பொருட்களை உற்பத்திச் செய்யவும், உற்பத்தியான பொருட்களை விநியோகம் செய்யவும் அனைத்து நாடுகளும் உலகச் சந்தையை நம்பி இருக்கின்றன. அனைத்து விதமான உற்பத்திகளும் சர்வதேச வேலைப் பிரிவினையால் கட்டமைக்கப் பட்டிருக்கின்றன. இதனால், ஒவ்வொரு நாடும் எதாவதொரு வகையில் பிறநாடுகளைச் சார்ந்திருக்கின்றது. அரேபிய நாடுகள், ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள எண்ணெய் வளங்களுக்காக பிற நாடுகள் சார்ந்திருக்கின்றன.
அதேபோல, அரேபிய நாடுகள் உணவுக்காக பிற நாடுகளைச் சார்ந்திருக்கின்றன. செல்போன் தயாரிக்க தேவைப்படும் கச்சாபொருட்களுக்கு பிற நாடுகள், சீனாவைச் சார்ந்திருந்தன. கச்சா எண்ணெய், எரிவாயு, ஆயுதம், மின்னணு சாதனங்கள் போன்ற பொருட்களுக்காக இந்தியா, பிற நாடுகளைச் சார்ந்து இருக்கின்றது. இவ்வாறாக, அனைத்து நாடுகளும் உலகமய வலைப் பின்னலில் சிக்குண்டு கிடக்கின்றன. இவை உலகம் தழுவிய சிக்கலான உற்பத்திச் சங்கிலித் தொடர்களையும், விநியோகச் சங்கிலித் தொடர்களையும் உருவாக்கி யிருக்கின்றன.
உண்மையில் கொரானா தாக்குதல் உலகப் பொருளாதாரத்தை ஆட்டங்கான செய்துள்ளது. மேற்கண்ட உற்பத்தி சங்கிலி தொடர்கள் அறுபட்டு போயுள்ளன. விநியோகச் சங்கிலித் தொடர்களும் இற்றுப் போய்விட்டன. எந்த பொருளையும் எந்த நாடும் இறக்குமதி செய்ய முடியவில்லை.அதேபோல ஏற்றுமதியும் செய்ய இயலவில்லை.
இதன் காரணமாக, நான்கு வருடத்தின் உலகப் பொருளாதார வளர்ச்சி தள்ளிப் போடப்பட்டுள்ளது என்றும், இதனால் 8.5 டிரில்லியன் டாலர் அளவுக்கு பொருளாதார நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும், 2020 இல் 34.3 மில்லியன் உலக மக்களை அதீத வறுமைக்கு கீழே தள்ளிவிடும் என்றும், வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கும் என்றும் ஐக்கிய நாடுகளின் சபை எச்சரித்துள்ளது. இந்நிலையில் கொரானாவின் தாக்குதலிருந்தாவது விடுபடுவோமா என்றால் அதுவும் இல்லை. பல நாடுகள் கடுமையான முயற்சி செய்த பின்னரும் கொரானா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க இயலவில்லை. ஐக்கிய நாடுகளின் சபையும் கைவிரித்துவிட்டது. இப்போது கொரானாவோடு வாழப் பழகிக் கொள்ளுங்கள் என்று அறிவுரைக் கூறி வருகின்றது.
இந்த சூழ்நிலையில் தற்போது கொரானாவின் பாதிப்பிலிருந்து மீள்வதற்கு அனைத்து நாடுகளும் கடன் நிவாரணத் திட்டங்களை அறிவித்து கொண்டிருக்கின்றன. இந்தியாவும் தனக்கான திட்டத்தை அறிவித்துள்ளது. அத்துடன் ‘சுயசார்பு’ என்ற கொள்கையையும் முன்வைத்துள்ளது. சுயசார்பு என்பதன் அடிப்படை என்ன, இதை கொண்டு வருவதற்கான காரணங்கள் என்ன, இந்த கொள்கை இன்றைய எதார்த்தத்தில் சாத்தியப்படுமா என்பது போன்ற விவாதங்களை முன்னெடுப்போம்.
உலக மயத்தின் பிடியில் இந்தியா
1947க்கு பின்னர் இந்திய அரசு, விவசாயம், உற்பத்திச் சார்ந்த பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தது. ஐந்தாண்டு திட்டங்களின் மூலம் உள்கட்டுமானப் பணிகளைக் கட்டமைத்தது.இந்திய அரசு பொருளாதாரத்தை ஒழுங்குபடுத்தியது. பொருளாதாரத்தில் அந்நிய மூலதனத்தை தடுக்கும் நோக்கில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. பொருளாதாரம் கடுமையான நெருக்கடிக்கு ஆளானது. இதனால் 1990 களில் இந்தியா உலகமயக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டது.
தாராளமயம், தனியார்மயம், உலகமயம் கொள்கைகளை அமுல்படுத்த முன்வந்தது. அதற்காக, ஏற்கனவே விதித்திருந்த கட்டுப்பாடுகள் அனைத்தையும் படிப்படியாக தளர்த்தியது. முக்கியமாக லைசென்ஸ் ராஜ்யம் ஒழிக்கப்பட்டது.பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்குப் பிறகு பல பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு தொழிற்சாலைகளைத் தொடங்கியுள்ளன. இத்தகைய கொள்கைகள் முதலாளித்துவ வளர்ச்சியை ஊக்குவித்தன.இன்றுவரை இதன் போக்குகள் இன்னமும் நீடித்து வருகின்றன.
இந்தியாவில் தயாரிப்போம்
உலகமயக் கொள்கைகள் தீவிரமாக அமுலில் இருந்தபோது, 2014 இல் மோடி, ‘இந்தியாவில் தயாரிப்போம்’ (Make in India) என்ற முழக்கத்தை முன்வைத்தார்.இது சுதேசிக் கொள்கையின் நவீன வடிவம் என்று விளக்கமளித்தார். இந்தியப் பொருளாதாரத்தை முன்னேற்றும் நோக்குடன் இத்திட்டம் கொண்டுவரப்பட்டதாகக் கூறினார்.
ஆனால் அதற்கு மாறாக மோடி, வெளிநாடுகளில் மூலதனத்தை திரட்டுவதையே முக்கிய வேலையாக கொண்டிருந்தார். எனவே இத்திட்டம் பெரிய அளவில் வெற்றியைத் தரவில்லை. உலகமயம் உச்சத்தில் இருந்த காலத்தில் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற முழக்கம் கேலிக்கூத்தாக மாறிபோனது. இன்றுவரை அது வெற்று முழக்கமாகவே இருந்து வருகின்றது. இருந்த போதிலும், இந்திய முதலாளிகளின் பொருளாதாரம் மட்டும் வளர்ச்சி பெற்று வருகின்றது என்பதில் சந்தேகமில்லை.
ஆசிய பிராந்தியத்தின் மேலாதிக்க கனவு
தற்போது இந்தியாவின் பொருளாதாரத்தின் மொத்த மதிப்பு 2.94 டிரில்லியன் டாலர் என்ற அளவில் உள்ளது. இது உலகப் பொருளாதாரத்தில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது என்று ஐக்கிய நாடுகளின் புள்ளி விவரம் கூறுகின்றது. கடந்த சில ஆண்டுகளாகவே மோடி, ‘தேசத்தை மறுகட்டமைப்புச் செய்வோம்’ என்றும் கூறி வருகின்றார். ஒட்டுமொத்த நாடே பிரமிக்கும் வகையில், 2025 இல் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தைக் கட்டமைக்க வேண்டும் என்ற பெரும் இலக்கையும் நிர்ணயித்துள்ளார். இதன் மூலம் ஆசியாவில் பெரிய சக்தியாக மாற முடியும் என்ற நம்புகிறார். இதற்கான செயல்தந்திரங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறார். மோடியின் அனைத்து திட்டங்களும் இதை நோக்கித்தான் இருக்கின்றன என்பது சொல்லாமலே விளங்கும்.
ஆசிய பிராந்தியத்தில் சீனா முதன்மைச் சக்தியாக உருவெடுத்து வரும் சீனாவை இந்தியா ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. பெல்ட் மற்றும் சாலைத் திட்டத்திற்கு ஆரம்பத்தில் இருந்து எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ளது. அதன் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் எதிர்த்து வருகின்றது. சீனாவுடன் உரசலும் பூசலும் கொண்ட உறவை இந்தியா மேற்கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் அமெரிக்காவிற்கு அடிபணிந்து சேவை செய்ய காத்துக் கொண்டிருக்கின்றது.
தற்போதைய சூழலில் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் ஏற்பட்டுள்ள வர்த்தகப் போரை பயன்படுத்திக் கொள்ள இந்தியா முனைப்பாக உள்ளது. அமெரிக்க நிறுவனங்கள் சீனாவிலிருந்து வெளியேறவும் பிற ஆசிய நாடுகளில் உற்பத்தியை துவங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. சீனாவிலிருந்து வெளியேறும் அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் காலூன்ற விரும்புகின்றன.
அதற்காக என்ன விலை கொடுத்தாவது அமெரிக்க நிறுவனங்களை இந்தியா ஈர்க்க முடிவெடுத்துள்ளது. எனவே அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களை கவரும் வகையில் இந்தியா தனது பொருளாதார உட்கட்டமைப்பு வசதிகளை பெருக்கவேண்டிய நிலையில் உள்ளது. அதற்காக மோடி பெரியளவில் திட்டமிட்டு 20 லட்சம் கோடி ரூபாய் திட்டத்தை அறிவித்துள்ளார். இது முழுக்க பன்னாட்டு நிறுவங்களை இந்தியாவிற்கு கொண்டுவருவதற்கான திட்டமாகும். அதற்காக பலவேறு சீர்த்திருத்தங்களை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருக்கின்றது.
கொரானா அளித்த புதிய பாடம்
இந்தியாவில், கொரானாவின் பாதிப்புகள் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்துள்ளன. ஊரங்கு கட்டுப்பாட்டால் உழைக்கின்ற மக்கள் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக இழந்தனர். விவசாயிகள் தாம் விளைவித்த உணவுப் பொருட்களை சந்தைக்கு எடுத்துச் செல்லமுடியவில்லை. பெரும்பாலும் அப்படியே அழிந்து போனது.சிறு குறு தொழில்கள் உட்பட அனைத்து தொழில்துறையும் முடங்கிப் போனது. பெரு முதலாளிகளுக்கு ‘பெருத்த நஷ்டம்’ ஏற்பட்டது. அரசுக்கு வரவேண்டிய வருவாய் இல்லாமல் போனது. இவ்வாறாக, இந்திய பொருளாதாரத்திற்கு பலத்த அடி விழுந்தது. ஒட்டுமொத்தமாக பார்த்தால், நாட்டின் பொருளாதாரத்தில் பல பில்லியன் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
வேலையில்லாத் திண்டாட்டம் 23% ஐ எட்டியுள்ளது. இதை எல்லாம் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார் மோடி. ஆனால், கொரானா நமக்கு புதிய பாடத்தைக் கற்றுக் கொடுத்துள்ளது என்று கூறினார். ஒரு பெரிய செய்தியை நமக்கு அளித்துள்ளது என்றார். அதுதான் ‘சுயசார்பு’(Self reliance).இதை தன்னிறைவு என்றும் கூறுகின்றனர். கொரானா முடிந்தவுடன் இந்திய அரசிடமிருந்து நிவாரணத் திட்டங்கள் வரும் அனைவரும் என்று எதிர்பார்த்த வேளையில் மோடி ‘சுயசார்பு’ என்ற பெரும் மந்திரத்தை ஓதுகிறார்.
மோடியின் பெரிய செய்தி
‘சுயசார்புள்ள இந்தியாவைக்’கட்டமைக்க ஐந்து தூண்களை எழுப்பப்பட வேண்டிய அவசியத்தை மோடி சுட்டிக் காட்டியுள்ளார். அவை, பொருளாதாரம், உள்கட்டுமானம் வசதிகளை ஏற்படுத்தல், தொழில்நுட்பத்தால் முடுக்கிவிடப்படும் அமைப்புமுறை, துடிப்பான மக்கள், நுகர்வோரின் தேவையை அதிகரிப்பது ஆகியவை ஆகும். இத்தகைய தூண்களை நிலைநிறுத்த வேண்டுமென்றால், நிலம், உழைப்பு, பணப்புழக்கம், சட்டம் போன்ற விசயங்களில் கடுமையான சீர்த்திருத்தங்களை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சுயசார்பு என்ற கொள்கை உருவாக்கிக் கொள்வதற்கு தமக்கு ஏற்பட்ட அனுபவத்தை மோடி சுட்டிக் காட்டுகிறார். அதாவது கொரானா தாக்குதலின் ஆரம்பத்தில் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களின் உற்பத்தி மிகக் குறைவாக இருந்தது. ஆனால் இப்போது 2,00,000 தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை உற்பத்திச் செய்கிறோம் என்கிறார். இதிலிருந்து நம்மால் எல்லா பொருட்களையும் நாமாகவே உற்பத்திச் செய்து கொள்ள முடியும் என்று நம்பிக்கை ஏற்படுத்தியதாகக் கூறுகிறார்.
ஆனால் இந்திய மருந்து மற்றும் மருந்து பொருட்கள் லிமிடெட் என்ற இந்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனம் மூலம்தான் இது சாத்தியமானது. மருத்துவத்தில் சுய சார்பு காணும் நோக்கத்தில் இந்த நிறுவனத்தை நேருவால் துவக்கி வைக்கப்பட்டது என்பதை அவர் மறந்துவிட்டார். தற்போது சீனாவிலிருந்து மட்டும் 70% மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்து மருந்துகள் தயாரிக்கப்படுகிறது. அதன் மூலம் 50% அளவுக்கான மருந்துகள் ஏற்றுமதிச் செய்யப்படுகின்றது என்பது குறிப்பிடத் தக்கது.
முதலாளிகளுக்கு சலுகையும் சீர்த்திருத்தங்களும்
பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்து லாபங்களை சுரண்டிச் செல்ல எந்தவிதமான தடைகளும் இருக்க கூடாது என்பதில் இந்திய அரசு கண்ணும் கருத்துமாக இருக்கின்றது. இதற்காகவே மோடி பலவிதமான சட்ட சீர்த்திருத்தங்களை அறிவித்துள்ளார். நிலம் கையகப்படுத்துவதில் எந்தவிதமான தடையும் இருக்கக் கூடாது என்பதற்காகவும், விரைவான நில எடுப்பைச் சாத்தியப்படுத்துவதற்காகவும் நில எடுப்புச் சட்டத்தில் திருத்தங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்தியாவில் முதலீடு செய்யும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் செய்து தருவதற்கான ஏற்பாடுதான் இந்த அறிவிப்புகள். குறிப்பாக தொழில்நுட்ப கட்டமைப்பு வசதிகளுக்கு முன்னுரிமைக் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.
தொழில் அமைதிக்காக தொழிலாளர் நலச் சட்டங்கள் அனைத்தையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான அவசரச் சட்டங்களை சில மாநிலங்கள் இயற்றியுள்ளன. ஆனால் இதனால், பன்னாட்டு நிறுவனங்கள் திருப்தி அடைவதாக தெரியவில்லை. தொழிலாளர் நலச் சட்டங்களிலிருந்து முழுமையான நிரந்தரமான விலக்குகளை அவை கோருகின்றன.
பிஜேபி ஆளும் மத்திய பிரதேசம் மற்றும் உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் அனைத்து தொழிலாளர் சட்டங்களின் செயல்பாடுகளை அவசர சட்டங்கள் மூலம் முற்றிலும் நிறுத்தி வைத்துள்ளது. ராஜஸ்தான், மகாராஷ்ட்ரா, கோவா, ஒடிஸா போன்ற மாநிலங்களில் தொழிலாளர்களின் வேலைநேரம் 8 மணியிலிருந்து 12 மணி நேரமாக அதிகரித்து இருக்கின்றன.வெளிநாட்டு முதலீடுகளைக் கவர்வதற்கே இத்தகைய தொழிலாளர் சட்ட சீர்த்திருத்தங்கள் என விளக்கம் அளிக்கப்படுகிறது.
எங்கும் தனியார் மயம் எதிலும் தனியார் மயம்
எங்கும் தனியார் மயம் எதிலும் தனியார்மயம் இதுதான் மோடியின் தற்சார்புக் கொள்கை. இந்திய நாட்டின் முதன்மையான உற்பத்தி துறைகளான நிலக்கரி, தாதுப்பொருள், மின்விநியோகம், அணுசக்தி, உள்ளிட்ட 8 துறைகளில் தீவிரமான சீர்த்திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக நாடு முழுவதும் தொழில்பூங்காக்கள் உருவாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கனிமச் சுரங்கங்களின் குத்தகையை பிற நிறுவனங்களுக்கு மாற்றிக் கொடுக்க அனுமதி வழங்கப்படும். நிலக்கரி இறக்குமதியைக் குறைத்து உள்நாட்டு உற்பத்தியை பெருக்கி, தன்னிறைவு பெறுவதே இலக்காக கொண்டிருக்கின்றது.
நிலக்கரித்துறை என்பது இதுவரை முற்றிலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் தொழிலாகும். இனிமேல் நிலக்கரித் துறையில் தனியாருக்கு அனுமதி திறந்துவிடப்படும். மேலும் நிலக்கரியை எடுக்கக்கூடிய பகுதிகளில் மீத்தேன் வாயு பிரித்தெடுக்கும் ஆலைகளுக்கு அனுமதி வழங்கப்படும். பாக்சைட், நிலக்கரி சுரங்கங்கள் ஒன்றாக ஏலம் விடப்படும். பிற நிறுவனங்களுக்கு குத்தகையை மாற்றவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைகள் நிறுவனங்களாக மாற்றப்படும். ராணுவ தளவாட உற்பத்தியில், தன்னிறைவை எட்டும் வகையில் மேக் இன் இந்தியா திட்டம் பயன்படுத்தப்படும். பாதுகாப்பு தளவாட உற்பத்தியில், 74 சதவீதம் வரை அன்னிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்படும். ஏற்கனவே இது 49 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய விமான வான் பரப்பை பயன்படுத்த இருந்த கட்டுப்பாடுகள் முற்றிலும் நீக்கப்படுகிறது. மேலும், கூடுதலாக 6 விமான நிலையங்கள் ஏலம் விடப்படும். மேலும் விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்புகள் ஊக்குவிக்கப்படும். இஸ்ரோ அமைப்பின் உள்கட்டமைப்பை தனியார் பயன்படுத்திக் கொள்ளலாம். அது தவிர, யூனியன் பிரதேசங்களில் மின் பகிர்மான நிறுவனங்கள் இனி தனியார் வசம் ஒப்படைக்கப்படும். மேலும் அணுசக்தி துறையிலும் தனியாருக்கு அனுமதி வழங்கப்படும். மோடியின் தற்சார்புக் கொள்கையின் மற்றுமொரு பரிமாணமிது.
சர்வதேச தொழிலாளர்கள் சங்கத்தின் அறிவுறுத்தல்
சட்டத் திருத்தங்கள் கொண்டு வருவதாய் இருந்தால், அவை அரசு, தொழிலாளர் பிரதிநிதி, நிறுவன பிரதிநிதி ஆகிய முத்தரப்பு கலந்தாய்வுக்கு உட்படுத்திய பின்னர்தான் கொண்டு வர வேண்டும் என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. மேலும் தொழிலாளர்களின் பணி உரிமை போன்ற சர்வதேச தொழிலாளர்கள் சங்கத்தின் வழிகாட்டு நெறிமுறையின் கீழ் பாதுக்காக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.
சர்வதேச தொழிலாளர்கள் சங்கம் நிறுவியதிலிருந்தே இந்தியா உறுப்பினராக இருந்து வருகின்றது. இதன் பல்வேறு வழிகாட்டுதல்களை இந்திய பாரளுமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. முக்கியமாக வேலைநேரம், சம ஊதியம், நஷ்ட ஈடு போன்ற விசயங்கள் முக்கியமானவை. பல கோடி மக்கள் வறுமைக் கோட்டின் விளிம்பில் வாழ்ந்துக் கொண்டு இருக்கும் இந்தச் சூழ்நிலையில் அவர்களது உரிமையை பறிப்பது சர்வதேச தொழிலாளர்கள் சங்கத்தின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு விரோதமானது. உழைக்கும் மக்களை கடுமையாக சுரண்டும் நோக்கமுடையது.உத்திர பிரதேச மற்றும் மத்திய பிரதேச மாநில அரசுகளின் அவசர சட்டங்கள் இந்தியாவை 19 ஆம் நூற்றாண்டுக்கு கொண்டு செல்கின்றன.
சுயசார்பு அல்லது தன்னிறைவு என்பதன் பொருள்
சுயசார்பு என்பதற்கு தற்போது புதிய விளக்கம் அளிக்கப்படுகிறது. அதாவது, சுதேசி என்பது உலகப் பொருளாதாரத்திலிருந்து தனிமைப்படுத்தி கொள்வதன்று; மோடியின் சுயசார்பு என்பது சுதேசி பொருளாதாரத்தைக் குறிக்கும்; தன்னிறைவுள்ள இந்தியாவைக் குறிக்கும்; இந்திய நிலைமைகளில் புதிய பொருளைக் கொண்டுள்ளது; அதாவது தற்சார்பு என்பது பிரந்தியம், உலகம் தழுவியதாக இருக்கும்; சர்வதேச வர்த்தகத்தை துண்டிக்க முடியாது; அதே நேரத்தில் உள்நாட்டு தொழில்துறையை வலுப்படுத்தும் நோக்கமுடையது என்று கூறப்படுகின்றது.
காந்தி சுதேசி பொருளாதாரத்தை முன்வைத்தார். அவரை பொருத்தவரை சுதேசி என்பது இந்தியாவை காலனிய சுரண்டலிருந்து விடுபடுவதற்கான வழிமுறையாகும். முதலாளித்துவம் தடையற்ற தொழில் வளர்ச்சியைக் கொண்டது. தணியாத நுகர்வு கலாச்சாரத்தை ஊக்குவிக்கும். இது சுதந்திர சந்தைப் பொருளாதாரம். எனவே மேற்கத்திய மாதிரி பொருளாதாரத்தை காந்தி விமரிசித்தார். ஆனால் சுதேசி மாதிரி என்பது தொழில்நுட்பத்தை வெறுக்கவில்லை.மாறாக, மேற்கத்திய இறக்குமதியை விரும்பவில்லை.
மோடியின் பேச்சில் ‘உள்ளூருக்கான குரல்’ (வொகல் ஃபொர் லொகல்) ஒலிக்கிறது.அதாவது சுதேசி என்பது வலிமையான உள்நாட்டுப் பொருளாதாரம் மற்றும் தவிர்க்க முடியாத உலகமயம் ஆகிய இரண்டையும் இணைப்பதாகும் என்று கூறப்படுகிறது. இரண்டையும் இணைப்பது ஒன்றை ஒன்று எதிரானதன்று என்று பொருள் கூறப்படுகிறது.
இதிலிருந்து மோடி அளிக்கும் விளக்கம் என்னவென்றால், கிராமங்கள் தமது தேவைகளை சுயமாகப் பூர்த்திச் செய்துகொள்ளவேண்டும்; மாவட்டங்கள் சுயமாக இயங்கவேண்டும்; மாநிலங்கள் சுயமாக இயங்கவேண்டும். இவ்வாறு அனைத்து உறுப்புகளும் சுயசார்புடன் இருந்தால் தேசமே தற்சார்புடன் விளங்கும் என்று விளக்கம் அளித்தார். அதாவது கிராமங்கள் சுயசார்புடன் இருக்க வேண்டுமென்றால் அதற்கு பஞ்சாயத்துக்களின் பாத்திரம் முக்கியமானது. முக்கியமாக இந்தியாவின் அடிப்படையான அலகுகளான கிராமங்கள் பெற்றிருக்கின்றன.
நாட்டிற்காக என்ன செய்தாய்
ஜான் எப் கென்னடி ‘நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே, நாட்டிற்கு என்ன செய்தாய் என்று கேள்’ என்றார். இதைத்தான் மோடி வேறு விதமாக கூறுகிறார். மோடி சுயசார்புடன் இருக்கவேண்டும் என்று கூறுவதன் பொருள் அரசிடமிருந்து எந்த உதவியையும் எதிர்ப்பாக்காதே என்பதுதான். இது போன்ற இக்கட்டான சூழ்நிலையில் நாட்டிற்காக மக்கள் தியாகம் செய்யவேண்டும் என்று தேசபக்தியை ஊட்டுகிறார். தொழிலாளர் சட்டங்களின் அடிப்படையில் தொழிலாளர்கள் தங்களுக்கான் உரிமையை கேட்கக் கூடாது என்கிறார்.
மக்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட சலுகைகளை விட்டுக் கொடுக்கவேண்டும் என்று சொல்கிறார். அரசு ஊழியர்கள் தமது உரிமைகளை இழக்கத் தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுரைக் கூறுகிறார். ஏழைக்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த இலவச மின்சாரத்தை கோரக்கூடாது என்று போதனை செய்கிறார். இவ்வாறு போராடிப் பெற்ற உரிமைகளையும் சலுகைகளையும் திரும்பி எடுத்துக் கொள்ளும்போது போராடக் கூடாது என்று கூறுகிறார். அதோடு நிறுத்தவில்லை, கொரானா கடன் நிவாரணத் திட்டத்திற்கு ஒதுக்கப்படும் அனைத்தையும் மக்கள்தாம் சுமக்கவேண்டும் என்றும் அறிவுரைக் கூறுகிறார்.
மக்கள் இவ்வளவு பிரச்சனைகளயும் எவ்வாறு தாங்கிக் கொள்கிறார்கள்
உழைக்கின்ற மக்களைப் பொறுத்தவரை கொரானா வைரஸின் தாக்குதலுக்கு அவர்கள் பெரிதாக பயப்படவில்லை. ஏனெனில் காலம் காலமாக ஏதாவது ஒரு வைரஸ் அல்லது பாக்டீரியா போன்ற கொடிய கிருமிகளின் தாக்குதலுக்கு ஆளாகி வந்துள்ளனர்.நாளடைவில் மக்களும் அந்த நோய்களோடு வாழப் பழகிக் கொள்கின்றனர்.இது ஒருபுறம் இருக்கட்டும்.
ஏற்கனவே மக்களிடமிருந்து ரூபாய் நோட்டுகள் அனைத்தும் பறித்துக் கொண்ட போதும், மக்கள் அதை சமாளித்தார்கள். விலைவாசி எவ்வளவு ஏறினாலும் மக்கள் அதை பொருட்படுத்துவதில்லை. வரியை பல மடங்கு அதிகரித்தாலும் அதை மௌனமாக ஆமோதிக்கிறார்கள். கடுமையான பொருளாதார சுணக்கத்திலும் மக்கள் தங்களது மாமூல் வாழ்க்கையை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். மாதக்கணக்கில் ஊரடங்கு நீட்டித்தாலும் மக்கள் அதை தாங்கிக் கொள்கிறார்கள். இதற்கான தகவமைப்பை இந்தியச் சமூகம் பெற்றிருக்கிறது. இந்திய கிராமங்களுக்கு சுயசார்பு என்ற வரலாற்று ரீதியிலான பண்பு இருந்து கொண்டிருக்கிறது. அவை இத்தகைய சுயசார்புப் பண்பினை எதாவது ஒரு வகையில் தக்க வைத்து கொண்டிருக்கிறது என்பதை மோடி எப்படியோ கண்டுபிடித்துவிட்டார்.
இது போன்ற விசயங்களைதான் மோடியின் அரசு புதிய அனுபவங்கள் என்று மறைமுகமாக உணர்த்துகிறது. காலங்காலமாக இந்திய மக்கள் கடுமையாக சுரண்டப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வருகிறார்கள். எவ்வளவுதான் ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கு ஆளானாலும், இந்திய மக்கள் அவற்றை பொறுமையாகவே எதிர்கொள்கிறார்கள் என்பது மோடி அரசு கற்றுக் கொண்ட இன்னொரு பாடம். இந்தப் புரிதலில்தான், உழைக்கின்ற மக்களை முற்றிலும் புறக்கணிக்கிறார். வரலாற்றிலிருந்தும் மக்களிடமிருந்து கற்று கொண்ட மோடி, அதை மக்களுக்கு எதிராகவே பிரயோகிக்கிறார். ஆனால் வரலாறு மாற்றி எழுதப்படும் என்பதை உணரக் கூடிய நிலையில்அவர் இல்லை.
பொறுப்பை தட்டிக் கழித்த மோடியின் அரசு
அடிப்படையான வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்கள் மீது மோடி அரசு எல்லா சுமைகளையும் இறக்கி வைத்துள்ளது. அதுமட்டுமல்ல, சுயசார்பு என்ற பெயரில், வறிய நிலையில் இருக்கும் மக்களின் வாழ்க்கையில் இந்திய அரசு ஒரு பெரும் அஸ்திரத்தை தற்பொது ஏவியுள்ளது. கிராமங்களையும், மாவட்டங்களையும்,மாநிலங்களையும் தன்னிறைவு பெறுமாறு கூறுவது அரசாங்கத்தின் பொறுப்புகளைத் தட்டிக் கழிப்பதற்கான வழியாகும்.மாநில அரசுகளை கைகழுவி விட்டது.ஒட்டுமொத்த இந்திய மக்களை கைவிட்டது.இந்திய மக்கள் அவர்களாகவே தேற்றிக் கொண்டனர்.மோடியின் அரசு, பன்னாட்டு முதலாளிக்கான அரசுதான் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகின்றது.இதை மறைக்கத்தான் ‘சுயசார்பு’ என்ற முகமூடி தேவைப்படுகின்றது.
References:-
- What Modi and Bhagwat Mean By Saying the Main Lesson from COVID-19 is ‘Self Reliance’
- India’s New Self Reliance: what does Modi mean, Council for Foreign Relations.
- So will Modi use Covid for Major Economic Reform, Economic times.
- Ensure that changes to Indian Labour laws adhere to Global Standard, ILO
பிரச்னைகளை மிகத் தெளிவாக, மிக நுட்பமாக உணர்த்தியுள்ளது கட்டுரை. அதேநேரம் அப்பிரச்னைகளால் உருவாகவிருக்கும் அதிபயங்கரத்தையும் உணர்த்தத் தவறவில்லை.
சுதேசி என்ற சொல்லுக்கு பிஜேபி புதிய உருவத்தை அளித்துள்ளது.. வெள்ளைக்காரனை நாட்டை விட்டுத் துரத்த 200 ஆண்டுகள் ஆனது.. ஆன்மீக அரசியல் செய்யும் பிஜேபியின் கொள்கைகள் நாட்டை 200 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் சென்றுள்ளது.. சகலரும் இணைந்த போராட்டமே இன்றைய தேவை.. கோரோனாவைக் காரணம் காட்டி 20 லட்சம் கோடி என்று சொல்லி பெரும் தேச துரோகம் நடத்தப்பட்டுள்ளது…