பூனைப் பருந்து (Harrier)
கோவிட்-19 வைரசின் தாக்கம் முடிவுக்கு வருவதற்குள் பல இயற்கை மாற்றங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. அந்த வரிசையில் முதன் முறையாகக் கடந்த 2020ஆம் வருடம் மே மாதம் தமிழ் நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெட்டுக்கிளி படை எடுத்து விவசாய நிலங்களை ஆக்கிரமித்தது. சூர்யா நடித்த காப்பான் திரைப்படம் விவசாய நிலங்கள், மனிதர்கள் என அனைவரின் உயிர்களும் லோக்கஸ்ட் (Locust) வெட்டுக்கிளியின் பெரும் படைக்குப் பலியாவது போல் காட்டியிருப்பார்கள்.
இந்த வெட்டுக்கிளிகள் லோக்கஸ்ட் வெட்டுக்கிளிகளிடமிருந்து வேறுபடுகின்றன என்று அதிகாரிகள் சொன்னாலும், இந்த வெட்டுக்கிளிகளும் சேதம் விளைவிக்கவே செய்கின்றன. கி.ராஜநாராயணனின் கோபல்ல கிராமம் (1976) மற்றும் மக்களவை உறுப்பினர் சு வெங்கடேசனின் காவல் கோட்டம் (2008)-17ஆம் நூற்றாண்டில் மாநிலத்தில் ஏற்பட்ட வெட்டுக்கிளி போன்ற தாக்குதலைப் பதிவு செய்துள்ள இரண்டு தமிழ் இலக்கியப் படைப்புகளுமே வரலாற்றுச் சாட்சியங்கள்.
இதே போல் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கிழக்கு ஆப்பிரிக்காவில் ஒரு வகை வெட்டுக்கிளியினால் கொள்ளை மனிதர்களுக்கு நோய் பரவியுள்ளது. மேலும் கூட்டமாக விவசாய நிலங்களில் விளைவித்த தானியங்களை முழுமையாகத் தின்று தீர்த்தது. இதனை “பெருந்திரளாகக் கரு மேகம் சூழ்ந்தது போல” வந்ததாக அந்நாட்டு மக்கள் பயத்தை வெளிப்படுத்தினர்.

இதனைக் கட்டுப்படுத்த ஆய்வாளர்கள் பல்வேறு வழிமுறைகளைக் கண்டறிந்தனர். உயிரியல் பூச்சிக்கொல்லி, ரசாயன பூச்சிக்கொல்லி, நவீன முறைகளான கணினி சார்ந்த தொழில்நுட்பங்கள். பள்ளி, கல்லூரி ஆய்வங்களில் ஆராய்ச்சிகளுக்காக மாணவர்களுக்கும் பயன்படுத்தினர், வெட்டுக்கிளிகளை உணவாகவும் உட்கொண்டனர். இறுதியாக 1950ல் organochloride dieldrin ரசாயன பூச்சிக்கொல்லி தெளித்து ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். சில நாட்களில் உணவுச்சங்கிலியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதாகத் தடை அதனைச் செய்தனர்.
இதே போல் கொசுக்களினால் மலேரியா பரவிய பொழுது டி டி டி (Dichloro Diphenyl Trichloroethane) என்ற பூச்சிக்கொல்லி தயாரித்துத் தெளிக்கப்பட்டது. கொசுக்களை மட்டுமில்லை அப்பகுதியிலிருந்த மற்ற உயிரினங்களையும் கொன்றது. இதில் கவனிக்க வேண்டியது கொசுக்கள் டி டி டி க்கு தன்னை தகவமைத்துக் கொண்டது, தற்போது நமது வீடுகளுக்கு அருகில் தெளிக்கும் டி டி டி யினால் கொசு முட்டைகளை உண்ணக் கூடிய தவளைகள் அழிகின்றன, கொசுக்கள் அதிகரிக்கின்றன. இதன் விளைவாகச் சமீபத்தில் ஒரு சில வருடங்களில் குழந்தைகளுக்கு மலேரியா காய்ச்சலினால் அதிகமாகப் பாதிக்கப்படுவதைப் பார்க்கமுடிகிறது.
அந்த வகையில் தற்போது லோக்கஸ்ட் வெட்டுக்கிளியின் எண்ணிக்கையும் பல்கிப் பெருகி விவசாயம் செய்த பயிர்கள் அனைத்தையும் அழித்தன. ஏன்? எப்படி ? என்பதையும் இந்த வெட்டுக்கிளியை வேட்டையாடும் பறவையான மாண்டகு பூனை பருந்து பற்றியும் தான் இன்று பார்க்கப் போகிறோம்.
பூனைப்பருந்து இதன் அறிவியல் பெயர் Circus pygargus, ஆங்கிலப்பெயர் Montagu’s Harrier. மாண்டகு என்பது பிரிட்டிஷ் இயற்கை ஆர்வலர் ஜார்ஜ் மாண்டகு (George Montagu) என்பவரின் நினைவாக வைத்துள்ளனர். முதன் முதலாகப் பிரிட்டனில் உள்ள பறவைகளை இவர் தெளிவாக வரையறை செய்தார் ஆதலால் 1802ல் வெளியிடப்பட்ட பறவையியல் அகராதியின் முன்னோடியாகத் திகழ்கிறார். இவரது ஆய்வின் விளைவாக தெற்கு இங்கிலாந்தில் பூனைப்பருந்து இனப்பெருக்கம் செய்வது கண்டறியப்பட்டது.

கடற்படை தளபதியாக பணியாற்றியதா என்னவோ இவருக்கு கடல் மற்றும் நன்னீர் உயிரினங்களின் மீது மிகுந்த ஆர்வம் ஏற்பட்டு, அவைகளைப் பற்றி ஆய்வு செய்து, 1803ல் பிரிட்டிஷ் கடல், நிலம் மற்றும் நன்னீர் நண்டுகளின் வரலாறு என்ற புத்தகத்தை வெளியிட்டார் இவருடைய களப்பணியின் போது கண்டுபிடித்த புதிய இன கணுக்காலியை பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் வைத்துள்ளனர். மேலும் ஒரு வௌவால் பற்றிய குறிப்புகளையும் கொடுத்துள்ளார். இவர் சேகரித்த 200க்கும் மேற்பட்ட பறவைகளை ட்ரிங் அருங்காட்சியகத்தில் வைத்துள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் கிண்டில் தளத்தில் ஆங்கிலத்தில் ஒரு பூனைப்பருந்து பற்றிய புத்தகம் வெளியானது. அதில் விவசாயம் மற்றும் இயற்கையைச் சமநிலையில் வைத்துக் கொள்ள மாண்டகுவின் பூனைப்பருந்து எந்தளவிற்குப் பங்காற்றுகின்றன என்பது பற்றிய உண்மை சம்பவத்துடன் எழுதியிருக்கிறார் சூழலியல் எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளருமான எல்விரா வெர்க்மேன்.

அவரது முந்தைய வெளியீடுகளில் பறவைகள், நகர்ப்புற இயல்பு மற்றும் கலாச்சார வரலாறு பற்றிய புத்தகங்கள் அடங்கும்.இவர் வயல்களாலும் இயற்கையாலும் சூழப்பட்ட நெதர்லாந்தில் வசித்து வருவதே இயற்கையின் மீதான அன்பை அதிகப்படுத்தி இத்தகைய படைப்புகளை எழுதிக்கிறார். புத்தகம் எழுதும் அளவிற்கு அப்படி என்ன முக்கியத்துவம் வாய்ந்த பறவை ?
உலகம் முழுவதும் சுமார் 16 வகையான ஹாரியர் பறவை இனங்கள் உள்ளன. அவற்றில் மாண்டகு ஹாரியர், பேல்லிட் ஹாரியர், யுரேசியன் மார்ஷ் ஹாரியர் உள்ளிட்ட சுமார் 5 வகையான பறவைகள் இந்தியாவிற்கு வலசை வந்து செல்லும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக மாண்டகுவின் பூனைப்பருந்து ஐரோப்பா, ரஷ்யா, தென் சீனா போன்ற பகுதிகளிலிருந்து குளிர்காலத்தில் ஆப்பிரிக்கா, இந்தியா போன்ற இடங்களுக்கு வலசை வருகின்றன.
புதர் நிலங்கள், மணற்குன்று, தரிசுநிலம் அல்லது பொட்டல்காடுகள் போன்ற இடங்களில் வாழுகின்றன. இந்தியாவில் ராஜஸ்தானில் உள்ள தால் சப்பார் சரணாலயம், குஜராத்தில் உள்ள வேலவதார் தேசியப் பூங்கா, ‘லிட்டில் ரான் ஆஃப் கட்ச்’, ஆந்திராவில் ரோல்லபடு சரணாலயம் போன்ற பகுதிகளில் இவற்றைக் காணலாம். தமிழ்நாட்டில் ஊட்டி, மேட்டுப்பாளையம், கோயமுத்தூர், அன்னூர், சத்தியமங்கலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி பகுதிகளில் காணலாம்.
இவை சிறு சிறு பறவைகள், வெட்டுக் கிளிகள், பூச்சிகள், எலிகள், பாம்புகள் ஆகியவற்றை உணவாக உட்கொள்கின்றன. மிக முக்கியமாக இனப்பெருக்க காலங்களில் அதன் குஞ்சுகளுக்கு உணவு தருவதற்காகவே நீர்நிலைகளுக்கு அருகிலும், விவசாய நிலங்களிலும் கூடு கட்டுகின்றன. வருடத்தில் ஒரு முறை மட்டுமே இனப்பெருக்கம் செய்கின்றன.

மேலும் வலசை பாதையில் ஆப்பிரிக்காவைக் கடக்கும், இதன் முக்கிய உணவான லோக்கஸ்ட் வெட்டுக்கிளியின் வலசை பாதையும் அதே வழி தான் என்பதால் மிக மகிழ்ச்சியாக வேட்டையாடின, ஆனால் இப்பொழுது நிலைமை முற்றிலும் வேறு. விவசாயப் பயன்பாட்டுக்கான ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லியினால் எலிகள், பாம்புகள், பூச்சிகள் குறைந்து விட்டன. ஹாரியர் பறவைகளின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகின்றன. அதுமட்டுமில்லாமல்
ரியல் எஸ்டேட் பிசினஸ் தான் தற்போதைய ட்ரெண்டிங். எங்குப் பார்த்தாலும் நிலம் விற்பனைக்கு (Site for sale) என்று கைப்பேசி என்னுடன் பதாகைகள் வைத்துள்ளனர். பெரும்பாலான இடங்கள் விவசாய நிலங்கள் தான். நகரமயமாக்கல் இங்கு தான் துவங்குகிறது. இதன் விளைவாக உற்பத்தி குறைந்து, உணவு பற்றாக்குறை ஏற்படுகின்றன.

ஒரு பறவை இனத்தின் எண்ணிக்கை குறைந்தால் அது நேரடியாக மக்களைப் பாதிப்பதை உணர சில காலங்கள் ஆகலாம். எந்த பறவையினம் குறைகிறதோ, அப்போது அதனுடைய உணவாக இருந்த உயிரினம் பல்கிப் பெருக ஆரம்பிக்கும். உணவுச்சங்கிலியில் மாற்றம் ஏற்படும். இதனால் ஒருநாட்டின் விவசாயம் நலிவுற்று, பொருளாதாரமும் பாதிக்கப்படும்.
இறுதியாக…
வெட்டுக்கிளிகளின் தாக்குதலால் மக்களிடம் வறுமை தாண்டவமாடுகிறது என பதிவு செய்யப்பட்ட இந்நிகழ்வுகளை திரைப்படம் மூலம் கடைக்கோடி மக்களுக்கு கொண்டு செல்வது மகிழ்ச்சி ஆனால் திரைப்படமாக பார்த்துவிட்டு கடந்து போகாமல் அடுத்த தலைமுறையிடம் பாதுகாப்பான சூழலை கொடுக்க வேண்டிய பொறுப்பும் நமக்கு இருப்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். பிரச்சனைகளுக்கு தகுந்தாற் போல் தீர்வுகளை செயல்படுத்தி அடுத்தடுத்த வரும் இயற்கை மாற்றங்களுக்கு ஏற்ப நாமும் மாற்றங்களை செயல்படுத்துவதே (Update) அறிவுபூர்வமானது.
தரவுகள்
- Ornithological Dictionary; or Alphabetical Synopsis of British Birds, J. White, 1802. https://www.conchology.be/?t=9001&id=25237
https://thefederal.com/states/south/tamil-nadu/locusts-in-mind-tn-farmers-gripped-by-pest-attacks/
https://sustain.round.glass/species/montagus-harrier-prowlers-grassland/
https://www.dw.com/en/east-africa-braces-for-a-return-of-the-locusts/a-56133496
முனைவர். வெ. கிருபாநந்தினி
பறவைகள் ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: [email protected]
முந்தைய தொடரை வாசிக்க:
பெயர் சொல்லும் பறவைகள் – முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 2: ரிச்சார்டு நெட்டைக்காலி – முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 3: பச்சைக்கிளி – முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 4 (Green Cheeked Parakeet) – முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 5 – லோட்டன் தேன்சிட்டு (Loten’s Sunbird) | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 6 – செட்டிகதிர்க்குருவி | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 7 – Yellow-eyed Pigeon | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 8 – Jerdon’s Nghtjar (பக்கி) | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 9 – நீலகிரி காட்டுப்புறா | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 10 – காட்டுக்கோழி | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 11 – பல்லாஸ் மீன் கழுகு | முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 12 – காட்டுப் புள்ளிச் சிறு ஆந்தை (Forest owlet) | முனைவர். வெ. கிருபாநந்தினி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.