Movie Review: JaiBhim movie by B Shanmugam திரைவிமர்சனம் ஜெய் பீம் - பி.சண்முகம்



நேற்று இரவு ஜெய்பீம் படம் பார்த்தோம். கடலூர் மத்திய சிறை வாயிலில் குறவர், இருளர், ஒட்டர் சாதியினர் ஓரமாக நிற்கச் சொல்லி மற்ற சாதியினர் அனைவரும் அனுப்பப்படுகின்றனர். இந்த முதல் காட்சியிலேயே பார்வையாளர்களை நிமிர்ந்து உட்கார வைத்து விடுகின்றார்‌ இயக்குநர். தமிழ்நாட்டில் 1952ஆம் ஆண்டே குற்றப் பரம்பரைச் சட்டம் (ct act)ரத்து செய்யப்பட்டுவிட்டது. இருப்பினும் முன்னாள் குற்றப் பரம்பரையினர் என்று வரையறுத்து திருட்டு வழக்கில் இப்பிரிவு மக்கள் மீது பொய்வழக்கு போடுவதை காவல்துறையினர் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட கதை என்பதை வெளிப்படையாக அறிவித்துள்ளனர். ஆனால் காவல்நிலையத்தில் அடித்து கொல்லப்பட்ட ராஜாக்கண்ணு குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர். முதல் தகவல் அறிக்கையிலேயே இது பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிக்காக போராடிய அவருடைய மனைவி பார்வதி இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். எனக்குத் தெரிந்த வரையில் முன்னாள் குற்றப் பரம்பரையினர் என்ற பெயரில் காவல்துறையின் ஒடுக்கு முறைக்கும் பொய்வழக்கிற்கும் அதிகமாக ஆளானவர்கள் குறவர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள்தான். எல்லா வகையிலும் பின்தங்கிய நிலையில் உள்ளவர்கள்.
ராஜாக்கண்ணுவின் லாக்கப் படுகொலை ஏன் இருளர் பழங்குடி மக்கள் மீதான ஒடுக்குமுறையாக திரைப்படமாக்கப்பட‌ வேண்டும். குறவர் பழங்குடி மக்கள் மீதான ஒடுக்குமுறையாகவே வெளிவந்திருந்தாலும் இதேபோல் படம் வெற்றி பெற்றிருக்கும்.

ஊத்தங்கரை வட்டம் எளச்சூர் கிராம் குறவர் சமூகத்தைச் சேர்ந்த கோவிந்த சாமி குடும்பம் படத்தில் காட்டப்பட்டுள்ளதைவிட பலமடங்கு காவல்துறையின் காட்டுமிராண்டித்தனமான கொடுமைகளுக்கு உள்ளானது.

இதை நம்முடைய அமைப்புக்கள் சார்பில் நான் வெளிக்கொண்டு வந்தேன். தோழர்.பாலபாரதி இப்பிரச்சினையை சட்டமன்றத்தில் பேசினார். அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் நடந்துள்ள சம்பவங்கள் ஒரு திரைப்பட காட்சிகள் போல் உள்ளது. இருப்பினும் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடுகிறேன் என்றார். இது வாணியம்பாடி காவல் நிலையத்தில் நடந்த கொடுமை. இதில் உயிரிழப்பு மட்டும் தான் இல்லை.

ஆகவே உயிரை இழந்த ராஜாக்கண்ணுவின் குறவர் சமூகத்தின் மீதான ஒடுக்குமுறையாகவே படம் அமைந்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும் இது ஒரு குறைதான்.

மூடிமறைக்கப்பட்ட படுகொலையை வெளிக்கொண்டு வந்து மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் பெரும் போராட்டங்களை நடத்தியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி. இதன் விளைவாகத்தான் ஒரு குறவர் சமூகத்தைச் சார்ந்தவர் காவலர்களால் காவல் நிலையத்தில் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் காவல்நிலைய குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை அபராதம் விதிக்கப்பட்ட முதல் வழக்கு இதுதான். ஆகவே இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மகத்தான சாதனைகளில் ஒன்று. கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிகள் காட்டப்படுகிறது என்பதனால் மட்டும் நாம் திருப்தியடைந்து விடமுடியாது. நமது கட்சியின் உழைப்பும் தியாகமும் ஒப்பிடற்கரியது. எதனாலும் அதை ஈடுகட்ட முடியாது. படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *