மூன்று படங்கள் பேசும் அரசியல் – இரா.இரமணன்தீபாவளியை ஒட்டி ‘சூரரைப் போற்று’ ‘மூக்குத்தி அம்மன்’ , ‘நாங்க ரொம்ப பிசி’ ஆகிய மூன்று திரைப்படங்கள் வந்துள்ளன. மூன்றுமே அரசியல் சமூகப் பிரச்சனைகளை மையமாக கொண்டிருப்பது தற்செயலா அல்லது முகநூலில் ஒரு பதிவர் (பிரதாபன் ஜெயராமன்) கூறியிருப்பது போல இப்பொழுது நாட்டில் வியாபாரம் ஆகக்கூடிய கதை அரசியல் தொடர்பானது என்பதால் கோலிவுட் அதை பயன்படுத்திக் கொள்கிறதா? முதல் இரண்டு படங்களின் கதை இப்போது பலரால் பகிரப்பட்டிருப்பதால் மீண்டும் ஒரு முறை சொல்ல வேண்டியதில்லை. மூன்றாவது படம் ‘நாங்க ரொம்ப பிசி’ ஒரு நேர்மையான காவல் அதிகாரி, மனைவியின் மருத்துவ செலவிற்காக பாதை மாறி செல்வது குறித்தது. பிரதம மந்திரி பண மதிப்பிழப்பு திட்டத்தை அறிவித்தவுடன் தவறான வழியில் சேர்க்கப்பட்ட பணத்தை செல்லுகின்ற நோட்டாக பலர் மாற்றுகின்றனர். அதற்கு இடைத்தரகர்கள் கமிஷன் பெற்றுக் கொண்டு உதவி செய்கிறார்கள். இந்த தகவல்கள் தற்செயலாக அந்த நேர்மையான காவல் அதிகாரிக்கு கிடைக்கிறது. அவர் ஒரு சாதாரண திருடனைக் கொண்டு அவற்றை கைப்பற்றி தனது மனைவியின் மருத்துவ செலவுக்கு பயன்படுத்துகிறார். மேலும் தேவைப்படுவதால் இன்னொரு இடத்தில் அதேபோல் செய்கிறார். அது அவரது மேலதிகாரியின் வீடு. அந்தப் பணமும் தவறான முறையில் சம்பாதித்ததுதான். பணத்தை யார் எடுத்து சென்றது என்று மேலதிகாரி கண்டுபிடித்து விடுகிறார். எனவே இந்த காவல் அதிகாரி அவர் வீட்டிற்கே பணத்தை திருப்பி அனுப்பிவிடுகிறார். 

                    பலவீனமான கதைதான். இத்திரைப்படம் கன்னட சினிமாவில் 2016-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல விமர்சனங்களின் மூலம் மக்களின் கவனத்தை பெற்ற “மாயபஜார்” திரைப்படத்தின் தமிழ் ரீமேக் என்கிறது பிலிம் பீட். பண மதிப்பிழப்பின் ஒரு பக்கத்தை நகைச்சுவையுடன்  காட்டுகிறது இப்படம். மூக்குத்தி அம்மனிலும் பண மதிப்பிழப்பு ஒரு சாதாரண குடும்பத்தின் சேமிப்பை எவ்வாறு பயனற்றதாக்கி விடுகிறது என்பதைக் காட்டுகிறார்கள். அதுவும் ஒரு நகைச்சுவைப் படம்தான். ஆனால் போலி சாமியார்களை ஒரு அம்மன் வந்து சொடக்கு போட்டு விரட்டிவிடுவதாகக் காட்டப்பட்டுள்ளது. இது சிலருக்கு ஏற்புடையதாக இல்லை என்பது முகநூலில் வரும் பதிவுகளிலிருந்து தெரிகிறது. கடவுளை உங்களுக்குளே தேடுங்கள் என்று அந்த அம்மன் சொல்வதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

Naanga Romba Busy Movie Review: This comedy on demonetisation is worth  every penny- Cinema express

                ‘சூரரைப் போற்று’ அரசியல் கருத்தை மையக் கருவாகக் கொண்டிருந்தாலும்,மக்களை மையப்படுத்துவதிலும் மக்கள் பங்கு கொள்வதுதான் ஒரு இயக்கம் வெற்றி பெறும் என்பதை அழுத்தமாக சொல்வதிலும் இரண்டு படங்களிலிருந்தும் வேறுபட்டு நிற்கிறது..  கதாநாயகன் மையமாக இருந்து இயங்கினாலும் அவனின் கனவும் சரி அது வெற்றி பெறுவதும் மக்களை சுற்றியே இருக்கிறது. மாறாக பிரச்சினைகளில் மக்கள் பங்கு எதுவும் இல்லாத விதத்தில்தான் முதல் இரண்டு படங்கள் மட்டுமல்ல ரஜினியின் ‘சிவாஜி’ போன்ற படங்களும் வேறுபடுகிறது. 

               அரசியல் கருத்துள்ள ஜனரஞ்சகமான படங்களை மதிப்பிடுவதில் முற்போக்காளர்களுக்குள் கருத்து வேறுபாடு வருகிறது.. அதில் காட்டப்படும் எளிய தீர்வுகள் மக்கள் உணர்வுகளை மந்தப்படுத்திவிடும் என்று எண்ணுகிறோம். கலைப் படைப்புகள் தீர்வுகளை தட்டில் வைத்து வழங்க வேண்டுமா என்பது ஒரு புறம். மக்கள் இத்தகைய படங்களைப் பார்த்து என்ன நினைக்கிறார்கள்; படங்கள் மட்டுமே மக்களின் உணர்வை தீர்மானித்துவிடுமா என்பது போன்றவை விவாதிக்கப்பட வேண்டும். இரா.தெ.முத்து அவர்கள் ‘போராட்டம்தான் மூக்குத்தி அம்மன்’ என்று பதிவிட்டிருக்கிறார். ஆக ஒரு ஆரோக்கியமான விவாதம் இந்தப் படங்கள் மூலம் நடக்கிறது என்பது மகிழ்வான விஷயம்.