமிழில்:தா.சந்திரகுரு

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *