உலகளாவிய இந்த நோய்த்தொற்று நெருக்கடி அளிக்கும் வாய்ப்பு என்பது இந்தியாவில் திடீரென வழக்கமான அரசியல் நிறுத்தப்பட்டதிலிருந்து கிடைத்துள்ளது.  இது மிகவும் ஆபத்தானவை என்று பாஜக முன்பு கருதிய சீர்திருத்தங்களைப் புகுத்த அதற்குக் கதவைத் திறந்து விட்டுள்ளது.

பிரதமர் மோடி படாடோபமாக அறிவித்து, அதற்குப் பிறகு மத்திய நிதியமைச்சர் விளக்கிய இருபது லட்சம் கோடி நிவாரணம் என்பது நிவாரணமே அல்ல என்பது வெளிப்பட்டுள்ளது.  நிதி ஊக்கம் அளிப்பதற்கு பதிலாக அவர் அனைத்து அளவிலான நிறுவனங்களையும் உடனடியான பிரச்சனையிலிருந்து வெளியேற வங்கிகளிலிருந்து கடன் பெறுமாறு வலியுறுத்தினார்.  நீண்டகாலப் பட்டினியை எதிர்நோக்கியிருக்கும் கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கு உதவ அவர் அளித்ததெல்லாம் நூறுநாள் வேலைத்திட்டத்துக்குக் கொஞ்சம் நிதி அதிகமாக அளித்தது மட்டுமே ஆகும்.  பிறகு, கொஞ்சம் வினோதமாக, இதுவரை பொருளாதாரத்தில் பங்கேற்க முடியாமல் விலக்கி வைத்திருந்த பகுதிகளில் இந்திய, அன்னிய கார்ப்பரேட் கம்பெனிகள்  பங்கேற்கும் வகையில் அவற்றின் பெரிய விருப்பங்களை, நீண்டகால கட்டமைப்பு மாற்றங்களை நிறைவேற்ற இந்தக் கணத்தை அவர் தேர்ந்தெடுத்து விட்டார். வழக்கமான தம்பட்டக் குழுக்கள் பிரதமரும் அவரது குழுவினரும் தொலைநோக்குக் கொண்டவர்களாகவும், உறுதியான முடிவெடுப்பவர்களாகவும் காட்ட முடிந்த வரை முயன்றும் கூட, இந்தப் பரிசு ஏறத்தாழ யாரையும் திருப்திப்படுத்தியதாகத் தெரியவில்லை.  அப்படியானால், அதன் பின்னாலுள்ள சிந்தனை என்ன?

வரலாற்றில் நிகழும் பெரிய மாற்றங்கள் திடீரென்றோ, மெதுவாகவோ சமூக நிறுவனங்களை எதோ ஒரு ஆழமான கட்டமைப்பு செயல்பாடு தானாகவே அவற்றை மாற்றுவதாலோ ஏற்படுவதில்லை.  மாறாக, அவை அணிதிரட்டப்பட்ட குழுக்கள் வரலாற்று நிகழ்வுகள் அளிக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு ஆட்சியாளர்களை அந்த மாற்றத்தை நிகழ்த்த வைக்கின்றன அல்லது அது தோற்றால், ஆட்சியாளர்களை மாற்றுகின்றன.  இப்படித்தான் புரட்சிகள் நிகழ்கின்றன.  அது வரம்புக்குட்பட்டதானாலும், கொள்கை அரசுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்கின்றன.  1991இல் பாராளுமன்றத்தில் சிறுபான்மை ஆதரவை மட்டுமே பெற்றிருந்தாலும், கடுமையான அன்னியச் செலாவணி நெருக்கடியின் மத்தியில் பொருளாதாரத்தை தாராளமயமாக்கிய நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த மன்மோகன்சிங் எடுத்த முடிவு இதைப் போன்றதே ஆகும்.  மோடியும் இதே போன்ற ஒன்றை முயல்கிறாரா?

நீண்ட நாட்களாகத் தயார் செய்து வந்த சீர்திருத்தங்களை அமல்படுத்த ஒரு சாக்கு

Outlook India Photo Gallery - Cabinet & Council of Ministers

2014இல் ஒட்டுமொத்த இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் ஊக்கமிக்க ஆதரவுடன் மோடி அரசு ஆட்சிக்கு வந்ததுமே கடந்த சில நாட்களில் அறிவிக்கப்பட்ட பெரும்பாலான கட்டமைப்புச் சீர்திருத்தங்கள் தயாராகவே இருந்தன.  2008-09இல் ஏற்பட்ட உலகளாவிய நிதி நெருக்கடியிலிருந்து இந்தியப் பொருளாதார வளர்ச்சி இன்னும் வேகம் பெறாததன் காரணமாக இந்தச் சீர்திருத்தங்களை நிறைவேற்ற முடியவில்லை.  இந்த விஷயம் பொது விவாதத்துக்கு வந்த போதெல்லாம் இந்த வேகமான வர்த்தக ஆதரவுச் சீர்திருத்தங்களுக்குப் போதுமான அளவுக்கு ஒத்த கருத்து இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.  காங்கிரஸ் அல்லது பெரும்பாலான மாநிலக் கட்சிகள், சில மாநிலங்களின் பாஜக தலைவர்களிடமோ கூட ஒத்த கருத்து இல்லை.  இதற்குக் காரணம் என்னவென்றால் வரி வருமானம் அதிகரிக்காமல் அதே நிலையில் இருக்கும்போது, பொருளாதாரத்தை மேலும் கார்ப்பரேட்டுகளின் மூலதனத்துக்குத் திறந்து விட்டால், அரசிடம் வருவாய்க்கு மிகச்சில கருவிகளே இருக்கும்.  மேலும் நில எடுப்பால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளையோ, அல்லது நகர்ப்புற முறைசாராத் தொழில்பகுதியில் அதிகரித்து வரும் ஏழைகளையோ அரசியல் ரீதியாக சமாளிக்கப் போதுமான வருவாய் அரசிடம் இருக்காது.  ஏழைகளின் போராட்டங்களை சமாளிப்பது என்பது மாநில அரசுகளின் முதன்மையான பணி.  இந்தப் பிரச்சனை 2018-19இல் நடைபெற்ற ஏராளமான விவசாயிகளின் போராட்டங்களில் பளிச்சென வெளிப்பட்டது.  இது மத்திய, மாநில அரசுகள் அவசர அவசரமாக கடன்களைத் தள்ளுபடி செய்யும் அறிவிப்புக்களுக்கு இட்டுச் சென்றது.

உலகளாவிய இந்த நோய்த்தொற்று நெருக்கடி அளிக்கும் வாய்ப்பு என்பது இந்தியாவில் திடீரென வழக்கமான அரசியல் நிறுத்தப்பட்டதிலிருந்து கிடைத்துள்ளது.  யாரும் நெருக்கடியையும் அறிவிக்கவில்லை, அல்லது எந்த அரசியல் போராட்டமும் வன்முறையால் ஒடுக்கப்படவில்லை.  மாறாக, வைரசால் பாதிக்கப்பட்டு விடுவோம் என்ற தொடர் அச்சம் ஒட்டுமொத்த நாட்டையே பீடித்துள்ளது.  ஊரடங்கு அமலில் இருக்கும்போது, நோய் இன்னமும் கட்டில்லாமல் பரவிக்கொண்டிருக்கும்போது, அரசியல் விவகாரங்களில் பொதுமக்களைத் திரட்டுவது எதிர்காலத்தில் ஆபத்து குறைவாக இருக்கும் நேரத்துக்குத் தள்ளி வைக்கப்பட வேண்டும் என்பதை யாரும் மறுக்க முடியாது.  இந்த நேரத்தை யாரும் வடிவமைக்கவில்லை அல்லது அதை யாரும் முன்பே கணிக்கவும் முடியாது (சில சோதிடர்களைத் தவிர என்று சூழலியளார்கள் கூறினாலும் கூட).  இது திடீரெனத் தாக்கியது.

இந்த நெருக்கடியான நேரத்தை நரேந்திர மோடி ஒரு சிறந்த வகையிலான வாய்ப்பாக மாற்றியிருப்பது அவரது தலைமையின் குணாம்சமான தெனாவெட்டைக் காட்டுகிறது.  ஏராளமான பொருளாதார நிபுணர்கள் ஏழை மக்களின் கையில் பணத்தைக் கொடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்ததற்கு அவர் செவி சாய்க்காதது பழைய மக்கள்நலப் பொருளாதாரத்துக்கு உண்மையிலேயே அவர் தத்துவார்த்த எதிர்ப்பு கொண்டிருப்பதாலா அல்லது அனைவரும் அறிந்தபடி நிபுணர்களிடம் அவர் கொண்டிருக்கும் வெறுப்பாலா என்பதை நாம் ஊகத்துக்கே விட முடியும்.  ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் அவர் பெரும்பாலான வர்த்தகத் துறையினர் எதிர்பார்த்ததற்குக் கூட செவி சாய்க்கவில்லை என்பதுதான்.  அதாவது தமது நிறுவனங்களை மீண்டும் துவக்க கடன் வாங்குவதற்குப் பொருள் இருக்கும் வகையில் கிராக்கியைத் தூண்டி விட சில நிதி நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புக்கும் அவர் செவி சாய்க்கவில்லை.  மாறாக, சுயசார்பு இந்தியாவைக் கட்டுவது என்ற பிரதமரின் ஊக்கமான பேச்சைத் தொடர்ந்து, நிதி அமைச்சர் வானவியல் ஆய்விலும், கோள்களுக்கிடையிலான பயணத்திலும் தனியார் துறை பங்கேற்க அழைப்பு விடுத்தார்.  நிச்சயமாக இந்திய நிறுவனங்களில் மோடியின் மிகவும் விசுவாசமான விசிறிக்குக் கூட இது போன்ற ஒரு எண்ணம் இருக்கவே வாய்ப்பில்லை.

பன்னாட்டு நிறுவனங்களுடன் சுயசார்பு

The Billionaire Beneficiaries of BJP's Schemes | NewsClick

வர்த்தக நிறுவனங்கள் வரவேற்றுள்ள சில உடனடியான நடவடிக்கைகள் பாஜக ஆளும் மாநிலங்கள் தொழிலாளர்களை வேலைக்கமர்த்துவது பற்றிய சட்டங்களைத் தளர்த்துவது அல்லது நீக்குவது என்பவையாகும்.  பன்னிரண்டு மணி நேர வேலைநாள், விருப்பப்படி அமர்த்துவது, நீக்குவது, குறைந்தபட்ச ஊதியத்தை மறுப்பது, வேலை இடத்தில் மருத்துவ வசதி அல்லது பாதுகாப்பை அளிக்கும் அம்சங்களை நீக்குவது ஆகியவை இந்தியாவை 19ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து இருந்த நிலைக்குப் பின்னுக்கு இழுத்துச் செல்லும்.  டிக்கன்ஸ் எழுதிய முற்பகுதித் தொழில்மயமாக்கத்துக்கு இழுத்துச் செல்லும்.  தொழிலாளர் சட்டங்களை அவசரச் சட்டம் மூலம் நீக்கியது பொது விவாதம் என்ற பேச்சே இல்லாமல் செய்யப்பட்டது என்பதைக் கூறவே தேவையில்லை.  நிதியமைச்சரின் அறிவிப்புகளில்  கம்பெனி சட்டத்தில் சில மீறல்களை குற்றச்செயல் இல்லையென்று அறிவித்ததும், திவால் சட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்ததும் அடங்கும்.  பல நிறுவனங்கள் கடனைக் கட்டாமல் தவிர்க்கும்,.  அல்லது சட்டதிட்டங்களை மீறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கார்ப்பரேட் உலகில் சில பதற்றமான ஆன்மாக்களுக்கு இவை ஆறுதல் அளிக்கலாம்.

ஆனால் அவரது பிற அறிவிப்புக்கள் – பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் துறைக்கு விற்பது, உள்நாட்டு, வெளிநாட்டு தனியார் பங்கேற்புக்குத் திறந்து விடுவது, பாதுகாப்பு உற்பத்தி, அணுசக்தி, விண்வெளி ஆராய்ச்சி, நிலக்கரிச் சுரங்கங்களைத் தனியாருக்கு விடுவது, யூனியன் பிரதேசங்களில் மின் விநியோகத்துக்கு தனியாருக்கு அனுமதி, விவசாயப் பொருட்களுக்கு தற்போது இருக்கும் தரகர்களின் வலைப்பின்னலைத் தகர்த்து விட்டு ஒரு சுதந்திரமான தேசியச் சந்தையைக் கட்டுவது ஆகியவையெல்லாம் சில பொறுக்கெடுத்த மிகச்சில பெருநிறுவனங்களின் நலனுக்கே உதவும்.  நிதிப் பற்றாக்குறையில் இருக்கும் அரசு பொதுத்துறைகளை அடிமாட்டு விலைக்கு விற்க முன்வந்தால் தவிர, அவர்களுக்கும் கூட இது பெரிய முதலீடுகளைச் செய்வதற்கான நேரம் கிடையாது,

பல பன்னாட்டு நிறுவனங்கள் தமது வர்த்தகத்தை சீனாவை விட்டு வெளியேற்றப் போவதாக வதந்திகள் வருகின்றன.  அவை வியட்னாமுக்கோ, தாய்லாந்துக்கோ செல்வதைப் பார்ப்பதை விடுத்து, அவற்றில் சிலவற்றை இந்தியாவுக்குக் கொண்டு வர இந்திய தொழில்முனைவோரை ஊக்குவிக்க மோடி அரசு விரும்புவது போல் தெரிகிறது.  ஓரிரண்டு ஆண்டுகள் நீண்டு விடக் கூடிய பேரழிவான பொருளாதார அழிவை எதிர்நோக்கும் நிலையில், மோடி அரசு கைப்பற்ற விரும்பும் ஒரு உயிராதாரமாக இது உள்ளது.  விழுந்து புரண்டு அலறிக் கொண்டிருக்கும் இந்தியாவின் பெருமுதலாளிகளை சுயசார்பு இந்தியாவுக்கு வழிகாட்டி அழைத்துச் செல்ல அவர் விரும்புகிறார்.  இந்த சுயசார்பு என்பது சுதேசி ஜாக்ரன் மஞ்ச் காட்டும் சுதேசி வகை அல்ல.  உலகளாவிய வகையில் செல்லும் உயர்ந்த தொழில்நுட்பமுடைய இந்திய கார்ப்பரேட்டுகள் பன்னாட்டு நிறுவனங்களுடன் இணைந்து இந்தியப் பொருளாதாரத்தை உலக அளவில் பிரகாசிக்கச் செய்ய வேண்டும் என்ற கனவில் அது மிதக்கிறது.  சாதிக்கவே முடியாத ஒன்றைக் கனவு காண்பதற்கு மோடி வெட்கப்படவே இல்லை.

சீனாவை தவிர்க்கும் பன்னாட்டு ...

கிட்டத்தட்ட திவாலாகி விட்ட நிறுவனங்களுக்கும், வறுமையில் ஆழ்ந்துள்ள தொழிலாளர்கள் விவசாயிகளுக்கும் நிதி ஆதாரமாக பணத்தை அளிப்பது என்பது வரவிருக்கும் மோசமான காலகட்டத்துக்காக அநேகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.  சில மாதங்களில் இந்தியப் பொருளாதாரம் சிறப்பாக மறுபடி மாறி விடும் என்று சிலர் பேசுவதைப் பொருத்த வரை, பெரும்பாலான முடிவெடுக்கும் நிலையில் இருப்பவர்கள் இந்த நோய்த்தொற்று விரைவில் போய் விடாது, சமீப வருங்காலத்தில் எதுவும் வழக்கமான நிலைக்கு வந்து விடாது, நிவாரணத்துக்கான கோரிக்க அதிகரிக்கவே செய்யும், குறையாது என்பதை உணர்ந்தே உள்ளனர். நிலைமை உண்மையிலேயே மிகவும் மோசமாகும்வரை அரசு தன்னிடம் இருக்கும் சிறந்த நடவடிக்கையை எடுக்காமல் இருப்பது புத்திசாலித்தனம் என்று முடிவு செய்திருக்கலாம்.  எப்படியும் அரசியல் எதுவும் இல்லாததால், அரசியல் ஆபத்து என்பது மிகவும் குறைவாகவே இருக்கும்.

ஒற்றை ஆட்சியை நோக்கி

இப்போதைக்கு நிவாரண உதவி என்பதற்கு வரம்புக்குட்பட்ட தாக்கமே இருக்கப் போகிறது என்றால், இப்படிப்பட்ட மருத்துவ நெருக்கடி நிலைமையில் வழக்கமான அரசியல் இல்லாத போது நிரந்தரமான கட்டமைப்பு மாற்றமாக இருக்கப் போகும் பகுதி ஒன்று உள்ளது.  அது மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான கூட்டாட்சி உறவுகள் என்ற பகுதி.

ஊரடங்கு உத்தரவு இட்ட உடனேயே மத்திய அரசு ஊடகத்தில் மூத்த அதிகாரிகளைக் கொண்டு புள்ளி விவரங்கள் அளிப்பது, வரைபடங்கள் காட்டுவது, மருத்துவம் மற்றும் பிற விஷயங்களில் நாட்டுக்கு வழிகாட்டுதல் அளிப்பது என்று தினசரி அவர்களை ஊடகத்தில் தோன்றச் செய்தது.  மாநில அரசுகளின் தோல்விகளைக் கண்டிக்க மத்திய அரசு மத்திய அரசுத் துறைச் செயலாளர்களைக் கொண்டு ஆய்வுக் குழுக்களை அனுப்பியது.  ஏறத்தாழ ஒரே இரவில் நாடு முழுதும் ஒற்றை ஆட்சிக்கு வந்து  ஒரு மையப்படுத்தப்பட்ட அதிகாரவர்க்கத்தால் நடத்தப்படுவதாகி விட்டது.  அங்கு மாநில அரசுகள் மத்தியக் கொள்கைகளை அமல்படுத்தும் உள்ளூர் அமலாக்க ஏஜென்சிகள் போல் ஆகி விட்டன.  ஒவ்வொரு நாள் மாலையும், ஊடகங்கள் மாநிலங்களை ஒப்பிட்டு ஒவ்வொரு மாநிலமாக நோய்த் தொற்றுப் பரவல் ஒப்பீட்டு புள்ளி விவரங்களை வெளியிட்டன.  ஒலிம்பிக் போட்டியில் தினசரி பதக்கப் பட்டியல் போல அவர்களது ஒப்பீட்டு செயல்பாடு மதிப்பிடப்பட்டது.  இந்த நிச்சயமில்லாத மதிப்பீட்டில் கோவிட்டால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் ஒன்றையொன்று முந்திச் சென்றன.  வெளித்தெரியாதபடி, இந்த நெருக்கடியில் மத்திய அரசு மட்டும்தான் அனைத்தும் தெரிந்த பகுத்தறிவு மிக்க நிர்வாகி போலவும், மாநிலங்களெல்லாம் திறனற்ற உள்ளூர் அதிகாரிகள் போலவும் தோன்றச் செய்தது.

SC to hear Congress MP's plea of model code violations by PM, Shah ...

எனினும் இந்தியக் கூட்டாட்சிக்குள் உண்மையான ஆட்சி செய்யும் யூனிட்டுகளாக மாநிலங்கள் இருக்கின்றன என்ற உண்மை அரிதானபடி கடந்த சில வாரங்களில் தெளிவாக எழுகிறது.  மாநிலங்கள் உலகச் சந்தைகளில் மருத்துவக் கருவிகளுக்காகவும், சோதனைக் கருவிகளுக்காகவும் தேடுகின்றன.  அனைத்து மாநில எல்லைகளிலும் முன்னெப்போதும் இல்லாத வகையில் போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது.  தமது தொழிலாளர்கள் திரும்புவதற்காக மாநிலங்கள் மற்ற மாநிலங்களூடன் பேச்சு வார்த்தை நடத்துகின்றன.  கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலங்களிலிருந்து யாரையும் உள்ளே விடமாட்டோம் என்று கர்நாடகா அறிவித்துள்ளது.  எந்த யோசனையுமில்லாமல் நாலே மணி நேரத்தில் ஊரடங்கை அறிவித்து புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நெருக்கடியில் கையைக் கழுவி விட்ட மத்திய அரசு, மாநிலங்களை தமக்குள் முட்டி மோதிக் கொள்ள விட்டு விட்டது.  இப்போது மத்திய நிதியமைச்சர் அறிவித்த நிதி ஆதரவில் மாநிலங்கள் பொது விநியோகம், மின் விநியோகம், உள்ளாட்சி நிதி ஆகிய விவகாரங்களில் மத்திய அரசின் கொள்கைகளை அமல்படுத்தும் பட்சத்தில் தமது மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஜிடிபியில் 5%த்தை கடனாகப் பெற்றுக் கொள்ள அனுமதிக்கிறது.  இவையனைத்தும் மாநில உரிமைப் பட்டியலில் இருப்பவை.  இவ்வாறு கூட்டாட்சி அமைப்பை வெளிப்படையாகக் கவிழ்ப்பதை எப்படி மாநில அரசுகள் ஏற்கின்றன?  இதற்கான விடை உடனடியான நெருக்கடியை சமாளிக்க வேண்டிய அவசர நிலையில்தான் உள்ளது. உடனடி அரசியல் காத்திருக்கலாம்.

ஆர்.எஸ்.எஸ். தலைவரான எம்.எஸ்./கோல்வால்கர் இந்தியாவை கூட்டாட்சியாக அல்ல, ஒற்றை ஆட்சி அமைப்பாக ஆக்க வேண்டும் என்று சுதந்திரத்தைத் தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு விடாமல் பிரச்சாரம் செய்ததை சிலர் நினைவில் வைத்திருக்கக் கூடும்.  கூட்டாட்சியானது தேசத்தை பலவீனப்படுத்தி விடும் என்று அவர் கருதினார்.  அவர் மாநிலங்களை மொழிவாரியாகப் பிரிப்பதற்கு தீர்மானகரமாக எதிர்ப்பாக இருந்தார்.  அது தேசம் உடைந்து போக வழிவகுக்கும் என்று வாதிட்டார்.  பாஜக கூட்டாட்சி அமைப்பை ஏற்றுக் கொண்டாலும், ஒரு வலுவான மையம் என்ற சிந்தனை, அதுவும் தனது கட்டுப்பாட்டில் இருக்கக் கூடிய ஒன்றுதான் வலுவான தேச அரசு என்று அதன் உணர்வில் ஆழமாகப் பதிந்துள்ளது.  தொற்றுநோய் உருவாக்கிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு மோடி மத்திய அரசின் அதிகாரங்களைக் குவிப்பதை நோக்கி உறுதியான நடவடிக்கை எடுத்திருப்பது மட்டுமல்ல, சமீபத்திய மாநிலத் தேர்தல்களில் தொடர்ந்து பாஜக பெற்ற தோல்விகளின் விளைவையும் ஒன்றுமில்லாமல் ஆக்கியுள்ளார்.

அவுரங்காபாத் விபத்து; புலம் ...

புலம் பெயர்ந்த தொழிலாளர் பிரச்சனையும் கூட தற்கால இந்திய சமூகத்தின் இன்னொரு உண்மையை வெளிப்படுத்தியுள்ளது.  சில ஆண்டுகளாக இந்தியப் பொருளாதாரத்தின் முறைசார் துறைகள்,  சேவை, கார்ப்பரேட் துறைகளுக்கும், மறுபுறம் நொறுங்கிக் கொண்டிருக்கும் விவசாயத் துறையுடன் அதிகரித்துக் கொண்டிருக்கும் முறைசாராத் துறைகளுக்கும் இடையிலான அடிப்படைப் பிளவை அது திறந்துள்ளது.    இந்தப் பிளவு முறைசார்ந்த துறைகளைச் சேர்ந்த, நிரந்த வருமானமும் நம்பிக்கையுள்ள எதிர்காலமும் கொண்ட நடுத்தர வர்க்கம் ஒருபுறமும், மறுபுறம் தினசரி வருமானத்துக்காகப் போராடும் முறைசாராத் தொழிலாளர்கள் எனவும் பிளவுபட்டுள்ளது.  முன்னவர்கள் அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகளிடம் ஒரு இயற்கையான உரிமையைக் கொண்டுள்ளனர்.  அவர்களே அதே சமூக வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்தானே.  பின்னவர்கள் அரசியல் பிரதிநிதிகள் மூலமாக மட்டுமே தமது உரிமைகளை அரசிடம் கோர முடிகிறது.  அரசியல் நிறுத்தி வைக்கப்படும்போது முறைசாராத் தொழிலில் இருப்பவர்களுக்கு மதிப்பே இருக்காது.  இது லட்சக்கணக்கான விரக்தியடைந்த புலம்பெயர் தொழிலாளர்கள் ரயில் நிலையங்களில் கூடியதையும், டிரக்குகளில் குவிந்ததையும், பெருவழிகளிலும், ரயில் தண்டவாளங்களில் நடந்ததையும் மத்திய அரசு கண்டும் காணாமல் இருப்பதையும், மாநில அரசுகள் போராடியதையும் விளக்குகிறது.

சிலபேர் நம்புவதற்கு மாறாக, இந்த நாட்டின் பொது வாழ்க்கையில் ஓரளவு நாகரீகத்தையும், கருணையையும் உறுதிப்படுத்துவது அரசியல்தான்.  அது இல்லாமல், அதிகாரத்தில் இருப்பவர்களுக்குத் தமது சொந்த வகையைப் பார்த்துக் கொள்ளவும், மற்ற மக்கள்தொகையினரை சம்பந்தமில்லாதவர்களாகப் பிரகடனம் செய்யவும் சுதந்திரம் கிடைக்கிறது.  இந்த எளிய உண்மையை அம்பலப்படுத்த ஒரு நோய்த்தொற்று தேவையாக இருந்தது.

பார்த்தா சாட்டர்ஜி

வரலாற்றாசிரியர், சமூக விஞ்ஞானி

தமிழில்: கி.ரமேஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *