அரசமரக் காத்து இசைய களவாண்டு தாளம் போட்டபடி இருந்தது. சீவன வளர்த்துக்க கீழ கிடந்த இலைகளை அங்கன திரிஞ்ச ஆட்டுக்குட்டிக வெத்தலைய சொவஞ்சது மாதிரி நாக்கை தள்ளிகிட்டு நின்னுச்சுக.!
சரிஞ்சு பார்த்து சிரிக்கிற குழந்தையா கிடுகு சரிஞ்சு கிடக்குது. வரிசையா அஞ்சாறு பெட்டிகள் மூச்ச முட்டிகிட்டு நிக்குது.
கேரளத்துக்கு போற நெடுஞ்சாலை நிறுத்தத்துல தான் இருக்கு நம்ம “மொக்க” கடை. ஆளுக போக வர அமைதியா எல்லாரையும் வழி அனுப்பி வைக்கும் மொக்க கடை. இழுத்து புடிச்சா விழுந்துரும் கிடுகு வேய்ஞ்சு இருந்தாரு. சின்ன பலகைகள் கோணிகிட்டு கயித்துல தொங்கிகிட்டு இருக்கு. கண்ண தெரட்டி விட்டுக்கு பார்த்தாரு மொக்க. தம்பி எந்தூரு? காரு வந்துரும் செத்த ஒக்காருரதுனு பலகைய காமிச்சாரு!
அதெல்லாம் உனக்கு பத்தாதுன்னு வக்கன காட்டி சிரிச்ச பலகையை புடிச்சுகிட்டு உக்காந்து கிட்டாரு அவரு!
ஏப்பு வெள்ளயுஞ் சொல்லையுமா இருக்கீரு? ஆர பார்க்க வந்தீங்கன்னு? கேட்கறதுக்குள்ள காரு வர அப்புடியே ஏறி போயிட்டாரு!
பொட்டிக்குள்ள இருந்த தேன்மிட்டாய பேரன் கைய விட்டு எடுக்க, திருட்டு பய புள்ளனு சொல்லிகிட்டே பொட்டிய திறந்து பேரனுக்கு எடுத்து குடுத்தாரு.
நாட்டு நடப்பு எல்லாம் நல்லா பேசுவாரு மொக்கட்டு. தெனம் தெனம் பெட்ரோலு விலை ஒசந்துக்கே போகுது? நம்ம மாட்ட கட்டிகிட்டு மொத கெனக்கா போக வேண்டியது தான்னு பேசுவாரு.
பழுத்து போன உடம்புக்குள்ள இன்னும் பழைய தெம்பு கெடக்க தான் செய்யுது. செதுக்கின புல்லு கட்டு அளவா அழகா இருக்கறது கெனக்கா மீசையில அம்சமா இருப்பாரு மொக்க.
கடையில பெருசா வருமானம் இல்ல. கூத காலத்துல போர்த்துன சால்வைய அவுக்கவே மாட்டாரு. என்னய பார்த்தியானு பெருமையா பார்க்கும் அவரு சால்வ.
கடையில வாங்குற சின்ன சின்ன பொருளுக்கு கூட சலிச்சுக்காமல் தருவாரு மொக்க. ஊரு சனத்தயும் போக வர்ற பஸ்ஸீ காரையும் பார்க்கறதுல மொக்கைக்கு அலாதி பிரியம்.
வெரசா வந்த வஞ்சிக்கொடி, ஏய் மாமு! என் புள்ளைக்கு இனிப்பு முட்டாயி குடுக்காதன்றுக்கேன்ல ? ஏன்? தந்தன்னு சண்டைக்கு வந்தாள்.
பூச்சி பல்லு தெரிய அழுதுக்கு இருந்தான்அவள் மகன். அட! விடும்மா புள்ள ஆசைபட்டு கேட்டுச்சு. அதேன் குடுத்தேன்னாரு மொக்க.
வேணாம் மாமு! இந்தப் பயலுக்கு பல்லு செத்துபோச்சு. நானே! வேலைக்கு போகாமல், அங்கனயும் இங்கனயும் வாங்குன கடனுக்கு அல்லாடிகிட்டு இருக்கேன். அதுல இவன் செலவு வேற!அவள் வயித்தெரிச்சல கொட்டிட்டு போயிட்டா. இடுப்புல ஒட்டிகிட்ட பையன் மொக்கட்ட பார்த்து சிரிச்சுகிட்டே கைய ஆட்டிகிட்டே போனான்.
மகள் வயித்து பேரன் பாலனை நினச்சு மொக்கைக்கு கவல. வெடல புள்ள வயசுல சேட்டை கூடுனாலும், இதை எல்லாம் கடந்து தான் நாமளும் வந்தோமுன்னு அப்டியே மனச மயிலுக்கு குடுத்த நாளுக்கு போயிட்டாரு மொக்க.
வரப்புல கிடந்த முள்ள எடுத்து போட்டுட்டு நிமிர, வீட்டுல மாட்டுன நிலக்கதவா நின்னிருந்தாரு மொக்க. ஆத்தி! மாமன்னு விலக, இந்தாடி, முறைமாமனுக்கு வழி விடாமல் நிக்கிற! அப்புறம் தூக்கிகிட்டு போயி கண்ணாளம் முடிச்சிக்கிருவேன்னான் மொக்க.
மாமா, அரிவாள் பதிஞ்ச கையி. பதமா காவு வாங்கிரும் பார்த்துக்கன்னு மொறப்பும் சிரிப்புமா போயிட்டா மயிலு.
குளத்துல, ஆத்துல ஓடையிலன்னு பேசி சிரிச்சாக. மொக்கையோட புல்லுக்கட்டு மீசைய மயிலு ஆசையா தொட்டு பார்ப்பாள். மழை விழுந்த ஒரு நாளில கிழக்கு சீமைக்காரனுக்கு சொல்லாமல் கொள்ளாமல் கண்ணாளத்த முடிச்சாட்டாங்க மயிலு வீட்டுக் காரவங்க.
மயிலுக்கு புடிச்ச அந்த மீசைய மட்டும் நல்லா கவனிச்சுக்கிட்டாரு மொக்க. பெருசு பேப்பருன்னான் இளவட்டம் ஒண்ணு. நினைப்பு களஞ்ச மொக்க, மீசையே முளைக்காத அவன பார்த்து சிரிச்சுகிட்டே குடுத்தாரு.
பத்தாத பலகை அவனுக்கு பத்திக்கிருச்சு. படத்த மட்டும் பார்த்துகிட்டே வச்சுட்டு போயிட்டான் சிறுசு. ஊருக்கு போய் வர்ரவங்க, பைகளையும் பலகை சுமந்து சிரிச்சுகிட்டு தான் இருக்கும்.
மழைக்கு கூரைய குடுத்து நனஞ்சுகிட்டு இருந்தது மொக்கட்டு கடை. நாலு நாளா சாத்தியே கிடக்கு. மொக்கைக்கு நாலு நாளா சுகமில்லையாம். அதேன் கடைய சாத்தி இருக்காராம். பத்தாத பலகையும், சாய்ஞ்சு பார்க்கிற கூரையும், அரச மரத்து இலைகளோடு சேர்ந்து மொக்கை திரும்பி வர காத்திருக்கு.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


Mokkattu stroy is very nice.It just reflect the original situation of village petti kadai @ keeper.
Mokkattu story is very nice.It just reflect the original situation of village petti kadai @ keeper