சு.இளவரசி- மூங்கிலில் துளை தேடும் காற்று | Moongil Thulai Thedum Katruசு.இளவரசி- மூங்கிலில் துளை தேடும் காற்று | Moongil Thulai Thedum Katru

இசையின் சித்திரங்கள்

வீரம் மட்டுமல்ல, கவிதையும், கலையும் செறிந்த செம்மண் பூமி சிவகங்கை; செறிவுமிக்க இலக்கிய படைப்புகள் நூலாக மலர்ந்த தேவ வனம். கவிஞர் அப்துல் ரகுமான் வழங்கிய “கவிக்கோ” விருதும், கவிஞர் சிற்பி வழங்கிய ‘வாழ்நாள்’ சாதனையாளர் விருதும் பெற்ற ஆளுமை மீரா அவர்கள். தரமான இலக்கியக் கூட்டங்களை சிவகங்கையில் இவர் நடத்தியுள்ளார். அவற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது “பாரதி நூற்றாண்டு விழா” நிகழ்வாகும்.

நவீன இலக்கிய நூல்களின் வேர் நிலமாக எண்பதுகளில் திகழ்ந்த பதிப்பகம் அன்னம்-அகரம். இப்பதிப்பகத்தை வழி நடத்தியவர் மீரா அவர்கள்; மீ.ராஜேந்திரன் இயற்பெயர். சிவகங்கைக்காரர். கவிஞர் என புகழ் பெற்றவர், கல்லூரி ஆசிரியர். வானம்பாடி இயக்கத்தைச் சேர்ந்தவர். திராவிட இயக்க ஆதரவாளராக இருந்தவர், பின்னர் அர்ப்பணிப்புள்ள மார்க்ஸிய. இலக்கியத்தை தன் அரசியல் – பண்பாட்டு நம்பிக்கைகளின் செயற்களமாக கண்டவர்.

1982-ல் பாரதி நூற்றாண்டுவிழா வந்தபோது அதையொட்டி அன்னம் 100 கவிதைத் தொகுதிகளை வெளியிட முற்பட்டது. “அன்னம் நவகவிதை வரிசை” என்று அதற்குப்பெயர். அத்தனையும் புதிய கவிஞர்களின் நூல்கள். இன்று கவிஞர்களாக அறியப்படும் அனைவரின் கவிதைகளும் முதல்முறையாக தொகுப்பாக அப்படித்தான் வெளியாயின. விக்ரமாதித்யன், கலாப்ரியா, வண்ணதாசன், வண்ணநிலவன் என எத்தனை பெயர்கள். அந்த தொகுதிகள்தான் எழுத்து தொடங்கிய புதுக்கவிதை மரபை ஆழமாக நிலைநிறுத்தின, அவை ஓர் இயக்கமாக புதுக்கவிதையை மாற்றின. மெய்யான இலக்கியச் சாதனை என்றால், இலக்கியப் பங்களிப்பு என்றால் அதுதான்.

இத்தகைய இலக்கிய சிறப்புமிக்க வேர் நிலத்தில் இருந்து இளம் ஹைக்கூ கவிஞராக “சு.இளவரசி” மொட்டவிழ்ந்து இருப்பது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. இவர் முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் அறம் கிளை தொடங்கப்பட்ட 2019-ல் இருந்து அக்கிளை உறுப்பினராகச் செயல்பட்டு வருபவர்.

“எழுதும் போது உனக்கும் உன் கருப்பொருளுக்கும் ஒரு மயிரிழை கூட இடைவெளி இருக்கக் கூடாது. உள்மனதை நேரடியாகப் பேசு. எண்ணங்களை களைய விடாமல் நேராகச் சொல்” என்பது ஹைக்கூ முன்னோடி “பாஷோ”-வின் செறிவார்ந்த வரிகள். இதனை தன் ஆதர்ஷனமாகக் கொண்டு ஹைக்கூ வெளியில் பயணித்து வருகிறார் கவிஞர் சு. இளவரசி. இவரது “மூங்கிலில் துளை தேடும் காற்று” என்கிற இந்த ஹைக்கூ கவிதைகள் நூலின் தலைப்பே ஒரு எளிய குறியீட்டுத் திறப்பாக அமைந்துள்ளது.

ஹைக்கூ படைப்பு வெளிப்பாடு என்பது ஒரு பொறி; கவிஞர் நிகழ் கணமாக மாறிவிடும் அற்புத உணர்வு நிலை. நிலவொளியில் நிலவாகவும், சூரிய ஒளியில் சூரியனாகவும் மாறிவிடும் குழந்தைமை உள்ளத்தில் இருந்து தான் உச்சம் பெற்ற ஹைக்கூக்கள் பிறக்க முடியும். ஹைக்கூ உலகில் ஆழ்ந்திருப்பது என்பது பருவங்களின் அழகில் ஆழ்ந்திருப்பது; குழந்தைமைக்குள் நம்மை இழந்திருப்பது.

இயற்கையின் எளிய அழகுகளில் வேறு ஒரு வாழ்வியல் சித்திரத்தைக் காணக்கூடிய அரூப அழகியல் மனதை கவிஞர். சு.இளவரசியிடம் காண முடிகிறது. மொழி ஆற்றலும், உணர்வாற்றலும் நுணுக்கமாகக் கரைந்து இவரிடமிருந்து வெளிப்படுகின்றன கவிதைகள்.

*
எழுந்ததும் திரை விலக்கிப்
பார்த்தேன்
முன்னெழுந்திருந்தது சூரியன்.
*
அதிகாலை பறவைகள்
கீச்சிட்டு வரவேற்றன
மேலெழுந்தது சூரியன்.
*

அன்றாட நிகழ்வாக உள்ள அனுபவத்தில் இருந்தே கவிஞரின் உள்ளம் படிமங்களைப் பெறுகின்றன என்பதற்கு இந்த கைக்கூக்களே சாட்சியாக அமைகின்றன. ஜப்பானிய ஹைக்கூ கவிதை மரபு எளிமையானது; சொற்களின் மீது கனத்தை ஏற்றாமல் இறகைவிடவும் லேசாக இருப்பவைகள். அத்தகையத் தன்மையை இக்கவிஞரின் கவிதைகளிலும் காண முடிகிறது.

*
வண்ணங்களைக் கண்டதும்
தூரிகை ஏந்தியது
மனம்.
*
என கவிஞரின் சொற்கள், உணர்வு கணத்தை மறு உருவாக்கம் செய்கின்றன.

*
சன்னலைத் தட்டும் சத்தம்
திறந்து பார்த்தேன்
மரக்கிளை உரசல்.
*
என, அறிந்த அறியாத அபூர்வங்களை வெளிப்படுகின்றன கவிஞரின் கைக்கூக்கள்.
*
பறவையோடு
சேர்ந்தே பறந்தது இலை
விழுந்தது இலை மட்டுமே.
*
ஆகாயத்தில் பறக்கும் பறவைகள் ஒன்று போல் காட்சியளித்தாலும் அவை ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுபவை. இயற்கையின் நிகழ்வுகளைக் கண்டு வியப்புறாமல் ஒன்றிப்போய் கவிதையாக்கும் கவிஞர் சு.இளவரசியின் கவி உணர்வு தமிழ் ஹைக்கூ உலகுக்கு வரவேற்கத்தக்க புது வரவு. யதார்த்தமும், மீ-யதார்த்தமும் முயங்கிய புள்ளியில் இருந்து இவரது கவிதைத் தளம் இயங்குகின்றன.

“பயணியின் சங்கீதங்கள்” எனும் “சுகுமாரனின்” கவிதைத் தொகுப்பில் ‘இசை தரும் படிமங்கள்’ எனும் கவிதையில்,
“விரல்களில் அவிழ்ந்தது தாளம்

புறங்களில் வீசிக் கசிந்தது குரல்”
எனும் வரிகளை வாசித்தவர்கள் அதே அடங்கிய உணர்வுப் படிமங்களை சு.இளவரசியின் ஹைக்கூக்களிலும் விரவிக் கிடப்பதை உணர முடியும்.

மலரைப் பொறுத்தவரை பூப்பதும் அழகு; உதிர்வதும் அழகுதான். இந்த இருவேறு முரண்பட்ட அழகுகளின் தரிசனம் காணக் கிடைக்கின்றன இத் தொகுப்பில்.

சொற்களால் கட்டமைக்கப்பட்ட சித்திரங்கள் என்றே சொல்ல வேண்டும் இத் தொகுப்பிலுள்ள ஹைக்கூக்களை. அந்த வகையில் தமிழ் ஹைக்கூ நூல்களின்

வரிசையில் முக்கியத்துவம் பெறுகிறது சு.இளவரசியின், “மூங்கிலில் துளை தேடும் காற்று” என்கிற இந்த ஹைக்கூ கவிதைகள் நூல்.

நூல் விபரம் :

நூல் : “மூங்கிலில் துளை தேடும் காற்று”
வகைமை : ஹைக்கூ கவிதைகள்
ஆசிரியர் : சு.இளவரசி
முதல் பதிப்பு : ஆகஸ்ட் 2023.
பக்கங்கள் : 64
விலை : ரூ.70/-
வெளியீடு : “அகநி” 
3, பாடசாலை வீதி, அம்மையப்பட்டு,
வந்தவாசி – 604 408. திருவண்ணாமலை மாவட்டம்.

தொடர்பு எண் : 94443 60421.

 

எழுதியவர் 

துரை. அறிவழகன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *