எம். எஸ். சுப்புலட்சுமி (உண்மையான வாழ்க்கை வரலாறு) ஆங்கிலத்தில் டி.ஜே.எஸ் ஜார்ஜ் எழுதிய இந்நூலை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் ச. சுப்பாராவ்

எம். எஸ். சுப்புலட்சுமி (உண்மையான வாழ்க்கை வரலாறு) – நூல் அறிமுகம்

எம். எஸ். சுப்புலட்சுமி (உண்மையான வாழ்க்கை வரலாறு)
ஆங்கிலத்தில் டி.ஜே.எஸ் ஜார்ஜ் எழுதிய இந்நூலை
தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் ச. சுப்பாராவ்
பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.

எம். எஸ். சுப்புலட்சுமியை அறியாதவர்களுக்கும்
அறிந்திருந்தும் போதிய விளக்கம் கிடைக்காமல்
இருப்பவர்களுக்கும் இந்நூல் அரிய நூல் தான்.

கர்நாடக இசை, அது வளர்ந்த விதம்,
அது உருவான விதம், அதற்குள் இருந்த
சாதி, அரசியல் என அந்தக் காலத்தை.
1930 இல் இருந்த இசை உலகை,
இண்டு இடுக்கு என அத்தனை
செய்திகளையும் சாறு பிழிந்து கொடுக்கிறது.

இசை, இசை வல்லுனர்கள்
திரைப்படம், திரைப்பட நடிகர்கள்
நாடகம், நடிகர்கள்,கலைஞர்கள்
இலக்கியம், இலக்கியப் பத்திரிகைகள்
செய்தி பத்திரிகைகள் எனது அத்தனையும்
வாசிக்கையில், 1930 /40 அந்த காலகட்டத்தில்,
அந்த உலகில் வாழ்ந்ததைப் போன்ற
ஒரு உணர்வை ஏற்படுகிறது.

மனுஷியாய் பிறந்து இசையாய் மாறிய
மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி
என்ற குயிலின் வாழ்க்கை வரலாறு…..
பல்லவி சரணம் என்று ஒரு பாடலைப் போல
பாடுகிறது இந்த நூல்.

மனிதர்களில் பலவிதம் அது போல்
இசைக் கலைஞர்களிலும்
எத்தனையோ விதம். புகழ்பெற்ற
இசைக் கலைஞர்களாக இருந்தாலும் கூட
மனிதர்கள் தானே என்பது போல
இருக்கிறது அவர்களின்
வேடிக்கையான நடவடிக்கைகள்.

டிக்கெட் விற்கப்படும் கச்சேரிகளில் சிலர்
பாட மாட்டார்களாம்.
அதுபோல் சிலர் பாடுவதற்கு விருப்பம்
ஏற்பட்டு விட்டால் இடம் பொருள் ஏவல்
என்று எதுவும் பார்ப்பதில்லையாம்.
எந்த இடத்திலும் பாடுவார்களாம்.

செம்பை வைத்தியநாத பாகவதர் என்பவர்
பாலக்காட்டில் உள்ள ஒரு வங்கிக்கு சென்றிருக்கிறார்
அந்த வங்கியின் ஊழியர் ஒருவர்,
உங்கள் பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
உங்களது பாடலைக் கேட்க வெகு நாட்களாக
ஆசை எனக்குத்தான் அந்த வாய்ப்பு
கிடைக்கவில்லை என்றாராம்
.அடுத்த நொடியே அந்த வங்கியின்
தரையில் அமர்ந்து
ஒரு மணி நேரம் பாடினாராம்.

இன்னும் சில வித்துவான்கள்.
ரசிகர்களுக்காக பாட மாட்டார்களாம்.
இசை என்பது ஆத்ம ஆனந்தத்திற்கானது
என்பார்களாம். அவர்களின் இல்லத்திலேயே
அவர்களுக்காகவே பாடி கொள்வார்களாம்.

அரியக்குடி இராமானுஜ ஐயங்கார் தனது
குடிப்பழக்கத்தை மறைத்ததே கிடையாதாம்
காபி குடிப்பது போல மேடையிலேயே
அவ்வப்போது ஊற்றி குடித்துக் கொள்வாராம்.
என் பெயரை எல்லோரும் அறியக் குடி
என்று தானே அழைக்கிறார்கள். அப்படி இருக்கும் போது
நான் குடிக்க கூடாதா. என்று நகைச்சுவையாக
வேறு கேட்பாராம்.

எம். எஸ் சுப்புலட்சுமி: உண்மையான வாழ்க்கை வரலாறு » Suvadi Books

அதுபோல் இன்னொருத்தர் முத்தையா பாகவதர்
அவர் மைசூர் மகாராஜாவிடம் ஆஸ்த்தான
வித்வானாக இருந்திருக்கிறார்.
சொந்த ஊரில் இசை விழா என்றால்
அவரது இசைக்குழவினர் அத்தனை பேரும்
சந்தனத்தை அரைத்து உடலெங்கும்
பூசி கொள்வார்களாம். அவர்களெல்லாம்
மொத்தமாக ஆற்றில் போய் குளித்தால்
ஆறே சந்தன வாசம் அடிக்குமாம்.

இப்படி அறியக்குடி போல் அரிய
செய்திகள் பல அரியக் கிடைக்கிறது.

இசையில் வல்லவர்களாக இருந்தாலும்
பல வித்வான்கள் கல்வி வாசனையே இல்லாமல்
இருந்திருக்கிறார்கள். என்று
1930 ஐ படம் பிடித்து காட்டிவிட்டு….

1930 களில் எம். எஸ். பாட்டுப் பாட வந்தார் என்று
சாதாரணமாக சொல்லிவிட முடியாது. அவர்
ஒரு ஆடவர் உலகத்தில் அவர் நுழைகிறார்.

ஆண்கள் மட்டுமே கோலோச்சுகிற இசை உலகில்
ஒரு பெண்ணாக மட்டுமல்ல, ஆரியரல்லாத
ஒரு பெண்ணாகவும் உள்ளே நுழைகிறார்.

செம்மங்குடி சீனிவாச ஐயங்கார்
மகாராஜபுரம் விஸ்வநாதர் ஐயங்கார்
அரியக்குடி ராமானுஜ ஐயங்கார்.
வசந்தகுமாரி, பட்டம்மாள்
என சில பெண் பாடகர்களும்
கர்நாடக இசையில் கொடி கட்டிப்
பறந்து கொண்டிருந்த அந்தக் காலத்தில்
ஆரியரல்லாத ஒரு பெண், தாசி குலம்
என்று சொல்லக்கூடிய தேவரடியாள்
குலத்தில் பிறந்த பெண்
எப்படி இசைக் கடலை நீந்திக் கடந்தார்.
எப்படி ஐநா சபை சென்று பாடினார்.
திருப்பதி தேவஸ்தானம்
நாலாயிரத்தி ஐநூறு கிலோவில்
எம். எஸ். சுப்புலட்சுமிக்கு வெங்கலச் சிலை
எப்படி ஏன்?என்கிற வரலாறுதான்
இந்தப் புத்தகம். என்றாலும்.

சதாசிவம் என்ற மனிதர் வருகிறார்
எம். எஸ் க்கு அடைக்கலம் கொடுத்த.
அந்த சதாசிவம் யார்?
சுதந்திரப் போராட்டத்தில் சிறை செல்கிறார்.
சிறையில் அவருக்கு நண்பராக
கிடைக்கிறார் கிருஷ்ணமூர்த்தி
கிருஷ்ணமூர்த்தி யார்?

கிருஷ்ணமூர்த்தி ராஜாஜியின் சீடராக இருக்கிறார்
அந்த கிருஷ்ணமூர்த்தி தான் கல்கி என்ற பெயரில்
பொன்னியின் செல்வன் என்ற மாபெரும்
நாவலை எழுதியவர்.

சதாசிவம், கிருஷ்ணமூர்த்தி இரண்டு
நண்பர்களுமே ஆனந்த விகடன்
பத்திரிக்கையில் பணியாற்றுகிறார்கள்.
இருவரும் இணைந்து ஒரு
இலக்கிய பத்திரிக்கை தொடங்கினால்
என்ன என்று சிந்திக்கிறார்கள்.
அதற்காகவே எம். எஸ். சுப்புலட்சுமி
நாயகியாகக் கொண்டு ஒரு திரைப்படம்
தயாரிக்கிறார்கள். அது
வெற்றிப் படமாகிறது. ஆனால்,
அந்தப் படத்தின் வருமானத்தைக்
கொண்டு தான் கல்கி என்ற இலக்கிய
பத்திரிக்கையே துவக்கப்படுகிறது.

இதுபோல் நூலெங்கிலும் தங்கத் துளிகளாக
ஏராளமான செய்திகள்
வடிந்து கொண்டே இருக்கிறது.

திரைப்படத் துறையில் நல்ல புகழில்
இருக்கும் போது எம். எஸ். சுப்புலட்சுமி
ஏன் நடிப்பதை நிறுத்தினார்.
என்ன காரணம்? யார் காரணம்?

மதுரையில்
அனுமந்தராயர் கோயில் தெருவில்
சண்முக வடிவின் மகளாகப் பிறந்த
எம். எஸ். சுப்புலட்சுமி ஏன்
சென்னைக்கு ரயில் ஏறினார்.
சதாசிவ ஐயர் வீட்டில் ஏன் அடைக்கலம் ஆனார்.
சதாசிவ ஐயரையே திருமணம் செய்து கொண்டார்.
சதாசிவ ஐயர் நல்லவரா கெட்டவரா?
எண்ணற்ற கேள்விகளுக்கு இந் நூல்
விடை கொடுக்கிறது.

கோயிலுக்கு என்று நேர்ந்து விடப்படும்
பெண்களால் ஆடப்பட்டது சதுர் நடனம்.
தேவனின் அடியார்களால் ஆடப்படுவதால்
அது தேவரடியாள் ஆட்டம் என்று ஆனது.

தேவரடியாள் ஆட்டம் காலப்போக்கில்
தேவிடியா ஆட்டம் என்றானது.

அந்த தேவிடியா ஆட்டம்
எப்படி பரதநாட்டியம் ஆனது?
அது எப்படி பிராமணர்களிடம் வந்தது
பிராமண அந்தஸ்த்தைப் பெற்றது

எம். எஸ் தனது பத்து வயதில்
பாடத் துவங்குகிறார்.
அதன் பிறகு இதுபோல் சின்ன
வயதிலும் பாடலாம் என்கிற ஒரு
வரலாறே துவங்குகிறது.

மிருதங்கச்சக்கரவர்த்தி
பாலக்காடு மணி ஐயர்
தனது இசை வாழ்க்கையை
எட்டு வயதில் துவங்குகிறார்

பாலமுரளி கிருஷ்ணா என்று
இப்போது பலரும் பெயர் வைத்துக்
கொண்டிருக்கிறார்கள்.
அதன் பொருளும் வரலாறும் தெரியாமல்

பதில் பருவத்தில் பாட வருபவர்களின்
பெயருக்கு முன்னால்,
பாலகன் என்ற பொருளில்
பால என்று சேர்த்துக் கொள்வது
அந்தக் கால வழக்கம்.

அப்படி குழந்தை வயதில் பாட வந்த
முரளி கிருஷ்ணா தான்
பால முரளி கிருஷ்ணா
அவருக்கு வயதாகியும் கூட
அந்தப் பெயர் மாறவில்லை

மதுரையில் பிறந்த சுப்புலட்சுமி
முதன்முதலாக எந்த மேடையில் பாடினார்
மதுரையில் ஓர் சைக்கிள்
கம்பெனி திறப்பு விழாவில்.
எது அந்த சைக்கிள் கம்பெனி
அதுதான் இன்றைய டி.வி.எஸ்
பெரும் நிறுவனம்.

இது போன்ற அறிய செய்திகள்
புதையல் போல பொக்கிஷம் போல
ஏராளமாக புதைந்து கிடக்கிறது

வேண்டுபவர்கள் வேண்டியதை
தோண்டி எடுத்துக் கொள்ளலாம்
வாங்கி வாசியுங்கள் எம். எஸ். சுப்புலட்சுமி
உண்மையான வாழ்க்கை வரலாறு
டி. ஜே. எஸ். ஜார்ஜ் எழுதியது.
தமிழில் ச. சுப்பாராவ்.
சுப்பாராவ் நூற்றுக் கணக்கான
நூல்களை மொழி பெயர்த்திருக்கிறார்
அந்த அனுபவம் இந்த நூலில் மிளிர்கிறது

எனது அன்பு வாழ்த்துக்கள்
எழுத்தாளருக்கும்
மொழிபெயர்ப்பாளருக்கும்.

நூலின் விவரம்:

நூல் : எம். எஸ். சுப்புலட்சுமி – உண்மையான வாழ்க்கை வரலாறு
ஆசிரியர் : டி. ஜே. எஸ். ஜார்ஜ் | தமிழில் : ச. சுப்பாராவ்
விலை : ரூ.₹ 220/-
பக்கங்கள் : 255
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

நூல் அறிமுகம் எழுதியவர்:

பொன் விக்ரம்
[email protected]


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 1 Comment

1 Comment

  1. எம்.எஸ்.சுப்புலட்சுமி என்றால் கர்நாடக சங்கீதத்தில் பக்திப்பாடல்களைப்‌ பாடியவர் என்பதற்காகவே கொண்டாடுகிறவர்களும் உண்டு; அதக்ற்காகவே அவரை ஒதுக்கியவர்களும் உண்டு.‌ இரு தரப்பினரும் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு இந்தப் புத்தகத்தில் இருப்பதை அறிய முடிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *