மோடியின் சுதந்திர தின வெற்று உரை – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் (தமிழில்: ச.வீரமணி)

NEW DELHI, INDIA - AUGUST 15: Prime Minister Narendra Modi addresses on the occasion of 71st Independence Day Celebrations at Red Fort, on August 15, 2017 in New Delhi, India. Addressing the nation from the Red Fort on India's 71st Independence Day, Modi warned those indulging in mob violence, saying attacks in the name of aastha (faith) was not something to be happy about and wont be accepted. Modi on Tuesday called for a New India that will be free of casteism, communalism, terrorism and corruption as he urged those wielding the gun in Kashmir to join the mainstream so that the Kashmir problem is solved through embrace. (Photo by Raj K Raj/Hindustan Times via Getty Images)

 

பிரதமர், சுதந்திர தினத்தன்று உரையாற்றும்போது, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள சுகாதார நெருக்கடியைத் தீர்க்கும் விதத்திலும், மேலும் நாட்டில் மிகப்பெரிய அளவில் பொருளாதாதர நெருக்கடியின் காரணமாக  வேலை இழப்புகள் மற்றும் மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டிருப்பது போன்ற பொருளாதார நெருக்கடி சம்பந்தமாகவும் புதிய திட்டங்கள் ஏதேனும்  அறிவிப்பாரா என்று எதிர்பார்ப்புடன் கவனிக்கப்பட்டது.

இந்த இரண்டு அம்சங்கள் தொடர்பாகவும் அவருடைய உரை ஏமாற்றத்தையே அளித்தது. கடந்த ஆறு மாத கால அனுபவம், கொரோனா வைரஸ் தொற்றை எதிர்கொள்வதில் நாட்டில் எந்த அளவிற்கு பொது சுகாதாரப் பாதுகாப்பு என்பது மிகவும் பரிதாபமான முறையில் மோசமாக இருக்கிறது என்பதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாகவே, நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த அரசாங்கங்கள், பொது சுகாதாரத்தைப் புறக்கணித்தே வந்திருக்கின்றன. பொது  சுகாதாரத்தின் மீதான அரசாங்க செலவினங்கள் என்பவை மிகவும் அற்பமாகும். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவீதத்திற்கும் குறைவாகும். நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று இப்போதும் மிக மோசமான முறையில் அதிகரித்துக் கொண்டிருக்கக்கூடிய நிலையில், இதிலிருந்தாவது மோடி அரசாங்கம் ஏதேனும் படிப்பினைப் பெற்றிருக்கும் என்றும், குறைந்தபட்சம் இப்போதாவது போதுமான நிதியுடன் பெரிய அளவில் பொது சுகாதார வளர்ச்சித் திட்டங்களை அறிவித்திடும் என்றுமே ஒருவர் எதிர்பார்ப்பார்.

ஆனால், பிரதமரால் அறிவிக்கப்பட்டிருப்பது என்ன? அனைவருக்குமான ஒரு டிஜிடல் சுகாதார அடையாள அட்டை. இது ஒவ்வொரு நபரின் மருத்துவக் குறிப்புகளையும் இணைத்திடும். இது, உண்மையான பிரச்சனையை ஒதுக்கி வைக்கிறது. பொது சுகாதாரத் துறையில் ஆரம்ப சுகாதா நிலைய அளவிலிருந்து, அனைத்து மட்டங்களிலும் பொது சுகாதார அமைப்பு முறையில் போதுமான அளவிற்கு மருத்துவ வசதிகள் மற்றும் மருத்துவம் சார்ந்த ஊழியர்கள் இல்லாதிருக்கும் உண்மைப் பிரச்சனையை மூடி மறைக்கிறது. பிரதமர் என்ன அறிவித்திருக்க வேண்டும்? நாட்டின் பொது சுகாதார அமைப்புமுறையை விரிவாக்குவதையும், மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, மத்திய மாநில அரசுகளுக்காக குறைந்தபட்சம் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு சுகாதார உள்கட்டமைப்புத் திட்டத்தை அறிவித்திருக்க வேண்டும். எனினும், பாஜக அரசாங்கத்திற்கு அவ்வாறெல்லாம் சிந்திக்கும் எண்ணம் கிடையாது. அது, தனியார் சுகாதாரப் பாதுகாப்பு என்னும் வறட்டுத்தனமானப் பிடிவாதப் போக்கிலிருந்து, வெளிவரத் தயாராயில்லை.

கொரோனா வைரஸ் தொற்று நாட்டைப் பீடிப்பதற்கு முன்பாகவே நம் நாட்டின் பொருளாதார மந்த நிலைக்குச் சென்றிருந்தது. அது, இப்போது சமூக முடக்கம் திணிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. பொருளாதார வல்லுநர்கள், 2020-21ஆம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதத்திலிருந்து 10 சதவீதம் வரை மேலும் சுருங்கும் என்று முன்னுணர்ந்து, கணித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆழமான பொருளாதார மந்தத்தின் விளைவு, மிகப் பெரிய அளவில் வேலை இழப்புகள், சிறிய வர்த்தக நிறுவனங்கள் மூடல்கள் மற்றும் சேவைத் துறையிலும் கணிசமான அளவிற்கு இழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.

தேவை (demand) மற்றும் நுகர்வில் ஏற்பட்டிருக்கிற சரிவு, பொருளாதார நெருக்கடியை மேலும் ஆழமாக்கி இருக்கிறது. வருமானத்தில் இழப்பு, மக்களின் சேமிப்புகளில் அரிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதிலிருந்து வெளிவர ஒரே வழி, அரசாங்கம் பொது செலவினங்கள் மற்றும் பொது முதலீட்டை பெரிய அளவில் அதிகப்படுத்த வேண்டியதேயாகும்.

செங்கோட்டையிலிருந்து மோடி ஆற்றிய உரை, அத்தகைய சமிக்ஞை எதையும் அளித்திடவில்லை. மக்களுக்கு ரொக்கப் பயன் அளித்திடும் விதத்தில் பொது செலவினங்களை அதிகரிக்கும் எந்த வொரு திட்டத்தையும் அரசாங்கம் வெறித்தனமாக மறுத்திருக்கிறது. கடந்த மூன்று மாதங்களில் பெண் ஜன்தன் வங்கிக் கணக்கு வைத்திருப்போருக்கு 1500 ரூபாய் அளித்ததைத் தவிர, வேறெந்த  உதவியையும் மக்களுக்குச் செய்திட அது முன்வரவில்லை. வருமானவரி செலுத்தாத குடும்பத்தினர்களுக்கு 7,500 ரூபாய் மாற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கோரிக்கையை அரசாங்கம் மறுத்திருக்கிறது.

பிரதமர், தன் உரையில், வேலையிழந்துள்ள லட்சக்கணக்கான மக்களைப் பற்றியோ, வாழ்வாதாரங்களை இழந்த மக்களைப் பற்றியோ, அல்லது, தங்களுடைய வருமானங்களைக் கடுமையாக இழந்து தவித்துக்கொண்டிருக்கும் மக்களைப் பற்றியோ, ஒரு வார்த்தைகூட பேசவில்லை.

மோடி, அறிவித்திருக்கும் ஒரேயொரு அறிவிப்பு என்னவெனில்,  1.10 லட்சம் கோடி ரூபாயில் தேசிய உள்கட்டமைப்பு குழாய் (NIP-National Infrastructure Pipeline) திட்டமாகும். உண்மையில் இந்தத் திட்டம் மோடியால் சென்ற ஆண்டு சுதந்திர தின உரையின்போது கூறப்பட்டதேயாகும். இது ஓர் ஐந்தாண்டுத் திட்டமாகும். கிட்டத்தட்ட இது ஒரு நீண்டகாலத் திட்டமாகும். இதில் உடனடியாகப் பயன் அளிக்கும் விதத்தில் எவ்விதமான முதலீட்டுச் செலவினமும் அறிவிக்கப்படவில்லை. மோடி தன் உரையின்போது அடிக்கடி, சுய சார்பு என்கிற சொற்றொடரைக் கூறியபோதிலும், இந்த அரசாங்கம் அந்நிய நேரடி முதலீடு மற்றும் தனியார் முதலீட்டையே அதிக அளவில் சார்ந்திருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகும்.

உண்மையில், இந்த அரசாங்கம், கொரோனா வைரஸ் தொற்றுக் காலத்தைப் பயன்படுத்திக் கொண்டு, அந்நிய மூலதனத்திற்கும், பெரும் கார்ப்பரேட்டுகளுக்கும் மிகப்பெரிய அளவில் சலுகைகளை வாரி வழங்கியிருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் தனியாரிடம் தாரை வார்த்திட நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

Full text of PM Narendra Modi's 70th Independence Day speech - The ...

புதிதாகக் கொண்டுவரப்படும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு, இதுநாள்வரையிலும் இருந்துவரும் முறைப்படுத்தும் நெறிமுறைகள் அனைத்தையும் நீர்த்துப்போகச் செய்து, வனங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் மிகப்பெரிய அளவில் ஊறுவிளைவிக்கும் விதத்தில், நம் நாட்டின் இயற்கைச் செல்வங்களை, அந்நிய மற்றும் உள்நாட்டுக் கார்ப்பரேட்டுகள் சூறையாடுவதற்கு வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

மோடியின் உரை, கொரோனா வைரஸ் தொற்றால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் எது குறித்தும் இந்த அரசாங்கம் அறிந்திருப்பதாகக் காட்டவில்லை. நாட்டில் சமூக-பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள சமூகத்தில் உள்ள குழந்தைகள், தங்களின் கல்விக்கான எதிர்காலம் என்ன ஆகுமோ என்று தெரியாது அவதிப்படுவது குறித்தோ, அவர்களில் பலர் படிப்பைப் பாதியிலேயே கைவிடும் நிலை ஏற்பட்டிருப்பது குறித்தோ கிஞ்சிற்றும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. பிரதமர் தன் உரையில் புதியதொரு தொடக்கம் என்று தம்பட்டம் அடிக்கப்பட்டிருக்கிற புதிய கல்விக் கொள்கை இதற்குப் பதில் அளிக்கவில்லை.

சென்ற சுதந்திர தினத்திற்குப் பின்னால், மோடி அரசாங்கத்தின் கொள்கைகள் மிகவும் பிற்போக்கான பாதையில் சென்று கொண்டிருக்கின்றன,. மோடி தன்னுடைய உரையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இல்லாது ஒழித்துக் கட்டியதை, ஜம்மு-காஷ்மீரில் பல்வேறு தரப்பு மக்களுக்கும் புதிய உரிமைகளை வாரி வழங்கியதாகப் பீற்றிக்கொண்டிருக்கிறார்.  ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றம் துண்டாடப்பட்டிருப்பது குறித்து, புளகாங்கிதம் அடைந்திருக்கிறார். நாட்டின் பிரஜா உரிமைக்கு இருந்து வந்த மதச்சார்பற்ற வரையறையை அரித்துவீழ்த்திடும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்தோ மற்றும் தேசியக் குடிமக்கள் பதிவேடு குறித்தோ அவர் எதுவும் கூறவில்லை. அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவது குறித்து, அனைத்துத்தரப்பு மக்களின் முதிர்ச்சியையும் அது எப்படி சோதித்துப் பார்த்தது என்று அவர் கூறியது பாசாங்குத்தனமான ஒன்றேயாகும்.  அவரது உரையில், இந்துத்துவாவின் வெற்றியை முஸ்லீம் சிறுபான்மையினர் ஏற்றுக்கொண்டிருப்பது போன்று திருப்தி மனப்பான்மை இருப்பதைக் காட்டியது.

பிரதமர் தன் உரையில் தெற்காசியாவில் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான தேவை சம்பந்தமாக ஓர் ஆக்கபூர்வமான குறிப்பை அளித்திருக்கிறார். இது வழக்கமாக அவர் பாகிஸ்தானுக்கு எதிராகக் கூறும் வசைமாரிக்கு எதிரானதாகும். அவர், தெற்காசிய நாடுகளின் தலைவர்கள் அமைதி மற்றும் நல்லிணக்கச் சூழ்நிலையைக் கட்டி எழுப்புவதற்கான பொறுப்பு உண்டு என்று கூறியிருக்கிறார். கடந்த ஓராண்டு காலத்தில் நம் அண்டை நாடுகள் அனைத்துடனும் எப்படி நம் உறவுகள் கசப்பானவைகளாக மாறியிருக்கின்றன என்பதுடன் பரிசீலனை செய்கையில், இவ்வாறு அவர் கூறியுள்ள புத்திமதியை அவரும், அவருடைய அரசாங்கமும்தான் முதலாவதாகவும், முதன்மையானதாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தியா, அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் போர்த்தந்திரத்துடன் தன்னை இணைத்துக்கொண்டிருக்கிற அதே சமயத்தில், இலங்கை, வங்கதேசம், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் சீனாவின் ‘பட்டை ஒன்று பாதை ஒன்று’ (The Belt and Road Initiative) திட்டத்துடன் தங்களை இணைத்துக்கொண்டிருக்கின்றன.

பிரதமர்களின் சுதந்திரதின உரைகள் என்பவை தேச மக்களுக்கு தங்கள் நாட்டின் நிலைமைகள் குறித்து கூறும் விதத்தில் பொதுவாக அமைந்திருக்கும். இந்த ஆண்டு, மோடி சுமார் 86 நிமிடங்கள் ஆற்றிய உரை, நாடும், நாட்டு மக்களும் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சனைகள் மற்றும் சவால்கள் எதையும் தொடவில்லை.  மாறாக, அவர் எப்போதும் வழங்கும், வெற்று ஆரவார, பிரச்சார பாணி உரையாகவே அமைந்திருந்தது.

(ஆகஸ்ட் 19, 2020)