முகமது பாட்சா கவிதைகள்

Mohamed Bacha Poems. முகமது பாட்சா கவிதைகள்
1
மூன்று பாக்கெட் பால்
இரண்டு கிலோ வெங்காயம் பணப்பையைத்
தின்றுவிட…
இருமிக்கொண்டிருக்கும் அப்பனை
ஆஸ்பத்திரியில்
இப்போது காட்டமுடியாது என்பதால்
பெனடரையல் காஃப் சிரப்பிற்கும் கடன் சொல்லி
வாங்கிக் கொண்டு….
தேதி 20 ஐ கிழித்துவிட்டு
அவசரவசரமாகப் பெட்ரோலுக்கு
பொண்டாட்டி சிறுவாட்டியை அசடுவழிந்து
வாங்கிக் கொண்டு ஓடும் போதும்…
“ஏன் கடவுளே! இப்படி சோதிக்கிற”
என்று மட்டும்
திட்டத் தோணுகிறதே தவிர
இந்தப் பாழாய்ப் போன அரசியலைக் கடிந்துகொள்ள
நேரமே கிடைப்பதில்லை
எந்த சாமானியனுக்கும்,
“பொழைக்கிறவனுக்கு ஏன் இந்த அரசியல்?”

2
தூக்கம் எத்தனை மோசமானது…
தூங்கும்போது
இறந்துவிட்டதாகச் சொன்னார்கள்.
இறந்தவனை
தூங்குகிறான் என்று சொல்வது நியாயம்தான்
கனவில் வருகிறவனை
கண் மூடித் தூங்கும்போது புதைத்து விட்டு
வாசல் கதவைத் தட்டும்போது
அடைத்து விடுகிறீர்கள்…
காக்காய்க்குச் சோறு வைக்காதீர்கள்
விரட்டிவிட்ட வீட்டிற்கு
மானமுள்ள யாரும் வருவதில்லை.

3
நீ வருவாயா?
தேடலின் மிச்சத்தை
சன்னலோரத்தில் வைத்திருக்கிறேன்….

தேயிலை வடிநீரில்
உன் பார்வைகள் வந்து இடறுகின்றன…
கோப்பை ஏனோ மிகைக்கிறது!

வர்ணிக்கத் தெரியாதவனின் முற்றத்தில்தான்
காதல் பறவைகள் கூடமைக்கின்றன…
அவ்வப்போது நான் அதில் இளைப்பாறுகிறேன்…

ரசமிழந்தக் கண்ணாடியின் அரூபம்
எங்கோ அழைத்துச் செல்ல
மந்தகாச இருட்டில்
சிறு வெளிச்சமாய் நீ வருகிறாய்…

வெட்பம் இருவருக்குள்ளும்
புதைந்து போனதால்
விரல்பிடித்த தருணம் உணர்ந்தேன்
உலகம் உறைந்து கிடந்ததை…

இலைகள் அசைகின்றன
இதமான காற்று உள் நுழைகிறது.

4
என் வார்த்தைகளை
மொழி பெயர்க்கும் போது
சில வார்த்தைகளை
உதிர்த்துவிடுகிறாய் …
சருகாகிப் போன அவ் வார்த்தைகள்
உன் கால்களில்
ஒட்டிக் கொண்டே தொடர்கின்றன!
எழுதாத அந்த வார்த்தைகளை
நீ எப்படிக் கோர்த்தாய்?
பிழையான எழுத்துகளில்
சில வார்த்தைகள்
சிக்கிக் கொண்டிருக்கின்றன!
நானென்பது நீயாகவும்
நீயென்பது நானாகவும் திரிந்து கிடக்கிறது…
வார்த்தைகளின் நடுவே
நீ விட்டு வைத்திருக்கும் இடைவெளி
உனது ஆழ்ந்த மௌனமா?
அல்லது என் நீண்ட பெரு மூச்சா?
காற்றிலாடும் அந்த வார்த்தைகளை
பத்திரமாகப் பிடித்து வை…
நம் காதலை
அது சொல்ல வந்ததாகவும் இருக்கலாம்!

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.