அன்னை சாவித்திரிபாய் தன் கணவர் மகாத்மா ஜோதிபா புலேவுக்கு எழுதிய ஒரு கடிதம். இதில் அன்னையின் அறிவுக்கூர்மை, சமூகப்புரட்சியில் கொண்ட ஈடுபாடு, தன் கணவர் மீது கொண்ட இலட்சியக் காதல் ஆகியவை வெளிப்படுவதை காணுங்கள்.

10, அக்டோபர் 1856
உண்மையின் திருவுருவமான
என் கடவுள் ஜோதிபாவிற்கு, சாவித்திரியின் வணக்கங்கள் !
‌பல நிலையில் மாற்றங்களைக் கண்டு ஒரு வழியாக என் உடல் முழுமையாக குணமாகியுள்ளது. நோய்வாய்பட்ட எனக்கு என் சகோதரன் சிரத்தை எடுத்து நன்கு கவனித்துக்கொண்டான். அவன் எனக்கு செய்த பணிவிடையும் காட்டிய ஈடுபாடும் உண்மையில் அவன் என் மீது மிகுந்த அன்பு வைத்துள்ளான் என்பதைக் காட்டுகிறது. தயவுசெய்து என்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம். நான் இல்லாததால் ஃபாத்திமாவிற்கு* நிறைய அலைச்சலாக இருக்கும் என நான் அறிவேன். ஆனால் அவள் நன்கு புரிந்துகொள்வாள் என்பதும் முணுமுணுக்கமாட்டாள் என்பதும் உறுதி.

ஒருநாள் நானும் என் சகோதரனும் பேசிக்கொண்டிருந்தபோது அவன் சொன்னான், “நீயும் உன் கணவரும் சரியாகத்தான் சாதி விளக்கம் செய்யப்பட்டுள்ளீர்கள். ஏன் எனில் நீங்கள் இருவரும் தீண்டப்படாதவர்களுக்கு (மகர்களுக்கும் மாங்குகளுக்கும்) சேவை செய்கிறீர்கள். தீண்டப்படாதவர்கள் கீழான மக்கள். அவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் நம் குடும்பத்திற்கு கெட்ட பெயரைக் கொண்டுவருகிறீர்கள். அதனால்தான் நான் நம்ம சாதி வழக்கப்படி நடந்து கொள்ளுங்கள் என்றும் பார்ப்பனர்களின் கட்டளையை மதியுங்கள் என்றும் சொல்கிறேன்”. என் சகோதரனின் வாய் துடுக்கால் அம்மா நிறையவே சஞ்சலமானார். என் சகோதரன் நல்லவன்தான். ஆனாலும் குறுகிய சிந்தனை உள்ளவன். எனவே நம்மை மோசமாக விமர்சிக்கவும் வசைபாடவும் அவன் தயங்கவில்லை. என் அம்மா அவனை கண்டிக்கவில்லை.மாறாக அவனைப் பார்த்து “கடவுள் உனக்கு பேசுவதற்கு அழகான மொழியைத் தந்துள்ளார். அதை இப்படி தவறாகப் பயன்படுத்துவது நல்லதல்ல” என்று சொல்லி யோசிக்க வைத்தாள். நான் நமது சமூதாயப்பணியைவிட்டுக் கொடுக்காமல் பேசியதுடன் அவனது அவநம்பிக்கையைப் போக்க முயற்சித்தேன். நான் அவனைப் பார்த்து”சகோதரா, உன் சிந்தனை குறுகலாக உள்ளது; பார்ப்பனர்களின் போதனை அதை மேலும் மோசமாக்கியுள்ளது.

Mahatma Jyotirao Phule: Reformer Far Ahead of his Time - inspiring ...

ஆடு மாடு போன்ற விலங்குகள் எல்லாம் உனக்கு தீண்டப்படாதவை அல்ல அவற்றை நீ அன்போடு தடவிக்கொடுப்பாய். நாகபூஜை நாளில் நீ விஷப்பாமபுகளைப் பிடித்து அவற்றுக்கு பால் ஊற்றுவாய். ஆனால் நம்மைப்போல் மனிதர்களான மகர்களையும் மாங்குகளையும் தீண்டப்படாதவர்களாகக் கருதுகிறாய். இதற்கு ஏதாவது நியாயம் சொல்லமுடியுமா உன்னால்? பார்ப்பனர்கள் புனித ஆடை அணிந்து சமய சடங்குகளை செய்யும்போது அவர்கள் உன்னையும்தான் அசுத்தமானவனாகவும் தீண்டப்படாதவனாகவும் கருதி நீ தொட்டால் தாங்கள் தீட்டு ஆகிவிடுவோம் என அஞ்சுகிறார்கள். அவர்கள் உன்னை மகர்களை விட வேறாக ஒன்னும் நடத்தவில்லையே” என்று கூறினேன். அதைக் கேட்ட என் சகோதரனுக்கு முகம் எல்லாம் சிவந்துவிட்டது. அவன் என்னைப் பார்த்து, “அந்த மகர்களுக்கும், மாங்குகளுக்கும் நீங்கள் ஏன் கல்வி கற்பிக்கிறீர்கள்? நீங்கள் தீண்டப்படாதவர்களுக்கு கல்வி கற்பிப்பதால் மக்கள் உங்களைத் தூற்றுகிறார்கள். நீங்கள் செய்கிற காரியத்திற்காக மக்கள் உங்களை தூற்றுவதையும் உங்களுக்குத் தொல்லைத் தருவதையும் என்னால் தாங்கமுடியாது. அப்படிப்பட்ட அவமரியாதைகளை என்னால் சகித்துக்கொள்ள முடியாது” என்றான்.

நான் ஆங்கில மொழி மக்களுக்கு எப்படி நன்மை செய்து வருகிறது என்பதை அவனுக்கு எடுத்துச் சொன்னேன். நான் அவனிடம், “கல்லாமை என்பது விலங்கு நடத்தை என்பதைத் தவிர வேறல்ல. பார்ப்பனர்களுக்கு அவர்கள் வசப்படுத்தும் அறிவுதான் எல்லோரையும் விட மேலான அந்தஸ்த்தை அவர்களுக்கு தருகிறது. கல்வி கற்றலும் அறிவுடைமையும் மகத்தானவை. யார் ஒருவர் அறிவுடையவராகிறாரோ அவர் தன் கீழான அந்தஸ்த்தில் இருந்து மேலான அந்தஸ்த்தை அடைகிறார். என் கணவர் கடவுளைப் போன்றவர். இந்த உலகத்தில் அவர் ஒப்பீடுகளுக்கு அப்பாற்பட்டவர். அவருக்கு சமமானவர்கள் யாரும் இல்லை. தீண்டப்படாதவர்கள் கல்வி கற்க வேண்டும் விடுதலையடைய வேண்டும் என்று அவர் நினைக்கிறார். தீண்டப்படாதவர்களுக்கு கல்வி கற்பிப்பதற்காக அவர் பார்ப்பனர்களோடு மோதுகிறார் அவர்களோடு சண்டையிடுகிறார். ஏன் என்றால் மற்றவர்களைப்போல் தீண்டப்படாதவர்களும் மனிதர்களே எனவும் அவர்கள் கண்ணியமான மனிதர்களாக வாழ முடியும் எனவும் அவர் நம்புகிறார். அதற்கு அவர்களை கல்வி கற்றவர்களாக்க வேண்டும். இதே காரணங்களுக்காகத்தான் நானும் அவர்களுக்கு கல்வி கற்பிக்கிறேன். அதில் என்ன தவறு?ஆமாம், நாங்கள் இருவருமே சிறுமிகள், பெண்கள், மகர்கள், மாங்குகள் ஆகியோருக்கு கல்வி கற்பிக்கிறோம். இதைப் பார்த்து பார்ப்பனர்கள் நிலைகுலைந்துள்ளனர். ஏன் எனில் இது அவர்களுக்கு பிரச்சனைகளை உருவாக்கும் என அவர்கள் நம்புகின்றனர்.

To Jyotiba, from Savitribai Phule: These aren't love letters, but ...

எனவேதான் அவர்கள் எங்களை எதிர்க்கின்றனர் இது நம்ம மதத்திற்கு எதிரானது என்ற மந்திரத்தை ஓதுகின்றனர். அவர்கள் எங்கள் மீது அவதூறு செய்கின்றனர். இழித்துரைக்கின்றனர். உன்னைப்போன்ற நல்ல மனிதர்களின் நெஞ்சில் கூட நஞ்சு கலக்கின்றனர். “என் கணவருக்கு அவர் ஆற்றி வரும் மகத்தானப் பணிக்காக அவரை கௌரவிப்பதற்காக பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு விழா எடுத்தது. அது உனக்கு நிச்சயம் நினைவிருக்கும். அவருக்கு அளிக்கப்பட்ட கெளரவத்தால் இந்த தரமற்ற மனிதர்களின் நெஞ்சு ரொம்பவே எரிந்திருக்கும். உன்னைப்போல் என் கணவர் வெறுமனே கடவுள் பெயரை உச்சரிப்பவரோ புனித யாத்திரை போகிறவரோ அல்ல என்பதை உனக்கு சொல்லிக்கொள்கிறேன். உண்மையில் அவர் கடவுள் செய்யும் காரியத்தை செய்து வருகிறார். அந்த காரியத்திற்கு நான் துணை செய்கிறேன். அதனை நான் அனுபவித்து செய்கிறேன். அத்தகு சேவை செய்வதில் நான் அளவிடற்கரிய மகிழ்ச்சி அடைகிறேன்.

எல்லவற்றுக்கும் மேல் ஒரு மனிதனால் எவ்வளவு உயரத்தை எவ்வளவு தொலைவை சென்று அடையமுடியும் என்பதை இதுக்காட்டுகிறது”. நான் சொல்வதை அம்மாவும் சகோதரனும் வாயடைந்துபோய் கேட்டுக் கொண்டிருந்தனர். என் சகோதரன் கடைசியில் தான் சொன்ன வார்த்தைகளை திரும்ப பெற்றுக்கொண்டதாக கூறினான். மன்னிப்பும் கேட்டான். அம்மா, “சாவித்திரி, நீ பேசுவது அந்த கலைமகளின் சொந்த சொற்களாகத்தான் இருக்க வேண்டும். உன் அறிவார்ந்த பேச்சைக்கேட்கும் நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்” என்றாள். அம்மாவிடம் இருந்தும் சகோதரனிடம் இருந்தும் இத்தகு பாராட்டைப் பெற்றது என் மனதிற்கு ஊக்கமளிப்பதாக.இருந்தது. இதிலிருந்து மக்கள் நெஞ்சங்களில் நஞ்சு கலக்கவும் நமக்கு எதிராகப் பொய் புரளிகளைப் பரப்பவும் பூனாவைப் போலவே இங்கும் முட்டாள்கள் பலர் உள்ளனர் என்பதை உங்களால் ஊகித்திட முடியும். ஆனால் நாம் அவர்களுக்கு ஏன் அஞ்சவேண்டும்? அவர்களுக்கு அஞ்சி நாம் மேற்கொண்டுள்ள உயரிய லட்சியத்தை நாம் ஏன் கைவிட வேண்டும்? அதற்கு பதிலாக நமது பணியில் மேலும் நம்மை ஈடுபடுத்திக்கொள்வது நல்லது. நாம் அனைத்தையும் வென்று காட்டுவோம். எதிர்காலத்தில் வெற்றி நமதே. எதிர்காலம் நமக்கு சொந்தமானது.
மேற்கொண்டு நான் என்ன எழுத?
பணிவன்புடன்
உங்கள்
சாவித்திரி

What is the Contribution of Jyotiba Phule? - Quora

ஃபாத்திமா அல்லது ஃபாத்திமா ஷேக் ஜோதிபா புலே, சாவித்திரிபாய் புலே உருவாக்கிய பள்ளியின் ஆசிரியை. இந்தியாவின் முதல் ஆசிரியை சாவித்திரிபாய் புலே என்றால் இந்தியாவில் இரண்டாவது ஆசிரியையும் முதல் இசுலாமிய ஆசிரியையும் ஃபாத்திமா ஆவார். இவர் மியான் உஸ்மான் ஷேக் என்பவரின் தங்கை. ஜோதிபாவின் தந்தை பார்ப்பனர்கள் தன்னை சாதி விளக்கம் செய்ய வைத்துவிடுவார்கள் என பயந்து தன் மகனையும் மருமகளையும் வீட்டைவிட்டு வெளியேற்றிவிட உஸ்மான் ஷேக்கின் வீட்டில்தான் ஜோதிபா-சாவித்திரிபாய் குடியேறினர்.

மராத்தியில் இருந்து ஆங்கிலத்திற்கு
சுனில் சர்தார்
ஆங்கிலத்தில் இருந்து தமிழில்
தேவிகாபுரம் சிவா
(எழுத்துப்பிழை இருப்பின் கமெண்ட்டில் சுட்டவும். நன்றி)
Thanks: Book: .A FORGOTTEN LIBERATOR

– நன்றி:தேவிகாபுரம் சிவா

2 thoughts on “அன்னை சாவித்திரிபாய், கணவர் மகாத்மா ஜோதிபா புலேவுக்கு எழுதிய ஒரு மாறுபட்ட காதல் கடிதம்…!”
  1. ஜென்னியின் கடிதத்தை ஞாபகப்படுத்துகிறது..

  2. சாதி விலக்கம் என்பது சாதி விளக்கம் என்று பல இடங்களில் வந்துள்ளது.. மிகவும் அருமைாயன கடிதம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *