Mookaiya ShortStory By Era Kalaiyarasi மூக்கையா சிறுகதை - இரா. கலையரசி




அழகு பரப்பிய வாசல் செத்தையும் சிறகுமாக இருந்தது.வீட்டு பொம்பளை இல்லாதது அத்தன வித்தியாசமா இருக்கு. பொழுது விடிஞ்சு கொள்ள நேரம் ஆகிருச்சு.மூக்கையா பெறண்டு படுக்க முடியாமல் பொலம்பிக்கு இருந்தாரு.

“அமரு அமரு சுடு தண்ணீ வெளாவி வை. ஒடம்புல ஒண்ணும் எசக்கு இல்ல.நீ வந்தயின்னா நல்லா எதமா பதமா வெளாவுவ. என்னா அமரு. ஒண்ணும் பேசாமல் இருக்றவ.சடவா இருக்கியோ?” மெல்ல பொண்டாட்டி படுத்து இருந்த அறைக்கு போனாரு.

கவுத்து கட்டில் கவுந்து கெடக்கு.ராவி பாக்குறாரு மூக்கையா.அமரு இல்ல., அவள் உடுத்துன சேல கொடியில் நெளிஞ்சு கெடக்கு. நெனவு தப்புது பெறகு வர்ரதுமா மூக்கையாவுக்கு இருக்கு.

“இதே பொழப்பு கெழவனுக்கு. எந்நேரமும் பொலம்பல். மவராசி போய் சேர்ந்துட்டா.நம்மள நாற விட்டுடட்டா.” மூத்த மருமகள் பரமு ஒரு தூக்குவாளிய எடுத்து டொக்குன்னு வச்சா.

“அமரு களத்துக்கு போய் இருக்காளா, காங்கல?”

ம்க்கும் பொண்டாட்டி சாக குடுத்தவருக்கு நெனப்பு போகுதா பாரு.

“ஏய்! மாமோய், அய்த்த செத்து மூணு மாசம் ஆகிருச்சு.இன்னும் நெனப்பு மாறாம இருந்து எங்க உசுர. வாங்கிக்கு இருக்க.நல்லா இழுக்குனு ஒரு மொற மொறச்சா. இதுகளுக்கு கஞ்சி ஊத்தறதே பெருசு.இதுல ஆடு மாடு கோழிக வேற. அதேன் மாசத்துக்கு ஒரு மகன் கஞ்சி ஊத்தனுமுன்னு பேசி முடிச்சு சோறு கொண்டாந்து வச்சா அமரு அமருனு உசுர எடுக்கறது”.

வாளிய வச்சுட்டுப் போனா மருமகள். அமருங்கற அமராவதிய நெனச்ச. மூக்கையா பழைய. நெனப்புக்குள்ள போயிட்டாரு.

பொசு பொசுனு மழ பேஞ்சிக்கு இருந்தது. வரப்புல .வரப்ப வெட்டி தண்ணீ பாய்ச்சிக்கு இருந்த மூக்கையா என்னைக்கும் இல்லாத திருநாளா வழுக்கி விழுகப் பார்த்தாரு.

அவரு சருக பூங்காத்தா வீசுன புது மலர் கெணக்கா ஒத்த கை வந்து புடிச்சு இழுத்து மேல கொண்டுவந்து விட்டுச்சு. கருமேகத்த எறக்கி விட்டாப்ல மேல வந்து விழுந்துச்சு அவள் முடி.செந்துர்க்கம் நெத்தியில பளிச்சுனு மின்ன செவத்த மொகம் விரிஞ்சு கெடக்கு.அழுத்தமான அந்த கை மூக்கையாவ புடிச்சு இழுத்து மேல தூக்கி விட்டுச்சு.

அசந்து போய் பார்த்தாரு மூக்கையா.

‘இந்த ஊர்ல இம்புட்டு அழகான புள்ளையா?’ தெணறிப் போனாரு..

“மழ அடிச்சு ஊத்திக்கிட்டு இருக்கு.இங்கன என்னயா செஞ்சுக்கு இருக்க?”

“வெரசா மேல ஏறுயா”னு சொன்ன சொல்லுக்கு அமரு கைய புடிச்சுக்குட்டு எழுந்து வந்தாரு.வெட்கம் தாங்க முடியல மூக்கையாக்கு.

“என்னாய்யா இந்த கொழையு கொழையுற?”

வெத்தல செவப்பா செவந்து போனாரு மூக்கையா.

ஆம்பளைங்க வெட்கம் படடுறது ஒரு அழகு தான். இந்த ஆம்பள என்னாய்யா இந்த வெட்கம் படறாரு.அந்த வெக்கத்த ரசிக்க தான் செஞ்சா அமரு.

நனைஞ்சு தொவைஞ்சு போன ரெண்டு பேரும் அந்த மரத்துக்கு கீழ போயி நின்னுகிட்டாங்க.

அவங்க மேல விழுந்த மழைத்துளிங்க கண்ணாளத்துக்கு அச்சத தூவுனாப்ல இருக்குது.

அவருக்கு.முன்னுக்கு நிக்கற அமர அம்புட்டு கவனமா பார்க்க ஆச பட்டாலும் வெக்கம் புடுங்கி தின்ருச்சு.

‘ஆருடா இது இம்புட்டு சொனங்கு சொனங்கறாப்ல’னு பார்த்துகிட்டே இருந்தா அமரு.

மழயில நனஞ்ச பெறகும் முடி நல்லா அடர்த்தியா இருக்கு.நல்லா நீண்டு முட்ட காத்து கெடக்கு மூக்கு. செஞ்சி வச்சாப்ல மேலு.பார்க்க அம்புட்டு அழகா இருக்காரு.மழ நிக்கவும் இடி விழுகவும் சரியா இருந்துச்சு.தைரியமான அமரு பயந்து மூக்கையாவ புடிச்சுகிட்டா.

அங்க சேர்ந்தவங்கதான் வீட்டாளுக சம்மதத்தோட செறப்பா நடந்துச்சு கண்ணாளம் கையும் காலும் தான் அவக சொத்து

நல்ல உழைப்பாளி.சம்சாரிக பொழப்பு அத்தன லேசு பட்டது இல்ல.வயக்காடு வாசல்னு எம்புட்டு கஸ்டம் இருக்கு வாழ்க்கையில.

அமருக்கு அப்டி தான்.மொத பிரசவம் சிரமமா போயிருச்சு. வகுத்த வலிவந்த அன்னைக்கு அமரு துடிச்சு போனா.

மருத்துவச்சி அன்னைக்குனு பார்த்து அசலூர் போயிட்டா. ஊருல இருந்த பொம்பளைங்க ஒண்ணு சேர்ந்து பிரசவம் பார்க்க ஆரம்பிச்சாங்க. ஆனால் முடியல.ரெண்டு உசுருல ஒண்ண தான் காப்பாத்த முடியுமுன்னு சொன்னாங்க.

“வெலகுங்க நான் பார்த்துக்க”றேனு சொல்லி உள்ள போய் அமரு கைய தொட்டதும் புள்ள அப்புடியே தலைய திருப்பிருச்சு.

மெது மெதுவா இறங்கி புள்ள வெளிய வர ஊரு சனங்க மெச்சு போனாங்க. சாகக் கெடந்த உசுர பொழச்சு குடுத்த சாமிடா..

அடுத்து புள்ள குட்டி வேணாணு சொன்ன மூக்கையாவ. “நீ இருக்கும் போது, எனக்கு என்னயா”னு சொல்லி நம்ம புள்ள தான் நம்மள காப்பாத்தும்னு சொல்லி வரிசையா நாலு ஆம்பள புள்ளைய பெத்தாங்க வருசத்தோட சேர்ந்து புள்ளைங்களும் வளர்ந்தாங்க. மூத்தவனும் எளையவனும் நல்லா படிச்சாங்க. அங்குட்டு இங்குட்டுனு கடன உடன வாங்கி படிக்க வச்சாங்க.

புள்ளைங்க ஒண்ணும் அத்தன பாசமா இல்ல. எப்பவும் கொற பேசிக்கு தான் இருப்பாங்க

‘நீங்க. என்ன. பொழப்பு பொழச்சீங்க. படிப்பு இல்ல.பெருசா வசதி பண்ணி தரல. ஒரு சோறு கொழம்பு.இத தவிர வேற என்ன செஞ்சு தந்திருக்கீங்க’

இத எல்லாம் கேட்டு விக்கித்துப் போனாரு.

ஏதோ அமரு இருக்கிற தெகிரியத்துல தான் வாழ்ந்துக்கு இருக்காரு. ஒருக்கா அப்டி தான் வயக்காட்டுல பாம்பு கடிச்சு மயங்கி விழுந்துட்டாரு..ஊரே சேர்ந்து தூக்கிக்கு வந்தாக.

நாலு புள்ளைக இருந்தும் அவனுக பெ.ருசா கண்டுக்கல. விசுக்குனு போச்சு அமருக்கு..

பெரியாஸ்பத்திரிக்கு கூட்டிக்கு போக வெரசா வண்டிய எடுத்து மாடுகள வெறட்டுனா.சொன்ன சொல்லுக்கு படிஞ்ச மாடுக அமரு காட்டுன ரோட்டுல ஓடுச்சு.

அன்னைக்கே தெரிஞ்சிருச்சு இவனுக பார்க்க மாட்டானுகனு.மனசு விட்டு போனா. ரெண்டு மகனுக அவங்களா கண்ணாளம் பண்ணிகிட்டாங்க கண்ணாளத்துக்கு கூப்புட கூடஇல்ல. வயசும் வாலிபமும் மாறி கெழடு தட்டி போனாங்க ரெண்டு பேரும். நல்லா நெலம் புலம் வச்சு இருந்தாங்க. படிக்க கொள்ளனு கொஞ்சத்த வித்துபுட்டாங்க.

அரச மர நிழலுல உக்காந்துக்கு இருந்த அமரு மனசுல ஆயிரம் கேள்விங்க இருந்துச்சு. அப்புடியே சாய்ஞ்சவதான் எந்திரிக்கவே இல்ல.சேதிய கேட்டு மயங்குன மூக்கையாவ நெனவுக்குக் கொண்டு வர தவிச்சு போனாங்க.

இந்தா எல்லாம் முடிஞ்சு போச்சு.அன்னையில இருந்து நெனவு தப்பி போனாரு. மருமகள் கொண்டாந்த தூக்குவாளிய எடுத்தாந்து அமரு வா சாப்பிவோமுன்னு கட்டில பார்த்து பேசிக்கு இருந்தாரு அவரு பார்வைக்கு அமரு அங்கன உக்காந்துக்கு இருக்கா மாதிரி தெரியுது.கண்ணு நெறைய கண்ணீர் நெறம்பி வழியுது. வயக்காட்டு மழையில. நனைஞ்ச மூக்கையாவ புடிச்ச கை இப்பவும் விழுக போனவர புடிச்சுது.

இந்தா அமரு வந்துட்டா…மெல்ல சிரிச்ச மூக்கையாவ பார்த்து மாமா வாங்க போவோமுன்னு கூப்புட்டா. பொஞ்சாதி இல்லாத ஆம்பளைங்க வாழ்க்கையில மிச்சம் ஏதுமில்ல போல. இந்தா மழையும் சேர்ந்து வந்திருச்சு. அமரு கைய புடிச்சுக்கு கெள ம்பிட்டாரு மூக்கையா.மழையில பேசிகிட்டே நடந்து போறாங்க மூக்கையாவும் அமரும்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *