ஓரு வங்கி வீழ்த்தப்பட்ட பின்னணியில்
”மாயச் சதுகரம் (Maya Sathugaram)”….
வரலாற்று ஆய்வாளர் ஆ.வெங்கடாசலபதி எழுதிய “ திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சியும் 1908” எனும் ஆய்வு நூலுக்கு சாகித்திய அகடாமி விருது கிடைத்த மகிழ்ச்சியான இவ்வேளையில் , ’ வ.உ.சி ஏன் பழிவாங்கப்பட்டார் ’ என்பது குறித்தும் சில செய்திகளை போகிற போக்கில் சொல்லிச் செல்லும் “மாயச் சதுகரம் (Maya Sathugaram)” நாவல் குறித்து எழுத நேர்ந்தது மகிழ்ச்சியே !
நண்பர் முஹம்மது யூசுப் (Mohammad Yousuf) எழுதிய அனைத்து நூல்களையும் வாசித்தவன் என்கிற உரிமையோடும் எதிர்பார்ப்போடும் மாயச் சதுகரத்தை கையில் எடுத்தேன். வாசித்து முடித்தேன். மகிழ்ச்சி. தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அவர் புனையும் டாக்கு-ஃபிக்சன் வகை நாவல்தான் இதுவும் .
மிக அண்மைக்கால வரலாற்றிலேயே நாம் பார்க்கத் தவறுகிற மற்றும் மறந்துவிட்ட சில நிகழ்வுகளை அதன் பின் புலத்தை நுண் அரசியலை புலனாய்வு செய்கிற பாணியில் இது எழுதப்பட்டுள்ளது .
“ 10 பேர் இறந்த ’புளியந்தோப்பு கலவரம்’குறித்து இன்றும் பேசப்படுகிறது. ஐஸ் ஹவுஸ் நிறுவனத்தில் 300 பேர் அவதியுற்றார்கள் எனும் துயரத்தை’வெள்ளை யானை’ புனைவு பேசுகிறது அதே சென்னையில் 700 குடும்பங்கள் அவதிக்குள்ளான ‘அற்புதநாத்வங்கி’ திடீர் வீழ்ச்சி அதில் நிகழ்ந்த சாவுகள்” பற்றி ஏன் பேசுவதில்லை என்கிற கேள்வியை எழுப்பியதோடு அது சார்ந்து இந்த நாவலை முஹம்மது யூசுப் (Mohammad Yousuf) எழுதியிருப்பது பாராட்டுகுரியது .
செளம்யா, ஹென்றி, தெளலத் என அற்புதநாத் வங்கி வீழ்ச்சியால் வாழ்வை இழ்ந்த மூன்று செல்வந்தக் குடும்பத்தின் மூன்றாம் தலைமுறைவழி இந்நாவல் பெரிதும் நகர்கிறது . வாழ்வை இழந்து தூத்துக்குடிக்கு குடி பெயர்ந்து ஒரே வளவில் வாழ்ந்த சங்கரன், எலிமா, சுப்பாராவ் உள்ளிட்ட பன்னீரென்டு குடும்பங்களின் துயரம் தோய்ந்த நினைவுகளோடு பின்னிப் பிணைந்தது நாவல். பின்னர் அங்கிருந்து சென்னைக்கு வரும் மூன்றாம் தலைமுறையின் தேடல் வழி காட்சியாய் நகர்கிறது .
மேலும் அரசியல் வாதியால் தந்தையையும் அண்ணனையும் இழந்த தெளலத் , தன் தந்தையை ஒரு ரவுடியிடம் பலிகொடுத்த ஹென்றி இவர்களின் நிகழ்காலக் கோவமும் ; நன்கு படித்து பத்திரிகைத் தொழிலுக்கு வந்து பின் வழக்கறிஞரான செளம்யாவின் புலாய்வு உத்தியும் சந்தர்ப்பச் சூழல்களுமாய் நாவல் நீண்டு நன்கு திட்டமிட்ட ஒரு பழிவாங்கல் கொலையோடு முடிகிறது .
பொதுவாய் பெரிய ரவுடிகள் ஒரு கட்டத்தில் கொலை செய்யப்படுவதும் அதன் பின்னால் போலிஸார் கைவரிசை இருப்பதும் ; அதன் தொடர்ச்சியாக இன்னொரு ரவுடி தலை எடுப்பதும் சென்னை தொடர்ந்து காணும் நிகழ்வு . ஆனால் இந்நாவலில் அது கொஞ்சம் பழிவாங்கலும் கொஞ்சம் சமூக அக்கறையுமாய் இறுதியில் இக்கொலை வடிவமைக்கப்பட்டுள்ளது .
செளம்யா, சுப்பாராவ் , மூத்த வழக்கறிஞரும் திராவிடர் கழகத்தவருமான மீனாட்சி சுந்தரம், சுப்பாராவ் போன்ற கதாபாத்திரங்களின் உரையாடல் வழி பல வரலாற்று கேள்விகளை எழுப்பி ஒன்றோடொன்று முடிச்சுப் போட்டு நம்மை இன்னொரு கோணத்தில் சிந்திக்க உந்தித்தள்ளுகிறது இந்நாவல் .
திராவிட இயக்க வரலாற்றை எழுதுகிற போது எழும்பூர் குழு ,மயிலாப்பூர் குழு என இரண்டு குழுக்களின் மோதல் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் மோதல்தான் என்பதையும் , பார்ப்பனரல்லாதார் அமைப்பு தோன்ற விதைப் போட்ட நிகழ்வாகவும் குறிப்பிடுவார்கள் . இநத நாவலிலும் அது பேசப்படுகிறது .ஆனால் அவற்றின் பின்னால் இயங்கிய பொருளாதாரம் பண்பாடு அரசியல் குறித்து பேசுபவைகளை எளிதில் புறந்தள்ளிவிட முடியாது . அற்புதநாத் வங்கி வீழ்ச்சியோடும் இதன் கண்ணி நீளவதும் ; அன்னிபெசண்ட் , மார்வாடி , பார்ப்பன பொருளாதார அரசியல் லாபி எல்லாம் புதிய கோணமாகும் .
1918 ஆம் ஆண்டு சென்னை தொழிலாளர் சங்கம் தொடங்கப்பட்டதும் அதில் பி.பி .வாடியா ,திரு .வி.க .செல்வபதிச் செட்டியார் ஈடுப்பட்டதும் நாமறிவோம் . ஆயின் அப்போது சென்னையில் இருந்த வ. உ.சி 1908 லேயே தூத்துக்குடியில் தொழிலாளர்களுக்காகப் போராடிய வ.உ.சி , அப்ப்போதும் டிராம் ,ரயில்வே உடபட பல தொழிலாளர் கூட்டங்களில் பேசிய வ உ சி ; சென்னை தொழிலாளர் சங்க உருவாக்கத்தில் ஏன் பங்கேறகவில்லை ? இக்கேள்வி இந்நூலில் வழக்கறிஞர் மீனாட்சி சுந்தரம் வழி கேட்கப்படுகிறது .
அற்புதநாத் வங்கி வீழ்ச்சிக்கு பின்னர் முதன் முதலாக இந்தியர்களுக்காக உருவாக்கப்பட்டதே இந்தியன் வங்கி என்பது நம் பொது புத்தியில் உறைந்து போயுள்ள செய்தி .ஆயின் அது உண்மை அல்ல . இந்தியன் வங்கியை உருவாக்கிய பின்னரே அற்புதநாத் வங்கி வீழ்ச்சியானது .அதன் பின்னால் இயக்கிய அரசியல் பொருளாதார சூழ்ச்சிகளை தொட்டுக்காட்டுகிறது இந்நாவல் .
ஒவ்வொரு சொல்லுக்கு பின்னாலும் ஓர் வர்க்கத்தின் நலன் ஒழிந்திருக்கும் என்பது மார்க்சிய புரிதல் .அதனை சற்று விரிவாக்கி ஒவ்வொரு சொல்லுக்கு பின்னாலும் – ஒவ்வொரு நிகழ்வுக்கு பின்னாலும் ஓர் வர்க்கத்தின் நலனோடு வர்ணத்தின் நலனும் ஒழிந்தே இருக்கிறது என்கிற இந்திய நுண் அரசியல் இந்நாவலின் உள்ளுறையாகும். இவரின் அரசியல் பண்பாட்டு பார்வையோடு உடன்படவும் முரண்படவும் இந்நாவலில் இடம் உண்டு .
“வரலாறு என்பது வந்தியத் தேவனும் குந்தவை நாச்சியாரும் மட்டுமே அல்ல என்பதே தமிழனுக்கு கற்றுத்தரப்பட வேண்டிய விடயம்” என முன்னுரையில் நாஞ்சில் நாடன் முன்மொழிந்ததை நான் வழி மொழிகிறேன்.
முஹம்மது யூசுப்புக்கு வாழ்த்துகள் ! அதே சமயம் நாவலின் இறுதிப் பகுதி தமிழ் சினிமா கிளைமாக்ஸ் போல் அமைந்துவிட்டதாக எனக்குத் தோன்றுகிறதே ! இந்நாவலை ஓர் சினிமா எடுக்கலாம் .அதற்கான களம் உள்ளது .
இனி நீங்களே நாவலைப் படித்து ஓர் முடிவுக்கு வாருங்கள் !
நூலின் விவரம்:
மாயச் சதுகரம் (Maya Sathugaram),
ஆசிரியர் : முஹம்மது யூசுப் (Mohammad Yousuf),
வெளியீடு : யாவரும் பப்ளிஷர்ஸ் (Yaavarum Publishers),
தொடர்பு : 90424 61472 , [email protected]
www.yaavarum.com ; www.be4books.com
பக்கங்கள் : 310 , விலை : ரூ.399/
நூல் அறிமுகம் எழுதியவர்:
சு.பொ.அகத்தியலிங்கம்.
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.