மெளனத்தின் சாட்சியங்கள் (Mounathin Satchiyangal) – நூல் அறிமுகம்
உலகெங்கும் இயற்கை சீற்றங்களுக்கு அடுத்து மத மோதல்களில்தான் அதிகம் பேர் உயிரிழந்திருப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. அந்த வகையில் இந்திய அளவில் பல மாநிலங்களில் மத வன்முறையில் பாதிக்கப்பட்டு மிகப்பெரிய கலவரங்கள் நிகழ்ந்திருந்தாலும், தமிழக அளவில் அம்மாதிரியான கலவரங்களோ குண்டுவெடிப்புகளோ இல்லை என்று இறுமாந்திருந்த வேளையில், தமிழகத்தை உலுக்கியபடி மிகப்பெரிய வன்முறையும், குண்டுவெடிப்புகளும் நிகழ்ந்து அமைதிப் பூங்கா என்று அழைக்கப்படும் தமிழ்நாடும் கறை படிந்து போனது.
1998 இல் நிகழ்ந்த கோவை மதக்கலவரத்தை பின்னிறுத்தி நாவல் வடிவில் வாசகர்களுக்கு தந்துள்ளார் அங்கு வாழ்ந்த சாட்சியான சம்சுதீன் ஹீரா அவர்கள். எளிமையான மொழியில் ஒரு மிகப்பெரிய கலவரத்தை, எழுத்துக்களால் காட்சிபடுத்தி உணர்வுப்பூர்வமாக கடத்தியுள்ளார். ஒரு சமூகத்தின் பிரதிநிதியாக இருந்த போதிலும், துலாக்கோல் போல் சாய்வற்று மிக நடுநிலையாக இரு பக்கத்திலும் உள்ள பிரச்சனைகள், தவறுகள், யாவற்றையும் நேர்மையாக காட்சிப்படுத்தி உள்ளார். இந்து, இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் அவர்களின் தவறான செயல்பாடால், பாதிக்கப்படுவது யாவும் சாமான்ய மனிதர்களே என்பதை மிக உருக்கமாக பல்வேறு கதாபாத்திரங்கள் மூலமாக சமூகத்தின் முன் வைக்கிறார். இம்மாதிரியான அடிப்படைவாதச் செயல்களுக்கு, விளிம்புநிலை மனிதர்களே கொலைக் கருவிகளாக பயன்படுத்தப்பட்டு, பின் தூக்கி எறியப்படுகிறார்கள். குஜராத் படுகொலையில் முழுக்க முழுக்க செயல்பட்டது அங்கிருந்த அடித்தட்டு மக்களே, அத்தகைய தந்திரத்தை பயன்படுத்தித்தான் கோவையிலும் மிகப்பெரிய வெறியாட்டத்தை நிகழ்த்தியிருக்கிறார்கள்.
யாசரின் பார்வையிலிருந்து தான் முழுமையான சம்பவங்கள் விரிகிறது. மிக எளிய பின்புலத்திலிருந்து அமைதியான வாழ்வை வாழும் அவனது குடும்பம், நண்பர்கள் சூல் உலகு யாவும் எப்படி திசை மாறி திரிந்து போய் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைபட்டு, சிறையின் வதைக்கூடத்தில் நொறுக்கப்பட்டு, காலம் கடந்து எந்தத் தப்பும் செய்யாமலேயே வாழ்க்கை வீணாகி வெளியே வருவது வரை உண்மையை உள்ளவாறு எழுதியுள்ளார். எங்கும் பொய்யில்லை, புனைவில்லை கண்ணால் கண்டதும், காதால் கேட்டதும், தீர விசாரித்ததுமான சம்பவங்கள்.
ஊதிப் பெருக்கப்பட்ட மத மோதல்களுக்கு அடிப்படை காரணம் முதலாளிகளின் வியாபார போட்டி தான் பின்புலமாக இருந்துள்ளது என்பதை கூறுகிறார். இது ஒரு காரணமாக இருந்தாலும், பிழைப்பிற்காக வட இந்தியர்களின் வருகையும், அத்துடன் அவர்களின் மதவெறிச் சிந்தனைகளும், ஒரு அமைப்பின் பின்புலமாக நின்று வேலை செய்திருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.
இன்றைய கோவையும், நடக்கும் சம்பவங்களும் அன்றைய கலவரத்திலிருந்து பாடமேதும் கற்கவில்லையென்றே தோன்றுகிறது. இதில் அரசின் கள்ள மெளனம் என்பது அபாயகரமானது. காவல் துறையும், நீதித் துறையும் இப்பிரச்சனையை நேர்மையாக கையாண்டிருந்தால் அன்றைய கோவை ரத்தத்தால் சிவந்திருக்காது. அதன் வடுக்கள் இன்றளவும் வேதனை தந்திருக்காது. 1997 இல் நடந்த கலவரத்தில் 17 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். 1998 இல் காதலர் தினத்தன்று வெடித்த குண்டுகளில் 46 பேர்கள் படுகொலை செய்யப்பட்டு 2000 பேர் காயமுற்றதாக அரசு செய்தி குறிப்புகள் கூறுகின்றன. வீடிழந்த, நிலமிழந்த, வாழ்விழந்தவர்கள் கணக்கில்லை.
மதவெறியர்களாலும், மத அடிப்படைவாதிகளாலும், என்று பாபர் மசூதி தகர்க்கப்பட்டதோ, அன்றிலிருந்து பொதுச்சமூகம் பதற்றத்திற்க்குள்ளாகி வருகிறது. அதன் தீய விளைவே கோவை குண்டு வெடிப்பும், துயரங்களும்.இதிலிருந்து அவர்கள் மீண்டு வெளியே வருவது என்பது, இடது சாரி அரசியலுக்குள் அவர்கள் அழைத்து வரப்பட வேண்டும் என்பதை, வைஷ்ணவி, மகேந்திரன், பெரோஸ் போன்ற தோழர்கள் வழியே உரையாடலை நாவலின் வழியே நிகழ்த்துகிறார்.சற்று பிரச்சார நெடியடித்தாலும், அதுவும் சமூகத்திற்கு தேவையானதொன்றாக இருக்கிறது.
34 வயதே நிரம்பிய, முதல்முதலாக எழுதத் துவங்கிய இளைஞர் கனமான சம்பவத்தை நாவலெனும் சட்டகத்திற்குள் அடைத்து ஆவணமாக்கித் தந்துள்ளார். நீளம் என்பது சிறு குறையாக இருந்தாலும், இதில் சொல்லப்பட்டுள்ள செய்தி என்பது மிக முக்கியமானது. இந்திய மக்கள் எல்லோரும் கற்றுக் கொள்ள வேண்டியது, அந்த வகையில் சமூகத்தை அதில் நடந்த மத வன்முறை சம்பவத்தை படம்பிடித்து தந்துள்ள எழுத்தாளர் சம்சுதீன் ஹீரா அவர்கள் மிகவும் பாராட்டிற்குரியவர்.
நூலின் தகவல்கள் :
நூல் : மெளனத்தின் சாட்சியங்கள்
(நாவல் )
எழுத்தாளர் : சம்சுதீன் ஹீரா
பக்கம் : 464
விலை : 350
வெளியீடு : பொன்னுலகம் பதிப்பகம்
நூல் அறிமுகம் எழுதியவர் :
செ. தமிழ்ராஜ்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.