மொழியற்ற பூக்களின் கவிதைகள் - அகவி mozhiyatra pookkalin kavithaigal - agavi
மொழியற்ற பூக்களின் கவிதைகள் - அகவி mozhiyatra pookkalin kavithaigal - agavi

மொழியற்ற பூக்களின் கவிதைகள் – அகவி

சொர்க்கத்தின்
உயிர்க்காற்று
வேப்பமர இலைகளிலிருந்து
கிளம்புகிறது

மழையின் பச்சை நிறம்
காற்றைச் சலிக்கும்
சல்லடை

மூச்சுக்காற்றிற்குக்
கிடைக்கும் மூலிகைமுத்தம்
வேப்பங்காற்று

அதோ வரலாற்றுத்
தொலைவில்
புரவியில்
தமிழ் ஒளிர சவாரித்து வரும்
மாமன்னன்பாண்டியனின்
அரசவைப் பூ

நீதி தவறியதற்காய்
கோபித்துக்கொண்டு
கழுத்தை விட்டிறங்கிய
வேப்பம்பூ மாலை

சாம்ராஜ்யங்களுக்குக்
கீழிருக்காமல்
சனங்களுக்கான
பூக்களாய் மாறிப்போனது
முற்றிலும் முற்றிலும்.

*******

காற்றின்
சாய்வு நாற்காலி
மிக அழகானது

நீல நிறத்தில்
சிறு உள்வெண் விரிப்பில்
தோன்றும் தோற்றம்

இவ்வளவு அழகுடன்
இலகுத்தேnற்றமாய்த் தெரிவது
காற்றின்
இறுக்கையாகத்தான்
இருக்க முடியும்

மூக்குக்கு மூக்குத்தி அணிவிப்பதுபோல்
மனத்திற்கும் ஏதும் அணிவிப்பதில்லை நாம்
உள்மன நுண் பரப்பில்
மெதுவாய்
அசையாது அடுக்கலாம்
இப்பூக்களை

மனசுக்கு
வண்ணமடிக்க
இந்தச் சங்குப்பூ நிறமே
சாலச்சிறந்தது

வாழ்வில்
ஆசுவாசம் தேடும்
உஞ்சல் காலங்களில்
சங்குப்பூ தேநீரை அருந்திக்கொண்டு
ஒரு
இளங்காலைப் பொழுதை
மனைவியோடு அமர்ந்து
வேடிக்கப் பார்ப்பவர்கள்
பாக்கியசாலிகள்

********

ஓ…..
பாகிஸ்தான்
ஜாஸ்மின் மலர்களே
எம் நாடு
சுதந்திரம் அடைந்த
நிலப்பிரிப்பில்
இந்திய நினைவாக
இஸ்லாமியர்களோடு
இடம்பெயர்ந்த
உங்கள் வேரடி
மண்ணில்
இந்தியாவும் இருக்கிறது

தேசிய மலராக இருக்கும்
ஜாஸ்மின்களே
நியமனமற்ற
இந்தியா-பாகிஸ்தான்
நறுமணத்தூதர்கள் நீங்கள்

சமாதான நிறத்தின்
வெண்மை மாறாமல்
பூத்துத் தெரிகிறது
ஜாஸ்மின் மலர்கள்

நீங்கள் யாருக்காக
மலர்கிறீர்கள்?
மனிதர்களுக்காகவா
கடவுளுக்காகவா
காற்றுக்காகவா
வண்டுகளுக்காகவா
அன்றி
உங்களுக்காகவா
ஓ…..எம்
பாகிஸ்தான்
ஜாஸ்மின் மலர்களே
உங்கள் நிழலில்
அல்லாகு அக்பர் என
வாசத்தால் எழுதப்பட்டுள்ளது

ஒரு வேண்டுகோள்
சர்வதேச அன்பிற்கு
சமாதானத்திற்கு
நீண்ட நெடிய
சாந்திக்கு
ஒரு வெண்பூவின்
நிழலிலிருந்து
அரியாசனம்
தயாரிக்க முடியுமா
ஓ….எம்
பாகிஸ்தான் ஜாஸ்மின்
மலர்களே

**********

தூரங்களைக் குடித்து
நாடிணைக்கும்
ஓரூராக்கிவிட்ட உலகை
எட்டுக்கால்கள்
சுமந்துபோன பிணங்கள்
நான்கு சக்கரங்களால்
மயானப்பயணம்

நெருப்புச் சக்கரம் போல்
தெரியும்
ஃபயர் பூக்கள்
ஆஸ்திரேலிய நாட்டுக்காரனுக்கு
என்னதான் நவிலுமோ தெரியவில்லை

நெருப்புச்சக்கரமே
சாம்பல் ஊருக்கு
அழைத்துச் செல்லப்போகும்
இறுதிச்சுற்றுலா

ஃபயர் பூவின்
கனி எப்படி இருக்கும் என
நீங்கள்தான்
யூகிக்க வேண்டும்

*********

என்
பள்ளிக்கூட வாழ்வின்
கோடைவிடுமுறை
காடுகளால் ஆனது

பள்ளிக்கு போகாத
இடைநின்ற நண்பன்
பாண்டியனும் அய்யாசாமியும்
ஆடு மேய்ப்பின் அதிபதிகள்
கூடமாட உதவ ஆனந்தமாய்
அழைத்துப்போவார்கள்

ஈச்சம்பழம், ஈச்சங்காய் இலந்தைப்பழம் நுணாப்பழம்
தேன்கூடு அழித்தல்
களாப்பழம் பறித்தல்
சப்பாத்திப்பழம் தின்னல்
இதற்காக
ஆடுகளாகவே மாறி
அலைந்த காலம் அது

அஞ்சல் அலுவலர்
வரதராசனுக்கு
திருத்தப்படாத
ஆவாரங்காடு ஒன்று இருந்தது

ஊருக்கு மேற்கே
நரிவோடைக்குப் பக்கத்தில்
எங்கள் காட்டிற்குக்
கொஞ்ச தூரம் தள்ளி
மஞ்சள் நந்தவனமாய்
பூத்துக்குலுங்கும்பார்க்க
இரண்டு கண்கள் போதாது

ஈரல் நிறத்தில் இருக்கும்
பழுத்த ஆவாரநெற்றை
முறுக்கைப்போல் தாடி ஆட ஆட
உண்ணும் ஆடுகள்

ஆவாரை பூத்திருக்க
சாவாரை கண்டதுண்டோ

இந்தப் பழமொழியின்
விளக்கம், செய்முறை
பரவாமல் பார்த்துக்கொண்டிருக்கிறது
நவீன மருந்துலகம்

நீரிழிவு நிலை குறைக்க
பூவைப் பறித்து
நிழலில் காயவைத்து
பொடித்து அதில் பூநீர் பருக
என் காலைகள் பழகிவிட்டன
மிக மிக அரிதாய்ப்
பூத்திருக்கும் இக்கால
ஆவாரம் பூப் பறிக்க
இப்போதும் அலைகிறேன்

வாழ்வின்
அலைச்சல்கள் யாவும்
ஒரே மாதிரியானவை அல்ல.

***********

அகவி
31z/55 A
அரணாரை வடக்கு
துரைசாமி நகர்
பெரம்பலூர்621212
பேச 87789 25764

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *