ஒரு சிறிய நடை பயணம்
மொழிபெயர்ப்பு சிறுகதை
மூலம் பிரெஞ்ச் மொழியில் : மபசான்
ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழியாக்கம் : தங்கேஸ்
திருவாளர்கள் லாப்யூஸ் நிறுவனத்தின் கணக்காளர் முதியவர் லேராஸ் அலுவலக ஸ்டோர் ரூமின் இருட்டிலிருந்து ,சற்று நேரம் வெளியே வாசலில் வந்து நின்றார். வானத்தில் சூரியன் மறையும் அந்திப் பொழுதை அண்ணாந்து பார்த்தார். .அந்த ஒளிக் கலவையின் அற்புதக் காட்சி மனதை மயக்கும் ரம்மியம் நிறைந்ததாக இருந்தது .
அவர் நாள் முழுவதும் ,மஞ்சள் வெளிச்சத்தை கொட்டும் கேஸ் லைட்டின் கீழே அமர்ந்து தான் கணக்குகளை எழுதிக் கொண்டிருப்பார். காலையில் அலுவலகம் திறப்பதிலிருந்து முன்னிரவில் அதன் கதவுகள் சாத்தப்படும் வரையிலும் எப்போதும் அவர் அந்த அறைக்குள்ளேயே தான் அமர்ந்திருப்பார்.
இவ்வளவுக்கும் அந்த நிறுவனம் ஒரு சிறிய இருளடைந்த முட்டுச் சந்துக்குள் தான் அமைந்திருக்கிறது. அதன் உள்ளே நுழைந்தால் பார்ப்பதற்கு ஆழமான கிணறு போல் தான் தோற்றம் தரும் . அந்த கிணற்றுக்குள்ளேயும் அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடம் மிக மிக சிறியது .
இந்த சின்னஞ் சிறிய அறைக்குள் தான் அவர் கடந்த நாற்பது ஆண்டு காலமாக குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறார் . அது கோடை காலமாக இருந்தால் கூட உள்ளே பார்ப்பதற்கு மிகவும் இருட்டாகத்தான் தான் இருக்கும் .
பிற்பகல் மூன்று மணிக்கு நாம் அங்கே சென்றால் கூட வெளிச்சத்திற்காக கேஸ் லைட்டை ஏற்றி வைத்திருப்பார்கள் . சில நேரம் நீங்கள் காலை பதினோரு மணி முதலே கூட கேஸ் லைட் எரிந்து கொண்டிருக்கும்.
அந்த அறையின் சுவர்கள் எப்பொழுதும் ஈரமாகவும் பாசி படிந்தும் தான் காணப்படும் . அந்த அறையின் ஜன்னலில் ஒரு சிறிய துளை ஒன்று உண்டு . அந்த துளையின் வழியாக வெளியிலிருந்து சகித்துக் கொள்ள முடியாத துர்நாற்றம் உள்ளே வந்து கொண்டேயிருக்கும் .
முதியவர் லேராஸ் கடந்த நாற்பது ஆண்டுகளாக இந்த இடத்திற்குத் தான் நாள் தவறாமல் வந்து போய்க் கொண்டிருக்கிறார் . காலையில் எட்டு மணிக்கெல்லாம் இந்த சிறைச்சாலைக்குள் நுழைந்து விடுவார் . காலையில் உள்ளே வருபவர் தான் அப்படியே தொடர்ந்து இரவு ஏழு மணி வரையிலும் அவர் அங்கே தான் இருப்பார் .
எப்பொழுதும் பேரேடுகளில் எதாவது எழுதிக் கொண்டும் கணக்கு வழக்குகளை பார்த்துக் கொண்டும் தான் அவர் மற்றவர்களுக்கு காட்சி தருவார். , அந்த கணக்குப் புத்தகங்களை கட்டிக் கொண்டு அழுவது தான் அவருடைய முழு நேரப் பணியாகும்.
அவர் வேலைக்கு சேர்ந்த புதிதில் வருடத்திற்கு ஆயிரத்து ஐந்நூறு பிராங்குகள் அவருக்கு ஊதியமாக வழங்கப்பட்டன. தற்போது அது மூவாயிரமாக உயர்த்தப்பட்டிருக்கிறது.
வாழ்க்கையின் பெரும்பகுதியை அவர் இந்த நிறுவனத்தில் தான் கழித்திருக்கிறார் . வாழ்க்கையில் அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை என்பது அவரைப்பற்றிய கூடுதலான ஒரு செய்தி. அவருடைய ஏழ்மை நிலை தான் அவர் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்கு கூட அவரை அனுமதிக்கவில்லை
அவர் வாழ்க்கையில் எந்த இன்பத்தையும் சரியாக அனுபவித்ததாக சரித்திரமேயில்லை . . தவிர காலம் செல்லச் செல்ல எதன் மீதும் அவருக்கு நாட்டம் குறைந்து கொண்டே வருகிறது. விருப்பப்பட்டு எதையாவது ஒன்றை நினைத்துப் பார்த்தால் கடைசியில் சோர்வு கலந்த ஒரு ஆயாசம் மட்டுமே அவருக்கு மிஞ்சுகிறது.
அவ்வப்போது தனது அலுத்துப்போன வாழ்க்கையை நினைத்து புலம்ப ஆரம்பிப்பார் ‘’ வருடத்திற்கு ஒரு ஐந்நூறு பிராங் கூடுதல் வருமானம் மட்டும் எனக்கு வாய்த்திருந்தால் வாழ்க்கையை நன்றாக அனுபவித்திருப்பேன் ‘’ என்று அவரே சொல்லிக்கொள்வார். பிறகு அவருக்கே தான் அப்படிச் சொன்னது சரியில்லையென்று தோன்றிவிடும். .. அவருடைய சம்பளத்திற்கும் அதிகமாக அவர் ஒரு போதும் வாழ்க்கையை அதிகமாக அனுபவித்ததே இல்லை. என்று தனக்குள்ளாகவே நினைத்துக் கொள்வார்.
அவரது வாழ்க்கையில் ரசனையான உணர்ச்சிகளுக்கு என்றுமே இடம் இருந்ததில்லை . ஒவ்வொருவருக்கும் ஆழ் மனதில் குறைந்தது கனவு காண வேண்டும் என்ற ஒரு சிறிய ஆசையாவது இருக்கும் தானே .ஆனால் அவருக்கு அந்த ஆசை கூட கிடையாது.
அவர் லாப்யூஸ் நிறுவனத்தில் தனது இருபத்தி ஒன்றாவது வயதில் வேலைக்கு அமர்ந்தார் .அதற்குப் பிறகு அந்த நிறுவனத்தை விட்டு அவர் எங்குமே சென்றதில்லை ..
அவருடைய தந்தை 1856 ஆம் ஆண்டு காலமானார் .அதை தொடர்ந்து அவரது தாயாரும் 1859 வது அண்டு காலமானார் . இந்த சம்பவங்களுக்குப் பிறகு அவரது வாழ்க்கையில் இழப்பு என்ற ஒன்றை கூட அவர் முழுமையாக அறிந்ததில்லை . அவர் குடியிருக்கும் வாடகை வீட்டின் முதலாளி அவருடைய கையறு நிலையைப் பார்த்து பரிதாபப்பட்டாலும் கூட , அவ்வப்போது வீட்டு வாடகையை மட்டும் வெற்றிகரமாக உயர்த்தி விடுவார்.
ஒவ்வொரு நாள் காலையிலும் அலாரம் சரியாக ஆறு மணிக்கு அடிக்கும் . உடனே லேராஸ் தன்னை அறியாமலே படுக்கையிலிருந்து துள்ளி குதித்து எழுந்து விடுவார் . அந்த அலாரத்தின் மணிச் சத்தம் அவரைப் பொறுத்த வரை ஒரு ராக்கெட்டைப் போல காதுக்குள் புகுந்து தாக்கக் கூடியது . சுற்றி சுழன்று வட்டமடித்து வரும் கடிகாரத்தின் சாவியைப் பிடித்து திருகி நிறுத்துவதற்குள் அவருக்கு போதும் போதுமென்றாகி விடும்.
இந்த கடிகாரம் இதுவரையிலும் மொத்தமே இரண்டு முறைகள் தான் பழுதடைந்துள்ளது . பழுதடைந்த வருடங்கள் கூட அவருக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. முதல் முறை . 1866 வது வருடம் பழுதடைந்தது . அடுத்ததாக 1874 வது வருடம் . ஆனால் அதில் எந்தப் பாகம் பழுதடைந்தது என்று கூட இது வரையிலும் அவருக்குத் தெரியாது .ஆனால் ரிப்போர் செய்த பிறகு அது இன்று வரையிலும் தொடர்ந்து நல்ல முறையில் தான் ஓடிக்கொண்டிருக்கிறது.
காலையில் அலுவலகத்திற்கு கிளம்புவதற்கும் முன்பாக அலுவலக உடை உடுத்துவார் . .படுக்கையை மடித்து வைப்பார் .வீட்டின் அறைகளைச் சுத்தம் செய்வார் .நாற்காலி மற்றும் மேசை மீது படிந்திருக்கும் அழுக்குகளை துடைத்து விடுவார் .இதற்கெல்லாம் எப்படியும் அவருக்கு ஒரு மணி நேரம் ஆகிவிடும்.
பிறகு அங்கிருந்து கிளம்பி நேராக லாகியூர் பேக்கரிக்கு சென்று ஒரு ரொட்டி பாக்கெட்டை வாங்குவார் . அதே வகையான ரொட்டி,பாக்கெட் பல பெயர்களில் , ஏறத்தாழ பன்னிரெண்டு வகையான வடிவங்களில் கிடைக்கும் என்பது அவருக்குத் தெரியும் . அவர் பலவருடங்களாக அதே ரொட்டியையைத்தான் வாங்கிக் கொண்டு போகிறார் செல்கிறார் . பெரும்பாலும் அலுவலகம் போகிற வழிகளிலேயே கூட அதை சாப்பிட்டு முடித்து விடுவார் . அலுவலகத்தில் சென்று அதை எடுத்து வைத்து உண்பதற்கு கூட நேரத்தை செலவிட மாட்டார் .
இப்படியாக அவருடைய மொத்த இருப்புமே அந்த குறுகிய இருள் சூழ்ந்த அலுவலகத்திற்குள்ளேயே முடிந்து கொண்டிருந்தது. அந்த அலுவலகத்தில் அவர் இளைஞனாக இருந்த பொழுது பர்மண்ட் என்ற கணக்காளரிடம் உதவியாளராக ப் பணியில் சேர்ந்தார் . வாழ்க்கையில் அவருடைய லட்சியமெல்லாம் அந்த பர்மண்ட்டின இடத்தைப் பிடிப்பது தான் . அதுவும் கூட இப்போது நிறைவேறி விட்டது
எதிர்பாராத ஒர் உள்ளக் கிளர்ச்சி, , ஒரு காதல் தோல்வி , சில இனிய காதல் உதயங்கள் , சில துணிச்சலான பயணங்கள் இப்படி நினைத்துப் பார்ப்பதற்கு கூட வாழ்க்கையின் பிற்பகுதியில் அவருக்கு எந்த அனுபவங்களும் ஏற்பட்டது கிடையாது.
நாட்கள் , வாரங்கள் , மாதங்கள் , வருடங்கள் எனப் பருவ காலங்கள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக உருண்டு போய் கொண்டேயிருக்கின்றன. அவருக்கு அதைப்பற்றியெல்லாம் எந்த பிரக்ஞையும் இல்லை.
தினமும் காலையில் அதே நேரத்தில் படுக்கையை விட்டு எழுந்திருப்பது, அதே நேரத்தில் வீட்டை விட்டு கிளம்புவது ,சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்குள் நுழைவது , இப்படி எல்லாமே நேரப்படித்தான் போய் கொண்டிருந்தன.
அவருடைய மதிய உணவை அவர் சரியான நேரத்தில் தான் சாப்பிடுவார் பின் மாலையில் சரியான நேரத்திற்கு அலுவலகத்தை விட்டு கிளம்புவார் இரவு உணவையும் குறிப்பிட்ட அதே கடையில் தான் சாப்பிடுவார் . பிறகு ஓய்வு .இப்படித்தான் ஒரு நாள் என்பது அவருக்கு தினமும் கழியும் . அவருடைய ஒரு செயல் கூட அட்டவணையிலிருந்து சிறிதும் பிசகாது . . அவரே நினைத்தாலும் கூட இந்த அட்டவணையை மாற்ற முடியாது.
முன்பெல்லாம் அவர் தனது சீனியர் அலுவலகத்தில் விட்டுச் சென்ற பெரிய கண்ணாடியில் தன்னுடைய பழுப்பு நிற மீசையை அடிக்கடி பார்ப்பதுண்டு . .ஆனால் அந்த மாதிரி பழக்கங்களெல்லாம் தற்போது மெல்ல மெல்ல அவரை விட்டு அகன்று கொண்டேயிருக்கின்றன . தற்போது தினமும் அவர் காலையில் அலுவலகத்திற்கு கிளம்பும் முன்பு இப்பொழுதெல்லலாம் தனது வெள்ளை மீசையையும் ,வழுக்கைத் தலையையும் கண்ணாடியில் ஒரு முறை பார்ப்பார் அவ்வளவு தான் பிறகு அதைப் பார்க்கவே மாட்டார்..
எப்போதாவது அவரது மனதில் இப்படி தோன்றும் ‘’ அட நாற்பது வருடங்கள் வேகமாக கடந்து விட்டனவே ! மிக நீளமான வருடங்கள் தான் ஆனாலும் என்ன விரைவாக பறந்து விட்டன அவைகள் . ‘’
இத்தனை வருட இரவுகளிலும் நினைத்துப் பார்ப்பதற்கு இனிமையாக எந்த ஒரு அற்புதமான நினைவும் அவரது ஞாபகத்தில் இல்லை . அது கூடபோகட்டும் , ஆனால் நினைத்து வருந்துவதற்கு ஒரு துயரமான நிகழ்வும் கூட அவருக்கு வாய்க்கவில்லையே என்பது தான் கொடுமையிலும் கொடுமை. அப்படி ஏதாவது குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் அவருடைய பெற்றோர்கள் இறந்து போனதை மட்டுமே சொல்ல முடியும் .
வழக்கம் போல இன்றும் அவர் தனது அலுவலகத்தை விட்டு கிளம்புவதற்கு முன்னால் வாசல் கதவில் நின்றபடி தெருவை ஒரு முறை நோட்டம் விட்டார் . மேற்கே சூரியன் அஸ்தமிக்கும் அற்புதம் ஒரு கணம் மனதை கிறங்கடித்து விட்டது.. மேற்கே வண்ண வண்ணக் கலவைகளால் நிறைந்து தளும்பியது வானம். அந்த கண்கொள்ளா காட்சி அவரது மனதை வெகுவாக கவர்ந்து விட்டது.
.உடனடியாக வீட்டிற்கு திரும்பி போவதற்கு மனதில்லை .அதற்குப் பதிலாக அப்படியே ஒரு சிறிய நடை பயணம் போய் வந்தால் என்ன என்ற ஒரு யோசனை அவர் மனதில் தோன்றியது . வருடத்திற்கு நான்கு ஐந்து முறைகள் இப்படி சிறிய நடைபயணம் சென்று வருவது அவருக்கு வாடிக்கை தான். ஆனால் அந்தப் பயணங்களெல்லாம் இரவு உணவை அருந்துவதற்கும் முன்பாகவே அவருக்கு முடிந்து விடும் .
அப்படியே வீதியில் இறங்கி காலாற சிறிது தூரம் நடக்க ஆரம்பித்தார் . அடுத்த வீதியின் இரு பக்கங்களிலும் மரங்கள் செழித்து வளர்ந்திருந்தன . .அங்கே பார்த்த போது மனிதர்களெல்லாம் கொத்து கொத்தாக நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார்கள் .இது வசந்த காலத்தில் இது ஒரு அற்புதமான மாலைக் பொழுது . இன்று மென்மையான மிருதுவான வெயில் வேறு அடித்துக் கொண்டிருக்கிறது. அந்த இளம் வெயிலின் வெப்பம் இதயத்திற்கு சுகத்தை தருவதாக இருக்கிறது. .வாழ்க்கையின் மீது போதையை உண்டு பண்ணக் கூடிய அற்புதமான வசந்த காலம் இது தான் போலும் என்று அவர் நினைத்துக் கொண்டார்..
இப்பொழுது அவர் தளர்ச்சியற்ற சிறு சிறு எட்டுக்களாக வைத்து தெருவின் ஓரத்திற்கு வந்திருந்தார் . உள்ளம் கொஞ்சம் கிளர்ச்சி அடைந்து போல இருந்தது.
இப்போது அவர் பேரழகு வாய்ந்த எலிசியஸ் தோட்டத்திற்கு வந்து சேர்ந்த போது . அங்கே இளைஞர்களும் இளம் பெண்களும் மிகவும் உற்சாகமாக காணப்பட்டார்கள் . அவர்களிடமிருந்து புறப்பட்ட சுகந்தமான வாசம் அந்த இடத்தில் காற்றையே நிறைத்திருந்தது. போல் தெரிந்தது. மேலே அண்ணாந்து பார்த்தார் வானம் அற்புதமாக மினுங்கிக் கொண்டிருந்தது .
இப்பொழுது வெற்றி வளைவு நினைவுச் சின்னத்தின் மீது பார்வையை செலுத்தினார் .அது அந்த இருளில் தொலை தூர மேகங்களை எட்டிப் பிடிக்க கைகளை நீட்டி போராடிக் கொண்டிருப்பது போல் தோன்றியது. அங்கேயே சற்று நேரம் நின்று அதைப் பார்த்துக் கொண்டிருந்தார்.. பசி எடுப்பது போல் தோன்றியது. பக்கத்தில் உள்ள ஒரு ஒயின்ஷாப்புக்குள் நுழைந்து உணவு எதாவது இருக்குமா என்று கேட்டார்.
அந்தக் கடையின் முன்பாகவே உள்ள பக்கவாட்டு தளத்தில் உள்ள சிறிய இடத்தில் வைத்து அவருக்கு உணவு பரிமாறினார்கள் . பொறித்த செம்மறி ஆட்டின் சிறிய சிறிய இறைச்சி துண்டங்களும், வேக வைத்த காய்கறிகளும் பரிமாறப்பட்டன.. இவை அனைத்துமே முதியவர் லேராசுக்கு ஒரு அற்புதமான விருந்தை உண்ட மகிழ்ச்சியை தந்தன. .இந்த மாதிரி உணவு உண்டு வெகு நாளாகி விட்டது என்பது ஞாபகத்திற்கு வந்தது . கைகளில் படிந்த மஞ்சள் கலந்த வெண்ணை கட்டிக் கொழுப்புகளை நல்ல அடர் சிவப்பு நிற ஒயினால் அவர் கழுவினார்.
இதுபோன்ற அனுபவங்களெல்லாம் அவருக்கு எப்போதாவது தான் கிடைக்கும் . இறுதியாக ஒரு கிளாஸ் பிராந்தியை வாங்கி கொண்டார். உணவுக்கான பில்லை கொடுத்த போது மனதுக்கு திருப்தியாகவும் உடம்புக்கு சுறு சுறுப்பாகவும் இருந்தது .’’ என்னால் இப்பொழுது நன்றாக நடக்க முடியும் ‘’ என்று அவர் தனக்குத் தானே சொல்லிக்கொண்டார்
‘’ எது வரைக்கும் என்னால் நடக்க முடியுமென்றால் ‘’ போயிஸ் டி போலன் பூங்கா வரைக்கும் .ஆம் அது ஒரு சிறிய நடை தான் ஆனால் அது தான் இப்பொழுது எனக்கு சிறந்தது ‘’ என்று சொல்லிக் கொண்டே அவர் அந்த பூங்காவை நோக்கி இப்போது நடக்க ஆரம்பித்தார் .
மெதுவாகத்தான் நடந்தார் என்றாலும் நடையில் ஒரு உற்சாகம் வந்து தொற்றிக் கொண்டிருந்தது .முன்பொரு காலத்தில் அவருடைய பக்கத்து வீட்டுக்காரர் பாடிய காதல் பாடல் ஒன்று இப்பொழுது திடீரென்று அவரது ஞாபகத்திற்குள் புகுந்து மகிழ்ச்சியை கொடுத்தது .
‘’கண்ணே பூங்கா செழித்து பச்சை பசுமையாக மாறும் போது
என்னுடைய தீரமிக்க காதலன் சொல்வான்
என்னுடன் வா அன்பே !என்னுடன் வா அன்பே !
என்னுடைய அழகான இதயமே என்னுடன் வா !
அப்படியே ஒரு நடை போய் வருவோம்
நாம் இருவரும்
இனிமையான சுகந்தமான காற்றை
சுவாசித்து வருவோம்
என்னுடன் வா என் இனிய இதயமே !
அந்தப் பாடலை முதலில் மெல்ல ஹம்மிங் செய்ய ஆரம்பித்தார். பிறகு வாய் விட்டுப் பாடவும் செய்தார். மீண்டும் மீண்டும் அதையே திரும்பத் திரும்ப பாடிக் கொண்டே நடந்து சென்று கொண்டிருந்தார்.
இப்பொழுது பாரிசின் மீது இரவு கவிழ ஆரம்பித்திருந்தது .இந்த இரவில் அதிகம் காற்று இல்லை ஆனால் ஒரு பேரமைதி ,அதுவும் இனிமையான பேரமைதி கவிழ்ந்திருந்தது .
லேராஸ் இப்போது அந்த கடைசி சாலையையும் தாண்டி அவர் நினைத்தபடியே போயிஸ் டி போலன் பூங்காவிற்குள்ளேயே வந்து சேர்ந்து விட்டார் . அங்கே எண்ணற்ற வாகனங்கள் அவரை கடந்து போய்கொண்டிருந்தன . கணக்கற்ற வாடகை டாக்ஸிகள். அவை ஒவ்வொன்றின் முகப்பிலும் ஒளியை வாரி வீசக்கூடிய ஒளி விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. ஒரு வாகனம் உள்ளே வருகிறது. ஆட்களை இறக்கி விட்டு உடனே மறைகிறது. அதற்குள் மற்றொன்று வந்து விடுகிறது. இப்படி அடுத்தடுத்து டாக்சிகளின் வருகையால் அந்த சாலை முழுவதுமே பிரகாசமான விளக்கு வெளிச்சத்தில் நனைந்தபடியே இருந்தது.
பூங்காவில் அவர் கண்ட பெண்களெல்லாம் கண்ணுக்கு உறுத்தாத மெல்லிய வண்ண உடைகளையே அணிந்திருந்தார்கள். ஆண்கள் கருப்பு நிற உடைகளை பிரதானமாக அணிந்திருந்தார்கள்
இளைஞர்களையும் இளம் பெண்களையும் ஜோடி ஜோடியாகப் பார்த்த போது அவருக்கு அங்கே ஏதாவது காதலர்களின் பேரணி நடக்கிறதோ என்ற ஐயம் தான் முதலில் தோன்றியது . நட்சத்திரங்கள் நிறைந்த பொன்னிற வானத்தின் கீழே பெரிய காதல் ஊர்வலம் என்று நினைப்பதற்கே இனிமையாக இருந்தது.
,அங்கே காதலர்கள் சாரி சாரியாக வந்த வண்ணமே இருந்தார்கள் .வந்தவர்கள் அவரைக் கடந்து சென்று கொண்டேயிருந்தார்கள். மறுபுறம் குதிரை வண்டி கோச்சிலிருந்தும் கணக்கற்ற இளம் காதலர்கள் இறங்கிக் கொண்டே இருந்தார்கள். வந்தவர்கள் யாரும் அதிகம் பேசிக் கொள்ளவில்லை .அமைதியாக ஒருவர் பின் ஒருவராக கை கோர்த்தபடி நடந்து சென்று கொண்டேயிருந்தார்கள்.
அவர்களைப் பார்த்தால் ஒரு கணம் இந்த இரவின் பேரமைதிக்குள் தங்களைப் புதைத்து விட்டவர்களை போலவே தோன்றினார்கள். அவர்களிடம் பேசுவதற்கு கூட எந்த வார்த்தையும் இருப்பதாக தெரியவில்லை . இந்த எல்லையற்ற விண்வெளிக்கு கீழே, இதுபோன்ற ஒரு மௌனமான இரவில் பேசுவதற்கு ஒன்றும் இல்லாமல் வெறுமனே நடந்து செல்லுவதே அவர்களுக்கு போதுமானதாக இருந்தது போலும்.
.எங்கே பார்த்தாலும் காதலர்கள், ஆங்காங்கே நின்று இறுக்கித் தழுவியபடியே முத்தமிட்டுக் கொண்டிருந்தார்கள். திரும்பிய பக்கங்களிலெல்லாம் முத்தங்கள் முத்தங்கள் முத்தக்காட்சிகள்தான். அது அந்த பூங்காவிற்கே பேரழகை தந்து கொண்டிருந்தது
எல்லோருக்குள்ளும் காதல் போதை குடிகொண்டு விட்டது போல் தோன்றியது . எத்தனை எத்தனை மனிதர்கள் வருகிறார்கள். அத்தனை மனிதர்களும் காதலெனும் ஒரே சிந்தனையில் இருப்பவர்கள் போலவே தோற்றம் தருகிறார்கள். .காதல் என்னும் பெருவலை அவர்கள் அத்தனை பேரையும் சுற்றி போர்த்திக் கொண்டிருந்தது என்றே சொல்ல வேண்டும்..
அவ்வப்பொழுது இந்தக் காட்சிகளையெல்லாம் கண்டு அவர் கொஞ்சம் கலக்கமுற்றார் என்றாலும், மனம் தளராமல் தொடர்ந்து நடந்து கொண்டேதானிருந்தார்.. அப்படியே நடந்து சென்றவர் பக்கத்தில் போடப்பட்டிருந்த ஒரு பெஞ்சில் சற்று நேரம் அமர்ந்து மூச்சு வாங்கினார். பிறகு சுற்றிலும் ஒரு பார்வை பார்த்தார். அருகில் எங்கும் காதலர்களே நிறைந்திருந்தார்கள். எங்கும் உடல்கள் உடல்களை உள்ளக் கிடக்கையோடு தழுவிக்கொண்டு இருந்தன..
சற்று நேரம் கூட அமர்ந்து ஆசுவாசப்படவில்லை அதற்குள் அவர் அருகில் ஒரு இளம் பெண் வந்து அமர்ந்தாள். அமர்ந்தவள் உடனே அவரது கன்னத்தைப் பிடித்து ‘’ மாலை வணக்கம் என் குட்டிப் பையனே ‘’ என்று செல்லமாக சீண்டினாள்.
அவர் பதில் எதுவும் பேசவில்லை. ஆகவே அவளே மீண்டும் ‘’ உனக்கு துணைக்கு ஒரு இனிய இதயம் வேண்டாமா சொல் பையா ‘’ என்று கேட்டு விட்டு உரிமையாக அவரது அருகில் நெருங்கி உட்கார்ந்து கொண்டாள். அவர் ‘’ நீங்கள் என்னை தவறாகப் புரிந்து கொண்டீர்கள் போலிருக்கிறது ‘’ என்று சொன்னார்.
.உடனே அவள் அவருடைய கைகளை எடுத்து தன் கையில் சேர்த்து வைத்துக் கொண்டு கொச்சையான ஒரு மொழியில் ‘ வா வா பையா ! சும்மா முட்டாள் மாதிரி நடிக்காத , நல்ல பிள்ளையா சமர்த்தா நான் சொல்றதை கேளு ஆமா என்று சொல்லியபடியே பொய் கோபத்துடன் அவரது கன்னத்தைப் பிடித்து இழுத்தாள். உடனே அவர் பதறிப் போய் எழுந்திருந்து அந்த இடத்தை விட்டு அகன்று செல்ல ஆரம்பித்தார் அதற்குள் அவருடைய இதயத்தின் துடிப்போசை பல மடங்கு அதிகரித்து விட்டது .
ஒரு நூறு அடி தூரம் தான் நடந்திருப்பார் அதற்குள் இன்னொரு இளம் பெண் வந்து அவரை மறித்துக் கொண்டாள்
.’’ என் கூட ஒரு நிமிஷம் உட்கார்ந்து பேசிட்டு போக மாட்டியா சின்ன பையா ‘’ என்றபடி இவளும் வந்து அவரது கைகளைப் பிடித்து இழுத்தாள்.
உடனே அவர் அவளிடம் ‘’ ஏன் இப்படி பாவப்பட்ட வாழ்க்கையை நடத்துற ? ‘’ என்று கடிந்து கேட்டார். பதிலுக்கு அவளும் கிண்டலாக ‘’கடவுளின் பெயரால் பையா ! கடவுளின் பெயரால் தான் இதை நடத்துறேன். இதுவும் கூட என் சந்தோஷத்துக்காக இல்லை தெரியுமா ?’’ என்றாள். உடனே அவர். ‘’ அப்படின்னா எது உன்னை எதுதான் இதுக்குள்ள தள்ளுது ‘’ என்று கேட்டார் .அவள் . ‘’வாழ்க்கை தான் , என்னை இதுக்குள்ள தள்ளுது பையா ‘’ வாழணுமில்ல உயிர் வாழணுமில்ல ? ‘’ என்ற படி அவரை விட்டு விட்டு ஒரு விவகாரமான பாடலைப் பாடியபடியே அங்கிருந்து அகன்று சென்று விட்டாள்.
இது சரிப்படாது என்றபடி லேராஸ் எழுந்து நின்றார். அவருக்கு நடப்பதெல்லாம் ஒரே குழப்பமாக இருந்தது. ஒன்றுமே சரியாகப் புரியவில்லை. அட சரி தான் என்றபடி அவர் மீண்டும் எட்டு வைத்து நடக்க ஆரம்பித்தார். அதற்குள் இன்னொரு இளம் பெண் அவர் அருகில் வந்து அவரது கையைப் பிடித்து இழுக்க ஆரம்பித்து விட்டாள்
.இந்த முறை அவருக்கு என்னவோ போல் ஆகிவிட்டது .தன்னுடைய தலைக்குள் இருள் போய் உட்கார்ந்து கொண்டது போல் இருந்தது. இதயம் தாறுமாறாக துடிக்க ஆரம்பித்தது. அதற்கு மேல் நடக்க முடியாமல் போகவே அருகில் இருந்த இன்னொரு பெஞ்ச்சில் போய் உட்கார்ந்து கொண்டார்.
அங்கேயும் அவரை தேடி அலங்காரமான பெண்கள் வந்த வண்ணமாகவே இருந்தனர் . அவர் தனக்குள்ளேயே இப்படி சொல்லிக் கொண்டார் ’’ இங்கு வராமல் இருப்பது தான் எனக்கு நல்லது .இங்கே வந்தாலே எனக்கு ஒத்துக்காது போல இருக்கு ‘’ ஆனால் அவர் சொல்வதையெல்லாம் அங்கே யாரும் காது கொடுத்து கேட்பதாகவே தெரியவில்லை. அந்தப் பூங்காவே முத்தங்களால் நிறைந்திருந்தது போல அவருக்கு தோன்றியது.
காதல் காதல் அட அது என்ன காதல். ? அதைப் பற்றியெல்லாம் அவருக்கு அதிகம் தெரியாது. வாழ்க்கையில் மொத்தமே அவர் இரண்டு மூன்று பெண்களைத்தான் அறிந்திருந்தார். அது நடந்ததெல்லாம் முன்னொரு காலத்தில் . அதாவது அவருடைய இளமைக் காலத்தில் , .அதற்குப் பிறகு அவருடைய குறைந்த வருமானம் அவரை காதல் பற்றி அறிந்து கொள்வதற்கு அனுமதிக்கவில்லை .
நினைத்துப் பார்க்கும் போது மற்றவர்களின் வாழ்க்கையிலிருந்து தன் வாழ்க்கை முற்றிலும் வேறுபட்டதாக அவருக்குத் தோன்றியது. வாழ்க்கையில் அவர் கண்டதெல்லாம் அலுவலகத்தின் இருள் தான். இருளைத் தவிர வெளிச்சத்தைப் பார்த்ததேயில்லை என்றும் தோன்றியது.. அதைத்தவிர மனக்கசப்பு, சோர்வு ,வெறுமை இவைகள் தான் . வேறு ஒன்றையும் அவர் கண்டதேயில்லை.
வாழ்க்கையில் தன்னைப் போல அதிர்ஷ்டமற்ற ஜென்மங்கள் நிறையப் பேர்கள் இருக்க மாட்டார்களென்று அவருக்கு தோன்றியது.. கண்களுக்கு முன்னால் இப்போது ஒரு கருப்புத் திரை உயர்ந்து கொண்டேயிருந்தது. அவரால் எதையும் தெளிவாகப் பார்க்க கூட முடியவில்லை .அந்த கருப்பு திரையிலிருந்து தாளமுடியாத துன்பமும் துயரமும் பொங்கி வழிந்து கொண்டிருந்தன. இப்போது அவரது உடல் கிடு கிடுவென்று நடுங்க ஆரம்பித்து விட்டது. .
அந்த சலிப்புற்ற வாழ்க்கையை நினைத்தால் அருவெறுப்பாகத்தான் இருக்கிறது. அவருடைய இருப்பு ஏன் இப்படி துயரம் தழும்பியதாக மாறிப்போய் விட்டது. ? கடந்த காலத்திலும் துயரமாகத்தான் இருந்தது.. தற்போதும் துயரமாகத்தான் இருக்கிறது. .எதிர்காலத்திலும் அப்படித்தான் இருக்கப் போகிறது.
.தனக்கு முன்னாலும் எதுவும் இல்லை பின்னாலும் எதுவும் இல்லை தன்னைச் சுற்றியும் எதுவும் இல்லை என்பதை அவர் நன்றாக உணர்ந்து கொண்டார். .ஏன் எவருடைய இதயத்திலும் தான் இடம் பெறவில்லை . ஏன் என்னுடைய இதயத்திலும் எவரும் இல்லை ? .என்று அவரையே கேட்டுக் கொண்டார்.
இன்னும் பூங்காவிற்குள் கோச் வண்டிகள் வருவதும் போவதுமாகவேயிருந்தன.. காதலர்கள் வருகிறார்கள். தங்களது காதல் களியாட்டத்தை அங்கே தொடங்குகிறார்கள்.
அவர் கண் முன்னாலேயே ஒரு இளம் ஜோடி தீவிரமான காதல் புரிந்து கொண்டிருந்தது . அமைதியாகத் தான் இருப்பது போல் தோன்றுகிறது. ஆனால் உற்றுப் பார்த்தால் தீவிரமாக தழுவிக் கொண்டிருப்பது தெரிகிறது.. இதைப் பார்த்ததும் அவருக்கு மேலும் மனது பலமாக உடைந்து விட்டது .
‘’ இந்த உலகமும் இந்த உலகத்தில் உள்ள மனிதர்களும் மகிழ்ச்சியால் நிறைந்திருக்கிறார்கள். ஆனால் நான் மட்டும் தன்னந்தனியாக ,கைவிடப்பட்ட மனிதனாக இருக்கிறேன். என்றுமே இது போல தன்னந்தனியாகவே நான் இருக்கப் போகிறேன் ‘’ என்று எண்ணிக் கொண்டார்..
அவர் அப்படியே தள்ளாடியபடியே எழுந்தார் . எழுந்ததும் சில எட்டுகள் தான் வைத்திருப்பார் அதற்குள் தலைக்குள் திடீரென்று ஒரு மயக்கம் வருவது போல் தெரிந்தது. ஏதோ பல நூறு மைல்கள் நடந்து வந்தது போல் உடல் அதீத சோர்வு கொண்டது. அதற்கு மேல் நடக்க முடியாமல் அருகிலிருந்த பெஞ்சில் போய் உட்கார்ந்து கொண்டார்
வழக்கமாக மற்றவர்களைப் பார்க்கும்போதெல்லாம் அவருக்கு ஒரு விசயம் நினைவிற்கு வரும் .ஒரு குடும்பத்தில் இருக்கும் மனிதன் ஒருவன் முதியவனாக மாறும் போது அவனுக்கு அந்த முதுமை எவ்வளவு அற்புதமான அனுபவமாக இருக்கிறது ?
மாலையில் இதுபோல் நடை பயிற்சிக்கு சென்று விட்டு அந்த முதியவன் வீடு திரும்பும் போது ,அங்கே அவன் வீட்டில் காண்பது என்ன ? நிறைய பேரக் குழந்தைகள் , பேரக் குழந்தைகளுக்கு மத்தியில் உட்கார்ந்து கொண்டு கதைகள் பேசுவது அவனுக்கு எப்படிப்பட்ட அனுபவமாக இருக்கும் ?
குழந்தைகள் கண்டபடி உளறுவதை கேட்பது அவனுக்கு எவ்வளவு சுகமாக இருக்கிறது. இனிமையான உறவுகள் எல்லோரும் அவனை எப்படி அன்பாக நடத்துகிறார்கள். .இவனும் பதிலுக்கு அவர்கள் மீது எப்படி அன்பைப் பொழிகிறான் ? அன்பு கொடுக்கப்பட்டும் வாங்கப்பட்டும் எப்படி வெள்ளமாக கரை புரண்டோடுகிறது. ?
அட அது எவ்வளவு முட்டாள்தனமான வார்த்தைகளாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டுமே. . அன்பின் நிமித்தம் பேசப்படும் வார்த்தைகள் தான் இதயத்திற்குள் இறங்கி எவ்வளவு ஆறுதலை தருகின்றன ஒரு மனிதனுக்கு ? ம்ம் அதெல்லாம் வாய்ப்பது அதிர்ஷ்டசாலிகளுக்குத்தானே.என்று தனக்குள்ளாகவே அவர் சொல்லிக்கொண்டார்.
வீட்டிற்கு போகவே அவருக்குப் பிடிக்கவில்லை. என்ன இருக்கிறது அந்த வீட்டில் ? வீடு என்னவோ சுத்தமாகத்தான் இருக்கிறது ஆனால் வெறுமையாக இருக்கிறதே ! அதை எப்படி நிரப்புவது ? அந்த வீட்டிற்குள் அவரைத் தவிர இதுவரைக்கும் யாரும் நுழைந்தது கூட கிடையாது .
அவர் தனது வீட்டைப் பற்றி யோசிக்கும் போது அலுவலகமே கூட எவ்வளவோ பரவாயில்லை என்று தோன்றும்..
அந்த வீடு இறந்து விட்டது. என்று தான் சொல்ல வேண்டும். பொதுவாக ஒரு வீட்டின் சுவர்களுக்கு கூட காது இருக்குமென்று மனிதர்கள் சொல்வார்கள். .அந்த வீட்டில் வசிக்கும் மனிதர்களின் முகச்சாயல் அந்த வீட்டின் சுவர்களுக்கும் வந்து ஒட்டிக்கொள்ளும் என்பார்கள் .அந்த மனிதர்களின் உணர்வுகள் அந்த வீட்டின் சுவர்களில் கூட படிந்திருக்கும் என்றும் சொல்வார்கள்.. அவர்கள் பேசும் வார்த்தைகள் கூட அங்கே எதிரொலித்துக் கொண்டேயிருக்குமாம். ஆனால் இவருடைய வீட்டில் அப்படி எதுவுமே இருக்க முடியாது என்று நினைத்துக் கொண்டார்..
அழகான மகிழ்ச்சியான குடும்பங்கள் குடியிருக்கும் வீடு எப்பொழுதும் இனிமையாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது .ஆனால் கைவிடப்பட்ட மனிதர்கள் வசிக்கும் வீடு சபிக்கப்பட்டதாக இருக்கிறது . இவருடைய வீடும் அப்படி ஒரு சபிக்கப்பட்ட வீடுதான்
இதை நினைக்கும் போதே தனிமை ஓடோடி வந்து அவரது தோள் மீது தொற்றிக் கொண்டு பெரும் பாரமாக அழுத்தியது. .அவருக்குள் பயம் அதிகமாகி விட்டது. அந்த வீட்டிலிருந்து தன்னை துண்டித்துக் கொண்டு எங்காவது ஓடிப் போய் விடலாமா என்று கூட நினைத்துப் பார்த்தார். ஆனால் எங்கே தான் போவது ?
இறுதியாக எழுந்து வீட்டுக்குப் போக வேண்டுமென்று நினைத்து தான் எட்டுக்களை எடுத்து வைத்தார். ஆனால் அவர் அறியாமலேயே அவரது கால்கள் அவரை வேறு பக்கம் இழுத்துச் சென்று விட்டன.
அவர் மறுபடியும் பூங்காவிற்குள் மரங்கள் நிறைந்த பகுதிக்குள் செல்ல ஆரம்பித்தார். அங்கே சென்று சற்று நேரம் புல் தரையில் அமர்ந்தால் கூட கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம் என்று தோன்றியது.
பூங்காவைச் சுற்றிலும் இனிய சத்தங்கள் கேட்டவண்ணமே இருந்தது . எங்கு பார்த்தாலும் காதலின் காட்சிகள் தான் ஆனால் இவருக்கு மட்டும் குழப்பமான சத்தங்களே காதில் கேட்டன.. மேலும் கீழும் சுற்றிலும் எங்கு பார்த்தாலும் சத்தங்கள். குழப்பமான சத்தங்கள். அதுவும் முடிவற்று நீண்டு போய்கொண்டேயிருந்தன .
ஒரு நேரத்தில் ஒரே குரல் அல்ல ஆயிரக்கணக்கான குரல்கள் அவர் மனதுக்குள் மொத்தமாக கேட்டன. தூரத்தில் காதல் புரியும் மனிதர்கள் சொர்க்கத்தில் மிதப்பது போல மிதந்து கொண்டிருந்தார்கள். பாரிஸ் நகரத்தின் மூச்சுக்காற்றையே இவர்கள் தான் தங்களின் இனிய காதலின் சுகந்தத்தால் நிறைத்து கொண்டிருப்பார்கள் போலும் என்று நினைத்துக் கொண்டார்.
திடீரென்று அந்திச் சூரியன் வண்ண ஒளிக்கலவைகளை அங்கே கொட்டி கொட்டி மாயா ஜாலம் நிகழ்த்த ஆரம்பித்து விட்டான். சற்று நேரத்திற்குப் பிறகு மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்தான். அவர் வைத்த கண் வாங்காமல் அந்த அஸ்தமனத்தைப் பார்த்தபடியே இருந்தார்.
அடுத்த நாள் மாலையில் அந்தப் பூங்காவிற்குள் ஒரு இளம் காதல் ஜோடி மிகவும் நெருக்கமாக தோளோடு தோள் சேர்த்தபடி மரங்கள் அடர்ந்த அந்த தனிமையின் பாதையில் உல்லாசமாக நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். நடந்து போகும் போதே அந்த இளம் பெண் எதேச்சையாக கண்களை சற்று மேலே உயர்த்திப் பார்த்தாள். அங்கே ஒரு மரத்தின் கிளைகளுக்கு மத்தியில் பழுப்பு நிறத்தில் ஏதோ ஒரு உருவம் அவளது பார்வைக்கு தென்பட்டது. உடனே அவள் பதறிப்போய் தன் காதலனிடம் , தன் கைகளை மேலே உயர்த்தி அந்தக் கிளையை நோக்கி காட்டினாள். அப்படி அவள் தன் கைகளை நீட்டி ,அந்த உருவத்தை காட்டிக் கொண்டிருக்கும் போதே அது என்னவென்று அடையாளம் கண்டு கொண்டவளாக திகிலுற்று ஓவென்று கத்தினாள். .
அதற்கு மேல் அவளால் நிற்க முடியவில்லை . தரை நழுவியது. சட்டென்று அவனுடைய தோள்களில் மயங்கிச் சரிந்தாள். அவன் திடீரென்று அவளிடமிருந்து இந்த செய்கையை சற்றும் எதிர்பார்க்காததனால் அவளை முழுவதுமாக தாங்கிப் பிடிக்க கூட முடியவில்லை. . அப்படியே கை நழுவ அவளை விட்டு விட்டான் அவள் அதே வேகத்தில் சரிந்து பொத்தென்று தரையில் விழுந்தாள்.
அதற்குள் அங்கே கூட்டம் கூடி விட்டது. பெருங்கூச்சலும் குழப்பமுமாக ஒரே களேபரமாகப் போய்விட்டது ..காவலர்கள் உடனடியாக அவ்விடத்திற்கு வரவழைக்கப்பட்டார்கள் .மரக்கிளை ஒன்றில் தனது கால் டிரவுசரின் துணிப் பட்டை இணைப்புகளால் தூக்கிட்டு தொங்கிக் கொண்டிருந்த அந்த முதியவரின் பிணம் கவனமாக கிழே தரையிறக்கப்பட்டது ..அந்த முதியவர் அங்கே நேற்று மாலையிலேயே தூக்கிட்டு தொங்கிய விவரம் சற்று நேரத்திற்குள்ளாகவே அங்கு எல்லோருக்கும் தெரிந்து விட்டது .
உடனடியாக பத்திரிகைளெல்லாம் அந்த உடல் யார் என்று அடையாளம் கண்டு எழுதி விட்டன. அந்த உடல் வேறு யாருடையதும் அல்ல திருவாளர் லாப்யூஸ் கம்பெனியின் கணக்காளர் முதியவர் லேராஸ் அவர்களின் உடல் தான் அது ..
அவர்கள் எல்லோரும் அவருடைய மரணத்தை தற்கொலை தான் என்றார்கள் . ஆனால் அதற்கான காரணங்கள் யாருக்கும் தெளிவாகத் தெரியவில்லை. ஒரு வேலை மனப்பிதற்றல் அதிகமாகி இருக்கலாம் அல்லது திடீரென்று பைத்தியம் கூட பிடித்திருக்கலாம் என்று கூறி அவர்கள் கடைசியாக அவரது கதையை முடித்து வைத்தார்கள்..
மூலம் பிரெஞ்ச் மொழியில் : மபசான்
ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழியாக்கம் : தங்கேஸ்