பருவ மழை தொடக்கம் கட்டுரை – புஷ்பவேணி
மாலை 4 மணி… வழக்கத்துக்கு மாறாக சற்று முன்கூட்டியே அலுவலகம் விட்டு வீட்டுக்கு கிளம்பினோம் நானும் என் தோழியும். மழைக்கு முன்பு வீட்டுக்கு செல்ல வேண்டும் என்ற முனைப்பில் வண்டியின் வேகத்தை கூட்டினாள் தோழி. எதிர்பார்த்த(பயந்த)படியே புறப்பட்ட சிறிது நேரத்திற்குள் தூறலாக ஆரம்பித்த மழை, கனமழையாக பரிணமித்தது. வேறுவழியின்றி ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு, நனையா வண்ணம் நடைபாதையில் நின்று கொண்டோம்.
சாரல் தெறித்து, எழுந்த இதமான குளிரின் காரணமாக சேலைத் தலைப்பை இழுத்து போர்த்திக்கொண்டு, மழையில் மனம் லயிக்க ஆரம்பித்தேன். சிலப்பதிகாரத்தில் உள்ள “மாமழை போற்றுதும்” “மாமழை போற்றுதும்” என்ற சிந்தியல் வெண்பா நினைவுக்கு வந்தது.

“வெயிலின் சுத்தம் ஆனந்தம், மழையின் சத்தம் ஆனந்தம்” என்ற வைரமுத்துவின் வரிகள் நினைவுக்கு வந்தன. வெயிலின் சுத்தம் என்றால் மழைக்கு சுத்தம் இல்லை என்றுதானே அர்த்தம்… உலகிலேயே தூய்மையான நீர் மழை நீர்.
உலகத்தையே சுத்தப்படுத்திவிட்டு, தான் அசுத்த பட்டுப்போகும் மழைக்கு இப்படி ஒரு பழியா? இவ்வாறான சிந்தனையோட்டத்தில் என்னை அறியாமல், உதட்டில் ஒரு விரக்தி புன்னகை.

“என்ன சிரிக்கிற” என்ற தோழியின் குரல் கேட்டு “ஒன்னுமில்ல, சும்மாதான்” என்ற பதிலை உதிர்த்துவிட்டு மீண்டும் மனம் மழையின் மீது லயிக்க ஆரம்பித்தது. வானுக்கும், பூமிக்கும் இடையே வெள்ளிக்கோல்களை நிறுத்தி வைத்தது போல், ஆர்ப்பாட்டமாக கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது மழை….

மழையின் சிறப்பை உணர்த்(ந்)த, வள்ளுவர் பத்து குறள்களை இயற்றி இருந்தாலும் ஒரு குறள் மட்டும் தடுமாற்றம் இல்லாமல் சொல்ல தடுமாறித்தான் போவோம்.

“துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஊம் மழை” சிறுவயதில் நண்பர்கள் குழுவில் இக்குறளை சத்தமான குரலில் சொல்லி பழகியது நினைவுக்கு வர மீண்டும் ஒரு புன்னகை என்னை அறியாமல்..

“என்ன யோசிச்சிட்டு இருக்க, ஏன் சிரிக்கிற”
என்ற தோழியின் குரல் கேட்டு மீண்டும் “ஒன்னுமில்ல” என்ற பதிலையே உதிர்த்தேன். பெருமழை லேசான தூறலாய் வலுவிழந்து இருந்தது.

“மழை விட்டுடுச்சு வா போலாம்” என்ற தோழியின் குரலுக்கு இணையாக மற்றொரு குரல் அருகில் கேட்டது.
நடைபாதை வியாபாரி ஒருவர் மழையின் காரணமாய் கடையை ஏறக்கட்டி விட்டு, மழை நின்றதும் மீண்டும் கடையை விரிக்க ஆரம்பித்தார்.

“சனியன் புடிச்ச மழ, பொழப்ப கெடுக்கறதுக்கே வருது”
இவ்வளவு நேரம் என் சிந்தனையில் நான் சிலாகித்து, ரசித்துக் கொண்டிருந்த மழைக்கு இப்படி ஒரு வசவா? லேசான சிந்தனை கலக்கத்துடன் வண்டியில் அமர, மீண்டும் வண்டியை வேகமாக விரட்டத் தொடங்கினாள், என் தோழி.

“விசும்பின் துளிவீழின் அல்லால் மாற்றாங்கே பசும்புல் தலை காண்பதரிது”.
மழையின்றி ஒரு புல் பூண்டு கூட முளைக்காது என்ற வள்ளுவனின் பாடல் ஒரு பக்கம்.

“பொழப்ப கெடுக்கவே வருது இந்த மழை” என்ற சாடல் மறுபக்கம்…. என யோசித்தபடியே பயணித்தேன்.
“மழை திரும்ப வரதுக்குள்ள நான் வீட்டுக்கு போய் ஆகணும்” என்றபடி என் வீட்டின் முன்பு வண்டியை நிறுத்தினாள் என் தோழி. வண்டியை விட்டு இறங்கியபடி, “பார்த்து போ” என்றேன்.

அவள் கையசைத்து விடை பெற்ற பிறகும் என் சிந்தனையோட்டம் நின்றபாடில்லை. “நீரின்றி அமையாது உலகு” என்ற மழைக்கே, இத்தனை வசவாளர்கள் எனில் நாமெல்லாம் எம்மாத்திரம்? சிந்தனை சுழன்று அடித்தது. புத்தருக்கு போதி மரத்தடியில் ஞானம் வந்தது போல், எனக்கும் இந்த மாலைப்பொழுதில், மழைச்சாரலில் ஞானம் வந்தது போல் உணர்ந்தேன். நம்மை காயப்படுத்தும் விமர்சனங்களையும், அழ வைக்கும் வசைகளையும் தாண்டி செல்ல வேண்டும் என்ற பாடத்தை மழை எனக்கு உணர்த்தியதாய் உணர்ந்தேன்.

“வான் நின்று உலகம் வழங்கி வருதலால் தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று” என்ற குறளும்,
“சனியன் புடிச்ச மழை” என்ற குரலும் சிந்தனையில் சுழன்றன.

எதைப்பற்றியும் கவலைப்படாமல் மழை தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை தொடங்கி இருந்தது. எனக்குள் ஒரு தெளிவு வந்த உணர்வுடன் வீட்டுக்குள் நுழைந்தேன்.

– புஷ்பவேணி

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.