நூல் அறிமுகம்: *மோகனா ஓர் இரும்புப் பெண்மணியின் கதை* – தேனி சுந்தர்

மோகனா ஓர் இரும்புப் பெண்மணியின் கதை – பேரா. சோ. மோகனாநூலின் பெயர் : மோகனா – ஓர் இரும்புப் பெண்மணியின் கதை
வெளியீடு : பாரதி புத்தகாலயம், சென்னை
விலை: ரூ.120.00
பக்கங்கள்: 144
புத்தகம் வாங்க கிளிக் செய்க: https://thamizhbooks.com/product/mohana-ore-irumbu-penmaniyin-kadhai/

அறிவியல் இயக்கத்தை அறிந்தவர்கள் அனைவரும் பேரா.மோகனாவை அறிவார்கள்.. ஆகச் சிறந்த கருத்தாளர்.. எந்த தலைப்பில் பேச வேண்டுமென்றாலும் பேசிக் கொண்டே இருப்பார்.. அவ்வளவு சீக்கிரம் உரையை முடிக்கமாட்டார் என்பது தான் அவரைப் பற்றி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக நமக்குள்ள பயம்.. வானியல் குறித்துப் பேசும் போது எந்த குறிப்பும் இல்லாமல் ஏராளமான தகவல்களை சொல்லிக் கொண்டே போவதை பல நாட்கள் வியப்புடன் பார்த்திருக்கிறேன்.. அதே போல வாய்க்குள் வராத அறிவியல் பெயர்கள், விஞ்ஞானிகளின் பெயர்கள் அவர்களின் காலம் போன்றவற்றையும் கூட குறிப்பின்றியே பேசுவார்.. அப்படியொரு வியக்கத்தகு நினைவாற்றல் உடையவர்..

அந்த நினைவாற்றல் துணையுடன் தன் வாழ்க்கை வரலாற்றை எழுதியிருக்கிறார்.. அதிலும் பல சம்பவங்களை தேதியுடன் குறிப்பிட்டிருந்தார்.. நான் அவரைத் தொடர்புகொண்டு, எப்படி தேதிகளுடன் எழுதியிருக்கிறீர்கள்..? டைரி எழுதி உள்ளீர்களா..? என்று கேட்டேன்.. இல்லை தோழர், எல்லாம் நினைவிலிருந்து தான் என்றார்.. ஆச்சர்யமாக இருந்தது.

பார்க்கும் அனைவரிடமும் எளிதாகக் கலந்து விடுவார்.. பழகிய, பேசிய எல்லோரையும் நினைவில் வைத்திருப்பார்.. திடீரென போனில் அழைத்துப் பேசி அதிர்ச்சியளிப்பார். வெகுவிரையில் நம் குடும்பத்தினருடன் இரண்டறக் கலந்து விடுவார். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்கிற வாசகம் பேரா.மோகனாவுக்குத் தான் முழுக்கப் பொருந்தும்.. தமிழகத்தின் எல்லாத் திசைகளிலும் அவருக்கு உறவுகள் உண்டு.. உரிமையோடு தங்குவதற்கு வீடுகள் உண்டு.. நேற்று அறிமுகமாகிய நண்பர்கள் முதற்கொண்டு நாற்பது, ஐம்பதாண்டு கால நண்பர்களும் அந்தப் பட்டியலில் உண்டு. அறிவியல் இயக்கப் பணிகளுக்காக தமிழகமெங்கும் அவர் பயணிக்காத பாதைகளே இல்லை என்று சொல்லலாம்.. சலிக்காத பயணப்பிரியை.. செல்லும்போது அந்தந்த பகுதி தோழர்களுக்குச் சொல்லிடுவார்.. “வணக்கம் தோழர், நாளை உங்க ஊருக்குத் தான் வாரேன்..” என்று..

களைப்பு, அலுப்பு, சலிப்பு, முகச்சுளிப்பு – இதெல்லாம் ஒருபோதும் அவர் அறியாத வார்த்தைகள்.. கலகலகலவெனப் பேசி மகிழ்ந்தும் மகிழ்வித்தும் செல்லும் மோகனாவின் சுயவாழ்க்கையின் பக்கங்கள் அதற்கு எதிர்மறையானவை என்பதை அவர் சொல்லாமல், அல்லது அவர் எழுதிய மோகனா : ஓர் இரும்புப் பெண்மணியின் கதை என்கிற நூலை வாசிக்காமல் நம்மால் ஒருபோதும் அறியவோ, அப்படி ஒரு கோணத்தில் நினைத்தோ பார்க்க நிச்சயம் நம்மால் முடியாது..அவரது பிறப்பே அவரது பெற்றோரின் போராட்ட விளைவு தான்.. அதன் பிறகு வாழ்வின் பெரும்பகுதியை இவர் போராடிக் கடந்திருக்கிறார்.. 5-ம் வகுப்பு முடித்து அடுத்த வகுப்பிற்குச் செல்ல, உயர்நிலைப் பள்ளிக்குச் செல்ல, கல்லூரிக்குச் செல்ல, மேற்கல்வி பயில, கல்லூரிப் பணிக்குச் செல்ல என அவர் மேற்கொண்ட அத்தனை முயற்சிகளும் அவ்வளவு எளிதாக அவருக்குச் சாத்தியமாகவில்லை.. கல்விக்குத் தடைபோட்டு எவன் கையிலாவது புடிச்சுக் கொடுத்திட சாத்தியமான அத்தனை வேலைகளையும் செய்கிறது குடும்பம்.. உயர்கல்வி பயில்வது குறித்து நண்பர் ஒருவர் ஆங்கிலத்தில் எழுதி அனுப்பியிருந்த கடிதத்தை காதல் கடிதம் என்று தவறாகப் புரிந்து கொண்டு நாம் நினைப்பது சரிதானா என்பதைக் கூட ஆராயாமல் தங்கள் குடும்ப மானம் காக்க மோகனாவை அல்வாவில் விசம் வைத்துக் கொள்ளத் தயாராகின்றனர்.. கல்வி, கல்லூரிப் பணிக்காக வந்த கடிதங்களை அவருக்குச் சொல்லாமல் மறைத்து வைக்கின்றனர்.. அழுது, உண்ணாவிரதம் இருந்து, சண்டை போட்டு, விளக்கம் சொல்லி, சத்தியம் செய்து ஒவ்வொரு தடையையும் கடந்து வருகிறார்.. குடும்பமே கொன்றொழிக்க நினைத்த அந்த மோகனா தான் இன்று ஆலமரமாக நின்று அவர்களையும் அறியாத, சாதி, மதம் கடந்து பலரையும் கூட காத்து நிற்கிறார் என்பதை அறியும்போது பெருமூச்சு வருகிறது நமக்கு..

அவருடைய திருமண வாழ்க்கையின் பக்கங்கள் கொடூரமானவை.. 1972ல் கல்லூரியில் பணி.. 1975ல் விருப்பமில்லாத திருமணம்.. 1975-1992 வரையிலான திருமண வாழ்க்கையின் அனுபவங்களை வாசிக்கும் போது இத்தனை துன்பங்களையும் கடந்து வந்தவர் ஆதலால் தான் இனியென்ன நமக்கு புதிய, பெரிய துன்பம் வந்துவிடப் போகிறது என்றெண்ணி எப்போதும் முகத்தில் புன்னகைப் பவுடரை அள்ளிப் பூசிக்கொண்டிருக்கிறார் என்றெண்ணத் தோன்றுகிறது. முகத்தில் புன்னகை சரிதான்.. அவர் உள்ளம்..?

உள்ளம் சோர்ந்து விடவில்லை.. மூட்டா, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியவற்றின் துவக்கமும் மோகனாவின் கல்லூரிப் பணித் தொடக்கமும் ஒரே காலகட்டத்தில் நிகழ்கின்றன.. பேரா.அருணந்தி அறிமுகம் கிடைக்கிறது. பொதுவாழ்க்கைப் போராட்டங்களிலும் அறிவியல் இயக்க, அறிவொளி இயக்கச் செயல்பாடுகளிலும் தன்னை இரண்டறக் கலந்து கொள்கிறார்.. இயக்கங்களோடு இணைந்து மோகனா என்கிற ஆளுமையும் வளர்ந்து கொண்டே வருகிறார்..

தமிழகமெங்கும் அறியப்பட்ட ஆளுமையாக மாறிவிட்டார் பேரா.மோகனா.. ஆயிரக்கணக்கில் கருத்துரைகள், கட்டுரைகள்.. பல பதிப்பகங்களின் மூலம் 80க்கும் மேற்பட்ட நூல்கள் என எழுத்திலும் தன்னை நிலைநிறுத்துகிறார்.. எழுத்திலும் இயக்கப் பணிகளிலும் உச்சகட்ட வேகத்தில் அவர் இருந்தபோது அழையா விருந்தாளியாக மார்பகப் புற்றுநோய் வருகிறது.. இனி மோகனாவின் கதை அவ்வளவு தான்.. ஒரு நல்ல கருத்தாளரை அறிவியல் இயக்கம் இழக்கப் போகிறது என்று தான் பலரும் எண்ணியிருக்கக் கூடும்.. ஆனால் அந்த எண்ணங்களைப் பொய்யாக்கினார்.. வந்துட்டேன்னு சொல்லு.. திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. முப்பது வருசத்துக்கு முன்னாடி எப்படி திடமாகவும் வேகமாகவும் ஓடி ஓடி பொது வேலை செஞ்ச அதே மோகனாவா திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. என்ற அறைகூவலோடும் வைராக்கியத்தோடும் மீண்டு வந்தார்.. வெளியில் வர இயலாத காலகட்டங்களில் 400க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதித் தள்ளினார். வந்த பிறகு சராசரியாக மாதம் 12000 கி.மீ. பயணங்கள்.. கருத்துரைகள்..

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்பு.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு, தென்னிந்திய சமதா என இந்திய அளவிலும் கால் பதித்தார். புற்று நோய் குறித்த ஆய்வுகளில் இறங்கினார்.. விழிப்புணர்வுப் பணிகள் செய்தார்.. ஒன்றல்ல, இரண்டல்ல பெண்கள், துப்புரவுப் பணியாளர்கள், மாற்றுத் திறனாளிகள் என ஏராளமான அமைப்புகளில் இணைந்து பணியாற்றி அனைத்திலும் முத்திரை பதித்துக் கொண்டிருக்கிறார்.. தமிழகத்தின் அனைத்து நாளிதழ்களிலும் அவரைப் பற்றிய கட்டுரைகளும் புற்று நோய் குறித்து அவர் எழுதிய கட்டுரைகளும் வலம் வந்தன.. பல அமைப்புகள் சார்பில் பேரா.மோகனாவுக்கு விருதுகள் வழங்கி தங்களைப் பெருமைப்படுத்திக் கொண்டன..அறிவியல் இயக்க வரலாற்றில் பல முக்கியமான தகவல்களையும் இந்நூலின் மூலம் நாம் அறிய முடிகிறது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் அடையாளமாகப் பலரும் அறியப்படுகின்றனர்.. மாவட்ட அளவுகளில் ஏராளமான பெண் தலைவர்கள், உறுப்பினர்கள் இருந்த போதும் மாநில அளவில் ஒரே பெண் தலைவராக, விடிவெள்ளி போல அறியப்படுபவர் பேரா.மோகனா மட்டுமே.. இருந்தபோதும் தான் சார்ந்த இயக்கத்தின் மீதும் சில விமர்சனங்களை முன்வைக்க அவர் தயங்கவில்லை.. தவறவில்லை.. மாநில துணைத் தலைவராக இருந்து 25 ஆண்டுகளுக்குப் பிறகு தான் மாநிலத் தலைவராக ஒரு பெண் வர முடிகிறது.. இந்நிலை ஏன் என்பதை இயக்கத்தின் பரிசீலனைக்கு முன்வைக்கிறார். நூல் குறித்துச் சொல்வதற்கு இன்னும் நிறைய இருக்கிறது.. அவற்றை உணர்வுப்பூர்வமாக அறிய புத்தகத்தை வாங்கி வாசியுங்கள் நண்பர்களே..

நாம் அறிந்தவர்களில் பலரை மதிப்போம்.. சிலரை நேசிப்போம்.. சிலரைக் கொண்டாடுவோம்.. சிலரை விமர்சிப்போம்.. பேரா.மோகனா எல்லாவற்றிற்கும் தகுதி உடையவர். தவறு இருந்தால் சொல்லுங்க தோழர், திருத்திக்கலாம் என்று கேட்கும் பக்குவம் உடையவர்.. தொடர்ந்து புதிய விசயங்களை கற்கும் ஆர்வமுடையவர்.. கற்றுக் கொடுங்கள் என்று கேட்கத் தயங்காதவர்..

இந்நூலின் இறுதியில் அன்புக்குரியோர் என்று ஒரு பட்டியலையும் வைத்திருக்கிறார்.. அதில் தொழிற்சங்க, அறிவியல் இயக்க, அரசியல் இயக்கத்தவர் பலரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.. அதில் சுந்தர் என்று இருந்தது.. எனக்குச் சந்தேகம் எழுந்தது.. போன் போட்டுக் கேட்டே விட்டேன்.. அது எந்த சுந்தர் தோழர் என்று.. அது ஒரு பொடிப்பையன்.. தேனிக்காரன் என்றார்.. வேறென்ன, பெருமை தானே…!

பாரதி புத்தகாலயத்தின் வெளியீடாக வந்த இந்நூலின் முதல் பதிப்பு விற்றுத் தீர்ந்து, மேலும் புதிய சில தகவல்களுடன் இரண்டாம் பதிப்பு தயாராகிக் கொண்டிருக்கிறது.. முந்துங்கள் நண்பர்களே..

– தேனி சுந்தர்