படிப்பினைக் கற்க மறுக்கும் மோடி அரசாங்கம் – தமிழில்: ச.வீரமணிகோவிட்-19 கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை நாட்டைப் பேரிடருக்கு உள்ளாக்கி சில வாரங்கள் ஓடிவிட்டன. எனினும் மோடி அரசாங்கம் தன்னுடைய தவறான வழிகளைச் சரிசெய்து கொள்ளவும், கொள்கைகளைத் திருத்திக் கொள்ளவும் இப்போதும் மறுத்து வருகிறது.

கோவிட் 19 பெருந்தொற்றுப் பிரச்சனையை விசாரணை செய்திடும் உச்சநீதிமன்றம் எண்ணற்றக் கேள்விகளை எழுப்பியிருக்கிறது. மத்திய அரசின் தடுப்பூசிக் கொள்கை குறித்து தன் ஐயங்களையும் எழுப்பியிருக்கிறது. நீதியரசர் டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வாயம், மத்திய அரசாங்கம் தற்போது கடைப்பிடித்துவரும் தடுப்பூசிக் கொள்கையை மறுபரிசீலனை செய்திட வேண்டும் என்றும், நாட்டின் தடுப்பூசி உற்பத்தி செய்திடும் நிறுவனங்களுடன் மாநில அரசாங்கங்களே பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று தற்போது கூறிவருவதற்குப் பதிலாக, மத்திய அரசே ஒவ்வொரு மாநிலங்களுக்கும் ஒதுக்கப்பட வேண்டிய தடுப்பூசிகள் குறித்தும், அவற்றை அம்மாநிலங்களுக்கு விநியோகிக்கும் அட்டவணையையும் தீர்மானித்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறது. இப்போதுள்ள நடைமுறை “குழப்பம் மற்றும் நிச்சயமற்ற தன்மையையே” உருவாக்கிடும் என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

மேலும் மிகவும் முக்கியமாக, நீதிமன்றம் அரசின் தடுப்பூசிக் கொள்கையையும் கேள்விக்கு உட்படுத்தி இருக்கிறது. பல்வேறுவிதமான விலை நிர்ணயம், 18-44 வயதுக்கிடையே உள்ளவர்களுக்கு, குறிப்பாக இவர்களில் மிகவும் அனுகூலமற்ற பிரிவினருக்கு, பாகுபாட்டை ஏற்படுத்திட இட்டுச்செல்லும் என்றும் கூறியிருக்கிறது. அரசமைப்புச்சட்டத்தின் 21ஆவது பிரிவின்கீழ் (சுகாதார உரிமை உட்பட) உயிர்வாழும் உரிமையை உறுதிப்படுத்தும் விதத்தில் தடுப்பூசிக் கொள்கையை பகுத்தறிவு முறைப்படிப் பின்பற்றுவதுதான் மத்திய அரசாங்கத்திற்கு அனைத்துத் தடுப்பூசிகளையும் கொள்முதல் செய்வதற்கும், அவற்றின் விலையை தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிர்ணயம் செய்வதற்கும் சிறந்ததாக இருக்கும் என்பது முதல் நோக்கிலேயே (prima facie) நன்கு தெரிகிறது என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது. மேலும் நீதிமன்றம் இவ்வாறு மத்திய அரசு கொள்முதலை மத்தியத்துவப்படுத்தியபின், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்குள் தடுப்பூசிகளை விநியோகம் செய்வதை பரவலாக்கிட முடியும். பகுத்தறிவுபூர்வமான நீதிமன்றத்தின் அறிவுரைக்கு அரசாங்கத்தின் பதில் என்பது அதன் பழைய கொள்கையையே சரி என்று வாதிட்டதாகும். மேலும் அரசாங்கத்தின் தரப்பில் விலையைத் தீர்மானிப்பது எல்லாம் அரசாங்கத்தின் இஷ்டம் என்றும், அதில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்கிற விதத்திலும் அமைந்திருந்தது. இப்போதுள்ள தடுப்பூசிக் கொள்கைதான், “நியாயமானது, சமத்துவமானது, பாகுபாடற்றது மற்றும் இருவிதமான வயதுக் குழுவினருக்கும் இடையே புத்திசாலித்தனமாக வித்தியாசப்படுத்திடும் காரணியின் அடிப்படையிலானது,” என்றும் கூறப்பட்டது.

மத்திய அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் உறுதிவாக்குமூலமே அதன் உண்மையற்ற தன்மையை நன்கு வெளிப்படுத்துகிறது. அனைத்து மாநில அரசாங்கங்களும் 18-44 வயதுக்கிடையே உள்ளவர்களுக்கு இலவசமாக தடுப்பூசிகள் அளிக்கப்படும் என்று கூறியிருப்பதால், தடுப்பூசிகள் இலவசமாக இருக்கும் என்று அது பிரகடனம் செய்கிறது. மத்திய அரசாங்கம் தடுப்பூசிகளை இரு தடுப்பூசி கம்பெனிகளிடமிருந்தும், அவை கொள்ளை லாபம் ஈட்டக்கூடிய விதத்தில் அதிக விலைகள் கொடுத்து கொள்முதல் செய்து, அந்தச் சுமையை மாநில அரசாங்கங்களே தாங்கிக்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தியிருக்கிறது. மத்திய பட்ஜெட்டில் தடுப்பூசிகளுக்காக 35 ஆயிரம் கோடி ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த போதிலும், மாநிலங்களுக்கு எவ்விதமான நிதி உதவியையும் மத்திய அரசு கொடுத்திடவில்லை. இதனால் மாநில அரசாங்கங்கள், தங்களுடைய சுகாதார பட்ஜெட்டின்கீழ் ஒதுக்கியிருக்கும் தொகையிலிருந்து கணிசமான தொகையை தடுப்பூசிகள் கொள்முதல் செய்வதற்காக ஒதுக்க வேண்டியிருக்கும். இது இதர சுகாதாரத் திட்டங்களுக்கு ஊறு விளைவித்திடும். இவ்வாறு மாநில அரசாங்கங்கள் மத்திய அரசாங்கம் நிர்ணயித்துள்ள பாகுபாடான தடுப்பூசி விலைக் கொள்கையை ஏற்று, தடுப்பூசிகளை வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும், பின்னர் அவற்றை இலவசமாகக் கொடுக்க வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கின்றன.மேலும், பேராசிரியர் ஆர்.ராமகுமார், ஸ்குரோல்.இன் இணைய இதழில் எழுதிய ஒரு கட்டுரையில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள உறுதி வாக்குமூலத்தின்படி மாநிலங்களுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கும் ஒதுக்கப்பட்டிருக்கிற 50 சதவீதத்தை, அவை 50:50 என்ற அடிப்படையில் பிரித்துக்கொள்ள வேண்டும் என்பதையும், அதாவது இதன்பொருள், மாநிலங்கள் அதில் 25 சதவீதம் மட்டுமே பெற முடியும் என்பதையும் சுட்டிக்காட்டி மத்திய அரசின் இக்கொள்கையைத் தோலுரித்துக் காட்டி இருப்பார். இதே அளவுக்கான மீதம் உள்ள 25 சதவீத அளவிலான தடுப்பூசிகள் வெளிச்சந்தைக்கும் தனியார் மருத்துவ மனைகளுக்கும் அதீதமான கட்டணங்களுடன் போய்ச்சேரும். பொது மக்களின் நலனைவிட தனியார் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு வசதி செய்து கொடுப்பதே மத்திய அரசுக்கு முக்கியம் என்பது இதிலிருந்து தெள்ளத்தெளிவாகிறது.

மத்திய அரசின் தற்போதையத் தடுப்பூசிக் கொள்கையால் மாநில அரசாங்கங்களுக்கு, கடந்த பதினைந்து தினங்களில், 60 சதவீத அளவிற்கும் கீழேதான் தடுப்பூசிகள் சென்றடைந்திருக்கும் நிலையில், இவ்வாறு தடுப்பூசிக் கொள்கை, படுதோல்வி அடைந்திருக்கும் நிலையில் உச்சநீதிமன்றத்தின் தலையீட்டைப் பயன்படுத்திக்கொண்டு தன்னுடைய தடுப்பூசிக் கொள்கையை மாற்றியமைத்திட வேண்டும் என்றுதான் விவேகமுள்ள அரசாங்கம் எதுவாக இருந்தாலும் முடிவுக்கு வரும். ஆனால் இதுதான் ஒரு விவேகமற்ற அரசாங்கமாயிற்றே. நவீன தாராளமயம் மற்றும் இந்துத்துவா என்னும் கண்ணாடியை அணிந்துகொண்டு இது செயல்படுவதால் இதனால் இவ்வாறு ஒரு விவேகத்துடன் விஷயங்களைப் பார்க்க முடியாது.

இந்த நிலையில், உச்சநீதிமன்றம், அரசமைப்புச் சட்டத்தின் 14 மற்றும் 21ஆவது பிரிவுகளின்கீழ் குடிமக்களின் உயிர் (மற்றும் சுகாதாரம்) ஆகியவற்றிற்கு அளிக்கப்பட்டுள்ள உரிமைகளின் அடிப்படையில் அரசாங்கத்தின் கொள்கையை மாற்ற உச்சநீதிமன்றம் கட்டளை பிறப்பிக்க தன் சக்தி அனைத்தையும் பயன்படுத்த வேண்டும் என்று ஒருவரால் நம்ப மட்டுமே முடியும்.

மத்திய அரசாங்கம் பேரழிவுதரும் விதத்தில் கோவிட்-19 இரண்டாவது அலையைக் கையாள்வதற்கு மற்றுமொரு முக்கிய காரணம், அது இந்துத்துவா கண்ணோட்டத்தில் முற்றிலுமாக மூழ்கியிருப்பதால் அதனால் அறிவியல்ரீதியாகச் சிந்திக்கத் திறனற்று இருப்பதாகும். மத்திய சுகாதாரம் மற்றும் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சரான ஹர்ஷ் வர்தன் நடத்தை குறித்து எப்படி விளக்கம் அளிப்பது? கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று ஏப்ரல் மாதத்தில் மிக வேமாகப் பரவிக்கொண்டிருக்கையில் அமைச்சர் பல்வேறு துறை அதிகாரிகளையும் அழைத்து நாட்டிலுள்ள பசுக்கள் குறித்து ஆராய்ச்சித் திட்டம் ஒன்றை நடத்துகிறார். மிகவும் அபத்தமான முறையில் அதற்கு அவர்கள் வைத்திருந்த தலைப்பு, “இந்திய பசுக்களிலிருந்து எடுக்கப்படும் பிரதான பொருள்களை ஆராய்ச்சி செய்வதன் மூலம் அறிவியல்ரீதியாகப் பயன்படுத்தல்” (SUPRA-PIC–Scientific Utilisation Through Research Augmentation Prime Products from Indigenous Cows) என்பதாகும். இந்தக் கூட்டத்தில், பசுஞ் சாணம், பசு மூத்திரம், பால், தயிர் மற்றும் நெய் ஆகியவற்றைக் கலந்து உருவாக்கப்படும் பஞ்ச காவ்யம் அறிவியல் ரீதியானதா, அதனை கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராகப் பயன்படுத்தலாமா என ஆராயப்பட்டதாகக் கூறப்பட்டது. இதுபோன்று பல திட்டங்களுக்காக 100 கோடி ரூபாய்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இந்தத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதில் தாமதம் ஏற்பட்டுக் கொண்டிருப்பதற்கு அமைச்சர் தன் மகிழ்ச்சியின்மையை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்தத் திட்டங்களில் முன்னேற்றம் மிகவும் மந்த நிலையில் இருப்பதற்கு கொரோனா வைரஸ் பெருந்தொற்றைக் காரணமாகக் கூற முடியாது என்று கூறியிருக்கிறார். நாட்டில் மக்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்து கொண்டிருக்கும் சமயத்தில்தான் இவ்வாறு நடந்து கொண்டிருக்கிறது.சென்ற ஆண்டுதான் 150 மாவட்ட மருத்துவமனைகளில் 200 கோடி ரூபாய் செலவினத்தில் ஆக்சிஜன் ஆலைகளை அமைத்திட அமைச்சர் செலவழித்திருக்கிறார். இந்த நிலையில் அரசாங்கமானது நீதிமன்றத்தின்முன் அளித்துள்ள உறுதி வாக்குமூலத்தில் தங்கள் அரசு அறிவியல் கருத்துக்களையும், வல்லுநர்களின் கருத்துக்களையும் சார்ந்திருப்பதாகக் கூறியிருப்பது மிகவும் ஆழமான கேள்விகளை எழுப்பி இருக்கின்றன. இல்லாவிட்டால், சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதல்கள் ஹைட்ராக்சிகுளோரோகின் (hydroxychloroquine), ரெம்டெசிவிர் (remdesivir), ஐவர்மெக்டின் (ivermectin) போன்ற மருந்துகள் மூலம் கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்று இப்போதும் பரிந்துரை செய்துகொண்டிருப்பது எப்படி?

உலக சுகாதார ஸ்தாபனமும், இதர மருத்துவ வல்லுநர்களும் இந்த மருந்துகள் மூலம் கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கக்கூடாது என்று பரிந்துரைத்திருக்கிறார்கள். ரெம்டெசிவிரைப் பொறுத்தவரை, அது நோயாளிகளில் ஒரு சிலருக்கு மட்டுமே பொருந்தும். ஆனால் இந்தியாவில், இந்த மருந்துகள் மிகவும் விரிவான அளவில் மருத்துவர்களால் எழுதித்தரப்படுகின்றன, இதன்மூலம் மருந்துக் கம்பெனிகள் கொள்ளை லாபம் ஈட்டவும், கருப்புப் பணத்தை மேம்படுத்தவும் உதவி செய்துகொண்டிருக்கின்றன.

கோவிட்-19 கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை மிக வேகமாகப் பரவிக்கொண்டிருக்கக்கூடிய நிலையிலும்கூட ஒவ்வோராண்டும் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் கூடும் கோவிட்-19 மீதான தேசியப் பணிக்குழு (National Task Force) ஒரு தடவைகூட இதுவரை கூட வில்லை. இந்த லட்சணத்தில் இந்த அரசாங்கம் அறிவியல் மற்றும் சுகாதார வல்லுநர்களைச் சார்ந்திருப்பதாக எப்படிக் கூற முடியும்?

இந்துத்துவா சித்தாந்தத்தின் அடிப்படையில் பசு மீது இவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் எண்ணப்பிடிப்பின் காரணமாக, குஜராத்தில் உள்ள பசு மாடுகளின் பண்ணைகளில் பலர் பசுஞ்சாணியையும், பசு மூத்திரத்தையும் உடம்பு பூராவும் பூசிக்கொண்டிருக்கும் விகாரமான காட்சியை இப்போது பார்த்து வருகிறோம். இதனால் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்திடும் என இவர்கள் நம்புகிறார்கள். இந்தியாவில் இந்துத்துவாவின் ஒரிஜினல் ஆய்வுக்கூடமாக குஜராத் விளங்குவதால் இதுபோன்ற நிகழ்வுகள் இங்கேதான் அதிகமாக நடந்துகொண்டிருக்கின்றன.உத்தரப்பிரதேசத்தில் ஆதித்யநாத் அரசாங்கத்தின் முன்னுரிமைகளும் மிகவும் தெளிவானவைகளாகும். சென்ற வாரம், அது, ஒவ்வொரு மாவட்டத்திலும் பசுக்களைப் பாதுகாக்க “உதவி மையங்கள்” (“help desks”) அமைப்பதற்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. பசுக் காப்பிடங்களில் பணிபுரியும் ஊழியர்களிடம் இவற்றைப் பாதுகாப்பதற்காக ஆக்சிமீட்டர்கள் மற்றும் தெர்மால் ஸ்கானர்கள் (oximeters and thermal scanners) ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. மாநிலத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் எவ்விதமான மருத்துவக் கவனிப்பும், உதவியுமின்றி மரணித்துக் கொண்டிருக்கும் சமயத்தில்தான் ஆதித்யநாத் அரசு இந்த வேலையைச் செய்திருக்கிறது.

இவர்களின் மனிதாபிமானமற்ற இந்துத்துவா நாடகத்தின் இறுதிக்காட்சியில், உத்தரப்பிரதேசத்தின் பல பகுதிகளில், கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றால் இறந்த நூற்றுக்கணக்கானவர்களின் சடலங்கள் கங்கையில் மிதந்து வந்துகொண்டிருக்கும் கொடூரமான மற்றும் மனதைப் பிழிந்திடும் காட்சிகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

இந்த அரசாங்கம் படிப்பினை எதையும் கற்றுக்கொள்ளாது, தன் போக்கை மாற்றிக்கொள்ளாது. இது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஏற்பட்டுள்ள துயரார்ந்த நிலையாகும்.

(மே 12, 2021)

-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்