சிறுகதை: குழம்பி – திருமதி.சாந்தி சரவணன்வெண்பா சென்னை அரசு மருத்துவமனையில் கடந்த 10 வருடங்களாக உளவியல் நிபுணராக பணிபுரிந்து வருகிறாள். தீநுண்ணிக்கு முன் தீநுண்ணிக்கு பின் என உலக வரலாற்றில் தீநுண்ணி இடம் பெற்றுவிட்டது. ஊரடங்கு, வீட்டிலிருந்தபடி வேலை, ஆன் லைன் வகுப்பு என மழலையர் முதல் பெரியவர்கள் வரை ஒரு உலகளாவிய வாழ்வியல் மாற்றங்களை உளவியல் சிக்கல்களை சந்திக்கும் நிலையயை உருவாக்கிவிட்டது

வயிறு இல்லாத மானுட பிறவி எடுத்திருந்தால் இந்த காலத்தையும் கடந்து இருக்கலாம் என விளிம்பு நிலை மக்களின் எண்ண ஓட்டம் ஒருபுறம். “உழைத்து வாழ வேண்டும்” என்பதை தாரகமந்திரமாக கொண்டு வாழ்ந்தவர்களை முடக்கி வீட்டில் அமர வைத்து வேலை இழந்து தவிக்கும் நடுத்தர வர்க்கம் மறுபுறம். இப்படி ஊடகங்களின் தொடர் “அச்ச ஏவுகணை” வீச்சால் ஊசலாடிக் கொண்டு இருக்கிறது உலகம். ஆக உலகளாவிய உளவியல் சிக்கலில் மனித குலம் போராடிக் கொண்டிருக்கிறது.

உளவியல் நிபுணர் வெண்பாவிற்கே உளவியல் ஆலோசனை தேவைப்படுகிற நிலை. ஆனால் வெண்பா திறமையானவள். நம்மால் முடியும் என்ற தன்நம்பிக்கை கொண்டவள். மருத்துவமனையில் வெண்பாவின் மேல் தனி மரியாதை உண்டு. பாரதி “நமக்குத் தொழில் கவிதை’ என்பது போல “எமக்கு தொழில் உளவியல் துறை” என்பதை குறிக்கோளாக கொண்டவள்.. தனது ஆலோசனை ஒருவரின் வாழ்க்கையில் வாழ்வியல் மாற்றத்தை உருவாக்கும் என்றால் எத்தனை மகிழ்ச்சியான செயல். அதை அவள் ‌மனமார செய்பவள்.

மருத்துவமனையில் சேனிடைசர் வாசம் மொத்த இடத்தையும் ஆக்கிரமித்து கொண்டுள்ளது. OP , நேரம் முடிய இன்னும் 5 நிமிடங்கள் தான். பரபரப்பாக நோயாளிகள் , “நோயாளிகள்’ என சொல்ல முடியாது. அப்படி சொல்லவும் கூடாது. “உளவியல் சீர் திருத்தங்கள்” தேவைப்படுபவர்கள் இன்றே நிபுணரை பார்த்து விட்டு போய்விடலாம் என தரையில் இருக்கும் ஒரு துளியின் இனிப்பைச் சுவைக்க வரிசையாக அணிவகுத்து காத்து நிற்கும் எறும்பு கூட்டம் போல் பதட்டத்தோடு காத்துக் கொண்டு இருக்கிறார்கள். அதே நேரத்தில் வெண்பா, இன்று 6 மணிக்கு கணவன் இனியன் மருத்துவமனையில் இருந்து அழைத்து செல்ல வருவதாக சொல்லியிருப்பதால் பதட்டத்துடன் காணப்பட்டாள்.

இனியன் என்ற பெயரை நினைத்தவுடன் சிறகு முளைத்த பட்டாம்பூச்சி போல பறக்க ஆரம்பித்து விடுவாள் வெண்பா.

பெரியவர்கள் பார்த்து நிச்சயித்த திருமணம் தான். ‘சில்லுன்னு ஒரு காதல் கதை’ போல் திருமணத்திற்கு பின் காதல் சுகமே என்று நிரூபித்த தம்பதியர். திருமணம் முடிந்த ஒரே வருடத்தில் மகள் யாழினி பிறந்தாள். அடுத்த வருடம் மகன் நகுலன். நாம் இருவர் நமக்கு இருவர் என சிறு குடும்பம்

அட்டன்டர் மணியின் குரல் வெண்பாவின் நினைவை கலைக்க, ‘அம்மா ஐயா வந்துட்டார்’ என சொல்லி விட்டு வெளியே வந்தான்.

வெண்பா டாக்டர் ஓபி நேரம் முடிந்துவிட்டது. சிறிது நேரத்தில் ரம்யா டாக்டர் வந்துவிடுவார்கள். சற்று பொறுமை காக்கவும், சைலன்ஸ் சைலன்ஸ் என அங்கு இருந்த நோயாளிகளிடம் சொல்லி கொண்டு இருந்தான் மணி.

வெண்பா வெளியே வந்தவுடன் “வாங்க டாக்டரம்மா வாங்க” என மனைவியை இனியன் வரவேற்க “சும்மா இருங்க மாமா” என சிணுங்கலோடு ஏறி காரில் அமர்ந்தாள்.

எஸ்..பி.பாலசுப்பிரமணியன் ஹிட் பாடல்கள் இசை ஞானியின் இசை பின்னணியில் கார் வீட்டை நோக்கிச் சென்று கொண்டு இருந்தது.

ஏதோ ஒரு வகையில் வெளியில் இயல்பாக இருந்தாள். ஆனால் மனதளவில் களைப்பாக இருந்தாள்.

வீட்டுக்குச் சென்றவுடன் குளித்து முடித்து ஸ்டிராங்கா ஒரு காபி சாப்பிட வேண்டும் என்று நினைவில் இனியன் பேசுவது கூட அறியாமல் கண் அசந்து விட்டாள்.

வீடு வந்து விட்டது “எழுந்துரு வெண்பா” என்றான்.முதலில் காபி குடித்து விட்டுத்தான் அடுத்த வேலை என சிந்தித்துக் கொண்டே உள்ளே சென்றாள். காபி குடித்தால் வரும் புத்துணர்ச்சி அவளுக்கு மிகவும் பிடிக்கும். தோட்டத்தில் ஒரு கப் காபி இளையராஜா இசையோடு ரசித்து ருசித்து குடிப்பதே ஒரு அலாதி சுகம் தான் என நினைத்து கொண்டே வீட்டின் உள்ளே நுழைந்தாள்.

மாமனாரின் குரல் அவளை நிறுத்தியது. “அம்மா வெண்பா வந்துட்டியா. சூடா ஒரு கப் காபி கொடுமா, உனக்காக தான் காத்துக் கொண்டு இருக்கிறேன்”, என்றார்

“சரிங்க மாமா” என்ற வெண்பா குளியலை மறந்து நேராக சமையலறை சென்றாள்.

குழந்தைகள் ‘அய் அம்மா வந்தாச்சு’ என ஓடி வந்து கட்டி கொண்டார்கள். “அம்மா,. பசிக்குது மா. டிபன் செய்து கொடுங்க பிளீஸ்…”

யாழினி , “அம்மா எனக்கு தோசை தக்காளி சட்னி”

“சரி செல்லம்”

“மம்மி மம்மி எனக்கு நூடுல்ஸ் பிளீஸ்” என்றான் நகுலன்.

“சரி சரி இரண்டு பேரும் போய் விளையாடுங்க. 10 நிமிடங்களில் செய்து தரேன்”.

“ஓகே மம்மி” என ஓடினார்கள்.

இந்த இடைவெளியில் இனியன் குளித்து முடித்து புத்துணர்ச்சி பெற்றுக்கொண்டு, “வெண்பா எனக்கும் டீ, ஸ்டராங்காக ஏலக்காய் போட்டு சக்கரை கம்மியாக” என்றான்.

“சரிங்க”

நான்கு பிரிவு கொண்ட கேஸ் அடுப்பு பற்ற வைத்தாள். ஒன்றில் காபிக்கு பால், மற்றொன்றில் டீ, மூன்றாவதில் தோசை கடாய், நான்காவது அடுப்பில் நூடுல்ஸ் கடாய்.

மறுபடியும் இன்று வந்த ஒரு நோயாளி பற்றிய எண்ணங்களில் மனம் சூழன்றது.

அவர் பெயர் கோகிலா

“என்ன கோகிலா, எப்படி இருக்கீங்க?” என்று வெண்பாவின் கேள்விகளுக்கு மௌனம் கலைத்து பதில் சொல்ல கோகிலாவிற்குச் சற்று நேரம் பிடித்தது.“மேடம், நான் கணினி நிறுவனத்தில் வேலையில் இருக்கின்றேன். இரண்டு சின்ன குழந்தைகளை விட்டுவிட்டு வேலைக்கு செல்கிறேன். கணவன் ராஜா தொழிலதிபர். வேலையிலும் ஒர்க் டென்சன் அதிகம். வேலை முடித்து வீட்டுக்கு வந்து கொஞ்சம் சோர்வு போக்கிக்கொண்டு ஒரு கப் காபி கூட குடிக்க முடியவில்லை. வீட்டுக்கு வந்தவுடன் வீட்டு வேலை துவங்கிவிடும். ஓய்வு என்பது கனவாகவே உள்ளது. என்ன செய்வது என்றாள்.

“இதற்கு எல்லாம் கவலைப் பட வேண்டாம் கோகிலா. நேரத்தை வரையறுத்து மேனேஜ் செய்யவேண்டியது நமக்கு மிகவும் முக்கியம். நீங்கள் உங்களுக்கு என் சிறிது நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். அந்த நேரம் உங்களுக்கு ஒரு பொலிவு தரும். நம்பிக்கை அளிக்கும். நமக்கான நேரத்தை நாம் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். மாதம் ஒரு முறை கவுன்சிலிங் என மூன்று சிட்டிங் வாங்க. சரி செய்துவிடலாம். நம் அணுகுமுறை மாற்றம் நம்மை அழுத்தத்திலிருந்து விடுதலை செய்யும்” என கூறினாள்.

“முயற்சிக்கிறேன் டாக்டர்”.

“புத்தகம் வாசிக்கப் பிடிக்குமா கோகிலா?”

“பிடிக்கும் மேடம், ஆனால் நேர மேலாண்மை தான் பிரச்சினை”.

“படிக்க ஆரம்பிங்க. தொடர்ந்து புத்தகம் வாசிங்க. எதுவும் நிலையானதல்ல. மாற்றங்கள் ஒன்றே மாறாதது” என ஆலோசனை வழங்கி அனுப்பி வைத்தாள்.

“அம்மா வெண்பா, காபி என்னாச்சு?” என்ற மாமனாரின் குரல் அவளைத் தன் நினைவுக்குத் திருப்பியது. தன்னிச்சையாக அவளை அறியாமலே காபி எடுத்துக் கொண்டு சென்று மாமனாரிடம் கொடுத்து விட்டு, கணவருக்கு டீ கொடுத்து விட்டு யாழினிக்கு தோசை தக்காளி சட்னியோடு பரிமாறிவிட்டு, நகுலனுக்கு நூடுல்ஸ் செய்து கொடுத்துவிட்டுக் குளிக்கச் சென்றாள்.

குளித்து முடித்து தொலைக்காட்சி ஆன் செய்தாள். சன்ரைஸ் காபி விளம்பரம் வந்து நின்றதைப் பார்த்தவுடன், ‘அடடா, வீட்டுக்கு வந்தவுடன் காபி குடிக்க நினைத்தோமே, எப்படி மறந்தோம்?’ என யோசித்துக் கொண்டே காபி போட அடுப்பை பற்ற வைத்தாள் வெண்பா.

 

நன்றி

திருமதி.சாந்தி சரவணன்

EMAIL:[email protected]