2013 ஆம் ஆண்டு.. விஸ்வரூபம் திரைப்படத்தின் வெளியீட்டில் சில பிரச்சினைகள் எழ, படத்தை நேரடியாக டிடிஹெச்சில் வெளியிடப் போவதாய் கமல் அறிவித்தார். உடனே தமிழ்த் திரையுலகம் முழுக்க அது தீயாய் பற்றியது. அந்த முடிவுக்கெதிராய் திரைப்பட உலகின் பல பிரிவினரும் கொந்தளிக்க ஆரம்பித்தனர். இதுதான் எதிர்காலம் என கமல் உறுதியாய் சொல்ல, மறுதரப்பு மறுக்க, இறுதியில் பிரச்சினைகள் தீர்ந்து படம் தியேட்டரிலேயே வெளியானது. ஆனால் கமல் சொன்னது போல் இதுதான் எதிர்காலம் என்பது இந்த ஏழு ஆண்டுகள் கிட்டத்தட்ட நிரூபணமாகிவிட்டிருக்கிறது! அதற்கு கட்டியம் கூறுவது போல் மீண்டும் எழத் துவங்கியிருக்கிறது இந்த பிரச்சினை. இம்முறை டிடிஹெச் இல்லை. ஓடிடி தளங்கள்.
விஸ்வரூபம் பிரச்சினை எழுந்தபோது தமிழ்நாட்டில் டிடிஹெச் பயனாளர்கள் அத்தனை அதிகம் இல்லை. அப்போது படம் நேரடியாய் டிடிஹெச்சில் வெளியாகியிருந்தால் எந்தளவுக்கு வெற்றி பெற்றிருக்கும் என்பதை சொல்ல முடியவில்லை. ஆனால் தற்போது இந்தியாவில், தமிழகத்தில், ஓடிடி க்களின் தாக்கம் குறிப்பிடத் தகுந்த அளவு வளர்ந்து வருகிறது. அமேசான், நெட்ஃப்ளிக்ஸ், எம்.எக்ஸ் ப்ளேயர், ஸீ போன்ற பல தளங்கள் இந்திய மார்க்கெட்டை பிடிக்க போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. உலகளவில் தவிர்க்கவே முடியாத ஒரு மீடியமாகிவிட்ட இந்த தளங்கள் காத்திருப்பது சினிமா உலகின் பிரம்மாண்ட மார்க்கெட்டான இந்தியாவை பிடிக்கத்தான். அந்தளவு வேகமாக வளர்ந்து வருகிறது இந்தியாவில் ஓடிடி களின் வீச்சு.
திரையரங்கில் படம் போடுவதற்கு முன்பு திரையில் டிஜிடல் பார்ட்னர் அமேசான் என்று போட்டால் விசில் சத்தம் காதை கிழிக்கிறது. அந்தளவுக்கு ரசிகர்கள் பெருகியிருக்கின்றனர் இந்த தளங்களுக்கு. பெரும்பாலும் இந்த படங்கள் ஒரு மாதத்தில் இருந்து இரண்டு மாதங்களுக்குள் ஓடிடியில் வந்துவிடுவதும் ஒரு காரணம். இந்த சூழலில் தான் வந்தது கொரோனா. உலகையே சுற்றலில் விட்டது இந்தியாவையும் விடவில்லை. எல்லா தொழில்களும் திடுக்கிட்டு நின்றதுபோல் சினிமா உலகமும் அப்படியே விக்கித்துப் போய் நிற்கிறது. படப்பிடிப்பு இல்லை. மற்ற வேலைகளும் இப்போது தான் மெதுவாக துவங்குகின்றன. பாதியில் படப்பிடிப்பு நிற்கும் படங்கள், முழுதாய் முடிந்து திரையரங்கிற்கு காத்திருக்கும் படங்கள் என நீள்கிறது இந்த வரிசை.
இந்த நிலையில் தான் வருகிறது அந்த அறிவிப்பு. இந்தியாவின் பல மொழிகளை சேர்ந்த ஏழு திரைப்படங்கள் நேரடியாக அமேசானில் வெளியாகும் என்பதுதான் அது. இந்தியாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடித்த படமும் இதில் அடங்கும். இந்த அறிவிப்பு திரையுலகில் இரண்டு பக்கமிருந்தும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஒன்று, இது திரையரங்குகளை கொன்றுவிடும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் போர்க்கொடி தூக்குகின்றனர். இன்னொரு புறம் சில தயாரிப்பாளர்கள் மீண்டும் திரையரங்குகள் எப்போது திறக்கும் என்பது தெரியாத நிலையில், மாதா மாதம் வட்டி மேல் வட்டி ஏறிக்கொண்டு போகும் தருவாயில், இப்படி ஒரு வியாபார அமைப்பு வருகையில் அதை ஏன் விடவேண்டும் என்றும் கேட்கிறார்கள்.
நிஜமாகவே இது திரையரங்குகளை கொன்று விடுமா? திரையரங்கு உரிமையாளர்களின் இந்த பயத்தில் உண்மை இல்லாமலும் இல்லை. திரையரங்கு ஒன்றுதான் பொழுதுபோக்கு என்று இருந்த காலத்தில் திரையரங்குகளுக்கு இருந்த வருமானம், டிவி, மொபைல் கொட்டிக் கிடக்கும் இந்த காலத்தில் இருக்கிறதா என்றால் இல்லைதான். மக்கள் முன் பல தேர்வுகள் இருக்கின்றன. மிகவும் தேர்ந்தெடுத்தே திரையரங்கிற்கு செல்கின்றனர்.
இதற்கான காரணத்தையும் இங்கே ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஆந்திரா தமிழ்நாடு எல்லையில் ஒரு மிகப்பெரும் தியேட்டர் இருக்கிறது. டிக்கெட் விலை 70 ரூபாய், 50 ரூபாய், 30 ரூபாய் தான். பாப்கார்ன் 20 ரூபாய். மற்ற திண்பண்டங்களும் அதே அளவு தான். பார்க்கிங் 5 ரூபாய். பெரும்பாலும் இரண்டாம் வெளியீட்டு படங்களும் அவ்வப்போது புதுப்படங்களும் வெளியாகும் இந்த தியேட்டரில் எப்போதும் குறைந்தபட்சம் 60 முதல் 70 சதவிகித கூட்டம் இருக்கிறது என்றார் அங்கே போய் வந்து ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குனர். ஆக திரையரங்கிற்கு வந்து படம் பார்க்கும் ஆர்வம் மக்களுக்கு இருக்கத்தான் செய்கிறது.
என்னதான் வீட்டில் இருந்தபடி, நினைத்த நேரத்தில், நினைத்த விதத்தில் பார்க்க முடியும் என்றாலும், ஒரு திரையரங்கு தரும் திரையனுபவத்தை நிச்சயம் வேறெதுவும் தந்துவிட முடியாது. மக்களும் இதை உணர்ந்தே இருக்கிறார்கள். இதற்கு சிறந்த உதாரணம், பாகுபலி, எந்திரன் போன்ற படங்கள் வரும்போது அது தரும் திரையனுபவத்திற்காகவே திருட்டு விசிடியைத் தவிர்த்து தியேட்டர்களுக்கு படையெடுத்தனர் மக்கள். இது பெரிய நாயகர்களின் படங்களுக்கும் வேறு சில நல்ல படங்களுக்கும் பொருந்தும். ஆனால் மக்களை தடுப்பது தியேட்டர்களுக்கு சென்று வரும் வரையில் ஆகக்கூடிய செலவுகள் தான். சென்னையின் மல்ட்டிப்ளக்ஸ் திரையரங்குகளை பொறுத்தவரை, ஒரு குடும்பம் படத்திற்கு போய் வர கண்டிப்பாக 1500 தேவை. சினிமாவின் மைய பார்வையாளர்களான நடுத்தர வர்க்கத்திற்கும் கீழ் நடுத்தர வர்க்கத்திற்கு இது ஆகப்பெரும் தொகை.
இதுவே அந்த ஆந்திர தியேட்டரை எடுத்துப் பாருங்கள். 300 ரூபாயில் ஒரு படம் பார்த்துவிட்டு வந்துவிடலாம். வாரம் 300 ரூபாய் என்பது நம் குடும்பங்களுக்கு பெரிய விஷயம் இல்லை. ஆனால் வாரம் 1500 என்பது? இதை நிச்சயம் திரையரங்குகள் கவனத்தில் கொள்ள வேண்டும். ரஜினி விஜய் படங்களுக்கும் அதே டிக்கெட் விலை, ஒரு மிகக்குறைந்த பட்ஜெட் படத்துக்கு அதே டிக்கெட் விலை என்பதை மாற்றுவது, திண்பண்டங்கள், பார்க்கிங் போன்றவற்றின் விலைகளை கட்டுக்குள் வைப்பது போன்றவற்றை செய்தாலே மக்களை மீண்டும் குடும்பம் குடும்பமாக திரையரங்குகளில் காணலாம்.
ஆனால் இது திரையரங்கிற்கு வருவதை குறைத்துக் கொண்ட கூட்டத்தை மீண்டும் உள்ளே இழுக்க மட்டும்தான் பயன்படுமே தவிர, மக்கள் ஓடிடி பக்கம் போவதை தடுக்க முடியாது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு கலையும் தனக்குள்ளேயும் வெளியேயும் பல்வேறு மாறுதல்களை சந்தித்து அதற்கேற்றவாறு தன்னை வடிவமைத்துக் கொண்டே இத்தனை ஆண்டுகள் செயல்பட்டு வருகிறது. அதுபோல் சினிமா என்னும் பெருங்கலையின் வெளியில் நிகழும் அதிமுக்கியமான ஒரு மாற்றம் இது. என்ன செய்தாலும் இதை தவிர்த்து விட்டு சமகால பொழுதுபோக்கு ஊடகத்தை அணுக முடியாது. இந்த மீடியத்தின் சவுகரியங்களும் அது தரும் எண்ணற்ற தேர்வுகளும் இதை தவிர்க்க விடாது.
இதை உணர்ந்து தான் உலகெங்கும் பல நாடுகளில் இதற்கேற்ற வகையில் சினிமா தன்னை வடிவமைத்துக் கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில், இந்தியாவில் மட்டும் நடக்கும் விவாதம் அல்ல இது. உலகளவில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் ஓடிடி யின் அதீத வளர்ச்சி திரையரங்கை பாதிக்கும் என்போருக்கும் தெரியும், ஓடிடி யின் வளர்ச்சி தடுக்க முடியாத ஒன்று என்று.

இன்னொரு முக்கியமான பரிமாணமும் இதில் உள்ளது. இது ஒருவதையில் சினிமாவில் நிலவி வரும் ஏகபோகத்தை தடுக்கும். பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் சண்டையிட முடியாத, பல முறை சங்கங்கள் மூலமாக வெளியீட்டு தேதிகள் சார்ந்து கோரிக்கை எழுப்பியும் ஒன்றும் நடந்து விடாத, கோடிகள் மோதிக் கொள்ளும் வணிக சண்டையில் காணாமல் போகும் சிறு பட தயாரிப்பாளர்களுக்கு தங்கள் படைப்பை முன்வைக்க இன்னொரு மேடை கிடைத்துள்ளது. இத்தனை நாள் நிலவி வந்த கார்ப்பரேட் ஏகபோகத்தை தடுக்க, தமிழ் சினிமா என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்று பார்த்தால் பதில் எதுவும் இல்லை. கிட்டத்தட்ட தனித் தயாரிப்பாளர்களே இல்லை எனுமளவிற்கு கார்ப்பரேட்டுகள் ஆக்கிரமித்துக் கொண்டு, வெளியீட்டு தேதிகள் முதல், திரையரங்குகள் வரை எல்லாவற்றிலும் எட்டிப் பார்க்கும் இந்த ஏகபோகத்திற்கும் ஓடிடி ஒரு செக் வைக்கிறது.
இந்த பரிமாணத்தில் பார்த்தால் ஓடிடி சிறுபடங்களுக்கான ஒரு வரப்பிரசாதம் போல தோன்றும். ஆனால் நிஜம் சற்றே வேறுபடுகிறது. திரையரங்குகளில் சிறுபடங்கள் சந்திக்கும் அதே பிரச்சினையை ஓடிடி யிலும் சந்திக்க வேண்டியிருக்கிறது. பொதுவாக திரையரங்குகள் பெரும் நாயகர்கள் படங்களுக்கும், பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் படங்களுக்குமே முன்னுரிமை கொடுத்து அரங்கங்களையும் காட்சிகளையும் ஒதுக்கும். இதுவே சிறுபடங்கள் அங்கே சந்திக்கும் மிகப்பெரிய சவால் அல்லது பின்னடைவு எனலாம். இந்த பிரச்சினை ஓடிடி யில் சற்றும் வேறுபடாமல் அப்படியே இருக்கிறது என்கிறார் லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவன தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகர்.
ஓடிடி தளங்களுக்குள் சென்று பார்க்கும் போது பெரிய படங்கள் இருப்பதைப் போல அதில் சிறுபடங்களும் இருக்கும். மேலோட்டமாய் பார்க்கும் போது இரண்டும் சம அளவில் இருப்பதைப் போல தோன்றும். ஆனால் தியேட்டர்கள் நாயகர்கள், தயாரிப்பு நிறுவனம், தொழில்நுட்ப கலைஞர்கள் என பிராண்ட் பார்த்து படங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதைப் போலவே தான் ஓடிடி யும் நடந்து கொள்கிறது. பெரிய படங்கள் மற்றும் பெரிய பிராண்டை சேர்ந்த படங்களை மட்டும் தான் ஓடிடி நிறுவனங்கள் பணம் கொடுத்து வாங்கி வெளியிடுகின்றன. ஆனால் சிறு படங்களுக்கான வியாபாரம் அப்படி நடப்பதில்லை. பெரும்பாலான சிறுபடங்கள் Revenue Sharing என்ற அடிப்படையில் தான் வாங்கப்படுகின்றன. அதாவது எத்தனை பேர் பார்க்கிறார்களோ அதற்கேற்ப தான் பணம் வரும். இது சிறு படங்களுக்கு மீண்டும் ஒரு நிச்சயமற்ற தன்மையையே உருவாக்குகிறது என்கிறார் அவர்.
இது உண்மைதான். சமீபத்தில் நேரடியாக அமேசானில் வெளியாகப் போவதாய் அறிவிக்கப்பட்டிருக்கும் படங்களில் பலவும் இப்படி ஏதேனும் ஒரு பிராண்டை கொண்ட படங்கள் தான். பெரிய படங்களின் உரிமைகளுக்கும் முதலில் ஒளிபரப்பும் ப்ரீமியர் உரிமைக்கும் போட்டி போடும் ஓடிடி நிறுவனங்கள், சிறு படங்கள் என்று வரும்போது அவற்றை டீல் செய்யும் விதம் முற்றிலும் வேறாகத் தான் இருக்கிறது. ஒன்று அந்த படம் மிகப்பெரிய அளவில் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றிருக்க வேண்டும். அல்லது ஏதோ ஒரு விதத்தில் மக்களின் கவனத்தை ஈர்த்திருக்க வேண்டும். இல்லை விருதுகள் ஏதும் வாங்கியிருக்க வேண்டும். இப்படிப்பட்ட படங்களை கூட Revenue Sharing அடிப்படையில் தான் ஓடிடி க்கள் வாங்குகின்றன.
யோசித்துப் பார்த்தால் மேலே சொன்ன அனைத்துமே ஒரு படத்தின் திரை வெளியீட்டிற்கு பின்னர் நடப்பவையே. அப்படி இருக்கையில், நேரடியாக அந்த படம் ஓடிடி யில் வெளியாகிறது என்றால் இந்த கௌரவங்களும் அந்த படத்திற்கு இருக்காது. அது அப்படத்தின் வியாபாரத்தை மேலும் பாதிக்கவே செய்யும். இது மீண்டும் பெரும் நாயகர்கள், பெரும் நிறுவனங்களின் ஆதிக்கத்திற்குத் தான் வழிவகுக்கும்.
தயாரிப்பாளர்களுக்கு வருமானத்திற்கான இன்னொரு மேடை எனுமளவில் ஓடிடி வரவேற்கப்படலாமே தவிர, அதில் உள்ள இந்த முன்னுரிமைகள் தவிர்க்கப்பட்டு, படங்கள் வாங்கும், வெளியிடும் முறையே மறுசீரமைக்கப்பட்டால் தான் அது ஆரோக்கியமான ஒரு மாற்றமாக இருக்கும் என்கிறார் லிப்ரா ரவீந்திரன்.
அதே சமயம், ஓடிடி க்களால் திரையரங்குகள் நிச்சயம் அழிந்து விடாது என்றும் அடித்து சொல்கிறார் அவர். எப்படி டிவி, விசிடி, டிவிடி, டாரன்ட் போன்ற எல்லாவற்றையும் தாண்டி தியேட்டர்கள் தங்களை தக்கவைத்துக் கொண்டதோ அதேபோல் ஓடிடி யையும் தாண்டி திரையரங்குகள் நிலைத்து நிற்கும். இன்னொரு முக்கியமான காரணம், திரையரங்குகள் உற்பத்தி செய்யும் வருமானத்தின் அடிப்படையில் தான் இங்கே நாயகர்களின் சம்பளம் முதற்கொண்டு படத்தின் பட்ஜெட் வரை பல விஷயங்கள் நிர்ணயம் செய்யப்படுகின்றன. எனவே திரையரங்கை தவிர்த்து விட்டு சினிமா இயங்காது என்றும் உறுதியாக கூறுகிறார்.
சில விஷயங்கள் உறுதியாக தெரிகின்றன. ஓடிடி யின் வரவும் எழுச்சியும் தவிர்க்க முடியாதது. அது சினிமா வியாபாரத்தில் ஒரு முக்கியமான பங்கை வகிக்கத் தான் போகிறது. ஆனால் திரையரங்கில் நிலவும் ஆதிக்கங்கள் ஓடிடி யிலும் தொடர்வது, திரையரங்குகள் யாருக்கெல்லாம் லாபமாகவும் யாருக்கெல்லாம் சவாலாகவும் இருந்ததோ அதே நிலைமையைத் தான் தொடர வைக்கப் போகிறது.
பயனாளர்களை பிடிக்க நடக்கும் இந்த போட்டியில் அடுத்த ஒரு சில வருடங்களுக்கு இது மாறும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. ஆனால் ஓடிடி மற்ற நாடுகளைப் போல இந்தியாவிலும் தன்னை வலிமையாக நிலைநிறுத்திக் கொண்ட பின்னாவது இந்த நிலை மாற வேண்டும். பெரிய படங்களுக்கு அதிகமான வரவேற்பும் வியாபாரமும் இருக்கும் என்பதை மறுக்க முடியாது. ஆனால் சிறுபடங்களுக்கும் அதே வாய்ப்பை வழங்க வேண்டியது கட்டாயம். நல்ல படங்கள் எடுக்க நினைக்கும் கலைஞர்களுக்கு தற்போதைய சினிமா வியாபாரம் அளித்துள்ள நிலையற்ற வியாபார தன்மையையும் பயத்தையும் ஓடிடியும் அளித்தால், அது நிச்சயம் ஒரு மாற்று ஊடகமாக இருக்காது. மற்றுமொரு ஊடகமாகத்தான் இருக்கும்.
– கட்டுரையாளர்: ஜெயச்சந்திரன் ஹாஷ்மி