ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – மௌனம் உடையும் பொழுது [கவிதை நூல்] – மஞ்சுளா கோபி

ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – மௌனம் உடையும் பொழுது [கவிதை நூல்] – மஞ்சுளா கோபி

 

 

 

 

நடந்தே அழியணும் வழி
கொடுத்தே தீரனும் கடன்
செய்தே அழியணும் வேலை
அழுதே அழியணும் துக்கம்

எழுத்தாளர் வல்லிக்கண்ணன் கூறுவதைப் போல நமது மனதின் பாரங்களை ….நெஞ்சை அழுத்தும்உணர்வுகளை… வாழ்வின் எதிர்பாரத நிகழ்வுகளை எழுதியே தீர்க்கணும் என்று வருகிற போது இலக்கியத்தின் ஒரு பெரும்பகுதி கவிதைகளாய் நமக்குக் கிடைத்துவிடுவதை நாம் மறுக்கமுடியாது.

ஆ!
பாரதி
புதிய தமிழுக்குப்
போடப்பட்ட
பிள்ளையார் சுழி…

என்று தமிழுக்குக் கிடைத்த அந்தப் புதுமை ஒளி இன்னும் மங்காமல் சிலரிடம் இயங்கியபடியே இருக்கிறது. நமக்குப் பேச்சுமொழி இருக்கும் போது கவிதை மொழியும் தேவையாயிருப்பதை உணர்ந்தே இந்த நூலின் ஆசிரியர் தனது வாழ்வில் என்றும் நிலைத்திருக்கும் கவிதை மொழியை மௌனம் உடைத்து அதன் உயிர் வடிவங்களால் வரைந்து வரைந்து நம் புலன்கள் ஐந்தும் புரிந்து கொள்ளும் மொழியை தனது முகநூலில் தீட்டியதை நூலாக இங்கு தொகுத்துள்ளார்.

‘மூடிய மேகமும்
தூவும் மழையும்
ஏன் கைப்பிடித்து
எங்கோ
அழைத்துச் செல்கின்றன’

என்ற இவரின் முதல் கவிதையின் முதல் வரிகள் வழியாக நானும் அவர் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் கவிதை வரிகளுக்குள் கடந்து போகிறேன். அடர்வனத்தின் வாசனையை முகர்ந்து கொண்டே இறந்தவர்க்கு சிரித்தும் சிலநேரம் பிறந்தவர்க்கு அழுதும் முரண்களின் முள்ளில் தன்னை காயப் படுத்திக்கொண்டு அடர் மனதின் வெம்மையையும் நமக்குள் கடத்திச்செல்கிறார்.

‘வளர்கிறேன்/ மகிழ்ச்சி மட்டை/வெட்டப்படும்போதெல்லாம்/வளர்வதாய்/உணர்கிறேன்/’

தன் வாழ்வின் பரிமாணத்தை அதன் வளர்ச்சியில் மட்டுமே மகிழ்ந்து கொண்டாடிய பொழுதுகள் கடந்து விட்ட நிலையில் அதன் அறியப்படாத மற்றொரு பக்கத்தைத் திறந்து காட்டும்போது வாழ்வின்மீது கவிஞர் கண்டடைந்த உண்மை அவரது இரைப்பைக்குள் இறங்கும் மதுவைப் போலவே நமக்குள்ளும் கவிதையின் உண்மை சொட்டுச்சொட்டாக இறங்குகிறது.

‘ மரப்பாச்சியோடும்
நொங்கு வண்டியோடும்
விளையாடிய
இந்தப் பாட்டனின்
பேரர்கள் கையில்
வை-பையில் இணைத்த
ஆண்டிராய்டுகள்…
விற்பனையாகும்
தேசம் மறந்த
விளையாட்டு நிலையில்
அவர்கள்..

இன்றைய இளம்தலைமுறைகளின் கையில் தேசத்தின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்று அறிய முடியாத சூழலில் அவர்களின்மீது திணிக்கப்பட்ட தொழில்நுட்ப வசதிகள் கவலையளிப்பதாய் உள்ளன. அந்த நிலையைத் தெளிவாக உணர்த்துகிறது ‘நிலை’ என்ற மேற்குறிப்பிட்ட கவிதை.

மனதில் படிந்த அழுக்கைக் கழுவ புனித மந்திரங்கள் என்ற பெயரில் பொய்களின் வாய்களில் புரியாத சொற்களில் ஓதப்பட்டு பஞ்சாரக் குஞ்சுகளாய் பூமியெங்கும் மனிதம் மறுதலித்துக் கிடப்பதை ‘அழுத்தம்’ என்ற கவிதை வழியே ஆழமான வரிகளால் வெளிப்படுத்துகிறார்.

‘பார்க்கத் திகட்டாப்
பரவசம்
அசைந்து வரும்
கருப்புப் பல்லக்கு ‘

என்று யானையைப் பார்த்து பரவசப்படும் இவரது மனமும் ஓரிடத்தில் யானையைப் போலவே அழகின் மனமாய் பேருரு கொள்கிறது . அதற்குரிய கவிதை மனமும் குழந்தை மனமும் ஒருசேர வாய்த்திருக்கிறது.

‘நரையும் நோயும் காலநோயின் தூரிகை நர்த்தனம்’ என்ற வரியில் வாழ்க்கையின் எல்லாப் படிநிலைகளும் இறங்கிவந்துவிடுகின்றன. ’சட்டைப்பையில் ஆயிரம் ஏற லட்சம் வாசற்படி இறங்குகிறது ‘என்ற வரியில் இன்றைய பொருளாதாரம் வறியவனுக்கும் வசதியுள்ளவனுக்கும் உள்ள இடைவெளியையும் இரக்கமற்ற அன்றாட வாழ்க்கையின் கோர முகங்களையும் தராசுத் தட்டைப்போல துல்லியமாக நிறுத்துப் பார்க்கிறது.

’உறுதி ‘என்ற கவிதையில் வர்க்க ஒற்றுமை காக்கப் போராடும் சரித்திரச் சான்றுகள் புரட்சியாய் புரண்டு எழுகின்றன. பூமியெங்கும் வன்புணர்வுகளின் வன்மங்களைக் குறி பார்த்து வெட்டி எறிய எங்கும் கவிதையே ஆயுதம் ஏந்துகிறது. அந்த ஆயுதம் சரியான பதத்தில் இவரது கவிதையின் முனையில் இருந்து சொல்லாயுதங்களாக வெளிப்படுகின்றன. மனித சமூகத்தில் சாதியும் மதமுமே கொடிய ஆயுதமாக இருந்து வருவதை தனது பல்வேறு கவிதைகளில் அழுத்தம் திருத்தமாக எடுத்துரைப்பது இவரது மனம் மனித சமூகத்தின்பால் உள்ள அன்பன்றி வேறென்ன?

சாலை ஓரத்தில் இரண்டு மரங்கள் பேசிக்கொண்டிருக்கும் காட்சியை ‘ஓர வரலாறு’ என்ற கவிதையில்

‘குதிரையின் குளம்பொலியிலும்
தேர்க்காலின் உருள் சத்தத்திலும்
வேழத்தின் வீர அதிர்வுகளிலும்
வரலாறு வாசித்தோம்’
என்ற வரிகளில் கவித்துவம் நிரம்பி வழியும் அதே வேளையில்
‘கொடும் எந்திரக் கரங்களால்
வேரோடு பிடுங்கப்பட்டோம்
ஒரு வரலாற்றுப் புத்தகம்
கிழித்து எறியப்பட்டதுபோல’

என்ற வரிகளின் மூலம் கார்ப்பரேட் கனவுகளில் மனிதகுலம் தன்னை அடகுவைத்துவிட்டு இயற்கையைச் சிதைத்து வாழும் கொடும் கரங்களை அறிமுகப்படுத்துகிறார்.

‘நாளை/ உதிர்வதைஅறியாததாலேயே/பூக்கள்/வாசமாயும் வண்ணமாயும்/நகைக்கின்றன’

என்ற வரிகளில் ஞானம் வெளிப்படுகிறது. நுனிப்புல் மேயாத இவரது எழுதுகோலின் வழியே கசியும் ஒவ்வொரு கவிதையும் சக மனிதர்கள் மீதான உயிர் நேயத்துடன் வேரின் ஆழம் போல் விரிவும் நுண்ணுணர்வும் கொண்டவையாக உள்ளன. மேலும் மார்க்சியம் கற்ற ஒரு சமூக மனிதராக தன்னை அடையாளப்படுத்தும் இவரது பல்வேறு கவிதைகள் இந்தத் தொகுப்பில் நிறைய நமக்கு வாசிக்கக் கிடைக்கின்றன. மனிதகுல வரலாற்றிலிருந்தும் தன் எதிரே நிகழ்ந்து கொண்டிருக்கும் சமூக அவலங்களிலிருந்தும் மனித குலத்தின் மீதும் இயற்கையின் மீதும் தனது அதிகாரங்களைக் கொண்டு அத்து மீறும் பாசிச அரசியல் நிகழ்வுகளிலிருந்தும் சமூக விஞ்ஞான அறிவுடனும் தெளிந்த அறிவுடனும் அறத்துடனும் மானுட நேயத்துடனும் ஒரு கவிஞனுக்கு இருக்க வேண்டிய சமூகப் பார்வையுடனும் தனது எழுதுகோலால் நம் அனைவரின் மௌனம் உடைத்து நம் முன்னே வாசிக்க விரிந்து கிடக்கின்றன இவரது கவிதைகள்.

நூலின் அட்டைப் படத்தை அழகிய முறையில் வெகு நுட்பமாக வடிவமைத்திருக்கிறார் ஓவியக் கவிஞர் ஸ்ரீரசா அவர்கள். காலம் வெளியீடு வழியாக இந்த நூல் வெளிவந்திருக்கிறது.

மஞ்சுளா

நூலின் பெயர் : மௌனம் உடையும் பொழுது (கவிதை நூல்)
ஆசிரியர் : மூரா
பதிப்பகம்:

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *