மூங்கிலில் துளை தேடும் காற்று - ஹைக்கூ | Haikoo - Moongil Thulai Thedum Katru

மூங்கிலில் துளை தேடும் காற்று என்ற ஹைக்கூ கவிதை தொகுப்பை எழுதிய ஆசிரியர் சு.இளவரசி அவர்கள் இயற்கை மருத்துவம் பயின்று பின்பு அக்குபஞ்சர் மருத்துவத்தில் முறையான பயிற்சி பெற்று அக்கு ஹீலராக பணியாற்றி வருகிறார்.

சிறுவயதிலிருந்தே தமிழில் ஆர்வமாய் இருந்த இளவரசி அவர்கள் அதை மேலும் ஆழமாக உணர தொடர் வாசிப்பே தீர்வு என்பதை த.மு.எ.க ச அறம் கிளையில் இணைந்த பின்பு அறிந்து கொண்டு அறம் கிளை முன்னெடுத்த பயிலரங்குகளில் கலந்துகொண்டு தன்னை மெருகேற்றிக் கொண்டு ஹைக்கூ கவிதைகளை எழுத ஆரம்பித்தார்..

அறம் கிளை நடத்தும் நூல் விமர்சனப் போட்டிகளில் கலந்து கொண்டு பலமுறை பரிசுகளைப் பெற்றிருக்கிறார்.அறம் கிளை வெளியிட்ட கண்ணில் தெரியும் கடவுள் என்ற ஹைக்கூ கவிதை தொகுப்பில் இவருடைய ஹைக்கூ கவிதைகள் இடம் பெற்றுள்ளன. தொடர்ந்து புக் டே இணைய இதழ், வண்ணக் கதிர், தூண்டில் ஹைக்கூ இதழ் ஆகியவற்றில் இவருடைய ஹைக்கூ கவிதைகள் இடம் பெற்றுள்ளன.

ஹைக்கூ கவிதை இரண்டு வரிகளில் தான் நினைக்கும் கருத்தைக் கூறி மூன்றாவது வரியில் அதற்கான விடையையும் கூறுகிறது. ஹைக்கூ கவிதைகளை எழுதுவதற்கு கருப்பொருளை எங்கும் தேடி அலைய வேண்டியதில்லை தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை கருப்பொருளாகக் கொண்டு ஹைக்கூ கவிதைகளை எழுதிவிட முடியும் என்பதை இக்கவிதைத் தொகுப்பில் நிருபித்திருக்கிறார் ஆசிரியர்.

ஒவ்வொரு ஹைக்கூ கவிதையையும் வாசிக்கையில் நாம் அன்றாடம் பார்க்கும் சாதாரண விஷயத்தையும், வாழ்க்கை சம்பவங்களையும் ஆசிரியர் கவிதையாக வடிவமைத்துள்ளதை அறியலாம். இவ்வளவு நாட்களாக நாம் சாதாரணமாக கடந்து போன இந்த விஷயம் கூட கவிதையாக மாறுமா என்று நினைத்து நம்மை ஆச்சரியப்பட வைக்கிறார்..

அவருடைய ஹைக்கூ கவிதைகளில் என் மனதிற்கு பிடித்த மற்றும் என் சிந்தனையைத் தூண்டிய சில கவிதைகளைப் பார்ப்போம்.

கீழே விழுந்ததும்
நிற்காமல் ஓடியது
ஆறாய் மாறிய அருவி.

நாம் அனைவரும் நீர்வீழ்ச்சிக்கு பலமுறை சென்று வந்திருப்போம். அந்த நீர்வீழ்ச்சியை கண்டதும் ஆசிரியரின் மனதில் மட்டும் கவிதையாய் உருவெடுத்துள்ளது..

வீடு வந்து சேர்வதே
பெரும்பாடாகி விடுகிறது திருவிழாவில் வாங்கிய பலூன்ரக்கு.

உண்மைதானே.திருவிழாவிற்கு சென்று குழந்தைகளுக்கு நாம் பலூன் வாங்கிக் கொடுக்காத நாளுமில்லை. அது உடையாமல் வீடு வந்து சேர்ந்ததும் இல்லை.

கூலித் தொழிலாளியின் சோம்பேறி மகன்
பறவையின் சிறகில் பட்டாம்பூச்சி..

நம் நாட்டில் கூலித் தொழிலாளி உழைத்து தன் குடும்பத்தை காத்து தன் மகனை படிக்க வைத்து பெரிய ஆளாக்க வேண்டும் என எண்ணுகையில் அதற்கு நேர் மாறாக மகன் சோம்பேறியாயிருப்பது ஒரு புறம் வருத்தத்தை ஏற்படுத்தினாலும் பறவையின் சிறையில் பட்டாம்பூச்சி என உவமைப்படுத்திக் கூறியிருப்பது என் மனதைக் கவர்ந்தது..

ஓயாது பேசிக்கொண்டே நகர்ந்தது
ஆறு.

என்று ஆற்றின் சலசலப்பை ஆறு பேசிக் கொண்டே செல்வதாக தன் கற்பனை நயம்படக் கூறியிருப்பது அருமை..

பருவமடைந்த மகள் தனியறையில்
பிரிவின் ஒத்திகை

பெண்ணாகப் பிறந்து விட்டாலே அவள் வேறொரு வீடு செல்வதற்கு தயாராக்கப்படுகிறாள் என்பதை இக்கவிதை கூறுகிறது..

ரோஜாவை இன்று
பிடிக்கவே இல்லை
அப்பாவின் மீது மாலையாக.

இக்கவிதையை வாசித்தவுடன் என் மனது அசைவற்று சிறிது நேரம் நின்று விட்டது. ஒவ்வொரு பெண்ணிற்கும் தன் தந்தை தான் ரோல் மாடல். தந்தையின் மரணத்தினால் அவளுக்கு ஏற்படும் மன வருத்தத்தினை இவ்வாறு பதிவு செய்கிறார் ஆசிரியர்..

கோயிலில் மலக்குழி அடைப்பு இறங்கி எடுத்தவனை காணாதிருந்த கடவுள்.

நம் நாட்டில் தீண்டாமை எனும் கொடுந்தீயில் மனிதர்கள் அல்லலூருவதும் பாரா முகமாய் கடவுள் இருப்பதையும் குறிக்கிறது..

கூண்டைத் திறந்ததும்
பறக்காது இருந்தது கிளி ஜோதிடரை பிரிய மனமின்றி…

இந்தக் கவிதையை வாசிக்கும் போது இது போன்று தான் பல பெண்கள் கூண்டுக்கிளிகளாக வெளிவர முடியாமல் அதுவே தனக்கு வேலியாக நினைத்து சிறையில் இருந்து கொண்டிருக்கிறார்கள் என்பது நினைவிற்கு வந்து சென்றது..மலர்ந்ததும் விரியும் பூ
சுருங்கிப் போனதே பூப்பெய்தவனின் உலகு.

என்ற கவிதை இன்றும் பல பெண்கள் பெரியளாகியவுடன் வீட்டினுள் அடக்கி வைக்கப்படுவதை சுட்டிக்காட்டுகின்றது.

பகல் முழுவதும் பிரிந்து
இருளில் சேர்கின்றன
கதவுகள்..

என்ற கவிதையை வாசிக்கும் போது நாமும் தினமும் இந்த செயலைச் செய்து கொண்டு தான் இருக்கிறோம் ஆனால் அது ஆசிரியரின் கவிமனதில் கவிதையாக முகிழ்ந்திருப்பது சிறப்பு.

கடிதத்திற்கு பிடிக்கவே இல்லை தன் கீழிருந்த
அலைபேசி எண்ணை..

இக்கவிதையில் அலைபேசி எண் வந்ததும் கடிதங்கள் காணாமல் போய்விட்டதை நமக்கு நினைவூட்டுகின்றார் ஆசிரியர்.

இதுபோன்றே வாளியில் ஏறிய நிலா கிணற்றுக்குள் குதிப்பது, மழை நீரினால் பாறை தாகம் தீர்ப்பது, பள்ளி திறப்பதால் உற்சாகமடியும் ஆழம் விழுதுகள், தீபாவளிக்கு புதுத்துணியாக மாறிய பள்ளிச் சீருடை, உறவுகள் பிரிந்து காற்றுறுந்த பட்டமாவது, காற்று இசையாக மாற மூங்கிலிலே துளை தேடுவது, காய்கறி வியாபாரியின் வயிறு காய்ந்திருப்பது ,, பூட்டிய அலமாரியில் இருந்து வெளிவரத் துடிக்கும் படிக்காத புத்தகங்கள் எனப் பல சிறப்பான கவிதைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

இவருடைய கவிதைகள் மிக நேர்த்தியாகவும், எளிமையாகவும், ஆழமான கருத்துடையவையாகவும் உள்ளன..அனைத்து கவிதைகளும் நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளைக் கொண்டு கூறியிருப்பது சிறப்பு..

சில கவிதைகள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன.சில கவிதைகள் அழகைக்கின்றன.. சில கவிதைகள் வியப்பூட்டுகின்றன. ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு உணர்வு நிலைக்கு நம்மைக் கொண்டு செல்கிறது தோழர்.இளவரசி இது போன்று மேலும் பல கவிதை தொகுப்புகளை மட்டுமின்றி சிறுகதை | நாவல் போன்ற பல தளங்களில் பரிணமிக்க வாழ்த்துகள் நன்றி.

 

நூலின் தகவல்கள் 

புத்தகம் : மூங்கிலில் துளை தேடும் காற்று (ஹைக்கூ கவிதைகள்)
ஆசிரியர் :சு.இளவரசி
பக்கங்கள்: 64
பதிப்பகம் : அகறி வெளியீடு

 

எழுதியவர்

ச சுபாஷிணி திருச்சி

 

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 2 thoughts on “சு.இளவரசி எழுதிய “மூங்கிலில் துளை தேடும் காற்று(ஹைக்கூ கவிதைகள்)” – நூலறிமுகம்”
  1. சிறப்பான நூல் விமர்சனம்..கவிதைகளுக்கு தோழர் சுபாசினி எழுதிய விமர்சனம் . புத்தகத்தை வாசிக்கும் ஆவலை எழுப்புகிறது.

    1. பளீர் என்று தலையை இப்புறமும் அப்புறமும் ஆட்டி திடீர் என என்ன ஆயிற்று என யோசிக்க வைக்கும் தரம் கொண்ட ஹைக்கூ பல உள்ளன இந்த புத்தகத்தில் என்று காட்டுகிறது இந்த நூலறிமுகம். ஹைஜீன் இளவரசிக்கும் விமர்சகர் சுபாஷிணிக்கும் பாராட்டுக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *