இருபதாம் நூற்றாண்டுத் தமிழகம், உவந்தளித்த பெரும் மக்கள் பணியாளர்களில் முதல் இடத்தில் இடம்பெறுபவர் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார். பேருழைப்பைச் சமூக உயர்வுக்கு அளித்த பலரை வரலாறு தற்காலிகமாக மறக்கும். ஏனெனில் எழுதுபவர்கள் பாரபட்சமானவர்கள். இந்நிலைமை எப்போதும் அப்படி இருக்காது. மாறும். மாற்று வரலாறுகள், அடித்தள வரலாறுகள் மேலெழும்போது, ஆண் மைய வரலாறுகள் அடிபட்டுப் போகும்.
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், காங்கிரஸ் பேரியக்கச் செயல்பாடுகளில் தன்னை இணைத்துக் கொண்டவர். தந்தை பெரியார், காங்கிரஸை விட்டு வெளியேறியபோது அவருடன் வெளியேறி, சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கங்களில் செயல்பட்டார். சமூகத்தில் பேரிழிவாக நிலவிய ‘தேவதாசி’ வழக்கத்துக்கு எதிராகப் பெரும் போர் இயற்றினார்.
பெரியாரின் சிந்தனைகள், முற்போக்குக் கருத்துகளை வளரும் இளம் தமிழர்களிடம் கொண்டுச் சேர்த்ததில் அவருக்கு மிக முக்கிய இடம் உண்டு. ஆடம்பரத் திருமணங்கள், வரதட்சணை எதிர்ப்பு, சுயமரியாதை திருமணம், சாதி மறுப்புத் திருமண ஆதரவு, விதவைத் திருமணம் பரவல், மூட நம்பிக்கை ஒழிப்பு போன்ற கொள்கைகளுக்காக, சமூக மாற்றத்துக்காக வீதியில் வந்து முழங்கிய, ஒற்றைப் போராளி அவர். சனாதனர்களின் மிகப்பெரும் எதிர்ப்புக்கிடையேதான் இவைகளை எல்லாம் செய்தார்.
ராமாமிர்தம் வாழ்வும் பணியும்
ஒரு சமூகத்தை முன் நகர்த்தக்கூடிய வாழ்க்கையை வாழ்ந்த ராமாமிர்தத்தின் வாழ்க்கையை, பா.ஜீவசுந்தரி எழுதியுள்ளார். ‘மூவலூர் ராமாமிர்தம் வாழ்வும் பணியும்’ எனும் தலைப்பிலான, உண்மையும் அடர்த்தியுமான நூலை ‘பாரதி புத்தகாலயம்’ வெளியிட்டுள்ளது.
அன்றைய தஞ்சை மாவட்டத்தில் திருவாரூரில் 1883-ல் பிறந்த ராமாமிர்தம் வளர்ந்தது, வாழ்ந்தது மூவலூரில். தந்தை கிருஷ்ணசாமி. தாயார் சின்னம்மாள். கிருஷ்ணசாமிக்குக் கல்வி அறிவும் இல்லை. ‘தேவதாசி’ சமூகத்தில் பிறந்த (இக்காலத்தில் இசை வேளாளர் என்று அறியப்படுபவர்கள்) அவருக்குக் கலை அறிவும் இல்லை. வாழ்க்கை சிரமமாயிற்று. வறுமையில் இருந்து மீள முடியாத அவர், ஒரு நாள் இரவு மனைவியையும் குழந்தையையும் விட்டு வெளியேறிவிடுகிறார். கணவனைக் காணாத மனைவி தேடுகிறார். மகள் மற்றும் பேத்தியின் வாழ்க்கை நிலைகுலைந்தது கண்டு, அதே துயரில் சின்னம்மாளின் தாயும் இறந்துவிடுகிறார். குழந்தை ராமாமிர்தத்தைத் தூக்கிக்கொண்டு அலைகிறார் சின்னம்மாள். ஆதரிப்பார் இல்லை.
10 ரூபாய்க்கு விற்கப்பட்டவர்
குடும்பத்தைவிட்டு நீத்த கிருஷ்ணசாமி சென்னையில் வீட்டுவேலை செய்து பிழைப்பது தெரிந்தது. சென்னை செல்லவிரும்புகிறார் சின்னம்மாள். குழந்தையாவது சாப்பிட்டுப் பிழைக்கட்டும் என்று, மூவலூரில் இருந்த ஆச்சிக்கண்ணு என்ற தாசியிடம் குழந்தையை விற்றாள் தாய். பத்து ரூபாய், ஒரு பழைய புடவை – இவற்றுக்கு 5 வயது ராமாமிர்தம் விற்கப்பட்டார். அந்த 10 ரூபாய் பணத்தில் சென்னைக்கு வண்டி ஏறினார் தாய்.
ராமாமிர்தம், ஒரு வயதை அடைந்தபோது தாசித் தொழிலுக்கு முன்னோட்டமான சலங்கை பூஜை நடந்தது. ராமாமிர்தம் சங்கீதமும், சமஸ்கிருதமும், புராணங்களும் கற்றார். கோயிலுக்குப் பொட்டு கட்டுவதில், மற்ற தாசிகள் இடையூறு செய்ததில் பிழைத்தார் ராமாமிர்தம். என்றாலும் அவருடைய 17-வது வயதில் 65 வயது தனவந்தர் ஒருவர் அவரைத் திருமணம் செய்துகொள்ள முன் வந்தார். வளர்ப்புத் தாய் சம்மதித்தாள். ராமாமிர்தம் சம்மதிக்கவில்லை. அவர் அறிந்த சங்கீத ஆசிரியர் சுயம்பு பிள்ளையிடம், தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படிக் கேட்டார். வடுவூர் கோயிலில் அவர்கள் திருமணம் நடைபெற்றது.
ராமாமிர்தம் அம்மாளுக்குக் காங்கிரசின் (அந்தக் காலதத்துப் போராட்டக் கட்சி) மீது ஈடுபாடு ஏற்படக் காரணம், காந்தியார் தாசிகளை, ‘வழுக்கி விழுந்தவர்கள்’ என்று அழைத்து, அவர்கள் வாழ்க்கை விடியலுக்குக் காங்கிரஸ் தலைவர்கள் போராட வேண்டும் என அழைப்பு விடுத்து உழைத்தது என்று ஜீவசுந்தரி ஆதாரத்துடன் கூறுகிறார். காந்தி பற்று, கதர்த் துணியின் மேலும் சென்றது. கதரைத் தமிழர்களிடம் கொண்டுச் சேர்த்ததில் பெரியாருக்கு நிகராக உழைத்துள்ளார் அவர்.
குடிசைக்கு குடியேறினார்..
ராமாமிர்தத்திடம் உள்ள முக்கிய மனோபாவம் இதுதான். எந்தப் பணியை மேற்கொள்கிறாரோ, அதில் மிச்சம் வைக்காமல் தன்னை ஈடுபடுத்திக்கொள்வது. மனம்,மொழி, உடலால் உண்மையோடு உழைப்பவர். மாளிகையைத் துறந்து குடிசைக்குச் செல்லுங்கள் என்றார் காந்தி. தன் வீட்டுக்குப் பக்கத்தில் குடிசை போட்டுக்கொண்டார் ராமாமிர்தம்.
இசை வேளாளர் மாநாடு ஒன்றை, தமிழ்நாட்டில் முதல்முறையாகச் சொந்தச் செலவில்,மூவலூரில் நடத்திக் காட்டினார் ராமாமிர்தம். காங்கிரஸ் தலைவர்கள் முதல் மக்கள் வரை, பரவலாக அறியப்பட்ட அம்மையாருக்கு எதிர்ப்பும் குறைவு இல்லை. குறிப்பாக, எந்த இழிவு ஒழிய வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டாரோ, அதற்குச் சாட்சியமான தேவதாசிகளே அவரை எதிர்த்தார்கள். சனாதனிகள், ‘தர்மத்தைக்’ காப்பாற்றுபவர்கள் மத்தியில் அவரை எதிர்த்தார்கள் பலர். அம்மையார் நாடகம் மூலமும் தன் கருத்தைப் பிரச்சாரம் செய்தார். சகிக்க முடியாத ஒரு கும்பல் மேடையில் ஏறி, நடிப்பில் ஈடுபட்டிருந்த அம்மையாரின் கூந்தலை அரிவாளால் அரிந்துவிட்டனர். அதன்பிறகு, அம்மையார், ‘கிராப்’ வைத்துக்கொண்டார். தனக்குத்தானே முடி வெட்டிக்கொண்டார்.
ஒரு இசை வேளாளர் வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, அந்த வீட்டுப் பெண்மணி குடிக்கப் பால் கொடுத்தார். ஒரு மிடறு. வாய் எரிந்தது. பாலில் விஷம் கலந்திருந்தது. எவ்வளவு கேட்டும், போலீஸாரிடம் பால் கொடுத்தவரை காட்டிக் கொடுக்கவில்லை ராமாமிர்தம்.
காகிநாடாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டுக்கு கொடி பிடித்துச் செல்லக் கூடாது என்று வெள்ளையர்கள் உத்தரவு போட்டார்கள். கொடிதானே பிடிக்கக் கூடாது? ராமாமிர்தம் அம்மாள் கொடிகளை இணைத்துப் புடவையாக்கிக் கட்டிக்கொண்டு மாநாட்டுக்குச் சென்றார்.
இயக்கத்துக்கு இடம்பெயர்ந்தார்
1925-ல் காங்கிரஸின் சனாதனத்தை எதிர்த்து, அக்கட்சியில் இருந்து வெளியேறினார் தந்தை பெரியார். உடன், அதே காரணத்துக்காக ராமாமிர்தமும் காலடி மண்ணைத் தட்டிவிட்டு சுயமரியாதை இயக்கத்துக்கு வந்து சேர்ந்தார்.
தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் நிறைவேற தந்தை பெரியாரின் பெருமுனைப்பும், ராமாமிர்தம் அம்மையாரின் கால் நூற்றாண்டு உழைப்பும், உடன் முத்துலட்சுமியின் பணியும் உரித்தாகும். 1938- முதல் இந்தி எதிர்ப்புப் போரில் ஆறு மாதச் சிறைத் தண்டனை பெற்றார் ராமாமிர்தம் அம்மையார்.
1949-ல் திராவிடர்க் கழகம் உடைந்தது. பெரியார் மணியம்மை திருமணமே காரணம் என்று சொல்லப்பட்டது. ‘எனக்குப் பின் இயக்கம் நடத்த எவருக்கும் தகுதி இல்லை’ என்றார் பெரியார். ‘எனக்குக் கூடவா தகுதி இல்லை? என்னை ஏன் வாரிசாக ஏற்றுக்கொள்ளக் கூடாது’ என்றார், 25 ஆண்டுகள் பெரியாரோடு இயக்கப் பணியாற்றிய அம்மையார்.
மகிழ்ச்சி அடைந்த நிகழ்ச்சி
மணப்பாறை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளச் சென்றார் அம்மையார். அப்போது அண்ணாவிடம் இருந்து தந்தி வந்தது. , தூத்துக்குடியில் நடிக்கும் நாடகத்துக்கு தலைமை ஏற்று நடத்தித் தரக் கேட்டிருந்தார் அண்ணா. தந்தியைப் படித்த அம்மையார், அருகில் இருந்த டி.கே.சண்முகத்திடம் சொன்னார்: ‘‘நானும் இத்தனை வருடங்களாக இயக்கப் பணி செய்திருக்கிறேன்.
எந்த நிகழ்ச்சியிலும் என்னைத் தலைமை ஏற்கும்படி இதுவரை ஒருவரும் கேட்டதில்லை!’’ என்றார் அந்த 70 வயதுப் போராளி.
சுயமரியாதை இயக்கத்துக்காக உழைத்தவருக்கான விருதும் முதன்முதலாக அண்ணாவால் அம்மையாருக்கே அளிக்கப்பட்டது. கலைஞர், திருமண உதவித் திட்டத்தை அம்மையார் பேரில் வழங்கினார்.
தாசிகளின் வாழ்க்கையை, தன் அனுபவத்தையும் இணைத்து அம்மையார் எழுதிய நாவல் ‘தாசிகள் மோச வலை’. அண்ணாவின் ‘திராவிட நாடு’ ஏட்டில் ‘தமயந்தி’ என்கிற தொடர்கதையும் எழுதியிருக்கிறார். குறிப்பாக இஸ்லாம் பற்றிய அவரது எழுத்து முக்கியமானது. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் 1962-ல் மறைவெய்தினார்.
5 வயதில் 10 ரூபாய்க்கு விற்கப்பட்ட குழந்தை, கோயிலுக்குப் பொட்டுக் கட்டித் தாசியாவதில் இருந்து தப்பித்த இளம்பெண், தாசி மரபு ஒழிப்புக்காகத் தன் வாழ்க்கையைத் தியாகம் செய்த பெண்மணி, காங்கிரஸ் மூலம் சுதந்திர இயக்கம், தந்தை பெரியாரின் துணையோடு சுயமரியாதை இயக்கம், விதவை மறுமணம் முதலான புரட்சிகரப் பிரச்சாரத்தைத் துணிவோடு செய்த வீராங்கனை – தன் வாழ்வோடு பெண் விடுதலையை இணைத்துக்கொண்ட தியாகி என்றெல்லாம் சொல்லத் தகும் ஒரு தலைவருக்குத் தகுதியான வாழ்க்கை வரலாறு இல்லை என்ற பழியைத் துடைத்திருக்கிறார் எழுத்தாளர் பா.ஜீவசுந்தரி.
முனைவர் ச.ஆனந்தியின் அணிந்துரை, நூலுக்கு நிறை செய்துள்ளது.
#ஆசிரியர்:பா.ஜீவசுந்தரி
#வெளியீடு:பாரதி புத்தகாலயம்
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/moovalur-eramamertham-vayium-panium.html
(நன்றி: தி இந்து http://tamil.thehindu.com/ge…/literature/article21997196.ece)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *