மோடிஜீயின் திடீர் லடாக் பயணம் – கே.ராஜூ

 

கல்வான் பள்ளத்தாக்கில் 20 ராணுவ வீரர்கள் சீன-இந்திய எல்லைப் பகுதியில் கொல்லப்பட்டது தேசத்தில் அதிர்வலைகளை உருவாக்கிக் கொண்டிருக்கும் நேரம். சீனா ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் இந்த அருமையான வாய்ப்பினை எப்படிப் பயன்படுத்திக் கொள்வது என்று சுயபிம்பக் கட்டமைப்பு விற்பன்னர், மேடைப் பேச்சு வல்லுநர், நடிப்பிசைத் திலகம் நரேந்திர மோடி இரவு உறக்கமின்றி யோசித்ததன் விளைவுதான் இந்தப் பயணம். அமித் ஷாவிடம் கூடச் சொல்லவில்லை. வந்து பார்த்துக் கொள்ளலாம் என்று கிளம்பிவிட்டார். லடாக் எல்லையில் ராணுவ வீரர்கள் மோடிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பளித்தனர். வீரமரணம் அடைந்த 20 வீரர்களின் படங்கள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு படத்திற்கும் மலர் வைத்து அஞ்சலி செலுத்திய பிறகு வீர உரை ஆற்றத் தொடங்கினார் :

பாரத தேசத்தைக் காக்கும், ராமபிரானின் வாரிசுகளாக அமர்ந்திருக்கும் வீரப் புதல்வர்களே! பொதுமக்களிடம் என்றால் தாராளமாகக் கப்சா கலந்து பேசுவேன். ராணுவ வீரர்கள் என்பதால், உங்களிடம் சற்று மனம்விட்டுப் பேச நினைக்கிறேன். தங்கள் இன்னுயிரை ஈந்து நாட்டைப் பாதுகாக்கும் கடமையை நீங்கள் ஆற்றியிருப்பது புதிதல்ல. பல்லாண்டுகளாக நீங்கள் செய்துவரும் அரிய தேசபக்த சேவைதான் அது. இதற்கு முன் இரண்டு உலகப் போர்களில் உலகத்தைக் காப்பாற்ற நீங்கள் செய்த தியாகத்தை உலகம் இன்னும் மறந்துவிடவில்லை. சுதந்திரம் அடைந்தபிறகு நடந்த 1962, 1971 போர்களைப் பற்றி நான் அவ்வளவாகக் கண்டுகொள்வதில்லை.

இன்று மாதிரி 1962-ம் ஆண்டிலும் சீனா நம்மிடம் வாலாட்டியது. அப்போதே நேரு அதன் வாலை ஒட்ட நறுக்கியிருந்தால், இன்று நம்மைச் சீண்டும் தைரியம் அந்த நாட்டிற்கு வந்திருக்குமா? எனக்கு இருக்கும் தைரியம் நேருவுக்கு ஏன் வரவில்லை?  உங்களுக்கு ஒரு உண்மையைச் சொல்கிறேன்.. அவருக்கு 56 இன்ச் மார்பு இல்லாமல் போனதுதான் காரணம். போரில் எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருப்பது மகாபாரதப் போரை ஜெயபேரிகை கொட்டி நடத்திய கிருஷ்ண பரமாத்மாதான். ஒரு கையில் பகவத் கீதையையும் மற்றொரு கையில் அணுகுண்டையும் கையில் வைத்தபடி அவர் அர்ஜூனனுக்குக் காட்சியளித்தார். நிலத்தைக் காப்பாற்ற உன்னுடைய தாயாதிகளிடம் கூடப் போராட நீ தயாராக இருக்க வேண்டும் என்று அவர் அர்ஜூனனுக்கு உபதேசித்தார்.

என்ன, ஒரு கையில் கிருஷ்ண பரமாத்மா அணுகுண்டு வைத்திருந்ததாகச் சொல்கிறாரே.. என்று ஆச்சரியப்படுகிறீர்கள். அணுகுண்டு மகாபாரத காலத்திலேயே இருந்தது என்பது உண்மை. இதை இடதுசாரி வரலாற்றாசிரியர்கள் உலகின் கண்களிலிருந்து மறைத்துவிட்டார்கள். ஆனால் நம் ஆர்எஸ்எஸ் வரலாற்றாசிரியர்கள் தோண்டி எடுத்து நம் பாரம்பரியப் பெருமையை உலகிற்கு அறிவித்துவிட்டார்கள்.

Bravery of Indian soldiers gave strong message to the whole world ...

எனக்கு முன்பு இருந்த பிரதமர்களில் இந்திரா காந்தியை என்னால் மறக்க முடியாது. அவர் அவசரநிலையைக் கொணர்ந்து நாட்டையே சிறைச்சாலையாக்கி ஜனநாயகத்தை சீரழித்ததை நானும் எனது பரிவாரத்தினரும் அடிக்கடி நினைவூட்டிக் கொண்டே இருப்போம். ஆனால் உண்மையில் நாங்கள் அவருக்கு நன்றிக் கடன் பட்டவர்கள். அவர் மட்டும் ஆர்எஸ்எஸ், ஜனசங்கத் தலைவர்களை அன்று சிறையில் அடைத்திருக்காவிட்டால் நாங்கள் இன்று இந்த வளர்ச்சியைப் பெற்றிருக்க முடியுமா? இந்திராதான் இந்தியா என்ற கோஷம்தான் மோடிதான் இந்தியா என்று மாற்றியமைக்க எனக்கு உத்வேகம் அளித்தது. அதே சமயம், அவரை மாதிரி அவசர நிலை என்று பகிரங்கமாக அறிவித்துவிட்டுச் செய்யும் அளவுக்கு நான் விவரம் தெரியாதவன் அல்ல.

காலையில் எழுந்ததும் நான் யோகா செய்கிறேன். மக்களையும் அவர்களது கவலைகளை மறக்க யோகா செய்யச் சொல்கிறேன். அவர்களுக்கு என்ன கவலை என்கிறீர்களா? எல்லாம் தங்களைப் பற்றியும் நாட்டைப் பற்றியும் உள்ள கவலைகள்தான். யோகா செய்தால் அவர்களது கவலைகள் பறந்து போய்விடும் என்று நம்பவைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்..அன்றாடம் எழுந்தவுடன் ஒரு திருக்குறள் சொல்கிறேன். பச்சா ராகுல் காந்தியால் முடியுமா? இதைத் தமிழர்கள் கவனிக்க வேண்டும்.

தரை, கடல், விண்வெளி என அனைத்தையும் எனது கார்ப்பரேட் நண்பர்களுக்குத் தந்து கொண்டிருக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும். இதையும் இடதுசாரிகள் ஏற்க மாட்டார்கள். பெரிய முதலாளிகள் நாட்டைக் கொள்ளை அடிப்பதாகச் சொல்வார்கள். நான் அதை மறுக்கிறேன். அதை பகற்கொள்ளை என்று வேண்டுமானால் கூறலாம்.

நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனாவுக்கும் நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். பிரச்சனை களிலிருந்து மக்கள் கவனத்தைத் திசைதிருப்புவதில் அந்தக் கண்ணுக்குத் தெரியாத வைரஸ் எங்களைவிடக் கில்லாடி என்பதை நிரூபித்துவிட்டது. அடுத்தடுத்து ஊரடங்கு அறிவித்து நான் சமாளித்ததை உலகமே பாராட்டிக் கொண்டிருக்கிறது. யார், யார் பாராட்டினார்கள் என்று கேட்டுவிடாதீர்கள். அது எனக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். மக்கள் யாரும் போராட முடியாத இந்த நேரத்தில் நாங்கள் நினைத்ததையெல்லாம் நிறைவேற்றிக் கொள்ள ஒரு வாய்ப்பு அளித்த கொரோனாவுக்கு நன்றி தெரிவித்து உங்களிடமிருந்து விடைபெற்றுக் கொள்கிறேன்.

பாரத் மாதா கீ என்று மோடி சொல்ல வீரர்கள் ஜெய் என்று சொல்கின்றனர். வந்தே மாதரம் என்று அவர் சொல்ல அதை அவர்கள் திருப்பிச் சொல்கின்றனர். கூட்டம் முடிகிறது.

சிறிதளவு கற்பனை : ராஜகுரு