‘என் வாலிபத்தின் வேர்களில் விஷம் எரிந்து விட்டு
வெட்கமின்றி சொல்கிறது நீதி
என்னை நிரபராதி என்று’
இந்த நூலின் துவக்கத்தில் வரும் இந்த வரிகளே இந்த நாவலின் கருவை உணர்த்தி விடும்.
ஏதுமறியாத ஒரு இளைஞன் குற்றம் சாட்டப்பட்டு, தன் வாலிபத்தை எல்லாம் சிறைக்குள் தொலைத்த பிறகு நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்ட கதை தான் இது.
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவை வேகமாய் வளர்ந்து கொண்டிருந்த சமயம். அதுவரை எந்தவித வகுப்புவாத பிரிவினைகளும் பெரும்பான்மை இல்லாமல் அமைதிப் பூங்காவாய் இருந்தது. ஆனால் பிப்ரவரி 14 1998 இல் நடந்த தொடர் குண்டு வெடிப்பு, சில காலமாய் அங்கு வகுப்புவாத நெருப்பு புகைந்து கொண்டிருப்பதை வெளிச்சம் போட்டு காட்டியது. அதைப் பற்றிய ஒரு ஆவண நூல்தான் மௌனத்தின் சாட்சியங்கள். ஆசிரியர் எவர் பக்கமும் சாய்ந்து விடாமல் நேர்மையாய், தான் அறிந்த தான் , மூன்று ஆண்டுகள் சேகரித்த விவரங்களை இந்த நூலில் பதிவு செய்துள்ளார்.
கோவை நகரில் 1960 களில் இந்து முஸ்லிம் அனைவருமே உழைத்து தங்களுடைய பொருளாதாரத்தில் உயர்ந்து கொண்டிருந்த நேரம். சில உரசல்கள் வந்தாலும், அவை பெரும்பாலும் அசம்பாவிதம் இன்றி தீர்த்து வைக்கப்பட்டிருந்த காலம்.
1981 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் உள்ள மீனாட்சிபுரத்தில் உள்ள ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட குடும்பங்களும் இஸ்லாத்தை தழுவினர். (அதனை மையமாக வைத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் “Mass Religious Conversion of Meenakshipuram – A Victimological Perspective” என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வை முடித்துள்ளார்) பல தலைவர்கள் அந்த பகுதிக்குச் சென்றார்கள்.
தாய் மதத்திற்கு திரும்ப வேண்டினார்கள். தாய் மதத்தில் தனக்கு அங்கீகாரம் கிடைக்காமல் , தங்களுக்கு நடந்து கொண்டிருந்த அநீதிகளுக்காக தான் தங்கள் மதம் மாறினோம் என்று சொன்னார்கள். இந்த நிகழ்ச்சி பிறகு தான் மதம் மாற்ற தடைச் சட்டத்தை ஜெயலலிதா அவர்கள் கொண்டு வந்தார்.
இந்த நிகழ்வுக்குப் பிறகு மெல்ல மெல்ல இந்து மதவாத அமைப்புகள் கோவையில் புதிய பெயர்களில் காலூன்ற துவங்கின. ஏற்கனவே இஸ்லாமிய அமைப்புகள் இருந்தாலும், அவை பெரும்பாலும் மதக் கருத்துக்களை பேசுபவயாக இருந்தது.
மார்க்கெட் பகுதிகளில் மாமூல் தரக்கூடாது: இஸ்லாமியர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டால் தாங்கள் முன் வருவோம் என்று ஒரு இஸ்லாமிய வகுப்புவாத அமைப்பு துவங்கப்பட்டது.
இரு வகுப்புவாத அமைப்புகளும் அதிருப்தியாளர்களை தங்கள் ஆதரவாளர்களாக சேர்த்துக் கொண்டிருந்தார்கள்.
வியாபாரத்தில் வரும் பூசல்கள் எல்லாம் , மதச் சண்டைகளாக மாற்றப்பட்டு ஆங்காங்கே சின்ன சின்ன பிரச்சனைகள் நடந்து கொண்டே இருந்தது.
1992 டிசம்பர் 6 ஆம் தேதி நடந்த பாபர் மசூதி இடிப்பிற்கு பிறகு, இஸ்லாமிய மக்கள் விரக்தி அடைந்த சூழலில், உணர்ச்சிவசப்பட்ட இளைஞர்கள், மெல்ல மெல்ல அந்த மதவாத அமைப்புகளின் பக்கம் ஈர்க்கப்பட்டார்கள்.
காவல்துறையினர் இந்த இஸ்லாமிய அமைப்பில் உள்ள ஒரு குறிப்பிட்ட தலைவரை தாக்கியதாக செய்தி வெளியே பரவி, அந்த அமைப்பினர் போக்குவரத்து காவல்துறை அதிகாரி செல்வராஜ் என்பவரை கொலை செய்தனர்.
போலீஸ் அதிகாரிகளின் அதிகாரமும், இந்து மதவாத அமைப்பின் சூழ்ச்சியும் கைகோர்த்து , இந்த நிகழ்வை சாதகமாய் எடுத்துக் கொண்டு, 1997 நவம்பர் மாதம், இஸ்லாமியர் வசிக்கும் பகுதிகள், அவர்களுடைய கடைகள் அனைத்தையும் சூறையாடி, ஒரு திட்டமிட்ட கலவரத்தை நடத்தியது. இதில் 19க்கும் மேற்பட்ட இஸ்லாமிய இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டதோடு இல்லாமல், சுமார் 500 கோடி மதிப்புள்ள இஸ்லாமியரின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன.
வகுப்புவாத அமைப்புகளில் இருந்தவர்களை விட அப்பாவி மக்களே பெரிதளவும் இதில் பாதிக்கப்பட்டார்கள். தங்களது ஐம்பதாண்டு கால பொருளாதார முன்னேற்றத்தை ஒரே நாளில் இழந்து, ஏதுமற்றவர்கள் ஆனார்கள். பாரம்பரியமான சோபா துணி கடை என்பதை காவலர்கள் திறந்துவிட்டு அங்கிருந்த பொருட்களை சூறையாடி, கடைக்கு தீ வைத்தார்கள்.
இந்துத்வா அமைப்புகள், ஒடுக்கப்பட்ட மக்களின் மனதில் மத என்னும் விஷ விதையை ஊன்றி, அவர்களைப் பயன்படுத்தி கலவரங்கள் நடத்தினார்கள்.
கலவரங்கள் முடிந்த பின் அவர்களையும் காட்டிக் கொடுத்தார்கள். அந்தத் தலைவர்களை நம்பி கலவரத்தில் ஈடுபட்ட ஏராளமான ஒடுக்கப்பட்டவர்களின் மேல் பொய் கேசுகள் பதியப்பட்டு அவர்களும் சித்திரவதை செய்யப்பட்டனர்.
இந்தக் கலவரத்தில் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்கள், இஸ்லாமிய வகுப்புவாத அமைப்பில் இணைந்து, மௌனமாய் பழிவாங்க காத்திருந்தனர்.
பிப்ரவரி 14 1998 இல் , பழிவாங்கும் நடவடிக்கையாக 18 இடங்களில் குண்டு வைத்தனர். நடைபாதை, வணிக வளாகம் ,மருத்துவமனை இடங்களில் வைக்கப்பட்ட குண்டுகள் வெடித்து, மற்ற இடங்களில் செயல் இழக்க வைக்கப்பட்டன. இதில் 58 பேர் கொலை செய்யப்பட்டு 200 பேர் படுகாயம் அடைந்தனர்.
அதற்குப் பிறகு மீண்டும் கலவரம் தொடங்கியது. இஸ்லாமியர்கள் வசிக்கப்பட்ட பகுதிகள் மீண்டும் தாக்கப்பட்டன. ஆனால் இந்த முறை, இஸ்லாமியர்கள் தாக்கப்படும் போது அவர்களுக்கு பாதுகாப்பாக இருந்தவர்கள், இந்து மதவாத அமைப்புகளால் பயன்படுத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் தான்..
குண்டு வைத்தவர்களை தாண்டி அப்பாவி பொதுமக்கள் பல பேர் இதில் அடக்குமுறைக்கு உள்ளானார்கள். அப்பாவிகள் நிறைய பேரின் மீது வழக்குகள் பதியப்பட்டு, காவல்துறையில் கடும் சித்திரவதைக்கு உள்ளானார்கள்..
கிட்டத்தட்ட 16 வருடங்களுக்குப் பிறகு ஏதும் அறியாத அப்பாவிகள் நிரபராதிகள் என்று விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த வரலாற்று நிகழ்வை யாசர் என்ற அப்பாவி இளைஞனின் வாழ்வோடு இணைத்து எழுதப்பட்ட ஆவண நூல் தான் இது.
இந்த நூலில் ஆசிரியர் இஸ்லாமியர் பக்கம் இருந்தும் எழுதவில்லை; இந்துக்களை முற்றிலும் குற்றவாளியாகவும் இல்லை. இரு தரப்பிலும் இருந்த மதவாத அமைப்புகளின் காரணமாக, ஏதும் அறியாத அப்பாவிகள் இருபுறமும் எவ்வாறு பாதிக்கப்பட்டார்கள் என்பதை பதிவு செய்துள்ளார்.
அந்தப் படுகொலை நடக்கும் இடங்களை எல்லாம் வாசிக்கும் போது நம் மனம் பதைக்கும். எந்த ஒரு மதத்திலும் அடுத்த உயிரை சித்திரவதை செய்து தன் மதத்தை வளர்க்க வேண்டும் என்று எங்கும் குறிப்பிட்டதில்லை. ஆனால் அன்று பிரிட்டிஷார் இந்தியர்கள் இணைந்து போராடுவதை தடுக்க இந்து முஸ்லிம் சூழ்ச்சியை கையாண்டார்கள். இன்று அரசியல் ஆதாயத்திற்காக இந்தப் பிரிவினையை ஏற்படுத்தி அந்த நெருப்பு அணைந்து விடாமல் பார்த்துக்கொள்கிறார்கள்.
ஐயிரண்டு திங்களாய் அங்கமெல்லாம் நொந்து, ஒரு குழந்தையை பெற்றெடுக்கும் தாய்க்கு ஒரு உயிரின் மதிப்பு தெரியும். ஆனால் அப்படியான விலை மதிப்பில்லாத உயிரை, மதத்தின் பெயரால் காவு கொடுப்பது எத்துணை அநியாயம்?
இதையெல்லாம் பார்த்து மௌனமாய் இல்லாமல், உங்கள் மௌனத்தின் பாரங்களை இறக்கி வைத்து மனசாட்சியின் கதவுகளை திறந்து வையுங்கள் என்பதைத்தான் யாசரின் வாயிலாக ஆசிரியர் இதை வாசிப்பவர்களுக்கு வேண்டுகோள் வைக்கிறார்.
மனிதமே மதம்.. மனிதநேயமே கடவுள் என்ற நிலை எப்போது வரும்?

நூலின் தகவல்கள்
நூல் : மௌனத்தின் சாட்சியங்கள்
ஆசிரியர் : சம்சுதீன் ஹீரா
பதிப்பகம் : பொன்னுலகம்
பக்கங்கள் : 464
விலை : ₹350
நூலறிமுகம் எழுதியவர் :
பூங்கொடி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

