கோவிட்-19 இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்துவதில் “விஷ்வகுரு” மோடி அரசாங்கம் படுதோல்வி – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் (தமிழில்:ச.வீரமணி)[நாட்டில் கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் காரணமாக பேரழிவு ஏற்பட்டுக்கொண்டிருப்பதற்கு, மோடி-அமித்ஷா இரட்டையரே கிரிமினல்ரீதியாகப் பொறுப்பாவார்கள்.]

பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்கத்தில் அசன்சால் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் மிகப்பெரிய அளவில் மக்கள் திரண்டிருப்பதாகவும், இதற்குமுன் அவ்வாறு பார்த்ததில்லை என்றும் கூறி பாராட்டிய ஏப்ரல் 17 அன்று, நாட்டில் கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 34 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று மிகவும் மோசமான முறையில் வேகமாகப் பரவிக் கொண்டிருப்பதற்கும், அதன் காரணமாக ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்து கொண்டிருப்பதற்கும் மோடி-அமித்ஷா இரட்டையர் கிரிமினல்ரீதியாகப் பின்பற்றிவரும் மோசமான அரசியலே காரணமாகும்.

கடந்த ஒரு வார காலத்தில், ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து இரண்டு லட்சத்தைத் தாண்டியுள்ள நிலையில், மோடி – அமித் ஷா வங்கத்தில் மாறி மாறி பேரணிகளில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். மக்களைத் தாக்கியுள்ள பேரழிவு வேதனை அளித்துக் கொண்டிருக்கிறது. மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை, நோயாளிகளுக்கு ஆக்சிஜன் இல்லை. காலத்தே கோவிட் ஆய்வு மேற்கொள்ளப்படுவதில்லை, தடுப்பூசிகள் போதுமான அளவிற்கு இல்லை. மயானங்களில் பிணங்களை எரிக்க இடம் இல்லை. இவ்வாறு மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரழிவின் மத்தியில்தான் மோடி – அமித் ஷா இரட்டையர் வங்கத்தை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்று நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதே அவர்கள் குறிக்கோளாகும். நாட்டைப்பற்றி எந்தக் கவலையும் கிடையாது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையை எதிர்கொள்வதற்கு நாடு முற்றிலுமாகத் தயாராகாது இருந்தது. இதன் காரணமாக எண்ணற்றவர்கள் நாள்தோறும் மரணம் அடைந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு மோடி அரசாங்கமே பொறுப்பு என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை. ஜனவரியில், மோடி என்ன கூறினார்? கொரோனா வைரஸ் பெருந்தொற்றைப் போராடி முறியடித்ததில் வெற்றிபெற்றுவிட்டோம் என்று பிரகடனம் செய்தார். ஜனவரி 29 அன்று டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார அமைப்பின் (World Economic Forum, Davos Agenda) மாநாட்டில், கோவிட்-19 பெருந்தொற்றைச் சமாளித்ததில் இந்தியா முன்னேற்றம் அடைந்திருப்பதாகப் பீற்றிக் கொண்டார். மேலும், “கோவிட்-19ஐ இந்தியாவில் சமாளித்ததன் மூலம், இந்தியா உலகத்தையே பேரிடரிலிருந்து காப்பாற்றி இருக்கிறது,” என்றும் கூறினார். அவர் மேலும், “இப்போது இந்தியாவில் இரு தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன, வரவிருக்கும் காலங்களில் மேலும் பல தயாரிக்கப்படும். இவற்றின் மூலம் நாம் இதர நாடுகளுக்கு வேகமாகவும், விரைவாகவும் உதவிடுவோம்,” என்றும் கூறினார்.பிப்ரவரியில், “கோவிட்டுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம், உலகத்தையே ஈர்த்திருக்கிறது” என்று மோடி கூறினார். மார்ச் 11 நடைபெற்ற ‘குவாட்’ (Quad) என்னும் நான்கு நாடுகளின் உச்சி மாநாட்டில், இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கு தடுப்பூசிகளை சப்ளை செய்வதில் இந்திய மிகப்பெரிய பங்கு வகித்திருந்தது. இந்தப் பொறுப்பினை பைடன் இந்தியாவிற்கு ஒதுக்கி இருந்தார். ஆனால், அதே சமயத்தில், அமெரிக்கா இந்தியாவிற்கு தடுப்பூசிக்குத் தேவையான துணைப் பொருள்களை அனுப்புவதற்குத் தடை விதித்திருந்தது. இந்தக் கூட்டத்தின்போது மோடி, ஆர்எஸ்எஸ்-இன் மிகவும் பிடித்தமான சொற்றொடரான “விஷ்வகுரு” பங்கினை இந்தியா ஆற்றுவதாகக் கூறி, புளகாங்கிதம் அடைந்தார். ஆனால், அந்தோ, இவர்களின் துடுக்கான கர்வத்திற்கு நாடும் நாட்டு மக்களும் மிகவும் பரிதாபமான முறையில் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள்.

மோடி இவ்வாறு உலக அரங்கில் கூறுவதையொட்டி, இங்கே மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மார்ச் தொடக்கத்தில், “இந்தியா, கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலை முற்றிலுமாக முறியடித்திடும்” என்று அறிவித்தார். நாடு முழுதும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவிக்கொண்டிருக்கக்கூடிய சமயத்தில்தான் இவர் இவ்வாறு கூறினார். இவ்வாறு மோடியும் அவருடைய அரசாங்கமும் இதில் வெற்றி பெற்றுவிட்டதாக அறிவித்துக்கொண்டிருக்கக்கூடிய அதே சமயத்தில், எதார்த்த உண்மைகளோ அதற்கு நேர்மாறாக இருக்கிறது.

வைரஸ் தொற்று மீண்டும் மிக வேகமாகப் பரவத் தொடங்கியதை எதிர்கொள்ள முடியாமல் ஆளும் வட்டாரங்கள், “கோவிட்-19க்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதில் மக்கள் தோல்வியடைந்துவிட்டார்கள்,” என்றும், “கோவிட்-19 தொடர்பாக விழிப்புணர்வைப் பெறவில்லை” என்றும் மக்கள் மீது குறைகூறத் தொடங்கிவிட்டார்கள். கொரோனா வைரஸ் புதிதாக மாறுதலுடன் வளர்ச்சி பெற்றிருப்பது குறித்து அரசாங்கத்தின் தரப்பில் கவனம் செலுத்தப்படவில்லை. இப்போது கொரோனா வைரஸில் ஏற்பட்டிருக்கக்கூடிய மாறுபாட்டின் மாதிரியை அக்டோபர் 5 அன்று மரபணு சோதனை மூலமாகக் கண்டுபிடித்தார்கள். எனினும், அதனைத் தொடர்ந்து, அதனை முறியடிப்பதற்கு எவ்விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்து, எவ்விதமான கட்டளைகளும் பிறப்பிக்கப்படவில்லை.

இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழ் மேற்கொண்ட புலனாய்வின்படி, இத்தகைய மிகவும் செலவு பிடிக்கக்கூடிய மற்றும் நேரத்தை எடுத்துக்கொள்ளும் பரிசோதனைக்கு அரசுத்தரப்பில் இறுதியாக 80 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது. நிகர விளைவு, மிகவும் வேகமாகப் பரவும் தொற்றைக் கண்காணித்துக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் படுதோல்வி அடைந்திருக்கிறது.

மகாராஷ்ட்ரா, தில்லி மற்றும் நாட்டின் பல பகுதிகளில் மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறையை எதிர்கொண்டிருக்கிறது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இல்லாததால், இறந்து கொண்டிருக்கிறார்கள். கொரோனா வைரஸ் முதல் அலை வந்தபின்பு, மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரித்திட அரசாங்கம் தவறிவிட்டது. இப்போது, மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் ஒரு ஏஜன்சிக்கு அக்டோபர் 20இல் 150 மாவட்ட மருத்துவமனைகளில் ஆக்சிஜன் ஆலைகள் நிறுவுவதற்கு 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டெண்டர் விட்டது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று வந்தபின்னர் எட்டு மாதங்கள் கழித்து, இந்த ஆண்டின் மார்ச் வாக்கில் 33 ஆலைகள் மட்டுமே நிறுவப்பட்டிருக்கிறது.

தடுப்பூசிகளைப் பொறுத்தவரை, மோடி அரசாங்கம் இந்தியாவில் இருவகை தடுப்பூசிகள் முதலில் நாட்டு மக்களில் 30 கோடி பேருக்கான தடுப்பூசித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் என்று கூறியது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசி என்பதே ஒரு போலி முழக்கமாகும். ஏனெனில், கோவிஷீல்டு என்னும் பிரதான தடுப்பூசி அஸ்ட்ரா செனெகா-ஆக்ஸ்போர்டு திட்டத்தால் உருவாக்கப்பட்டு, அதனை இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கு சீரம் இன்ஸ்டிட்யூட்டிற்கு உரிமம் வழங்கப்பட்டிருக்கிறது. தடுப்பூசிக் கொள்கையில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள குழறுபடிகள் குறித்து தனியே ஒரு கட்டுரையாகத் தரப்பட்டிருக்கிறது. அதிகமான அளவில் தடுப்பூசிகள் தருவதற்கான வாய்ப்புகள் எங்கிருந்து வந்தாலும் அதனைப் பயன்படுத்திக்கொள்வதில் தோல்வி அடைந்தபின்னர், மோடி அரசாங்கம் இப்போது, இது தொடர்பாக சோதனைகள் செய்திடும் எண்ணத்தையெல்லாம் கைவிட்டுவிட்டு, வெளிநாடுகளிலிருந்து தடுப்பூசிகளைப் பெற முயற்சித்துக் கொண்டிருக்கிறது. மேலும் இப்போது அரசாங்கத்தின் தரப்பில் அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய தடுப்பூசிக் கொள்கையானது, அனைவருக்கும் தடுப்பூசிகளை இலவசமாக வழங்குவதற்கான பொறுப்பினைக் கைவிட்டுவிட்டது. 45 வயதுக்குக் கீழே உள்ளவர்களுக்குத் தடுப்பூசி போடுவதற்கான பொறுப்பை மாநில அரசுகளையே சாரும் என்றும், அவை தடுப்பூசி உற்பத்தி செய்பவர்களிடமிருந்து வெளிச்சந்தையில் தடுப்பூசிகளை வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும் கூறியிருக்கிறது.மத்திய அரசாங்கம் மத்திய பட்ஜெட்டில் தடுப்பூசிகளுக்காக 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி இருந்தது. இப்போது அதில் இதுவரை மிகவும் சொற்ப அளவிலேயே செலவு செய்திருக்கிறது. எனினும், இப்போது அது, அடுத்த சுற்று தடுப்பூசிகளுக்கான செலவினத்திற்கு, மாநில அரசாங்கங்கள் வெளியேதான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறிவிட்டது. பெருந்தொற்று பரவியுள்ள இந்த ஆண்டு முழுவதுமே அரசாங்கம் பொது சுகாதார உள்கட்டமைப்பு வசதியைப் பெருக்குவதற்காக, பெரிதாக ஒன்றும் செலவு செய்திடவில்லை. மாறாக அதன் செலவினம் என்பது மிகவும் சொற்பமாகவும் அற்பகமாகவுவே இருந்தது.

மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியில்கூட மத்திய அரசாங்கம் பொது சுகாதார அமைப்புமுறையை விரிவாக்கி மேம்படுத்தும் விதத்தில் செலவினத்தை அதிகரித்திட மறுத்துவிட்டது.

மத்திய அரசாங்கம், இவ்வாறு அலட்சியத்துடனும், திருப்தி மனப்பான்மையுடனும் இருப்பது மட்டுமல்லாமல், அறிவியல்பூர்வமற்ற, இந்துத்துவா பார்வையையும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. இதற்கு மிகச்சரியான எடுத்துக்காட்டு, ஹரித்துவாரில் லட்சக்கணக்கானோர் பங்கேற்கும் கும்பமேளா நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்திருப்பதாகும். இதிலிருந்து இந்த அரசாங்கத்தின் மூடநம்பிக்கை கொள்கை எந்த அளவிற்கு வெறித்தனமாக இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

கும்பமேளா என்பது வழக்கமாக 12 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் வரும். அப்படி அது அடுத்த ஆண்டான 2022இல்தான் வர வேண்டும். ஆனாலும் சோதிடர்களின் கணக்குகளின்படி ஓராண்டு முன்னதாக இப்போது வந்திருக்கிறது. உத்தர்காண்ட் மற்றும் மத்தியில் உள்ள பாஜக அரசாங்கங்கள் கும்பமேளா நிகழ்வுகள் எவ்விதமான கட்டுப்பாடுகளுமின்றி நடத்தப்படும் என்று உத்தரவாதம் அளித்திருக்கின்றன. கொரோனா வைரஸ் பெருந்தொற்று வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து பொது மக்களிடமிருந்தும் சர்வதேச அளவிலும் இதற்கு எதிராகக் கண்டனக் குரல்கள் வந்தபின்னர்தான், கும்பமேளாவின் இறுதிக் கட்டத்தில் அடையாளபூர்வமாக கொண்டாட்டங்களை நடத்துங்கள் என்று மோடி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

மோடி அரசாங்கத்தின் திருப்தி உணர்வு, நிர்வாகத்திறனின்மை, குறுகிய பார்வையுடனான அணுகுமுறை ஆகியவற்றின் விளைவாகத்தான் இந்தியாவில் பொது சுகாதாரப் பேரழிவு ஏற்பட்டிருக்கிறது. பொது சுகாதாரத்தை நீண்டகாலமாக உதாசீனப்படுத்தி வந்ததும், கடந்த முப்பதாண்டு காலமாக நாட்டின் சுகாதாரத் துறையைத் தனியாரிடம் தாரை வார்த்ததும்கூட இவற்றுக்குக் காரணங்களாகும்.

இவ்வாறு நாடு முழுதும் விரக்தி உணர்வு மேலோங்கியுள்ள நிலையில் நாட்டில் ஒருசில இடங்களில் மட்டும் நாம் இவற்றை எதிர்த்து முன்னேற முடியும் என்கிற நம்பிக்கை ஒளிக்கீற்று சற்றே காணப்படுகிறது. மகாராஷ்ட்ரா, தில்லி போன்று நன்கு வளர்ந்த மற்றும் வளமான மாநிலங்களே ஆக்சிஜன் பற்றாக்குறையால் திண்டாடும் அதே சமயத்தில், கேரளாவில் இப்பற்றாக்குறை கிடையாது. உண்மையில் கேரளா, மருத்துவ ஆக்சிஜன் உபரியாகப் பெற்றிருப்பதுடன், தமிழ்நாடு, கர்நாடகா, கோவா, லட்சத்தீவுகள் ஆகிய மாநிலங்களுக்கு அவை கோவிட்-19 தொற்றுக்கு எதிராகப் போராட வேண்டும் என்பதற்காக, அளித்துக் கொண்டிருக்கிறது.கேரளா, மாநிலத்தில் ஆக்சிஜன் உற்பத்தி அளவை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக மாநிலத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடுகளை அதிகரித்தது. அதுதான் ஆக்சிஜன் உபரியாக மாறியிருப்பதை, சாத்தியமாக்கியது. 2020 ஏப்ரலுடன் ஒப்பிடுகையில், ஆக்சிஜன் உற்பத்தி நிமிடத்திற்கு 50 லிட்டர்களிலிருந்து, 2021 ஏப்ரலில் நிமிடத்திற்கு 1,250 லிட்டர்கள் என அதிகரித்திருக்கிறது.

கேரள மாநில அரசாங்கம் பொது சுகாதார அமைப்புமுறைக்கு முன்னுரிமை கொடுத்து வளர்ச்சிக்குத் திட்டமிட்டதன் மூலம் இது சாத்தியமானது. கேரளாவில் கோவிட் சிகிச்சைத் தேவைப்படுபவர்களில் 95 சதவீதத்தினர் அரசாங்க மருத்துவ மனைகளில் இலவசமாக சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் மற்றவர்களுக்கும்கூட, அவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் ஆகும் செலவினங்களை, அரசாங்கமே ஏற்றுக் கொண்டிருக்கிறது.

மத்திய அரசாங்கத்தின் சுகாதார அமைச்கத்தின் அறிக்கையின்படி, இதர மாநிலங்களில் உள்ளதுபோல் இல்லாமல் கேரளாவில் மட்டுமே நூற்றுக்கு நூறு தடுப்பூசிகள் எவ்விதமான சேதாரமுமின்றி பயன்படுத்தப்படுகின்றன. 88 லட்சம் குடும்பங்களுக்கு இப்போதும் இலவசமாக உணவுப் பைகள் (free food kits) கொடுக்கப்பட்டு வருகின்றன. எவரும் பட்டினி கிடக்கக்கூடாது என்பதே இதற்குக் காரணமாகும். எனவே, பொது சுகாதாரத்தில் அரசியல் உறுதியுடன் கவனம் செலுத்தினோமானால், சுகாதாரம் சம்பந்தப்பட்ட அவசரநிலைகைளை சமாளித்திட முடியும்.

பொது சுகாதாரப் பேரழிவு, பொருளாதாரரீதியான துயரத்தையும், வேலைகள் பறிக்கப்படும் நிலைமையையும் கொண்டு வருகிறது. இப்போதுள்ள நெருக்கடியைச் சமாளித்திட, மோடி அரசாங்கம், தன்னுடைய குறுகிய, நவீன தாராளமய இந்துத்துவா கண்ணோட்டத்தை கைவிட்டுவிட்டு, பொருளாதார மற்றும் பொருளியல் ரீதியான அனைத்து வளங்களையும், பயன்படுத்தி, மக்களைக் காப்பாற்றிட முன்வர வேண்டும்.

(ஏப்ரல் 21, 2020)

 

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.2021 – 05.05.2021 வரை மட்டும்)