ஜூலை,15 – தமிழகத்தின் மூத்த இடதுசாரித் தலைவர்களில் ஒருவரான தோழர்.சங்கரய்யா அவர்களின் பிறந்த நாள். சமூக வலைத் தளங்கள் முழுவதும் நேற்றைய தினம் தோழர் சங்கரய்யா அவர்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்தார். அவரது கட்சி சார்ந்த, சாராத அனைவருக்கும் அவர் தோழர்.சங்கரய்யா தான். பல தரப்பினரும் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் வைத்த சம்பவங்களையும் அவருடைய வாழ்க்கைத் துணுக்குகளையும் நிறைய பகிர்ந்து கொண்டிருந்தனர். அவரைப் பற்றிப் படிக்க வேண்டும் என்ற தூண்டுதலை ஏற்படுத்தின. நல்வாய்ப்பாக என்.ராமகிருஷ்ணன் எழுதிய என்.சங்கரய்யா : வாழ்க்கையும் இயக்கமும் என்கிற புத்தகம் கிடைக்கப் பெற்றேன்.

மாணவர் பருவத்தில் இருந்து, இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கம் வரையிலும் தொடர்ச்சியான இயக்கங்கள், போராட்டங்கள், சிறைவாசம், தலைமறைவு வாழ்க்கை என விறுவிறுப்பான திரைப்படம் போல இருக்கிறது இவரது வாழ்க்கை அனுபவங்கள். அவருடைய இந்த, பொதுவுடைமை இயக்கம் சார்ந்த பிடிப்பு மிக்க வாழ்க்கை அமையப் பெற்றமைக்காக யாருக்காவது நன்றி சொல்ல வேண்டும் என்றால் சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் இருந்த அரசுகளுக்குத் தான் சொல்ல வேண்டும்.

அரசுகள் அவரைக் கட்டுப்படுத்துவதாகவும் தண்டிப்பதாகவும் எண்ணி அடிக்கடிச் சிறைப்படுத்தி, சிறையில் பெரிய பெரிய தலைவர்களையெல்லாம், அதிலும் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலத் தலைவர்களையும், அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்திக்க வைத்து அவரை மேலும் மேலும் தான் சார்ந்த கொள்கையின் மீது எஃகு போன்ற உறுதியுடன் இருக்கச் செய்திருக்கின்றன..

அவரை வேறு வேறு சிறைகளுக்கு மாற்றுவதும், அப்படி மாற்றி மாற்றி அழைத்துச் செல்வதன் மூலம் வெவ்வேறு பகுதி மக்களுக்கும் அவர் சார்ந்த கட்சித் தோழர்களுக்கும் தகவல் கிடைத்த அவரை அழைத்துச் செல்லும் வழியெங்கும் வரவேற்பு நிகழ்ச்சிகளும் வழியனுப்பும் நிகழ்ச்சிகளுமாக அவையே அவருக்கான மேடையாகவும் கட்சி வளர்ப்பு நடவடிக்கைகளுமாகவும் மாறி இருக்கின்றன. சிறைக்குள்ளேயே வைத்தாலும் அரசியல் வகுப்புகள், கம்யூனிஸ்ட் கட்சி கிளை உருவாக்கம் என ஒருபோதும் அயராத தங்கள் தொடர் நடவடிக்கைகளால் அங்கும் அரசைத் தான் அச்சுறுத்தி இருக்கின்றனர்.

அதனால் தான் ஒரு நேர்காணலில் தங்கள் வாழ்க்கையில் கசப்பான சம்பவங்கள் எதுவும் உள்ளனவா என்று கேட்ட போது இல்லை என்று பதிலளிக்கிறார் தோழர் சங்கரய்யா. சிறைவாசம் என்று கேட்டதும் இல்லை இல்லை என்று மறுக்கிறார். அவரைப் பொறுத்தவரை எல்லாமே மக்களுக்கான பணிகள் தான். இவையெல்லாம் அவருடைய அரசியல் சார்ந்த விசயங்கள்..

நாம் இங்கு மிகவும் கவனமாகவும் விரிவாகவும் பார்க்க இருப்பது மொழி சார்ந்தும் தாய்மொழிவழிக் கல்வி சார்ந்தும் தோழர்.சங்கரய்யா அவர்கள் பல்வேறு காலகட்டங்களில் வலியுறுத்திய விசயங்களைத் தான். எல்லாக் காலகட்டங்களிலும் குறிப்பிட்ட சில மையமான கருத்துகளைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறார். எனில் அவர் அது சார்ந்த விசயங்களில் மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்திருக்கிறார். பல காலகட்டங்களில் அவர் (சார்ந்த கட்சியின் நிலைப்பாடு தான் என்றாலும் கூட) பேசியவற்றில் நாம் இன்னும் கூட எட்டாத, எட்டமுடியாத பல இலக்குகள் இருக்கத் தான் செய்கின்றன. மேலும் ஒரே தேசம், ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே மதம் என ஓயாத இரைச்சல் கேட்டுக்கொண்டே இருக்கக் கூடிய இன்றைய சூழலில் அவசியமான சிந்தனைகளாகவும் முன்னெடுக்க வேண்டிய இயக்கங்களுக்கான கருப்பொருளாகவும் இருக்கின்றன என்ற வகையில் தோழர்.சங்கரய்யா அவர்களின் இதுசார்ந்த உரைகள், கருத்துகளைப் பகிர்வது நன்மை பயக்கும்  என்று நம்புகிறேன்.

1938ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தின் முதலமைச்சர் ராஜாஜி, உயர்நிலைப்பள்ளிகளில் முதல் மூன்று வகுப்புகளில் இந்தி ஒரு கட்டாயப்பாடமாக்கப்படும் என்று அறிவித்து அதற்காக ஒரு சட்டமுன்வரைவையும் சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தினார். இதனைச் சுயமரியாதை இயக்கம் கடுமையாக எதிர்த்தது. ராஜாஜிக்கு அவர் செல்லும் இடங்களில் கருப்புக்கொடி காட்டும்படி வேண்டுகோள் விடுத்தது. இதனையடுத்து ராஜாஜி மதுரைக்கு வந்த போது  400பேர் திரண்டு நின்று ராஜாஜி திரும்பப்போ என்று கருப்புக்கொடி காட்டி முழக்கமிட்டனர். அந்த 400 பேரில் மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவராக இருந்த சங்கரய்யாவும் ஒருவர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), தமிழ்மாநிலக் குழுவின் அப்போதைய செயலாளராக இருந்த தோழர் ஜி.ராமகிருஷ்ணன் மேற்சொன்ன நூலின் முன்னுரையில் ஒரு நிகழ்வைக் குறிப்பிடுகிறார் : 1967ஆம் ஆண்டு அண்ணா அவர்கள் முதல்வராகப் பொறுப்பேற்றிருந்த காலம். சட்டப் பேரவையில் மொழிப்பிரச்சனை குறித்து விவாதம் நடந்தது. அண்ணா ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார்.

அதன் மீது அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த தோழர் சங்கரய்யா உள்ளிட்டோர் கட்சிக் கண்ணோட்டத்தில் கருத்துகளை எடுத்து வைத்தனர். அதைத் தொடர்ந்து அண்ணா அவர்கள் தாம் முன்மொழிந்த தீர்மானத்தில் ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்தார். தமிழகத்தில் தமிழ் பயிற்று மொழியாகவும் பாடமொழியாகவும் எல்லா கல்லூரிகளிலும் இருக்கவும் நிர்வாக மொழியாக பல்வேறு துறைகளில் தமிழ் ஐந்தாண்டு காலத்திற்குள் நடைமுறைக்கு வருவதற்கான துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்வது என இம்மன்றம் தீர்மானிக்கிறது என்பதே அண்ணா முன்மொழிந்த திருத்தம்.

தமிழ்நாட்டில் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதனைச் சிலர் எதிர்க்கிறார்கள். ஆனால் நாங்கள் ஆதரிக்கிறோம் வரவேற்கிறோம். ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமல்ல. அனைத்து மட்டங்களிலும் தமிழ்மொழி இருக்க வேண்டும் என்கிறோம். இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளையும் தேசிய மொழியாக்க வேண்டும். தாய்மொழியில் கல்வி கொடுக்க வேண்டும். கற்பிக்க வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு அவர்களது தாய்மொழியில் கல்வி கற்பிக்க வேண்டும்.

ஆங்கிலத்தை ஒரு மொழிப்பாடமாக கற்றுக் கொடுக்க வேண்டும். உயர்கல்விக்கு  அனுமதிக்கும் அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் என்ற அமைப்பு தமிழில் பொறியியல் பாட வகுப்பு துவங்க அனுமதி மறுத்துவிட்டது என்று கேள்விப்பட்டேன். அது உண்மையானால் மிகக் கொடுமையானது. அதை எதிர்த்து, இந்த மொழிக் கொடுமையை எதிர்த்து மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் கட்சிகள், இயக்கங்கள் போராட வேண்டும்.

மருத்துவம், பொறியியல் உள்பட அனைத்தும் தமிழிலேயே கற்பிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் மட்டுமல்ல நாடு முழுவதும் அவரவர் தாய்மொழியிலேயே கல்வி கற்றுத்தரப்பட வேண்டும். சட்டத்துறையிலும் நீதிமன்றங்களிலும் தமிழே ஆட்சி மொழியாக விளங்கிட வேண்டும். அதற்கு அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு மார்க்சிஸ்ட் கட்சி முழு ஆதரவளிக்கும் :  2000ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி, கன்னியாகுமரியில் நடந்த வள்ளுவர் சிலை திறப்பு விழாவில் தோழர் சங்கரய்யா பேசியது..

முன்னதாக தீக்கதிர் நாளிதழுக்காக 1997ல் தோழர் அ.குமரேசன் செய்த நேர்காணலிலும் மிக முக்கியமான பல அம்சங்களை வலியுறுத்தியுள்ளார். அவற்றில் இருந்து :

விடுதலைப் போராட்ட காலத்திலும், அன்றைய இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த கம்யூனிஸ்டுகள் தான் மொழிவழி மாநில அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வந்தார்கள். தாய்மொழி வழியே மக்களுக்கு முற்போக்கு கருத்துகளைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவே பத்திரிகைகள் தொடங்கப்பட்டன.

மொழிவழி அடிப்படையிலான மாநிலங்களில், தாய்மொழியில் கல்வி, அந்தந்த மாநிலத்தின் தாய்மொழியே பயிற்றுமொழி, ஆட்சிமொழி, நீதிமன்ற மொழி.. என்பது தான் கம்யூனிஸ்டுகள் அடிப்படையாக வலியுறுத்தியது. தாய்மொழி மூலமாகவே மக்கள் வளர்ச்சியடைந்த கல்வியைப் பெற முடியும். இன்னொரு மொழியின் மூலமாக அல்ல என்ற புரிதலோடு வலியுறுத்தப்பட்ட கொள்கைகள் இவை. குறிப்பாக கிராமப்புற மக்கள் தாய்மொழி மூலமாகவே எளிதில், இயல்பாக கல்வியறிவைப் பெற முடியும்.

ஆங்கிலத்தால் தான் தமிழ்மொழி வளர்ச்சி தடைபட்டிருக்கிறது. அதற்கு முன் இங்கே கணிதம், கட்டிடக்கலை, மருத்துவம் என அனைத்துத் துறைகளிலும் தமிழ்மொழி மூலமாகவே கற்பிக்கப்பட்டது. புரிந்துகொள்ளப்பட்டது. சாதிக்கப்பட்டது. எடுத்துக்காட்டாக தஞ்சைப் பெரியகோயில், மதுரைக் கோயில், கல்லணை முதலிய உலக சாதனைகள் எல்லாம் ஆங்கில அறிவு இல்லாத தமிழக உழைப்பாளிகளின் படைப்புகள். தமிழ் மூலமாகவே நிகழ்த்தப்பட்ட சாதனைகள் அவை.

மற்ற மொழிகளைக் கற்கிற ஆர்வத்துடன் ஒருவர் ஆங்கிலம் உட்பட எந்தவொரு மொழியையும் கற்பது என்பது வேறு. ஆனால் பாடங்களைக் கற்பது தமிழில் தான், தாய்மொழியில் தான் இருக்க வேண்டும். திறனும் நூறு சதவீதம் முழுவளர்ச்சி பெற்று மேலோங்க இது அவசியம். அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக சிறப்பான மழலையர் பள்ளிகளை அரசு ஏற்படுத்த வேண்டும்.

தமிழ்மொழி மூலமாக அறிவியல், வரலாறு, கணிதம் போன்ற அனைத்து துறைக்கல்வியையும் உயர்தரத்தில் வழங்க வகை செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் நிச்சயமாகப் பெற்றோர் மத்தியில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆங்கிலத்தின் மூலமே அறிவு வளர்ச்சி சாத்தியம் என்கிற பிரமை நீங்கும். கிராமங்களில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் பெரும் வெற்றியும் முன்னேற்றமும் காண்பார்கள். இதில் அரசுக்கும் ஆசிரியர் சமூகத்தினருக்கும் பெரும்பொறுப்பு இருக்கிறது.

 பாடப்புத்தகங்களை இதற்கேற்ற முறையில் தயாரிக்க முறையான குழுக்கள் அமைத்துச் செயல்பட்டால் நிச்சயமாகப் பெரும் வளர்ச்சி ஏற்படும். அதையொட்டி உயர்நிலைப் பள்ளிகள், கல்லூரிகளில் தமிழ்வழிக்கல்விக்கு விரிவான, நம்பகமான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

ஆட்சி மொழி என வருகிற போது மாநிலத்தில் எல்லாத்துறைகளிலும் எல்லா மட்டங்களிலும் அரசின் சுற்றறிக்கைகள், ஆணைகள், அறிவிப்புகள் தமிழிலேயே இருக்க வேண்டும்.

நீதிமன்ற மொழி என வருகிறபோது கீழ்நிலை நீதிமன்றத்திலிருந்து எல்லா மட்டங்களிலும் தமிழில்தான் விசாரணை, தமிழில் தான் வாதப் பிரதிவாதங்கள், தமிழில் தான் தீர்ப்பு என அமைய வேண்டும்.

அனைத்து மொழிகளுக்கும் சமத்துவம் என்பதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும். அந்தப் பணி நாடாளுமன்றத்திலிருந்து தொடங்கப்பட வேண்டும். உறுப்பினர்கள் தமது தாய்மொழியிலேயே பேசவும் பதில் பெறவும் நாடாளுமன்றத்தில் விரிவான ஒருங்கிணைந்த மொழிபெயர்ப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். இன்றைய நவீன அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் இது மிக எளிதாகச் செய்யக்கூடியதே ஆகும். தமிழ் மட்டுமே தெரிந்த உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்தில் தயக்கமின்றி தமிழில் பேசமுடியும் என்ற நிலை உருவாக வேண்டும்.

மத்திய அரசின் ஆணைகள், அறிவிப்புகள் முதலியவை அனைத்து மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியிடப்பட வேண்டும். தமிழகத்தில் இருந்து மத்திய அரசுக்கான கடிதங்கள், தகவல் தொடர்புகள் தமிழிலேயே நடக்க வேண்டும். மத்திய அரசின் பதில்கள் தமிழகத்திற்கு தமிழிலேயே வர வேண்டும். தமிழகத்தில் உள்ள மத்திய அரசுத் துறைகளின் அலுவலகங்களில் பணிகள் தமிழில் நடைபெற வேண்டும். அரசாங்கத்தை மக்களிடம் கொண்டு செல்லுதல் என்பதில் இது ஒரு முக்கியமான நடவடிக்கை ஆகும்.

அனைத்து மொழிகளின் வளர்ச்சிக்கும் மத்திய அரசு, மைய அரசு நிதியிலிருந்து சரிசமமான அளவில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். பண்பாட்டுத் துறை வளர்ச்சியிலும் இத்தகைய அணுகுமுறை வேண்டும். நாட்டுப்புறக் கலைகளுக்கென தனியாக பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட வேண்டும். விரிவான வாய்ப்புகள், விருதுகள் என ஊக்குவிக்கப்பட வேண்டும்.

தமிழின் மீது பற்று என்றால் அது பிற மொழிகளி மீது வெறுப்பு என்றாகிவிடக் கூடாது. பற்றும் வெறியும் ஒன்றல்ல. பற்று வளர்ச்சிக்கு வழிவகுக்கும். வெறி வளர்ச்சிக்கு குழி பறிக்கும். இன உரிமை, மொழி உரிமைக்காகப் போராடுவது என்பது மற்ற இனங்கள், மொழிகள் மீது பகைமையைத் தூண்டுவதாக மாறிவிடக் கூடாது. தேசப்பற்று, ஒற்றுமை இவற்றுக்கு எதிரானதாக மொழிப்பற்று முன்னிறுத்தப்படுமானால் அது பிற்போக்குத் தனமானது ஆகும்.

செப்புமொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள் என்று பாரதி கூறியது போல, அன்று தேச விடுதலைப் போராட்டத்தை வளர்த்தெடுக்க உதவியது மொழி வாரியாக மக்கள் அணிதிரட்டப்பட்டது தான். இன்று தேச ஒற்றுமையை, சாதிமத வெறியற்ற நல்லிணக்கத்தை, ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதிலும் அதே மொழிவாரி உணர்வுகள் முக்கியப்பங்கு வகிக்க வேண்டும்..

அரசியல்வாதிகள், அதிலும் குறிப்பாக இடதுசாரிகளுக்கு பொருளாதார கோரிக்கைகளுக்கான போராட்டங்களைத் தவிர மற்ற பிற விசயங்களுக்கு முன்னுரிமை அளிக்க மாட்டார்கள் என்கிற பொதுப்புத்தி இருக்கிறது.. ஆனால் மொழிசார்ந்து தோழர் சங்கரய்யா அவர்களின்  மொழிகுறித்த ஆழமான, தெளிவான சிந்தனைகள் வியப்பளிக்கின்றன. பல விவாதங்களைத் தூண்டுகின்றன. பள்ளி முதல் பல்கலைக்கழகங்கள் வரையிலும் பாடமொழியாக, பயிற்றுமொழியாக, நிர்வாக மொழியாக, நீதிமன்ற மொழியாக தாய்மொழியே அமைய வேண்டும்.  அவரது நூறாவது பிறந்த நாளில் எட்டுவதற்கான சில இலக்குகளை நிர்ணயிப்போம்.. அதையே அவரது நூற்றாண்டுப் பரிசாக நாமளிப்போம்…

–    தேனிசுந்தர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *