ஜூன் 2020இல் வெளிவந்த இந்திப்படம். ஷூஜித் சர்க்கார் என்பவர் இயக்கியுள்ளார்.80வயது கூன் விழுந்த கிழவராக, வஞ்சகராக, கஞ்சனாக அமிதாப்பச்சன் சிறப்பாக நடிக்கிறார். லக்னோவை அழகாக எதார்த்தமாக படம் பிடித்திருக்கிறார்கள். அடித்தட்டு மக்களின் நல்ல பண்புகளை ஒருவருக்கொருவர் உதவும் இயல்புகளைக் காட்டுவது ஒரு வகை படைப்பு. அவர்களின் வாழ்க்கை நிலைமைகளினால் அவர்களின் மாண்புகள் சிதைவதைக் காட்டுவது இன்னொரு வகை. இந்தப் படம் இரண்டாவது வகை.
ஒரு பழமையான கட்டிடம். மிர்சா என்ற கிழவரின் மனைவிதான் அதன் உரிமையாளர். அதன் மீது மிகுந்த பற்று கொண்டவர். தான் விரும்பியவர் அந்தக் கட்டிடத்தைவிட்டு வரவேண்டும் என்று கூறியதால் அவரை திருமணம் செய்துகொள்ளாமல் மிர்சாவை திருமணம் செய்தவர் ஆனால் மிர்சாவோ, அவள் எப்போது சாவாள், தான் எப்போது அதன் உரிமையாளராகலாம் என்று கணக்கு பண்ணிக்கொண்டே இருப்பவர். மிக மோசமான மனிதர். பல்புகளை திருடி விற்கிறார். மனைவியிடம் செலவுக்கு பணம் கேட்டு வாங்கிக்கொண்டே இருப்பார்.
அந்தக் கட்டிடத்தில் ஐந்தாறு வாடகை குடித்தனக்காரர்கள் வசிக்கிறார்கள். எல்லோரும் அடித்தட்டு மக்கள். வாடகை பல மாதங்கள் கொடுப்பதில்லை. அதில் பான்கே என்னும் இளைஞன் மாவு மில்லில் வேலை செய்பவன். ஒரு பெண்ணைக் காதலிக்கிறான். அவனுக்கு தங்கைகள், தம்பி, தாய் எனப் பெரிய குடும்பம். ஒரு தங்கை படிக்க வேண்டுமென்கிறாள். இன்னொரு தங்கை வேலைக்கு போக வேண்டுமென்கிறாள். இவள் ஆண்களுடன் பழகுவதற்கு தயங்காதவள்.
இந்தக் கட்டிடத்தின் மீது தொல்பொருள் துறை அதிகாரி ஒருவரின் கண் விழுகிறது. அதை அரசாங்கம் எடுக்க வேண்டுமென்று நடவடிக்கைளில் இறங்குகிறார். மிர்சாவுக்கு எதிராக இருக்கும் பான்கே அவருக்கு துணை புரிகிறான். அவனுக்கு ஒரு எம்ஐஜி வீடு கிடைக்கும் என அவர் ஆசை காட்டுகிறார். இவர்களை எதிர்கொள்ள, மிர்சா வழக்கறிஞர் ஒருவரை நாடுகிறார். கட்டிடம் அவருக்கு உரிமையானால்தான் ஏதாவது செய்ய முடியும் என்கிறார்.வழக்கறிஞர். அந்தக் கட்டிடம் குடும்ப சொத்து என்பதால், மிர்சா தன் மனைவியின் சகோதர சகோதரிகளை சந்தித்து அதில் தங்களுக்கு விருப்பமில்லை என்று எழுதி வாங்குகிறார். மனைவி தூங்கும்போது அவளது வலதுகை கட்டைவிரல் ரேகையை பத்திரத்தில் பதித்துக் கொண்டு வருகிறார். ஆனால் இடது கைவிரல் கட்டைவிரல் ரேகைதான் வேண்டும். மீண்டும் முயற்சிக்கும்போது அவள் விரல்களில் துணியை சுற்றிக் கொண்டிருக்கிறாள்.
இதற்கிடையில் அந்தக் கட்டிடத்தை ஒரு ரியல் எஸ்டேட் புள்ளி விலைக்கு வாங்க வருகிறார். 25 மாடிக் கட்டிடம் கட்ட திட்டமிடுகிறார். தொல்பொருள் துறை அது தன்னுடைய ஆய்வில் இருக்கிறது என்று அறிவிக்கிறது. திடீரென்று அந்தக் கட்டிடத்தின் உரிமையாளரானமிர்சாவின் மனைவி காணாமல் போய் விடுகிறார். அந்தக் கட்டிடம் அவருடைய முன்னாள் காதலனுக்கு ஒரு ரூபாய்க்கு விற்கப்பட்டு விட்டதாக அவளுடைய பணிப்பெண் அறிவிக்கிறார். எல்லோரும் கட்டிடத்தை காலி செய்துவிட்டுப் போகிறார்கள். மிர்சாவுக்கு ஒரு பழைய வீட்டை எழுதி வைத்துவிட்டு அவருடைய மனைவி விவாகரத்து வாங்கிக் கொண்டு தன்னுடைய முன்னாள் காதலனுடன் போய்விடுகிறாள். இதுதான் கதை.
பல நகைச்சுவை சம்பவங்கள் வருகின்றன. வாடகைக்காரர்களுக்காக இருக்கும் ஒரே பொதுக் கழிப்பறைக்காக காத்திருக்கும் பான்கே, ஆத்திரத்தில் காலால் உதைக்க சுவர் உடைந்து விடுகிறது. ஒரு இடத்தில் தங்கப் புதையல் இருக்கிறது என்று ஒரு சாமியார் சொன்னதை நம்பி தொல்பொருள் துறை அந்த இடத்தை தோண்டுகிறது. மிர்சாவின் கட்டிட பழமையை சோதிப்பதற்காக அதிலிருந்து எடுத்து வந்த செங்கல்லை ஆய்வு செய்கிறது. கதை லக்னோவில் நடக்கிறது என்பதால் இந்த நிகழ்வுகள் அரசியல் அங்கதமாகத் தெரிகிறது. இன்னொரு இடத்தில் ‘சுப்ரீம் கோர்ட் டெல்லியில் இருக்கிறது.இது லக்னோ’ என்கிறான் பான்கே. அடித்தட்டு மக்கள் சாமர்த்தியமாகப் பேசுவதும் அதே சமயம் அரசின் திட்டங்களைக் கண்டு பயப்படுவதும் நம்புவதும் பல இடங்களில் காட்டப்படுகிறது.
இந்தப் படம் மனிதர்கள் பலரை அவர்களின் இயல்புகளுடன் காட்டுகிறது. பான்கியுடன் பழகும் இளம்பெண் அவன் வாழ்க்கை அப்படியேதான் இருக்கும் என்று தெரிந்ததும் வசதியான ஒருவனை திருமணம் செய்துகொள்கிறாள். மிர்சாவுக்கு அறிவுரை கூறிக்கொண்டே அவரது நண்பர் தொல்பொருள் துறைக்கும் தகவல் கொடுக்கிறார். வேலை கிடைப்பதற்காக அதிகாரியிடன் நெருக்கமாகப் பழகவும் தயாராக இருக்கிறாள் ஒரு பெண். தன் கணவனின் ஈனத்தனத்தைப் புரிந்துகொண்ட வயதான பெண்மணி தன் முன்னாள் காதலனுடன் போக முடிவெடுப்பதுதான் கதையின் கிளைமாக்ஸ்.