நூல் அறிமுகம்: ‘எம்.எஸ்.சுப்புலட்சுமி – உண்மையான வாழ்க்கை வரலாறு’ – கோமதி சங்கர்‘எம்.எஸ்.சுப்புலட்சுமி – உண்மையான வாழ்க்கை வரலாறு’
ஆங்கில மூலம்; : டி.ஜே.எஸ்.ஜார்ஜ்
தமிழில் : ச.சுப்பாராவ்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
256 பக்கங்கள்…
விலை: 220 ரூபாய்கள்.
புத்தகம் வாங்க: https://bit.ly/2Kdk2Z7
‘காற்றினிலே வரும் கீதம்..’
எம்.எஸ். என்றாலே காதினில் தேன் பாயும்…பெரும்பாலான தென்னிந்தியரின் அதிகாலைகள் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் சுப்ரபாதத்தில்தான் விடிகின்றன..
எம்.எஸ் என்ற மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி பற்றிய சிறு நூல் ஒன்றை படித்திருந்தேன்..அந்நூல் திரு.டி.எம்;;.கிருஷ்ணா எழுதியது…
டி.எம்;.கிருஷ்ணா கர்நாடக இசை உலகில் ஒரு கலகக்காரர்..தமது ‘பிராமண’ நடையை மாற்றிக் கொண்டு டிசம்பரில் மீனவக் குடியிருப்புகளில் கச்சேரி நடத்தியவர். டி.ஜே.எஸ்.ஜார்ஜ் தனது முன்னுரையில் அவரது நூலை¸ தமது நூலின் ‘ஆதார சுருதி’ போலக் குறிக்கிறார்…
பாடகர்¸ அறிஞர்¸ கலகக்காரர் என்று எல்லாம் சேர்ந்த கலவையான டி.எம்;.கிருஷ்ணா இன்று பொதுவெளியில் முன்வைக்கும் பிரச்சினைகளெல்லாம் பத்தாவது வயதில் தமது முதல் இசைத்தட்டை வெளியிட்ட எம்.எஸ்.சுப்புலட்சுமியைத் துரத்தியவைதான்”¸ என்ற டி.ஜே.எஸ்.ஜார்ஜின் முன்னுரையே¸ ‘உண்மையான’ வரலாற்றில் தவிர்க்கமுடியாத ஈர்ப்பை உந்துகிறது. தமிழ்நாட்டு மீராவின்¸’ ‘காற்றினிலே வரும் கீதத்தின்’ சரிதையை நூல் வெவ்வேறு ‘பாவங்களில’ சொல்லிப் போகிறது..
நூலாசிரியர் டி.ஜே.எஸ்.ஜார்ஜ நாடறிந்த பத்திரிகையாளர்.. ஆனால் இசை வல்லுனரல்ல. ஆகையால் அவரே சொல்வது போல நூலாக்கத்தில் பல இசை விற்பன்னர்களைத் துணை கொண்டிருக்கிறார்.. அதன் பலன் நூலில் பாரம்பரிய இசை பற்றிய ‘நிரவல்களில்’ நிறைந்து ததும்புகிறது…
ஆனால் மொழிபெயர்ப்பாளர் ச.சுப்பாராவ் ஒரு செவ்வியல் இசைக் கலைஞர் என்று அறிகிறோம்.. நூலின் மொழிபெயர்ப்பும் கூட தமிழ்ச் செவ்வியலை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருப்பது போலத் தோன்றுகிறது..
‘அந்த நாளும் வந்திடாதோ..’
மதுரை அனுமந்தராயன் சந்தில்¸ தாய் சண்முகவடிவின் பாதுகாப்பில் தமையன் சக்திவேலுடனும் தங்கை வடிவாம்பாளுடனும் வாழ்ந்த¸ ‘அந்த நாளின்’ பால்ய நினைவுகள் கூட ‘வந்திட வேண்டாம்’ என்று வலுவான சனாதனச் சிறைப்பறவையாக¸ சதாசிவம் என்ற பிராமணரின் பாதுகாப்பில் ‘சமஸ்கிருத மயமாகிப்’ போன இசையரசி எம்.எஸ் அவர்கள் நினைத்திருந்தால் அதில் வியப்பேதும் இருக்காது..
ஏனெனில் அவை பழைய ‘தேவதாசிச் சமூகத்தின்’ மறக்கப்பட்ட நினைவுகள்….
யாரோ ஒரு செல்வந்தருடன்¸ மனைவி என்ற முத்திரையுடன் (சின்னவீடு என்ற கொச்சையுடன்தான்) வாழ்வதும் அத்தோடு தனது கலை அடையாளத்தைத் தொடர்வதும் தேவதாசிப் பெண்களுக்கு விதிக்கப் பட்டிருந்த இருபதாம் நூற்றாண்டு இழிவை அறவே துடைத்தெறிந்து கணவனே தனது எல்லாமுமாக மாற்றிக் கொண்டு நிறைவாழ்வு வாழ்ந்து இசையுலகின் உச்சத்தைத் தொட்டவரின் வரலாற்றை இந்த நூல் துணிச்சலுடன் முன்வைக்கிறது.
கூடவே செவ்வியல் கலைகளின் மரபார்ந்த வரலாற்றை ஏழாம் நூற்றாண்டு ஞான சம்பந்தரிடம் தொடங்கி பாலமுரளி கிருஷ்ணா வரை அலசுகிறது.
எம்.எஸ். வரலாற்றின் ஒரு சில பக்கங்களில் வந்து போகிறவர்களும்¸ தேவதாசிக் குடும்பங்களில் இருந்து வந்திருந்தாலும் தமது கலை மேன்மையால் அந்த தேவதாசி மரபின் கண்ணியத்திற்காகவும் கலையுலகில் பாலின சமத்தவத்திற்கும் போராடியவர்களுமான வீணை தனம்¸ இசைஅரசி பெங்களுர் நாகரத்தினம் மற்றும் நாட்டியமேதை பாரசரஸ்வதி ஆகிய கலைமேதைகளுக்கு இந்நூல் சமர்ப்பணம் செய்யப் பட்டுள்ளது.


கண்டதுண்டோ கண்ணன் போல்…
மகாபாரதத்துக் கண்ணன் நடைமுறை யதார்த்தவாதி.. இலக்கின் வெற்றிக்கு திட்டமிட்டு செயலாற்றுவதும் இலக்கு நோக்கிய பயணத்தில் தடைகளையும் சாதகமாக்கிக் கொள்ளும் பாத்திரம் யதுகுல கண்ணன்..
மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமிக்கும் தனது பாதுகாப்புக்கு நம்பகமான கண்ணனாக சதாசிவம் தெரிந்தார்..
சதாசிவமும் நடைமுறை யதார்த்தவாதி..
“சண்முகவடிவு சுப்புலட்சுமியின் வாழ்க்கையில் சதாசிவம் 1936 மத்தியில் நுழைகிறார். சச்சரவுகள்¸சண்டைகள்¸கசப்புகள்¸குற்றச்சாட்டுகள்¸ அவதூறுகள் என நான்காண்டுகள் சென்றபின் 1940 இல் இருவரும் மணந்து கொண்டு 1997 இல் தனது 96 ஆம் வயதில் சதாசிவம் இறக்கும் வரை 57 ஆண்டுகள் நிறைவாழ்வு வாழ்ந்தார்கள்’” என்கிறார் நூலாசிரியர்.
தாயாரை உதறி¸ பிறந்த சமூகத்தின் ஆணாதிக்க சுரண்டலில் இருந்து முழுமையாக தப்பிக்க¸ மதுரையிலிருந்து தன்னிடம் அடைக்கலமாக வந்த சண்முகவடிவு சுப்புலட்சுமியை ‘சதாசிவ’ சுப்புலட்சுமியாக மாற்றி இசையுலகில் யாருமே அடையாத வெற்றிகளை அடையச் செய்ய சதாசிவம் எடுக்கும் முயற்சிகளை விரிவாகச் சொல்லும் இந்த நூல் ஒரு விதத்தில் சதாசிவத்தின் வரலாற்றையும் பூரணமாகச் சொல்லிவிடுகிறது…
சதாசிவம் முதலில் சுப்ரமணிய சிவாவின் சீடராக இருக்கிறார்.. சிவாவிடம் கருத்து வேற்றுமை ஏற்பட்டு ராஜாஜியிடம் வருகிறார்.. அதற்குப் பின் ராஜாஜி இறக்கும் வரை அவரின் தீவிர விசுவாசியாக இருந்து ராஜாஜி அரசியலின் தமிழ்நாட்டு முகங்களில் முக்கியமானவராக இருக்கிறார்..
விடுதலைக்கு முன்னும் பின்னும் ராஜாஜியின் தேசிய அரசியலுடன் தமக்கேற்பட்ட தொடர்பை எம். எஸ். சின் வளர்ச்சிக்கு நன்கு பயன்படுத்திக் கொள்கிறார்.
எம்.எஸ்.சுப்புலட்சுமி 100-வது பிறந்த நாள் விழா | Tamil - YouTube
‘பஜகோவிந்தம் பஜகோவிந்தம்….’
வீணைக் கலைஞர் மதுரை சண்முகவடிவு தனது மூத்த மகள் சுப்புலட்சுமி வாய்ப்பாட்டில் திறமை பெற்று வருகிறாள் என்பது தெரியத் தொடங்கிய தருணத்திலேயே¸ அவரைப் பாடவைத்து ஒரு இசைத் தட்டை வெளியிடும் போது சுப்புலட்சுமிக்கு 10 வயதுதான்…இயல்பாகவே வளமான இனிய குரலை ‘வரமாகப்’ பெற்றிருந்த சுப்புலட்சுமிக்கு கர்னாடக இசை பயிற்றுவிக்கப் பட்டு இசைவாணி ஆகும்வரை எல்லாமுமாக இருந்த அம்மாவை¸ தனக்குத் ‘தேவதாசி சமூக’ வழக்கத்தில்தான் திருமணம் என்ற போது¸ துணிச்சலாக உதறி¸ தன் வாழ்வைத் தானே தீர்மானிக்க தனக்கு சில நாட்களே பழக்கமான சதாசிவத்திடம் அடைக்கலமாகிறார்.
இத்தகைய பெண் பிற்காலத்தில்¸ அப்பாவி என்றும்¸ கணவர் சொல் தவிர யாதொன்றும் அறியாதவர் என்ற பெயர் வாங்கியிருப்பதை வியப்போடு குறிப்பிடுகிறார் நூலாசிரியர்..
எம்.எஸ்.ஸோடு சமகால பாடகிகளான எம்.எல்.வசந்தகுமாரி¸ கே.பி.சுந்தராம்பாள் மற்றும் டி.கே.பட்டம்மாள் ஆகியோர் போன்றல்லாமல்¸ கணவர் சதாசிவம்¸ அவரை ‘சமஸ்கிருத’ மயமாக்கியும்¸ பஜன்களும் துதிப்பாடல்களும் பாடுகிற பாணியில் மாற்றி விடுகிறார்..
“பக்திதான் இந்தியச் செவ்வியல் இசையின் அடிப்படை என்பதால் வஷயங்கள் வேறுமாதிரி இருந்திருக்க முடியாது” என்கிற நூலாசிரியர்¸ “கடுமையான விமர்சகர்கள்¸ சதாசிவம் எம்.எஸ்.ஸை பிராமணிய மயப்படுத்தும் தனது முயற்சியில் அவரது இசையை ‘புனிதப்’படுத்துகிறார்” என்று குற்றம் சாட்டியதைச் சொல்லி¸ “இத்திட்டம் வேண்டுமானால்; சதாசிவத்தினுடையதாக இருக்கலாம். ஆனால் இசை முழுமையாக எம்.எஸ்.ஸிற்குரியது. அவர் உருவாக்கிய பக்தி வகைமையில் அவரது முத்திரை மட்டுமே இருந்தது.” என்று எம்.எஸ்.ஸின் இசை ஆளுமையை சிலாகிக்கிறார்.
தன்னைப் ‘பிராமண’ அடையாளமாக்கிக் கொள்ளும் பாதையில் இந்தப் பக்தியிசைப் பாணி எம்.எஸ்.ஸ_க்கு முற்றிலும் உதவியது என்றாலும் மிகுந்த பிரயாசைக்குப் பின்னரே அது சாத்தியமாயிற்று.
சதாசிவம்-சுப்புலட்சுமி தம்பதிகள் திருமணமாகி 15 வருடங்கள் சென்றபின் காஞ்சிப் பெரிய சங்கராச்சாரியாரை சந்திக்கச் சென்றபோது எம்.எஸ். மடிசார் அணிந்து சென்றிருந்தார்..சங்கராச்சாரியாரின் ஆசி தம்பதிகளுக்கு கிடைக்கவில்லை..மடிசாரிலிருந்து சாதாரண முறைக்கு எம.எஸ். மாறிய பின்னரே தம்பதிகள் ஆசிர்வாதம் பெற்றனர்..இந்தக் குறிப்பு ஒன்று போதும்..சனாதனத்தின் இறுக்கத்தைச் சொல்வதற்கு..
இந்தப் பகுதியில் இந்நூல்¸ தென்னிந்திய கர்நாடக இசைக்கும் வடஇந்திய இந்துஸ்தானி இசைக்கும் பக்தி பாவத்தில் இருக்கும் வேறுபாட்டை அலசுவதை படித்தே ரசிக்க வேண்டும்..நூலின் பிரமாதமான பகுதி இந்த ஆராய்ச்சிதான்..எம்.எஸ். இந்த இரண்டு பாவங்களையும் ஒருசேர வெளிப்படுத்தினார்…
‘குறையொன்றுமில்லை…’
பத்து வயதில் இசைத் தட்டு வெளியீடு..பாடல்களால் பிரபலமான மீரா என்ற காலத்தை வென்ற நாயகி பிம்பம்..சங்கீத கலாநிதி..சங்கீத அகாடமியின் தலைமைப் பதவி..நாடு முழுமையும் கொண்டாடும் இசைவாணி…இசையால் ஐ.நா. மேடையேறிய புகழ்..கச்சேரிகளின் வருமானத்தை பொது நலங்களுக்கு அளித்திட்ட பாங்கு..(1977 இல் மட்டும் 10 கச்சேரிகள் பொதுநல நோக்கங்களுக்காக மட்டும் நடந்தனவாம்)..இறுதியாக ‘பாரத ரத்னா’…
புகழுக்குக் குறையேயில்லைதான்…ஆனால் கச்சேரியைத் திட்டமிடல்..நெறிப்படுத்துதல்..முடித்துக் கொள்ளல்..எல்லாமும் சதாசிவத்தின் கண்ணசைவில்தான் நடக்கும்…எம்.எஸ். விரும்பி ஏற்றுக் கொண்டதுதான் என்றாலும் தனது சுதந்திர விருப்பத்தை அவ்வப்போது அவர் வெளியிட்டிருக்கிறார்..
மொத்தமாக மதுரை உறவுகள் துண்டிக்கப் பட்டிருந்த போதும் தனது தாயாரை தன் இசையின் தொடக்கமாக ஓரிரு முக்கிய தருணங்களில் வணக்கத்துடன் நினைவு கூர்ந்து சிலிர்ப்படைகிறார்…


‘பிரேமையில் யாவும் மறந்தோமே…’
எம்.எஸ். நடித்த ஐந்தே படங்களில் (இந்தி ‘மீரா’வைச் சேர்த்து) இரண்டாவது படம் ‘சகுந்தலை’. அப்படத்தில் துஷ்யந்தனாக நடித்தவர் ஜி.என்.பாலசுப்பிரமணியம்.. நாயக நாயகி பாவத்தாலோ¸ ஜி.என்.பி.யின் இசைப்பாணியில் மயங்கியதாலோ அவரிடம் எம்.எஸ். காதல் கொண்டிருக்கிறார்..
தனது காதலை உருகி உருகிக் கடிதங்களில் கொட்டியிருக்கிறார்.. ஜி.என்.பி.யின் நண்பர்களால் பாதுகாக்கப்பட்டு வைக்கப் பட்டிருந்த 20 கடிதங்கள் நூலாசிரியரின் ஆய்வுக்காக படிக்க அனுமதிக்கப் பட்டன.
பல்வேறு தடைகளை உதறி ஜி.என்.பி. எம்.எஸ்.யை திருமணமும் செய்யத் தயாரான போது எம்.எஸ். தனது ‘தங்கக் கூண்டிலிருந்து’ வரத் தயாரில்லை..மேலும் சதாசிவம் தன் முதல் மனைவி இறக்கக் காத்திருந்தது போல சுப்புலட்சுமியை அவசரத் திருமணம் புரிந்து கொண்டார்..
இந்தக் காதல் கதையுடன் எம்.எஸ்.ஸின் வரலாற்றை திரு.டி.ஜே.எஸ்.ஜார்ஜ் இப்படி முடிக்கிறார்…
“என்னவென்றாலும்¸ ஒரு இசைக் கலைஞராக எம்.எஸ்.ஸின் கட்டுத்திட்டம் இசைக்கு இழப்புதான்..மாறாக ஜி.என்.பி.யுடனான வாழ்வில்¸ தனிப்பட்ட முறையில் அவருக்கு முக்கியமாக இருந்த ‘பாதுகாப்பு’ உணர்வு இல்லாமல் போயிருக்கலாம். உணர்வு ரீதியாக இழப்பு என்றாலும் தொழில் ரீதியாக வெற்றி பெற்றார். தைரியமாகக் காதலித்தது. பிறகு அதை மூடிவைத்துவிட்டு¸ தான் மணந்தவருடன் நல்லபடியாக வாழ்ந்தது அவரது குணாதிசயத்தின் வலிமைக்கான பாராட்டுதான்.
இது ‘சாதுவான பசு’ இல்லை. இவர் தான் விரும்பியது என்ன என்பதை அறிந்து முடிவெடுக்கக் கூடிய ஒருவர். இந்தக் கடிதங்கள் முழுமையான மனிதராக இருந்த ஒரு எம்.எஸ்.சுப்புலட்சுமியைக் காட்டுகின்றன. அதுவும் முழுமையான பெண்ணாக.”
நம் சமகாலத்து இசையரசி ஒருவரின் தெரிந்து கொள்ள வேண்டிய ‘உண்மையான வரலாறுதான்’..அதை திரு.டி.ஜே.எஸ்.ஜார்ஜ் ஆய்வு நோக்கத்துடன் சிறப்பாக சொல்லியிருக்கிறார்…