1933-39களுக்கு இடைப்பட்ட, உலகப் பொருளாதாரப் பெருமந்த காலத்தில் அமெரிக்க ஐக்கிய நாடுகளை மீண்டெழச் செய்வதாக ஃப்ராங்க்ளின் டி ரூஸ்வெல்ட்டின் “புதிய பயனுரிமைக் கொள்கை”யின் மூலம் துவக்கி வைக்கப்பட்ட திட்டங்கள் இருந்தன.

“புதிய பயனுரிமைக் கொள்கை”த் திட்டங்கள் நிறுவனங்களின் செயல்பாடுகளை அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தன. பொதுப்பணித் திட்டங்கள், நிதிச்சீர்திருத்தங்களின் மூலமாக, மக்களுக்குத் தேவையான  வேலைவாய்ப்புகளை உருவாக்கியும், மக்களின் கைகளில் நேரடியாகப் பணத்தை வழங்கியும், அவர்களுடைய வாழ்வை மறுகட்டமைப்பதே நோக்கமாக இருந்தது. ’நிவாரணம், சீர்திருத்தம் மற்றும் மீட்பு’ என்பதே புதிய பயனுரிமைக் கொள்கையின் தாரகமந்திரமாக இருந்தது.

கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக, தற்சமயம் இந்தியப் பொருளாதாரத்தில், பெருமந்தகாலத்தில் அமெரிக்காவில் இருந்தது போன்ற சூழலே நிலவுகிறது. ஆயினும் கோவிட்-19இன் பொருளாதார தாக்கத்தை எதிர்கொள்வதற்காக சீர்திருத்தம் என்ற பெயரில் நரேந்திரமோடி-ஆர்எஸ்எஸ்சின் கூட்டணி துவங்கியுள்ள நடவடிக்கைகளை, ரூஸ்வெல்ட்டின் புதிய பயனுரிமைக் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிர்நிலையில் இருக்கின்ற அந்த நடவடிக்கைகளை, “பழைய பயனுரிமைக் கொள்கைகள்” என்றே கூறமுடியும்.

இந்தக் கொள்கை நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ்சின் தலைமையகத்தில் எழுதப்பட்டது போன்றே  தோன்றுகிறது. குப்த பேரரசுகளின் காலம் பொற்காலம் என்றழைக்கப்படுவதைப் போல, பேரரசின் பகட்டான ஆரவாரத்தை மீண்டும் உருவாக்குகின்ற முன்மாதிரியாகவே அவர்களுடைய சிந்தனை இருப்பதாகத் தோன்றுகிறது.

பெண்தெய்வமான லெட்சுமியின் பாத்திரத்தை ஏற்றுக் கொள்ளுமாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார். அம்பானி, அதானி போன்ற ஜாம்பவான்கள் தலைமையேற்றிருக்கக்கூடிய தனியார் துறைக்கு, அவர் மேலும் மேலும் கூடுதலாக பணத்தை அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராணுவம் மற்றும் இதர முதன்மைத் துறைகளில் அரசின் பங்களிப்பைக் குறைத்துக் கொள்ளும் விதத்தில், இருபது லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருளாதாரத்தைத் தூண்டும் நடவடிக்கைகளுக்கான அவருடைய அறிவிப்பே, கோவிட்-19க்கான தூண்டுதல் தொகுப்பின் உண்மைக் கதையைச் சொல்லிவிடுகிறது.

இன்று மேலும் புதிய அறிவிப்புகளை ...

நிலத்தை உழுபவர்கள், அறுவடை செய்பவர்கள், கால்நடைவளர்ப்பவர்கள், கைவினைஞர்கள் மற்றும் தங்களுடைய கிராமங்களை அடைவதற்கு நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் நடந்தே சென்ற லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் என அனைவரையும், நிதியமைச்சர் புதிய தொழிற்துறை முதலாளிகளுக்கு பணிபுரியுமாறு கேட்டுக்கொள்வதாகவே தெரிகிறது. கடின உடலுழைப்பை வழங்கக் கூடிய எவரொருவரும் வர்ணதர்ம சமூகத்திற்குச் செய்ய வேண்டிய சேவைகளைத் தங்கள் கடைமையாகச் செய்யவேண்டும். செய்கின்ற வேலையைப் புனிதமான ஒன்றாகப் பார்க்கவேண்டுமேயன்றி, கூலிக்காகச் செய்கின்ற தொழிலாக அவர்கள் பார்க்கக் கூடாது என்பது போன்ற நீண்டகாலப் பாரம்பரியம் கொண்ட வர்ணதர்மப் பொருளாதாரம் மற்றும் சொத்து பங்கீட்டு முறைகளை மீண்டும் உயர்த்திப் பிடிப்பதே இந்த தூண்டுதல் தொகுப்பு அறிவிப்பின் பின்னணியில் உள்ள  சிந்தனையாக இருக்கிறது. ஊரடங்கு காலத்தில் யாரெல்லாம் நடந்தார்களோ, பட்டினி கிடந்தார்களோ அல்லது இறந்தார்களோ, அவர்களெல்லாம் இந்த தேசத்திற்குச் சேவை செய்தவர்கள் என்பதே அந்த  பாரம்பரியத்தின் ஒரு பகுதி.

பண்டைய இந்தியாவில் இருந்த குப்த பேரரசுகளின் பொற்காலத்தில், உற்பத்தி ஆற்றல்மிக்க சமூகமான சூத்திரர்களை நலிவடையச் செய்ததைப் போல, இன்றும் பொதுச் சொத்துக்களை தனியாருக்கு  மாற்றுவதன் மூலம் தற்கால ‘பொற்காலத்தை’ உருவாக்குவதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. குப்தர்களின் ‘பொற்காலத்தில்’ சூத்திரர்கள் இரும்பு காலத்திற்குத் தள்ளப்பட்டனர். கோவிட்-19க்குப் பின்னால் ‘ஆத்மநிர்பார்பாரத்’ என்ற பெயரில், இந்தியாவில் மறுபடியும் அத்தகைய சூழ்நிலைதான் ஏற்படப் போகிறது.

130 கோடி மக்கள் இருக்கின்ற நாட்டில் ஊரடங்கை அமுல்படுத்துவதற்கு முன்பாக, பிரதமர் மோடி, ஏன் நான்கு அல்லது ஐந்து மணி நேரகால அவகாசம் மட்டுமே கொடுத்தார். இவர்களில் குறைந்தது 20 -25 கோடிப்பேர் புலம்பெயர் தொழிலாளர்கள், இந்தியாவின் தொலைதூரத்திலிருந்து இடம்பெயர்ந்து மும்பை, டெல்லி, கொல்கத்தா, அகமதாபாத், பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், சூரத் மற்றும் பல நகரங்களில் வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்கள், வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அல்ல.  அந்த அறிவிப்பு நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு முன்னதாகவே அறிவிக்கப்பட்டிருந்தால், முதலாளிகளும் தொழிலாளர்களும் உடன்பாட்டிற்கு வந்திருக்க முடியும். அதன் விளைவாக தங்களுடைய வயிற்றில் கொஞ்சம் உணவுடன், நுரையீரல்களில் கொரோனாவைரஸ் இல்லாமல், தொலைதூரத்திலுள்ள தங்கள் கிராமங்களை தொழிலாளர்கள் சென்றடைந்திருக்க முடியும்.

அப்பொழுதுவரை ரயில்கள், பேருந்துகள், டாக்சிகள் இயங்கிக் கொண்டுதான் இருந்தன. மே 24 அன்று ஊரடங்கை பிரதமர் அறிவித்த விதம், பூகம்பம் ஏற்படுத்துவதைப் போல் மிகப்பெரிய அளவிலான இறப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் என்பது போன்றதொரு அச்சத்தை ஏற்படுத்தியது. மே 24க்குப் பிறகு முதலாளி தொழிலாளி என்ற உறவே சிறிதும் இல்லாமல் போனது, சற்றும் எதிர்பாராத நேரத்தில் அன்றிரவே அது முறிக்கப்பட்டு விட்டது. கட்டிடத் தொழிலாளர்களால் தங்களுடைய ஒப்பந்ததாரர்களிடம் பேச முடியவில்லை. சிறிய தொழிற்சாலைகள், பலசரக்குக் கடைகள் மற்றும் துணிக்கடைகளில் வேலை பார்த்து வந்த தொழிலாளர்களுக்கு, தங்களுடைய முதலாளிகளைச் சந்தித்து, அதுவரை பார்த்த வேலைக்கான கூலியைக் கூட கேட்டுப் பெறுவதற்கான் வழி இருக்கவில்லை.

PM Modi Speech HIGHLIGHTS: To battle Covid-19, Rs 20,00,000 crore ...

எங்கே தங்குவது, எதைச் சாப்பிடுவது, எப்படி வாழ்க்கையை நடத்துவது என்பதே, பல லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தெரியவில்லை. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று அனைவரும் ஆதரவற்று சாலைக்கு வந்தார்கள்; தண்ணீரின்றி, உணவின்றி சில நேரங்களில் காலணிகள் இல்லாமல் கூட, தங்களுடைய கிராமங்களைச் சென்றடைந்து விடுவோம் என்ற நம்பிக்கையுடன் நெடுஞ்சாலைகளில் அவர்கள் நடக்கத் தொடங்கினர். மார்ச் 25 அன்று மாலைவாக்கில், தொழிலாளர்கள் மயங்கி சாலைகளில் விழுந்த சம்பவங்கள் நிகழத் தொடங்கின. பசியாலும் வெப்பத்தாலும் சோர்வடைந்து குழந்தைகள் இறப்பது புதிய இயல்பானதொரு விசயமாகிவிட்டது.

நெஞ்சைப் பிளக்கின்ற இத்தகைய காட்சிகள், அவலங்களைக் கண்டு மோடி அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் எவரொருவரும் கலங்கியதாக எந்தவொரு அறிகுறியும் தென்படவில்லை. அந்தச் சூழ்நிலையில், மோடியின் தேசிய அளவிலான ஊரடங்கு அறிவிப்பு, ஒரு ‘துணிச்சலான’ முடிவு என்று பாராட்டுவதில் ஊடகத்தினர் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டிருந்தனர். சுதந்திரம் பெற்று எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு, இத்தகைய வலிமையான தலைவரை இந்தியா பெற்றிருக்கிறது என்று அவர்கள் உலகிற்குப் பிரகடனப்படுத்திக் கொண்டிருந்தனர்.

சுட்டெரிக்கும் வெயிலில், பசியில் கைப்பெட்டிகளின் மீது குழந்தைகள் தலையை வைத்து படுத்து உறங்கக்கூடிய நிலையில் பெற்றோர்கள் அதனை இழுத்துச்செல்லும் நிலையில் லட்சக்கணக்கான மக்களை நடக்கச் செய்த முடிவு, துணிச்சலான தலைவர் ஒருவரிடமிந்து வந்த துணிச்சலான முடிவுதான்! இந்த உழைப்பே, தங்களுடைய பழைய பயனுரிமைக் கொள்கைகளின்படி, சீனாவை எதிர்கொள்வதற்குஉதவும் என்று எதிபார்க்கப்படுகிறது.

பெருந்தொற்றுநோய் நெருக்கடியைப் பயன்படுத்தி ஏன் இத்தகைய முடிவு இவ்வாறு எடுக்கப்பட்டது?  தொழிலாளர்களின் இத்தகைய போராட்டங்களும், துன்பங்களும், இறப்புகளும் பாஜக – ஆர்எஸ்எஸ் கூட்டணிக்கோ, இவர்களை ஆதரிக்கின்ற தொழிலதிபர்கள் மற்றும் செல்வ வளமிக்க பிரிவினருக்கோ  ஒருபோதும் வலியை ஏற்படுத்தியதில்லை என்பதே உண்மை. இக்கூட்டணியினரைப் பொறுத்தமட்டில், அவர்களெல்லாம் மற்றவர்கள் – தலித் / சூத்திரர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / ஆதிவாசிகள்.  அவர்களுடைய உயிருக்கு மதிப்பு எதுவும் கிடையாது; அவர்களுடையஉழைப்பு மட்டுமே மதிப்பிற்குரியது.  அது மலிவாகவோ அல்லது இலவசமாகவோ கிடைக்க வேண்டும்.

மத்திய அரசு ஏன் அவர்களின் கைகளில் பணத்தைக் கொடுக்கவில்லை? குற்றுயிரும் கொலையுயிருமாக கிராமத்தை அடைந்த பிறகு, இந்ததொழிலாளர்கள் அங்கே உணவின்றி வதைபட்டு, தங்களுடைய உழைப்பை முன்பைவிட மலிவாக விற்கும் பொருட்டு, மீண்டும் நகரத்திற்கே திரும்பும் நிலைக்கு அவர்களைத் தள்ள வேண்டும் என்ற கருத்து இருக்கிறது. இவ்வாறான திட்டத்தை, இந்திய தொழிலதிபர்கள் பாஜக அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. 2024ஆம் ஆண்டு தேர்தலுக்கான நிதியை அவர்கள் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

பணத்தை தொழிலாளர்களின் கைகளில் கொடுத்து, அவர்கள் கிராமங்களிலேயே வாழும் நிலை ஏற்பட்டு விட்டால், அவர்கள் மீண்டும் தங்களை விரட்டிவிட்டதாகக் கருதுகின்ற நகரங்களுக்குத் திரும்பிச் செல்ல மாட்டார்கள். அதனால்தான் ஒவ்வொரு அமைச்சரும் தொழிலாளர்கள் தங்கள் கிராமங்களிலிருந்து நகரத்திற்குத் திரும்பி வருவது குறித்து கவலைப்படுகிறார்கள். தங்களுடைய கிராமங்களைச் சென்றடைவதற்கு ஐந்து நாட்கள் அவகாசம் தொழிலாளர்களுக்குத் தரப்பட்டிருந்தால், அவர்கள் தங்களுடன்  அந்த வைரஸைச் சுமந்து சென்றிருக்க மாட்டார்கள். அதற்குப் பிறகுதான், மும்பை, அகமதாபாத், சென்னை, ஹைதராபாத் போன்ற நகரங்களில் வைரஸ் பரவியது. நோயின் சங்கிலித்தொடர் துண்டிக்கப்படவில்லை; மாறாக அது தொழிலாளர்களின் மனிதச் சங்கிலியுடன் இணைந்து கொண்டது.

புலம்பெயர் தொழிலாளர் விவகாரம்: '15 ...

இந்த முறைசாரா, மலிவான புலம்பெயர் தொழிலாளிகளின் உழைப்பின் மூலமே, சீனாவுடன் போட்டியிட்டு பன்னாட்டுச்சந்தையில் தங்களுடைய பங்கைப் பெற முடியும் என்ற கனவுடன் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் இருக்கின்றனர். அந்தக் கனவையே ‘தேசியவாத’ ஊடக அமைப்புகளும் ஓயாமல் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இது வேடிக்கைப் பேச்சு என்று சொன்னால், அது மிகையல்ல.  ஆனால் பிரதான ஊடகங்கள் அவ்வாறு கருதவில்லை. அவை ஊரடங்கு நீக்கப்பட்டவுடன், இந்தியப் பொருள்கள்தான் உலகச்சந்தை முழுவதும் பரவி நிறைந்திருக்கும் என்றும், உலகச்சந்தையில் தாமரை மலர்வதைப் பார்த்து சீன ட்ராகன் பதுங்கியோடிவிடும் என்றும் கருதுகின்றன.

“பழைய பயனுரிமைக் கொள்கை” அறிவிக்கப்பட்டவுடன், ஏகபோக முதலாளித்துவம் நிலைநிறுத்தப்பட்டு, அதன் மூலம் பொற்காலம் உருவாவதைத் தவிர்க்க முடியாதது என்று நம்புவதற்கு அனைத்து பிரதான ஊடகங்களும் ஆயத்தமாக இருக்கின்றன. ஜி ஜின்பிங்கின் தலைமையில், ஒற்றைக் கட்சி ஆட்சி முறை உள்ள சீன அரசாங்கத்தால்கூட, இதுபோன்று வெறும் நான்கு மணி நேரத்திற்கு முன்னதாக, தேசஅளவிலான ஊரடங்கை அறிவிக்க முடியுமா? என்ற அடைப்படைக் கேள்வி எழுகிறது. நம் நாட்டில் இருப்பதைப் போல, ஒப்பந்ததாரர்களின் பரிதாபத்திற்குரிய கொத்தடிமைகளாக அங்குள்ள தொழிலாளர்கள் இருக்கவில்லை. மேலும், குறுகிய கால அறிவிப்பிற்குள் இதே போன்று ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் கூட, அவர்களுக்கு பட்டினி கிடக்க வேண்டிய நிலையோ அல்லது நடந்தே வீட்டிற்குச் செல்ல வேண்டிய நிலையோ இல்லை. ஒருவேளை ஜி அவ்வாறு முயற்சி செய்திருப்பாரேயானால், அதுவே அவருக்கான முடிவாக இருந்திருக்கும். ஆனால் இந்திய ஊடகங்கள் எதிர்கட்சியினரை வெறும் பார்வையாளர்கள் என்ற குறைவான நிலையிலே வைத்து, பாஜக அரசாங்கத்தைப் பாதுகாத்து விட்டனர்.

இவர்களின் இந்த பழைய பயனுரிமைக் கொள்கை இந்திய கிராமப் பொருளாதாரத்தை ஒட்டுமொத்தமாக அழிக்கப் போகிறது. கொரோனாவைரஸ் காலத்திற்குப் பின்பு, பெருமந்தத்தை விட மோசமான ஒரு சூழலை இந்தியா சந்திக்க நேரிடும். உலகமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் என்ற பெயரில், 1991க்கு பின்பு அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட நிறுவனங்களையும், துறைகளையும் மீண்டும் அரசுடைமையாக்குவதே, இந்தப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான ஒரே வழியாகும்.

உலகமயமாக்கல் என்றால் என்ன ...

உலகமயமாக்கல் இறந்து கொண்டிருக்கும் தறுவாயில், அரசுடைமையாக்குதலுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என்பது வேடிக்கையாக இருக்கிறது. மாறாக, இன்னும் கூடுதலான அளவில் தனியார்மயமாக்கம் செயல்படுத்தப்பட்டு பழைய பயனுரிமைக் கொள்கை முன்னெடுக்கப்படப் போகிறது. இவ்வாறு செய்வதால், கோவிட்-19 நெருக்கடியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம், சீர்திருத்தம் மற்றும் மீட்பு போன்ற எதுவொன்றும் கிடைக்கப் போவதில்லை. அது அவர்களை அழித்தே விடும்.

விவசாயிகள், தொழிலாளர்களைத் தவிர, அனைத்து துறைகளும் தனியார்மயமாக்கப்பட்டவுடன், இந்தியா குப்தர்கள் காலத்து பொற்காலத்திற்கு மறுபடியும் சென்றுவிடும் என்பதை பிராந்திய அரசியல் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறான சாம்ராஜ்யத்தில் அவர்களுக்கெல்லாம் இடமிருக்கப் போவதில்லை. பழைய பயனுரிமைக் கொள்கைகளே எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும்.

காஞ்சாஅய்லையாசெப்பர்ட், அரசியல்கோட்பாளர், சமூகஆர்வலர் மற்றும் எழுத்தாளர்.

திவயர்இணையஇதழ்

2020 ஜுன் 03

https://thewire.in/politics/old-deal-covid-19-economic-crisis

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *