…
தனிமையின் பெருவெளியில்
எங்கோ ஓடி ஒளியும்
மெல்லிய ஓசையென
ஏகாந்தங்களைச் சுமந்துத் திரிகின்றன
நின் மௌனங்கள்…
நதியொன்றின் அடியாழத்தில் பேசாமடந்தையென
யுகாந்திரங்களாய்ப் புதைந்து கிடக்கும்
புராதனச் சிற்பங்களென
நின் மௌனங்கள்…
எனக்குள் நின் நிகழ்வையும்
உனக்குள் என் இருப்பையும்
உறுதி செய்கின்றன
ஆழ்கடல் முத்தென ஆழ்ந்துறங்கும்
நின் மௌனங்கள்..
உந்தன் மௌனங்கள் நமக்குள் தீயிட
இடைவெளிகளும் அவசியமாகின்றன
நம்மை நாமே உணர்ந்து கொள்ளவும்
நம்மில் நாமே கரைந்து செல்லவும்…
மர்மமாய் நிகழும்
நின் மௌனத்தின் முடிச்சுக்களை அவிழ்க்க முற்படுகையில்
பெரிதாய் எனக்கொன்றும் கிடைத்துவிடவில்லை…
ஆழமான சிந்தனையும்
அழகிய கவிதையொன்றையும் தவிர…
அட.. இது போதாதா..
உன் மௌனம் சூடிக்கொண்ட
மௌன முடிச்சுக்களை அவிழ்ப்பதற்கு…
இதோ.. பனிக்குடத்திலிருந்து வெளியேறும் சிசுவென
அழகாய் ஆர்ப்பாட்டமின்றி அவிழ்க்கின்றன
நின் மௌன முடிச்சுக்களை
என் கவிதைகள்…
சசிகலா திருமால்
கும்பகோணம்.