மோடி எதிர் திஷா ரவி : வென்ற திஷா! – டி ஜே எஸ் ஜார்ஜ் | தமிழில்: தா.சந்திரகுரு
PM Narendra Modi (L) and Climate Activist Disha TRavi (R) (Photos | PTI, Facebook)

மோடி எதிர் திஷா ரவி : வென்ற திஷா! – டி ஜே எஸ் ஜார்ஜ் | தமிழில்: தா.சந்திரகுரு



நமது நாடு எந்த அளவு குழப்பத்தில் இருந்து வருகிறது?  பரிந்துரைக்கப்பட்டிருக்கும் சட்ட ஆவணங்கள் எதுவுமில்லாமல் தன்னுடைய வீட்டிலிருந்து இருபத்தி இரண்டு வயதான கல்லூரி மாணவி ஒருவர் தில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். அவர் செய்த குற்றம்தான் என்ன? விவசாயிகளின் பேரணியை ஆதரிக்கின்ற வகையில் இணைய சாதனங்களைப் பயன்படுத்தியதுதான் அவர் செய்த குற்றமாகும். திஷா ரவி என்ற அந்தப் பெண் அரசியலில் இல்லை. அவர் எந்தக் கட்சியையும் சார்ந்தவர் அல்ல. சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் ஆர்வம் காட்டுவதற்குப் போதுமான குடிமையுணர்வு கொண்ட இளம் பெண் அவர். இந்த காலகட்டத்தில் அவரைப் போன்று இளைஞர்கள் பலரும் இவ்வாறான அக்கறை கொண்டவர்களாக இருந்து வருகின்றனர். இந்தியாவின் பலங்களில் அதுவும் ஒன்றாக இருக்கின்றது. அதிகாரிகள் மாணவர்களைச் சிறையில் அடைக்க வேண்டிய அச்சுறுத்தலாக அதைப் பார்ப்பது உண்மையில் ஆச்சரியமளிப்பதாகவே இருக்கிறது.

‘மவுண்ட் கார்மல் கல்லூரியின் இருபத்தி இரண்டு வயது மாணவி இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக இருப்பார் என்றால், இந்தியாவின் அடித்தளங்கள் உடைந்து போயிருக்கின்றன என்றே பொருள்படும். அபத்தங்களைக் காட்சிப்படுத்துகின்ற தியேட்டராக இந்தியா மாறி வருகிறது’ என்று ப.சிதம்பரம் இது தொடர்பாக மிகவும் பொருத்தமான கருத்தைக் கூறியுள்ளார். ‘பயங்கரவாதம் குறித்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் பெயிலில் இருக்கும்போது போராடுகின்ற ஆர்வலர்கள் ஜெயிலில் இருக்கின்றனர்’ என்று சசிதரூர் கூறுகிறார். பொதுமக்களின் ஆதரவு குறையும் போது ​​ஆட்சியாளர்கள் எதேச்சதிகாரிகளாக மாறுவார்கள் என்று சோதித்து நிரூபிக்கப்பட்டிருக்கின்ற கொள்கை இப்போது தன்னை மீண்டும் இந்தியாவில் நிரூபித்துக் கொள்வதாகவே தெரிகின்றது. இதைக் கவனித்து வருகின்ற வெளிநாட்டு பார்வையாளர்கள் உலகின் கவனத்திற்குக் கொண்டு செல்கின்றனர். எதேச்சதிகாரத்திற்கு இப்போது மிக விரைவாக மாறி வருகின்ற முதல் பத்து நாடுகளில் ஒன்றாக இந்தியாவை ஸ்வீடனில் உள்ள வி-டெம் நிறுவனம் பட்டியலிட்டிருக்கிறது.

‘ஊடகங்கள், சிவில் சமூகம், எதிர்க்கட்சிகளுக்கான இடங்கள் மிகவேகமாகச் சுருங்கி வருவதால் ஜனநாயகம் என்ற தகுதியை இழக்கப் போகின்ற விளிம்பிலே இந்தியா நிற்கிறது’ என்று குறிப்பிடுகின்ற டைம் பத்திரிகை ‘நரேந்திர மோடியின் இந்தியா நமது ஜனநாயக நட்பு நாடு’ என்று ஜோ பிடென் எவ்வளவு காலத்திற்கு பாசாங்கு செய்வார் என்ற கேள்வியை எழுப்புகிறது: ‘வெறுப்பு பேச்சு பரவலாக உள்ளது. அமைதியாகத் தெரிவிக்கப்படுகின்ற மாற்றுக் கருத்துகள் குற்றமயமாக்கப்பட்டுள்ளன. கருத்துச் சுதந்திரம், கூடுவதற்கான சுதந்திரம்  ஆகியவை புதிய தடைகளை எதிர்கொண்டு வருகின்றன. அரசியல் கைதிகள், அமைதியாகப் போராடிய போராட்டக்காரர்களைக் கொண்டு  சிறைச்சாலைகள் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்தியாவைக் கடந்து கொண்டிருப்பவற்றை இந்த உலகத்தால் நம்ப முடியாது. உருவாகிக் கொண்டிருக்கின்ற இன்றைய இந்தியாவில் வினோதமான கருத்துக்கள் எளிதாக எடுத்துக் கொள்பவர்களை எளிதில் கண்டடைகின்றன.



நேபாளம், இலங்கையில் பாஜகவைச் செயல்பட வைப்பதற்கான திட்டங்கள் உள்ளன என்பதே அமித்ஷாவின் மூளையில் அண்மையில் தோன்றிய அலை. பகிரங்கமாக அதை தெரிவித்த திரிபுரா பாஜக முதல்வர் பிப்லாப் தேப் இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்று கட்சிக்கு அமித்ஷா உறுதியளித்திருப்பதாகவும் கூறினார். ஒருபுறத்தில் இருக்கின்ற வங்கதேசம், தாய்லாந்தையும், மறுபுறத்தில் இருக்கின்ற  ஆப்கானிஸ்தான், ஈரானையும் பாஜக கைப்பற்றுவதை அமித்ஷா ஏன் விரும்பவில்லை என்பது அறியாத மர்மமாகவே உள்ளது. அந்த நாடுகளும் பாஜகவின் எழுச்சியூட்டும் தலைமையின் கீழ் வளர வேண்டும் என்று அவர் விரும்பவில்லையா என்பது தெரியவில்லை.

பிரதமரும் சுபாஸ் சந்திரபோஸ், பி.ஆர்.அம்பேத்கர், சர்தார் பட்டேல் போன்ற தலைவர்களின் பெயர்களைக் கொண்டு முந்தைய அரசாங்கங்கள் இடங்களுக்குப் பெயரிடவில்லை என்ற மிகவும் ஆச்சரியமான கருத்தை வெளியிட்டு அந்த கோரஸில் இணைந்து கொண்டார். ஒன்று வெறுமனே  வாதத்திற்காக மோடி இவ்வாறு வாதிடுவதாக இருக்க வேண்டும். இல்லையென்றால் ஆச்சரியப்படும் அளவிற்கு தன்னிடமுள்ள அறியாமையை அவர் வெளிப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். நேதாஜி சாலை இல்லாத நகரம் இந்தியாவில் எங்கும் இருக்கவில்லை. வேறு எந்த தலைவரின் சிலைகளையும் விட அம்பேத்கர் சிலைகளே இந்தியாவில் அதிகமாக இருக்கின்றன. போஸ் அல்லது அம்பேத்கரைப் போல பட்டேல் பிரபலமாக இல்லை என்றாலும் அவர் பெயரிலும் பல கல்வி நிறுவனங்கள், சத்திரங்கள் உள்ளன. இந்த உண்மைகளை எல்லாம் புறக்கணித்து விட்டு, மோடி அவ்வாறு கூறியிருப்பதன் மூலம் தனது சொந்த வாதத்தையே பலவீனப்படுத்திக் கொண்டிருக்கிறார். வழக்கம் போல தான் சொல்வதை அப்படியே நாடு ஏற்றுக் கொள்ளும் என்று அவர் கருதியதாகவே தோன்றுகிறது.

சுயநலமுள்ள, எதேச்சதிகாரத் தலைவராக இந்தியாவிற்கு நல்லதை விட தீங்கையே மோடிஇழைத்து வருகிறார் என்ற உலகின் பார்வையை அவருடைய புதிய நகர்வுகள் உண்மையில் பலப்படுத்தி வருகின்றன. திஷா ரவி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டபோது இந்தியாவில் எழுந்த எதிர்ப்புகளின் அளவை உலகம் முழுக்க கவனித்துக் கொண்டிருந்ததில் சந்தேகமில்லை. திஷாவின் கைது அவரது அடிப்படை குடியுரிமையை மீறுவதாக இருந்தது என்றே பாஜகவைத் தவிர மற்றவர்கள் அனைவரும் கருதினர். அவர்கள் எதிர்ப்புகள் அனைத்தையும் மௌனமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவே  அதைக் கண்டனர். ஹரியானாவின் மிகத்தீவிர உள்துறை அமைச்சரான அனில் விஜ் தேச விரோத எண்ணங்களைக் கொண்டிருப்பவர்கள் அனைவரும் ‘அழித்தொழிக்கப்பட வேண்டும்’ என்றதொரு அறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். உண்மையில் தேச விரோதம் என்பதை சரியாக வரையறை செய்தால், அந்த பட்டியலில் அவரே முதல் ஆளாக இருப்பார்.

C:\Users\Chandraguru\Pictures\TJ George\disha\EuVPtGAVoAEvyJa.jpg

திஷா ரவியின் கைதுக்கு எதிராக எழுந்த பரவலான எதிர்ப்பு மக்களின் உணர்வுகளுக்கும் பாஜகவின் உணர்வுகளுக்கும் இடையில் உள்ள இடைவெளியைச் சுட்டிக் காட்டியது. திஷா ரவி கைது செய்யப்பட்டதற்கு பெங்களூரில் ஆர்வலர்கள், விவசாயிகள் மட்டுமல்லாமல், மாணவர்கள், எழுத்தாளர்கள் என்று ஏராளமானோர் தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவித்தனர். திஷா கைது செய்யப்பட்ட நிகழ்வை மோடி அரசிடம் உள்ள பாதுகாப்பற்ற, சித்தப்பிரமை உணர்வின் அடையாளமாகவே பலரும் கண்டனர். மக்களை அரசாங்கம் எவ்வாறு ஏமாற்றுகிறது என்பதைக் காட்டுவதற்காக திஷாவின் ஆதரவாளர்கள் ஆரம்பித்த #fingeronyourlips என்ற டிஜிட்டல் பிரச்சாரம் திஷாவின் கைதிற்கான எதிர்விளைவுகளைக் காட்டியது.  அனைத்து  முனைகளிலும் மோடி தோற்றுக் கொண்டிருக்கிறார். தனது சர்வாதிகாரப் பிடியை அவர் மேலும் இறுக்கிக் கொள்ளக் கூடும். ஒரு தலைமுறையினர் சர்வாதிகார ஆட்சியின் சுமைகளைத் தாங்கிக் கொள்ள வேண்டியிருந்தாலும், மோடி எதிர் மக்கள் என்ற போராட்டத்தில் நிச்சயம் மக்களே இறுதியில் வெல்வார்கள். அது ஒரு மாற்று உச்சகட்டமாக இருக்கும்!

https://www.newindianexpress.com/opinions/columns/t-j-s-george/2021/feb/21/modi-vs-disha-ravi-and-disha-wins-2266747.html

நன்றி: நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 2021 பிப்ரவரி 21  

தமிழில்: தா.சந்திரகுரு



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *