வீட்டுக்கு வருகிற பெரியவர்கள் என் தந்தையிடம் கேட்பார்கள்: “என்ன நேத்திக்கு மெஜுரா போயிருந்தீங்க போல இருக்கு?” அவரும் பதில் சொல்வார்: “ஆமா. மெஜுராவிலேயிருந்துதான் இதை வாங்கிட்டு வந்தேன்.”

அவர்கள் மெஜுரா என்று குறிப்பிட்டது மதுரையை. எனக்குக் குழப்பமாக இருக்கும். மதுரையை ஏன் மெஜுரா என்று சொல்ல வேண்டும்? நாட்டை ஆண்ட பிரிட்டிஷ் அரசின் அதிகாரிகளும் அலுவலர்களும் அப்படித்தான் சொன்னார்கள், அதையே இங்கிருப்போரும் பின்பற்றத் தொடங்கினார்கள் என்றும். அதற்கேற்ப, ஆங்கில எழுத்துகளில் Madura என்றே எழுதப்பட்டது என்றும் பின்னர் தெரியவந்தது. அந்த “ஸ்பெல்லிங்”படி பார்த்தாலும் “மடுரா” என்றோ “மெடுரா” என்றுதானே சொல்ல வேண்டும், அது எப்படி “மெஜுரா”வானது என்ற என் கேள்விக்குப் பதில் சொல்வாரில்லை.

பிற்காலத்தில் Madurai என்றே எழுதப்பட்டது, படித்த மேல் தட்டினரும் மதுரை என்று சொல்லத் தொடங்கினார்கள். இந்த எழுத்துகளின்படியே கூட மடுரை என்றுதானே வரும், அது எப்படி மதுரை என்றாகும் என்ற வினா எழுந்ததுண்டு. ஆங்கிலத்தில் எழுத்துக்கூட்டி வருவதற்கு மாறாக உச்சரிக்கப்படுகிற சொற்கள் நிறைய உண்டு, அந்த உச்சரிப்பு தெரிந்தவர்கள் சரியாகவே சொல்வார்கள், தெரியாதவர்கள் தவறாகச் சொல்வார்கள், கேலிக்கும் ஆளாவார்கள். வேடிக்கை என்னவென்றால், ஆங்கிலச் சொற்களைச் சரியாக உச்சரிக்க முடியாத தமிழர்களைக் கேலி செய்கிறவர்கள் தமிழ்ச் சொற்களைத் தவறாக உச்சரிப்பதைக் கண்டுகொண்டதில்லை.

இப்போது மதுரையை ‘MATHURAI’ என்றே ஆங்கிலத்தில் எழுத அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இவ்வாறு தவறாக ஆங்கிலத்தில் எழுதப்பட்டு வந்த 1018 ஊர்ப் பெயர்களைச் சரியாக எழுதுவதற்கான ஆணையுமாகும் அது. “தமிழ் நாட்டிலுள்ள ஊர்ப்பெயர்களைத் தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் அமைத்தல் என்ற அறிவிப்பினைச் செயல்படுத்தல் பற்றிய அறிவிக்கை” என அரசாணை (நிலை) எண் 36 தமிழ் வளர்ச்சி செய்தித்துறையால் (த.வ.1.1.) அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் துறையமைச்சர் அறிவித்ததற்கிணங்க பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த அரசாணையில் 1018 ஊர்களுக்கான ஆங்கில எழுத்துக்கூட்டல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதில் விடுபட்ட, இதே போல் தவறாக எழுதப்பட்டு வருகிற ஊர்களுக்கான சரியான ஆங்கில எழுத்துக்கூட்டல்களுக்கான அடுத்தடுத்த ஆணைகள் வரக்கூடும்.

 

தேவைதானா இது?

இந்த நடவடிக்கைக்கு நான்கு வகையான எதிர்வினைகளைப் பார்க்க முடிகிறது. தமிழ் மண் அடையாளங்களில் அக்கறைகொண்டோர் பொதுவாக இதை வரவேற்கிறார்கள். ஒரு ஊரின் பெயர் வெறும் பெயரல்ல, வரலாறு, மரபு, பண்பாடு, மக்கள் வாழ்வியல், நிலவியல் எனப் பல்வேறு தளங்களும் கொண்ட அடையாளம் அது. ஆகவே அதைச் சரியாக எழுத வைப்பது தேவையானதொரு நடவடிக்கைதான் என்ற அவர்களுடைய வாதம் ஏற்கத்தக்கதே.

மிகப்பலரும், தமிழகம் உட்பட நாடே கொரோனாத் தொற்றைத் தடுக்கிற கடும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிற நிலையில், மக்கள் மனங்களில் ஒரு பதற்றம் குடியேறியிருக்கிற சூழலில் இந்த நடவடிக்கைக்கான அவசரம் என்ன வந்தது என்று கேட்கிறார்கள். வரவேற்கிறவர்கள் உள்பட ஒரு சாரார் பல ஊர்களின் மாற்றப்பட்ட ஆங்கில எழுத்துகள் சரியான உச்சரிப்புக்கு உதவியாக இல்லையே என்று சுட்டிக்காட்டுகிறார்கள். நான்காவது வகையினரோ இதனால் என்ன பயன் என்று கேட்டுப் பல வகைகளில் ஒரு எள்ளலை வெளிப்படுத்துகிறார்கள்.

பொறுமையாக உட்கார்ந்து இதையெல்லாம் யோசிக்கவோ, பிறரோடு விவாதிக்கவோ அனுமதிக்காத நெருக்கடியான காலக்கட்டத்தில் இந்த நடவடிக்கை தேவைதானா என்ற கேள்வியின் நியாயம் இருக்கிறது. அத்தகைய இயல்பு நிலை மீள்கிறபோது முதல் நடவடிக்கையாகக் கூட இதை அறிவித்திருக்கலாம். குறிப்பிட்ட நாளுக்குள் கொண்டுவரவில்லை என்றால் காலாவதியாகிவிடக்கூடிய நிதி ஒதுக்கீடுகள் போன்றதான நடவடிக்கை இல்லையே இது? பிறகு ஏனிந்த அவசரம்? அடுத்த ஆண்டு வரப்போகிற தேர்தல் பரப்புரையில் ஆட்சியின் சாதனைகளில் ஒன்றாக விளம்பரம் செய்வதற்காகவா?

இப்படியொரு நடவடிக்கை இப்போது மட்டுமல்ல எப்போதுமே தேவையில்லை என்கிறவர்கள் இதனால் மக்களுக்கு என்ன பயன் விளைந்துவிடப் போகிறது என்று கேட்கிறார்கள். இது தமிழை வைத்து அரசியல் செய்வதன் தொடர்ச்சிதான் என்கிறார்கள். இதுவாவது ஊர்ப்பெயர்களை ஆங்கிலத்தில் சரியாக எழுதுவதற்கான நடவடிக்கைதான். ஆனால் கடந்த சில ஆண்டுகளில் நாட்டின் பல பகுதிகளில் ஊர்களின் பெயர்களே மாற்றப்பட்டன. சாலைகளின் பெயர்கள் மாற்றப்பட்டன. மத்திய பாஜக அரசின் அந்த நடவடிக்கையில் மதத்தை வைத்து அரசியல் செய்கிற உத்தி இருந்தது. அதைப்பற்றி இவர்கள் வாய் திறந்ததில்லை. தமிழ் அக்கறை சார்ந்த நடவடிக்கையை மட்டும் கேலி செய்கிறார்கள் என்றால் இவர்களின் அரசியல் எத்தகையது என்று புரிந்துகொள்ளலாம்.

பட்டியலில் உள்ள ஊர்கள் எல்லாவற்றுக்கும் சரியான ஆங்கில எழுத்துகள் தரப்படவில்லை என்று சுட்டிக்காட்டுகிறவர்கள் மொழியின் மீதான அக்கறையோடுதான் இதைச் செய்கிறார்கள். அது புரிந்துகொள்ளத் தக்கது, அரசு கவனத்தில் கொண்டு உரிய திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய விமர்சனமே இது.

வேலூர் வீலூராகலமா?

எடுத்துக்காட்டாக, வேலூர் இதுவரையில் ஆங்கிலத்தில் VELLORE என்று எழுதப்பட்டு வந்தது. தமிழறிந்தவர்கள் சரியாக வேலூர் என்றும், அறியாதவர்கள் வெல்லூர் என்றும் வாசித்து வந்தார்கள். இப்போது அது VEELOOR என மாற்றப்பட்டிருக்கிறது. இதில் இரண்டு “O” போடப்பட்டதால் அந்த “லூ” சரியாக வந்துவிட்டதாகக் கொள்ளலாம் என்றாலும், இரண்டு “E” போடப்பட்டதால் “ஈ” என்ற உச்சரிப்பாகிறதே! வெல்லோராக இருந்த வேலூர் இப்போது வீலூர் என்றாகிறதே!

மேலும் இரண்டு “E” போடுவதால் “ஏ” என்ற ஒலி கிடைப்பதாக எடுத்துக்கொள்வதானால், இரண்டு “O” போடுகிறபோது அது “ஓ” என்று ஒலிப்பதாகிவிடுகிறது. அப்போது வேலூர் என்னவாகிறது என்றால் “வீலோர்” என்றாகிறது. ஆனால் மேலூர் அப்படி மாற்றப்படாமல் “MELOOR” என்று இருக்கிறது.

சில ஊர்களில் “ஆ” என்ற உச்சரிப்பு வருகிற இடங்களில் “AA” என இரண்டு “A” போடப்பட்டுள்ளது. அது ஏற்கத்தக்கதே. ஆனால் அதே “ஆ” உச்சரிப்பு வருகிற பல ஊர்களுக்கு ஒரு “A” மட்டுமே குறிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக திருவான்மியூருக்கான ஆங்கில எழுத்துகள் “THIRUVANMIYOOR” என மாற்றப்பட்டுள்ளன. இதில் அந்த “யூ” சரியாக வந்துவிட்டதாக வைத்துக்கொண்டால், “வா” சரியாக வரவில்லை. ஒரு “A” போடப்பட்டிருப்பதால் இப்போது “வா” என்ற எழுத்தின் கால் வெட்டப்பட்டு, “திருவன்மியூர்” என்றாகிறது.

இவ்வாறு ஆங்கில எழுத்துகளை இரண்டு முறை போடுவதால் நீட்டல் ஒலி கிடைக்கும் என்பதும் சீராக, ஒரே மாதிரியாகச் செய்யப்படவில்லை. ஒரே ஊரின் பெயரில் ஒற்றை எழுத்து, இரட்டை எழுத்து இரண்டுமே வருகின்றன. ஆற்காடு என்பது “AARKAADU” என்றுதான் எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அரசாணையில் அது “AARKADU” என்று குறிப்பிடப்பட்டு, “ஆற்கடு” என்பதாக ஒலிக்கிறது.

இப்படிச் சுட்டிக்காட்டுவதற்கான பிழைகள் நிறையவே இருக்கின்றன. ஆயினும் சென்னையின் எழும்பூருக்குச் சம்பந்தமே இல்லாத உச்சரிப்பாக “EGMORE” என்று ரயில்நிலையப் பெயர்ப்பலகையில் கூட இருந்து வந்த நிலையை மாற்றி, இனி “EZHUMBOOR” என எழுதுவதற்கு வழி செய்யப்பட்டிருக்கிறது. இத்தகைய சரியான எழுத்து மாற்றங்களும் பட்டியலில் இருப்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். திருத்தப்பட்டியல் வெளியிடப்படும் என்றும், அடுத்த பட்டியல்களில் திருத்தத்திற்குத் தேவையில்லாத வகையில் சரியான எழுத்துகள் குறிப்பிடப்பட்டிருக்கும் என்றும் எதிர்பார்ப்போமாக.

பொதுமக்களுக்கும் பொறுப்பு

தற்போதைய ஆணையையே திரும்பப்பெற்றுக்கொண்டு, முறையான முழுமையான திருத்தங்களுக்குப் பிறகு முழுமையான அறிவிப்பாணை வெளியிடலாம் என்று கூறுகிறார் தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன். ஆணை பிறப்பிப்பதோடு நில்லாமல் அரசுத்துறைகள் முதல் மக்கள் புழக்கம் வரையில் சரியாகச் செயல்படுத்தப்படுவதையும் உறுதிப்படுத்த வேண்டும் என்கிறார் அவர். முன்பு ஸ்ரீரங்கம் என்றும் ஸ்ரீவில்லிப்புத்தூர் என்றும் இருந்த ஊர்களின் பெயர்களை திருவரங்கம் என்றும் திருவில்லிப்புத்தூர் என்றும் மாற்றி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் நடைமுறையில் இரண்டுமே பயன்பாட்டில் இருக்கின்றன. தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தக்கூடிய இத்தகைய செயல்பாடுகளை சீர்ப்படுத்த அரசு உரிய கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும், பொதுமக்களும் தங்கள் பொறுப்பை உணர்ந்து பங்காற்ற வேண்டும் என்று அவர் தனது “பாராட்டுக்குரிய ஊர்ப்பெயர் ஆணையைத் திரும்பப்பெறுக” என்ற கட்டுரையில் (மின்னம்பலம், ஜூன் 13) விடுத்துள்ள வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டுவிடக் கூடாது.

இதைச் சரியாக மேற்கொள்வதற்கான ஒரு முக்கிய ஆலோசனைதான், தமிழில் ரோமன் வரிவடிவத் தரநிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்பது. சீன மொழிக்கு “பின்யின்” என்றும், ஜப்பானிய மொழிக்கு “ரோமாஜி” என்றும் புதிய தரநிர்ணயம் கொண்டுவரப்பட்டதால் அந்த மொழிகளை நவீனத் தேவைகளுக்கு ஏற்ப எழுதுவதில் சிறப்பான முன்னேற்றம் ஏற்பட்டதைச் சுட்டிக்காட்டுகிறார் மொழி அக்கறையாளரும், ‘தன்னாட்சித் தமிழகம்’ கூட்டியக்க ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினருமான ஆழி செந்தில்நாதன். “ஊர்ப்பெயர்களை முறையாக ஒலிபெயர்ப்பது எப்படி” என்ற கட்டுரையில் (இந்து தமிழ் திசை, ஜூன் 15) கணினி தொழில்நுட்ப வளர்ச்சியில் இதை மிக எளிதாகச் செய்ய முடியும் என்று கூறுகிற அவர், குறில் நெடில் வேறுபாடுகளை வேறுபடுத்தல் குறியீடுகள் மூலம் தெளிவாகக் காட்டலாம் என்று காட்டுகிறார். “E” என்பது “எ” என்ற குறில் ஓசையைக் குறிக்கும் என்றால், அதற்கு மேல் ஒரு சிறிய குறியீடு செய்தால் அது “ஏ” என்ற நெடில் ஓசையைப் பெற்றுவிடும். ‘Vélúr’ என அந்த E, U ஆகிய எழுத்துகளின் மேல் சிறு கீற்றைச் சேர்க்கிறபோது “வேலூர்” என்றே உச்சரிக்க முடியும். இந்த எழுத்து வடிவங்கள் கணினிகளில் ஏற்கெனவே இருக்கின்றன.

இத்தகைய ஒலிபெயர்ப்பு முயற்சிகளுக்கு உதவுவதற்கென்றே உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அமைப்பு இருப்பது பற்றி அவர் முன்பு தெரிவித்திருக்கிறார். பல நாடுகளைச் சேர்ந்தோரும் அங்கம் வகிக்கிற அந்த அமைப்பின் அறிவியல்பூர்வ வழிகாட்டல்களைப் பெறுவது, எடுத்த செயலைச் செவ்வனே முடிப்பதற்குத் துணை செய்யும்.

சொதப்பலின் காரணம்

அரசு நடவடிக்கையின் நோக்கத்தை வரவேற்று, அதன் சொதப்பல்களை விமர்சிக்கிற பலரும் ஒரு கருத்தை வலுவாக முன்வைக்கிறார்கள். இந்தச் சொதப்பல் ஏன் ஏற்பட்டது? பரவலான, பல்வேறு தரப்பினரையும் பங்கேற்கச் செய்கிற ஏற்பாடுகள் இல்லாமல், மாவட்ட ஆட்சியர்களைக் கொண்டு அந்தந்த மாவட்டங்களில் இருக்கக்கூடிய தமிழறிஞர்களை மட்டும் ஈடுபடுத்தி, அவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற பரிந்துரைகளில் “திருத்தம்” செய்து அவசரகதியில் வெளியிட்டதாலேயே தற்போதைய குழப்பம்.

இப்படியொரு நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக மக்களுக்கு ஏதாவது அறிவிப்பு வெளியிடப்பட்டதுண்டா? தமிழ்த்துறை சார்ந்தவர்கள் மட்டுமல்லாமல் அறிவியல், சமூகத் தொண்டு, இலக்கியம், தொழில் என்றெல்லாம் ஈடுபட்டிருக்கிற எல்லோரிடமிருந்தும் கருத்துப் பெற்றுச் செய்ய வேண்டும் என்ற சிந்தனை தமிழ் வளர்ச்சித் துறைக்கோ, அரசுக்கோ ஏன் ஏற்படவில்லை? அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகும்போது இப்படிப்பட்ட தடுமாற்றங்கள் தடுக்கப்பட்டுவிடும். பற்றாக்குறையாக இருப்பது பரவவ‘லான பங்கேற்பை வரவேற்கிற ஜனநாயகப் பார்வையும், அறிவார்ந்த பங்களிப்பை ஊக்குவிக்கிற அறிவியல் அணுகுமுறையும்தான்.

தற்காலிகமாகப் பெயர்களின் ஆங்கில ஒலிவடிவத்தை மாற்றுகிற நடவடிக்கையாக மட்டும் முடிந்துவிடாமல், தமிழ்ப் பெயர்களின் மூலத்தைக் கண்டறிந்து வெளிப்படுத்துகிற முயற்சியாகவும் இருக்க வேண்டும். அது வரலாறு, மரபு, பண்பாடு ஆகியவற்றில் ஆரோக்கியமான பிடிப்பை ஏற்படுத்த உதவும்.

இது ஏதோ மொழி ஆராய்ச்சி விவகாரம் என்று விட்டுவிடாமல், “எங்கள் ஊரைப்பற்றி எங்களோடு பேச வேண்டாமா” என்று ஊர்வாழ் மக்கள் எழுவதில்தான் அந்த ஜனநாயகப் பார்வையும், அறிவியல் அணுகுமுறையும் உறுதிப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *