நூல் அறிமுகம்: மோகனா – ஒரு இரும்புப் பெண்மணியின் கதை | கு.செந்தமிழ் செல்வன்நூலின் பெயர் : மோகனா – ஓர் இரும்புப் பெண்மணியின் கதை
வெளியீடு : பாரதி புத்தகாலயம், சென்னை
விலை: ரூ.120.00
பக்கங்கள்: 144
புத்தகம் வாங்க கிளிக் செய்க: https://thamizhbooks.com/product/mohana-ore-irumbu-penmaniyin-kadhai/

அறிவியல் இயக்கத்தில் இணைந்து செயலாற்றிய ஆளுமை ஒருவரின் போராட்ட வாழ்க்கை வரலாறாக புத்தகம் என்றதும் மிக்க எழும் ஆர்வத்துடனே இந்தப் புத்கத்தைப் பிரித்தேன்.

ஆர்வத்தை மிஞ்சிய ஆச்சரியங்கள்….

ஆச்சரியங்களை மிஞ்சிய ஆவேசங்கள்….

ஆவேசங்களை மிஞ்சிய ஆளுமைகள்…..

பக்கங்களைப் புரட்ட புரட்ட புதிய மோகனா வடிவம் கொண்டார்.

இது நிகழ்வுகளின் கோர்வை அல்ல.

பொதுவாழ்விற்கு வந்துவிட்ட ஒரு பெண்ணின் சமரசமற்ற பயணத்தின் ஆவேசம் மிக்க தருணங்கள்.

மோகனா வாழ்க்கை வரலாறு என்றவுடன் நான் எவையெல்லாம் இருக்க வேண்டும் என யோசித்தேனோ அத்தனை அம்சங்களும் இடம் பிடித்துள்ளன.
1988இலிருந்து 32 ஆண்டுகளாக அறிவொளி இயக்கத்திலும் அறிவியல் இயக்கத்திலும் அவர்களுடன் இணைந்து பயணித்த நாட்கள் பெருமை கொள்வதாக உணர்கிறேன். இந்த நெருங்கிய பயணத்திலும் அறியாத காயங்களை இந்தப் புத்தகத்தில் வழி கண்டு நெகிழ்ந்தேன்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் அவர் மாநிலத் தலைவராக இருக்கும் போது நான் பொருளாளராக செயலாற்றிய
மகிழ்வான தருணத்தையும் தவறாமல் பதிவிட்டது மகிழ்ச்சி.

இயக்கப்பணிகளில் அவரோடு இணைந்து பயணத்தவர்கள் அனைவரின் பெயர்களும் இடம்பிடித்திருப்பது குறிப்பிடவேண்டிய அம்சம்.

ஒரு பெண் தலைமைக்கு வருவதற்கான போராட்டத்தினையும் வந்த பின்பும் தொடர்வதில் ஏற்க வேண்டிய உறுதிபாட்டினையும் தெளிவாகச் சுட்டியுள்ளார்.
அம்மாவுடனான அவர்களின் அன்பினையும் , ஒரு ஆலமரமாக ஏராளமான தோழமைகள் கூடிகட்டி வாழ்வதையும் இன்னுமே நிறையவே எழுதி இருக்கலாமே என ஏங்குகிறது.

குடும்ப வன்முறையினை எதிர்கொண்ட
வீரப்பெண்மணியினை,
தோழ்மை உணர்வு கொண்ட தொழிற்சங்க தலைவரை,
புற்று நோயை வெற்றிகொண்ட வீர மனிதரை
அறிவியல் பரப்புரை செய்த அறிவியல் இயக்கச் செயல்பாட்டாளரை
அறிவொளி இயக்க மக்கள் தலைவரை புத்தகம் முழுக்க தரிசிக்கலாம்.
அவரின் ஒவ்வொரு ரணத்திலும் இந்த சமூகம் கற்க வேண்டியது ஏராளமாக உள்ளது. ஒரு சுய சரிதை எழுதும் போது இந்தத் தழும்புகள் தடவிப் பார்த்து கணக்கிடுவதல்ல. அந்த தழும்புகள் தரும் பாடங்களைச் சொல்லிச் செல்வதுதான்.
வலிகளையும் அழகாக வகுப்பெடுத்திருக்கிறார்.
பொதுவாழ்க்கையில் நுழையும் ஒவ்வொருவரும் இவர் வகுப்பில் பயின்று செல்ல வேண்டும்.

 

வாழ்த்துக்களுடன்.
கு.செந்தமிழ் செல்வன்
9443032436
வேலூர்,
09.02.2021