நூல் அறிமுகம்: “மௌனியின் மறுபக்கம்” – பா. அசோக்குமார்

“மௌனியின் மறுபக்கம்”
ஜே‌.வி. நாதன்.
“சிறுகதைத் திருமூலர்” என்று வியந்து புகழப்பெற்ற எழுத்தாளர் மெளனி அவர்கள் பற்றிய கட்டுரைத் தொகுப்பே இந்நூல். எழுத்தாளர் ஜே‌.வி.நாதனுக்கும் மெளனி அவர்களுக்குமிடையே இலக்கியம் கடந்த நட்புறவுத்தொடர்பு ரீதியாக மெளனி அவர்களால் கைபட எழுதப்பட்ட கடிதங்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
வாசகராக அறிமுகமான ஜே‌.வி. நாதனுடன் மெளனி அவர்கள் நட்பு பாராட்டிய பாங்கே பெருமதிப்பிற்கும் வியப்பிற்குமுரியதே. 16 ஆண்டுகள் நட்பு பாராட்டி மகிழ்ந்த தருணங்கள் நம் கண்களில் ஆனந்தக் கண்ணீர் சுரக்க வைப்பதாகவே அமைந்துள்ளன.
மெளனி அவர்களுடனான முதல் சந்திப்பில் துவங்கி மரணத்திற்கு முன்னதான சந்திப்பு வரையிலான நிகழ்வுகள் ஒவ்வொன்றும் அலாதியான அற்புத அனுபவங்களே. மெளனி அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் நிலைகள் நமது மனதை ஈரப்படுத்தி கலக்கமடையச் செய்வதாகவே உள்ளன.
“24 சிறுகதைகள்” மட்டுமே எழுதி இன்று மட்டுமன்றி தமிழ் இலக்கிய உலகம் உள்ளவரை தமிழில் புகழப்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவராக மெளனி அவர்கள் மதிப்பிடப் பெறுவதற்கான காரணத்தை அறிய இந்நூல் நிச்சயம் ஒரு துருப்புச்சீட்டாக அமைந்துள்ளது என உறுதியாக நம்பலாம்.
மெளனி அவர்களுடனான பேட்டிகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. பேட்டிகளில் அவர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் ஒவ்வொன்றும் அவரது மனத்தின் ரத்தினத் தெறிப்புகளாகவே மிளிர்ந்துள்ளன.
உதாரணத்திற்கு….
“நல்ல சிறுகதை எது?”
“நல்ல சிறுகதை ஒரு கவிதை. என் சிறுகதைகள் ஒவ்வொன்றும் ஒரு கவிதையே.”
மெளனியின் கதைகள் பொதுவாக புரிவதில்லை என்பதற்கு அவர்  தரும் பதிலோ சிந்திக்க வைக்கக்கூடியதே..
புரியாததாக பாவிக்கப்படும் அவரது பெரும்பாலான சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பெற்று பெரும்புகழ் எய்தியுள்ளன என்பதும் கவனத்திற்குரியதே…
“தமிழ்மொழி வளர்ச்சி” குறித்து அவர் தெரிவிக்கும் கருத்துக்கள் மிக மிக வித்தியாசமான முறையில் சிந்திக்க வைப்பதாகவே உள்ளது.  அவரது சிறுகதை எழுதுவதற்கான தடைக்காரணிகளில் ஒன்றாக அதுவும் இருந்திருப்பது ஆச்சரியமூட்டக்கூடியதே. “மூத்தக்குடி தமிழ்க்குடி” என்று சொல்லும்போதெல்லாம் இனி மெளனி அவர்களின் குரலே என் காதுகளில் ஒலிக்கும் என்றே நம்புகிறேன்.
R P ராஜநாயஹம் வலைப்பூ | குவிகம்
பொதுவாக படைப்புகளை படித்து எழுத்தாளரை அறிவதே வழக்கமென்ற போதிலும் படைப்பாளர் குறித்த தகவல்களை (கட்டுரைகள் வாயிலாக) அறிந்து படைப்பின் சாரத்தை அறிய முயல்வதும் அவசியமென்றே கருதுகிறேன். அதற்கு இந்நூலே சாட்சி.
புகழ்பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் ஒரு பேட்டியில், ” ஒவ்வொரு சிறுகதை எழுதும் முன்பும் ” மெளனி” அவர்களின் ” மாறுதல்” சிறுகதையை படிப்பேன்” என்று கூறுவதை அறியும்போது நம்மை அறியாமலே மெளனி அவர்களின்மீதும் அவரது படைப்பின்மீதும் இனம்புரியா ஈர்ப்பு உண்டாவது இயல்பு தானே. அச்சிறுகதையும் இந்நூலில் இடம்பெற்றிருப்பது கூடுதல் சிறப்பே…
தன் வாழ்வின் இறுதிவரை பார்வைத்திறன் குன்றிய நிலையிலும் யாரோ ஒருவரின் கைத்தாங்கலாக நாள்தோறும் காலையிலும் மாலையிலும் சிதம்பரம் நடராஜர் ஆலயத்திற்கு மெளனி அவர்கள் சென்று வழிபடும் தகவல் பெரிதும் வியப்பிற்குரியதே. இதிலென்ன வியப்பு என்று தோன்றுவது இயல்பே. “ஒருநாளும் கையெடுத்து இறைவனை வழிபட்டதே இல்லை” என்பதே அவ்வியப்பிற்கான காரணம்.  “அத்துவான வெளி” சிறுகதைக்கான மூலமான நிகழ்வும் நம்மை பரவசப்படுத்தக்கூடியதே…
“வித்தியாசமான வயலின்” கட்டுரை இந்நூலின் தலைப்பிற்கேற்ற அற்புதத் தகவலின் சுரங்கமே ஆகும். “மது அனுபவம்” குறித்த கட்டுரையும் மிக மிக முக்கியமானதே. அதிலும் குறிப்பாக மது அருந்தும் எழுத்தாளர்கள் ஆழ்ந்து படிக்க வேண்டிய அத்தியாவசிய கட்டுரையே அது.
மெளனி அவர்களின் சிறுகதை எழுத்துக்கள் மட்டுமல்ல; அவர் பேசியதாக இந்நூலில் இடம்பெற்ற செய்திகள் கூட புரிந்தும் புரியாத மோன மனநிலையிலேயே மிதக்க வைப்பதாகவே உள்ளதாக அடியேன் கருதுகிறேன். மனைவி, மக்கள் மீது அவர் காட்டும் அன்பும் பாசமும் நெகிழ்ச்சியான இனிய அனுபவங்களே…
முன்னதாக கட்டுரைகள் படிக்கும் போது, எழுத்தாளர் ஜே.வி. நாதன் மிகவும் மிகைப்படுத்தி மெளனி அவர்களின் புகழ்ப் பாடியுள்ளாரோ என்ற ஐயம் எழுந்ததை தவிர்க்கவே இயலவில்லை. ஆனால், பின்னர் மெளனி அவர்களின் கையெழுத்தில் பகிரப்பட்டுள்ள கடிதங்கள் ஒவ்வொன்றும் அவையெல்லாம் துளியும் உண்மைக்கு புறம்பானவையல்ல என்பதை பறைசாற்றும் ஆதாரங்களாகவே பளிச்சிடுகின்றன எனலாம்.
அன்று மட்டுமின்றி இன்றும் புகழ்ந்து போற்றப்படும் மெளனியின் படைப்புகள் அவர் வாழ்ந்த காலத்தில் எதிர்மறையான விமர்சனங்களையும் அடைந்துள்ளன என்பதை அறியும்போது மௌனி அவர்களைப் போலவே நாமும் வருத்தமடையவே வேண்டியிருக்கிறது.
மௌனி அவர்களின் படைப்புகளை முன்னரே படித்திருந்த போதிலும் இக்கட்டுரை நூலைப் படித்த பின்னர் மீண்டும் மறுவாசிப்பு செய்ய வேண்டுமென்ற ஆவலைத் தூண்டியுள்ளது என்பதே நிதர்சனம். மாபெரும் சிறுகதை ஆளுமையான மௌனி அவர்களுடன் இவ்வளவு தூரம் நெருங்கி பழகும் வாய்ப்பு பெற்ற ஜே.வி.நாதன் உண்மையில் அதிர்ஷ்டசாலியே. பல்வேறு இடங்களில் பணிபுரிந்த போதிலும் இடைவிடாத கடிதத் தொடர்பு வாயிலாகவும் அவ்வப்போது வந்து சந்தித்தும் உறவைப் பலப்படுத்திய பாங்கு போற்றுதலுக்குரியதே.
அதன் பயனே ஜே.வி.நாதன் அவர்கள் எழுத்தாளராக மிளிர்ந்துள்ளார் என்றே கருதுகிறேன்.
கடிதப் போக்குவரத்தின் அவசியத்தை உணர வைப்பதாகவே இக்கடிதங்கள் உள்ளன. இன்றைய காலகட்டத்தில் கடிதப் போக்குவரத்து மறைந்து வந்தாலும் நவீன தொலைத் தொடர்பு வாயிலாக இணையக்கடிதத் தொடர்பின் அவசியமுணர்ந்து செயல்பட வேண்டுமென்ற உந்துதலையும் இந்நூல் நம்முள் கடத்துவதாகவே உணர்கிறேன்.
நல்லதோர் கட்டுரை நூல். வாய்ப்புள்ளோர் வாசிக்க முயலுங்கள்.
நன்றி.
“மௌனியின் மறுபக்கம்”
ஜே.வி.நாதன்
விகடன் பிரசுரம்
பக்கங்கள்: 152
₹.75.
 பா. அசோக்குமார்
மயிலாடும்பாறை