”காதல்” இந்த ஓருணர்ச்சியின் முன், மானுட வாழ்க்கையின் எல்லாமும் கட்டுடைத்து, வளைந்து, நெளிந்து எவரும் அறியாவண்ணம் வேர்விட்டு வாசமொழுகிடும், உவகை பொங்கும் மர்மம் நிறைந்த ரகசியங்கள் பல அடங்கிய ஒன்று.  சிதைத்தெறிய முடியா வலுகொண்டக் கரும்பாறையில், கொத்தாக மலந்திருக்கும் வனப்பொழுகும் காட்டுப்பூவின் மெல்லிய துகளினைப் பொன்றதொரு, சின்னதான ஆகப்பெரிய உளக் கிளர்ச்சியை ஒருவருக்குள்ளும், இருவருக்குள்ளுமென, வாழ்வின் எந்த நிலையிலும் சுகமான துன்பம் நிகழ்த்திக் கொண்டிருக்கும்.
”காதல்”, அது எல்லையில்லா இனியவையாகவும் அளவில்லாத அன்பையும் வாழ்வின் கடைசிவரை சுரந்து கொண்டே இருக்கும் சுகம்மானதொரு உணர்வு.
காதல் வயப்படும் அந்தக் கணமதில் இதயமெங்கிலும், தேனை மொத்தமாய்த் தடவிய இனிப்பாகத் தித்தித்திடும். காதல் வயப்படக் காரணமான கண்களை சந்தித்திடும் தருணமதில் கால்கள் இரண்டும் தரையில் நிலை கொள்ளாது.. அடிவயிற்றில் பனிக்கட்டிகளை வைத்து இறுக்கிக் கட்டியதைப் போன்றதொரு பேருணர்வுத் தாக்கிடும், மூளையும் கள்ளுண்ட போதையில் கிறங்கி நிற்கும்.. எல்லாவித அற்புதங்களையும் மனிதருக்குள் நிகழ்த்திக் கொண்டே இருக்கும் உணர்வே காதல்.
இவான் துர்கனேவின் காதல் ரசமிகுந்த எழுத்துக்களை; தற்போது தோழர் லோகநாதன் அவர்களின் புலம் வெளியீடாக.. பனிசுமந்த மலராக, வாசிக்கும் அனைவரையும் அவரின், அவரவரின் காதல் நினைவிற்குள்; ஓங்கி எழும் அந்த சூறாவளிக்குள் இழுத்துச் செல்லும், “மூன்று காதல் கதைகள்” என்கிற மூன்று குறு நாவல்கள் அடங்கியத் தொகுப்பை வெளிக் கொண்டு வந்திருக்கிறார்கள். மொழிபெயர்ப்பாளர் பூ.சோமசுந்தரம் அவர்கள் தமிழில் இவான்துர்கேனிவின் ரசனைக்கும் எழுத்தின் வனப்பிற்கும், வலியிற்கும் சற்றும் குறைவில்லாமல் காதல் இனிப்பின் சுவையை, வலியை முழுமையாக அப்படியே வாசகனுக்கு கொடுத்திருக்கிறார். பேரன்பும்.. காதல் வணக்கங்களும் இருவருக்கும்.
“ஆஸ்யா” தான் நிலப்பண்ணை ஒருவருக்கும் அவரின் கண்காணிப்பில் வேலை பார்த்த ஒருத்திக்கும் பிறந்தவள் என்கிற குற்ற உணர்ச்சியோடே தன் வாழ்நாளை தாய் தந்தையரின் மறைவிற்குப் பிறகு, தன் தகப்பனின் முதல் தாரத்திற்கு பிறந்த தனயனோடு வாழ்ந்திட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப் படுகிறாள். வெளி உலகில், அவருக்குத் தோழிகளாக.. நண்பர்களாக, தனக்குள் உவகை சேர்த்திடும் ஒன்றாக இருக்கும் இயற்கையின் அத்தனை அதிசயத்யோடும் வாழ்ந்து வருகிறாள்.. எதையாவது சாதிக்கத் தூண்டும் மனவோட்டத்தில் வேகமாகவும் விவேகமாகம் தன் நடையினை வடிவமைத்து, தனக்கான பாதுகாப்பும், அரணும் தன் தனையன் காகின் மட்டுமே என நினைத்திடும்வேளை, அந்த சின்னப் பெண்ணின் இருதயத்திற்குள் குளிர்ந்த பனித்துளியாக வந்து வழிகிறான் N (காதலன்).
அந்த முதல் காதல்தான் ஆஸ்யாவிற்குள்ளும் எத்தகைய மனவோட்டத்தை, அவர்கள் இதயத்திற்குள் நிதமும் நிகழ்த்து மலர்ந்து, வாடி, வதங்கிடும் காதல் மலரின் ஆட்டமதினை அப்படியே தனது எழுத்திற்குள் தனது அனுபங்களோடு கதையாக்கி இருப்பார் துர்கேனிவ்.  N தன் காதலை ஆஸ்யாவின் தனையனிடம் ஒத்துக் கொள்ளும் போதும்; ஆஸ்யாவின் வளர்ப்பு குறித்தான தகவலோடு, ஆஸ்யாவும் காதல் வயப்பட்டிருக்கிறாள் என்கிற சேதியை காகின் வசம் தெரிவிக்கும் போதும்; ஆஸ்யாவும், நேரில் சந்தித்து தங்கள் விருப்பங்களை கொடுத்துப் பெறும்போதும் நாவலாசிரியர் அவர்களிருவர் உணர்வினை உச்சத்திற்கு வாசகனை, தன் வர்ணனைகளின் வழியாக வார்த்தைகளை காதல் நயத்தோடு பிரயோகித்து, அழைத்துச் சென்றிருப்பார்.. காதல் வயப்பட்ட ஆஸ்யா திடீரென்று ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு இரவோடு இரவாக தன் தனையன் காகினோடு செல்ல, எந்த உணர்வு அவளை நிர்பந்தித்தது..
மூன்று காதல் கதைகள் | Buy Tamil & English Books ...
எங்கு சென்றிருப்பாள்.? என்ற தேடலோடு நாவலை முடித்திருப்பார் துர்கேனிவ். காதலிக்கும் போது எல்லாக் காதலர்களுக்கும் தன் வயது ஒரு பொருட்டாகக் கொள்ளாமல் உதவிடும் நல்லவர்களும் வாழ்வார்கள். இந்த நாவலிலும் ஒரு கிழவி வருவாள் காதலின் அழகோடு.
அதே போன்று தம் இளம்பிராயத்தில் காதலுக்கும், ஈர்ப்பிற்கும் வித்தியாசம் தெரியாமல் வாழ்ந்த, உருகிய, தெளிந்த அனுபவங்களை “முதல் காதல்” நாவலில்,  மிஸ்சியோ வோல்தமையார், ஜினெய்தாவின் முதல் சந்திப்பு.. அவர்கள் இருவரும் தனிமையில் சந்தித்திடும் சூழல்.. ஜினெய்தா வேறொரு பார்வையில் இவரை அனுக.. வோல்தமையாவோ அதை காதலாக நினைத்திட, காதலாக நினைத்தவர், தன் மீது அன்பொழகப்பழகி வழிகாட்டிடும் தன் அப்பாவிற்கு மனைவியாக வரும் சூழலை அறிந்திடும் தருவாயில் இவருக்குள் ஏற்பட்டிடும் உள அமைதியின்மை..
ஒரு நேரத்தில் பிரிவொன்று வந்திடும் சூழலில் பிரிய வேண்டிய கட்டாயமேற்பட்டு; நெடுங் காலத்திற்குப் பிறகு ஜினெய்தா இருக்குமிடமறிந்து தேடிச் சென்று பார்க்கையில் நான்கு நாட்களுக்கு முன்னர்தான் இறந்து போனார் என்கிற செய்தி கிடைத்திடும் போது உள்ளத்தில் ஏற்படும் குற்ற உணர்ச்சியை வோல்தாமையார் எண்ணவோட்டத்தில் உணர்ச்சிப் பெருக்கின் உச்சத்தில் சொற்களை வழிய விட்டிருப்பார் நாவலாசிரியர். இந்நாவலில் எல்லவிதமான ஆண்களையும் கொண்டுவந்திருப்பார். ஒவ்வொரு ஆண்களும் பெண்களுக்குள் இருந்திடும் இன்னொமொரு அன்பின், இன்னுமொரு கூறினை, அவள் உணர்வினை காணமறுத்து உடல் சார்ந்து மட்டுமே அனுகத்துடித்திடும் வேகத்தை, ஆண்களுக்குள் இருக்கும் வன்மத்தை அப்படியே கண்முன் காட்சியாக்கி இருப்பார் தன் “முதல் காதல்” நாவலில் துர்கேனேவ் அவர்கள்.
“மூன்று காதல் கதைகள்” என்கிற மூன்று குறு நாவல்களின் மூன்றாம் கதை “வசந்த கால வெள்ளம்” நாவலில் ஜெம்மாவிற்கும் ஸான் திமித்ரிக்குமான அன்பினை.. எதிர் கொள்ளும் சவால் மிகுந்த தருணங்களை.. ஜெம்மின் குடும்ப உறவுகளின் பற்றில் இருந்து அனுகியிருப்பார் துர்கேனேவ். அன்பின் அடையாளமாகித் தன் காதலாக நின்றிடும் ஜெம்மாவிடமே ; அவரின் அம்மாவின் வேண்டுகோளை ஏற்று வேறு நபரை திருமணம் செய்து கொள்வதுதான் உங்கள் குடும்ப உறவுகளின் கஷ்டகாலத்திற்கு உதவிடும் என்கிற பேசும் நேரமதில்; தன்னைக் காதலிப்பவனே வேறு ஒரு நபரை தான் திருமணம் செய்திட வேண்டும் என்று தனது அம்மாவின் தூதுவராக இருந்து பேசிடும் மனம் கணக்கும் வேளையில்; ஜெம்மோ-திமிட்ரி இருவரின் அமைதியிலும்.. சின்னச் சின்ன வார்த்தைகளால் காதல் வலியோடு உரை நிகழ்த்தி இருப்பார் ஆசிரியர் அவர்கள்.
முடிவில் ஜெம்மோ-ஸான்திமித்ரி காதலுக்கு ஜெம்மோவின் தாய் ஒப்புமை வழங்கியதும், வாழ்க்கைக்கான பணம் ஒரு பிரச்சனையாக வந்திடும், பணத்தேவையொட்டி இன்னொரு வசதி மிக்குந்த பெண்ணை சந்திக்கும் வேளையில் உறுதியாக இருந்த திமித்ரி எப்படித் தடம்மாறிப் போனான் என்பதையும்; இரண்டு நாளில் பணத்தோடு வருவேன் என்று சொல்லிச் சென்ற திமித்ரி வராத நிலையில் ஜெம்மும் அவரின் குடும்பமும் என்னவானது என்பதை காதலின் வலியோடு பதிவு செய்திருப்பார் நாவலில் துர்கேனீவ். காதல் உணர்வு என்பது இளம்பிராயத்தில் பாலிண ஈர்ப்போடு, உடல் திமிரோடு வருவது மட்டும்தானா.? இணையலாம், சூழலின் காரணமாக விலகலாம் விலக்கலாம். பிரியலாம்,பிரிக்கலாம், இணைந்து பிறகு மன ஒப்புதலோடு பிரியலாம்..
மன வலியோடு இணைந்து மற்றவர்களுக்காக வாழும் சூழலுக்குள் தள்ளப்படலாம். ஆனாலும் அந்த முதல் காதலின் உணர்வு சுமந்த நெகிழ்ச்சியோடு சரியானதொரு புரிதலில் வாழ்க்கையின் வண்ணமனைத்தையும் வாரிப்பூசி மகிழ்வின் எல்லைகளைத் தொட்டு வாழும் பேரன்பின் அடையாளங்களாக பலர் நம்மோடு பயணித்து வருவதை இன்றளவும் பார்த்து வருகிறோம். முதல் காதல்.. எத்தனை வனப்பு மிக்கது.. மலைத் தேனின் இனிப்பையொத்தது.. பட்டாம்பூச்சியின் முதல் சிறகசைப்பல்லவா அது. ஓடுடைத்து வெளியேறும் குயிலின் இமை திறக்கும் சுகமானது. பச்சைக்கிளியின் முதல் கிக்கீ இசையது. முளைபிளந்து வெடிதெழும் உயிரின் விடுதலையது.
காதல் விழிகளின் தீண்டலில்தான் விடுயற்காலை பனியினையும் உச்சி வெயில் சூரியக்கதிர்களையும் சரிகலவையாக உட்கொண்டு வாழ்ந்திடும் சிறகு முளைத்த பறவைகளை வாழ்வின் பரந்த வெளியெங்கிலும் தாங்கி நிற்கும் நிலம்தான் எத்தனை வெகுஅழகானதன்றோ?!?.
 “மூன்று காதல் கதைகள்” வாசித்து முடித்ததும் மனிதர்கள் அனைவரையும் ஆழமாக நேசித்திடும் உணர்வு வரும். மனசின் ஓரத்தில் அடையாளமாகிக் கிடங்கும் மற்றோரு மனசோடு பேசத் தோணும்.
புது உற்சாகம் ஊற்றெடுக்கும். அதே கண்களை எங்கேயாவது சந்திப்போமா என்கிற ஏக்கத்தை ஊன்றிச் செல்லும். கிளர்ச்சியை ஏற்படுத்திய விழிகளை சந்தித்திடும் வேளையில், எங்கே எனது இசையென? எங்கே எனது கிளர்ச்சியென? எங்கே எனது வாசமென? எங்கே எனதின் சுகமான துக்கமென? பெரும் மதிப்போடு அந்த விழிகளை கெளரவப்படுத்தி  உச்சி முகர்ந்து கொண்டாட தேடுவோம்…உச்சிமுகர்ந்து கொண்டாடுவோம்.
மூன்று காதல் கதைகள்
இவான் துர்கேனிவ் (தமிழில் பூ சோமசுந்தரம்)
 புலம் வெளியீடு
கருப்பு அன்பரசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *