விவசாயிகளை அவமதிக்கும் வகையிலான பிரதமரின் அறிக்கைகளை கண்டிக்கின்ற அகில இந்திய விவசாயிகள் சங்கம் பிரதமர் மன்னிப்புடன் தன்னுடைய அறிக்கையைத் திரும்பப் பெறுமாறு கோருகிறது. தொடர்ந்து கொண்டிருக்கும் விவசாயிகள் போராட்டத்திற்கு பிரதமர் மட்டுமே பொறுப்பாகும் என்பதை வலியுறுத்தும் அகில இந்திய விவசாயிகள் சங்கம் வேளாண் சட்டங்கள் மற்றும் மின்சார மசோதாவை பிரதமர் வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும், குறைந்தபட்ச ஆதார விலை @சி2 + 50% என்ற 2014ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியை அவர் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை ‘போராட்ட ஜீவிகள்’ என்று அவமதித்த பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சை அகில இந்திய விவசாயிகள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. பாராளுமன்றத்தில் வெளியிட்ட கேவலமான கருத்துக்களை பிரதமர் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும், அதற்காக அவர் விவசாயிகளிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கம் கோருகிறது.

விவசாயிகளை இவ்வாறு அவமதிக்கும் செயல் ஒரு ‘கார்ப்பரேட் ஜீவி’ பிரதமரிடமிருந்தே வந்திருக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சியின் அடிமைத்தனத்திற்கு எதிராக நடைபெற்ற இந்திய மக்களின் பெருமைமிக்க ‘போராட்டத்தின்’ ஒரு பகுதியாக ஆர்.எஸ்.எஸ் ஒருபோதும் இருந்ததில்லை. ‘வெளிநாட்டு அழிக்கும் கருத்தியல்’ (எஃப்.டி.ஐ) என்ற பிரதமரின் பேச்சு முழுமையாக பாசிசத்துடனே பொருந்திப் போகிறது, அவரது பேச்சு அவர் சார்ந்திருக்கும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் வழிகாட்டிகளான ஹிட்லர், முசோலினி ஆகியோரிடமிருந்து எடுத்துக் கொண்டதாகவே இருக்கிறது.



இந்திய குடிமக்கள் என்ற முறையில் இந்திய அரசியலமைப்பின் கீழ் ஒவ்வொரு விவசாயிக்கும் தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவிக்கும் உரிமை இருக்கிறது, தங்களுடைய வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கப் போராடி வருகின்ற விவசாயிகளை இழிவுபடுத்தும் வகையில் பிரதமர் தன்னுடைய அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. விவசாயிகள் மீது பிரதமர் சுமத்தியிருக்கும் இந்த அவமானத்தை கண்டிக்க முன்வருமாறு அனைத்து ஜனநாயக அமைப்புகள், அரசியல் கட்சிகள், வெகுஜன மற்றும் வர்க்க இயக்கங்களுக்கு அகில இந்திய விவசாயிகள் சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.

தங்கள் போராட்டத்திற்கான காரணத்தை விவசாயிகளின் அமைப்புகளால் சுட்டிக் காட்ட முடியவில்லை என்று பிரதமர் கூறியுள்ளார். விவசாயிகளின் போராட்டத்தைச் சீர்குலைக்கும் அவரது திட்டத்தின் ஒரு பகுதியாகவே அது இருக்கிறது. இந்தியாவில் விவசாய நெருக்கடி அதிகரித்து வருகிற சூழலில் ஒவ்வொரு மணி நேரமும் இரண்டு விவசாயிகள் தற்கொலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் சிக்கியுள்ளனர். சாகுபடிக்கான உரிய விலை இல்லாததாலும், அதன் விளைவாக கடன்பட்டிருப்பதாலும் விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியாக விவசாயம் கட்டுப்படியாகவில்லை. 86% விவசாயக் குடும்பங்கள் இரண்டு ஹெக்டேருக்கும் குறைவான நிலத்தைக் கொண்டுள்ளன. அந்தக் குடும்பங்கள் சந்தையில் கடுமையான சுரண்டலுக்கு ஆளாகி வருகின்றன. விளைவாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களாகும் வகையில் விவசாயத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் உள்ளனர்.

தங்களுடைய 2014ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் குறைந்தபட்ச ஆதார விலை@சி2+50%ஐச் செயல்படுத்துவதாக பிரதமரும், பாஜகவும் உறுதியளித்ததை நாங்கள் பிரதமருக்கு நினைவூட்ட விரும்புகிறோம். தாங்கள் அளித்திருந்த வாக்குறுதியைச் செயல்படுத்துவதற்குப் பதிலாக, மோடி அரசு இந்திய விவசாயத்தையும், நாட்டின் உணவுப் பாதுகாப்பையும் பெருநிறுவனங்களிடம் ஒப்படைத்துள்ளது.

சட்டப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலையில் நாடு முழுவதும் அனைத்து பயிர்களையும் கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் போராடி வருகின்றனர். தான் அளித்த வாக்குறுதியை கடந்த ஏழு ஆண்டுகளாக மீறி வருகின்ற பிரதமரே தொடர்ந்து நடந்து வருகின்ற விவசாயிகள் போராட்டத்திற்கு பொறுப்பாவார்.



இன்று பாராளுமன்றத்தில் பிரதமர் ஆற்றியிருக்கும் உரை வெளிநாட்டு, உள்நாட்டு பெருநிறுவன மூலதனத்தின் பிடியில் இருக்க வேண்டிய அவரது அரசாங்கத்தின் மீதான நிர்ப்பந்தங்களையே அம்பலப்படுத்தியுள்ளது. பெருநிறுவனங்களுக்குச் சார்பான, விவசாயிகளுக்கு எதிரான, மக்கள் விரோத மூன்று வேளாண் சட்டங்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியிருக்கும் பிரதமர் விவசாயிகள் அமைப்புகள், மாநில அரசுகள் என்று யாரையும் கலந்தாலோசிக்கவில்லை. பாராளுமன்றத்தையும் கூட அவர் கலந்தாலோசிக்கவில்லை.

மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்தல், சட்டப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலை @சி2+50%, மின்சாரம் (திருத்தம்) மசோதா 2020ஐத் திரும்பப் பெறுதல், சுற்றுச்சூழல் மாசுபடுதல் குறித்த அவசரச் சட்டத்தில் விவசாயிகளுக்கு எதிரான பிரிவுகளைக் கைவிடுதல் என்று அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறும் வரையிலும் விவசாயிகள் பின்வாங்க மாட்டார்கள்.

விவசாய சமூகத்தை பிரதமர் அவமதித்திருப்பதை எதிர்த்து நாடு முழுவதும் மிகப்பெரும் போராட்டங்களை நடத்தவும், நாடு முழுவதும் இன்னும் உறுதியான வெகுஜனப் போராட்டங்களுக்கு தயாராகவும் இந்திய விவசாயிகள் சங்கம் தனது அனைத்து பிரிவுகளையும், இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகளையும் அழைக்கிறது.

டாக்டர் அசோக் தவாலே   

தலைவர்   

ஹன்னன் மொல்லா

பொதுச்செயலாளர்

 

Outrageously anti farmer and people !

தமிழில்: தா.சந்திரகுரு



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *