வீட்டுப் பணிக்கு வேண்டுமா ஊதியம்? – மு இராமனாதன்

Image Credits: KARUPPUROJAKKAL
Image Credits: KARUPPUROJAKKAL‘அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு?’ என்று எவரும் இப்போது கேட்பதில்லை. ஏனெனில் இந்நாளில் அடுப்பூத வேண்டியதில்லை. ஆனால் இப்போதும் பெண்களால் அடுப்படிச் சிறைகளிலிருந்து விடுபட முடியவில்லை. இந்தச் சூழலில்தான் கமலஹாசன் வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு ஊதியம் வழங்குவோம் என்று தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கிறார். இதைக் காங்கிரஸ் கட்சித் தலைவர் சசி தரூர் ஆதரித்தார். ‘இந்த ஊதியத்தால் பெண்களின் மதிப்பு உயரும், அவர்தம் சுதந்திரமும் அதிகரிக்கும்’ என்று அவர் துரிதரில் எழுதினார். உரையாடல் நடப்பது அரசியல் வெளியல்லவா? நடிகை கங்கனா ரனாவத் எதிர்வினை ஆற்றினார். ‘குடும்பம் எனும் எங்கள் சிற்றரசுக்கு நாங்களே மகாராணி. எமக்கு யாரும் ஊதியம் வழங்கத் தேவையில்லை’ என்று சீறினார் கங்கனா. இதற்கு சசி தரூர், ‘இந்த ஊதியம் பெண்களுக்கு ஓர் அங்கீகாரத்தை ஈட்டித் தருமல்லவா’ என்று பதிலளித்தார். இந்த உரையாடலில் பெண்கள் கலந்து கொண்டார்களா, அவர்களில் யாரேனும் ‘எத்தனை குடும்பங்களில் பெண்கள் ராணிகளாக உலவுகிறார்கள்?’ என்று கங்கனாவைப் பார்த்துக் கேட்டார்களா என்று தெரியவில்லை. அவர்கள் சசி தரூரிடம், ‘ஊதியத்தைப் பற்றிப் பேசுகிறீர்களே. எமது வேலைப் பளுவை ஆண்களைப் பங்கிட்டுக் கொள்ளச் சொல்வீர்களா?’ என்று கேட்டதாகவும் தெரியவில்லை.

சும்மா இருக்கும் பெண்கள்

இது இவ்வாறிருக்க, நாடெங்கும் உள்ள பெண்கள் எப்போதும் போல், வீதி பெருக்கி, வீடு சுத்தமாக்கி, விளக்கேற்றி, பண்டமெலாம் சேர்த்து வைத்து, பால் வாங்கி, மோர் வாங்கி, வேளைக்கோர் உணவு சமைத்து, பாத்திரம் கழுவி, துணிமணிகள் துவைத்து, மக்களுக்கு வாத்தியாய் வைத்தியனாய் மாறி, தற்கொண்டான் பேணி, எல்லாப் பிறப்பும் பிறந்து இளைக்கிறார்கள். எனினும் ‘யாராவது என்ன செய்கிறீர்கள்?’ என்று கேட்டால் ‘வீட்டில் சும்மாதான் இருக்கிறேன்’ என்று பதிலளிக்கிறார்கள்.

வீட்டில் இருக்கும் பெண்கள் மட்டுமல்ல, வேலைக்குப் போகும் பெண்களாலும் அடுப்படிச் சிறையிலிருந்து மீளமுடியவில்லை. வீட்டு வேலைகளில் 83% வேலைகள் பெண்களால்தான் செய்யப்படுகின்றன என்கிறது 2019இல் மேற்கொள்ளப்பட்ட ஓர் அனைத்திந்தியக் கணக்கெடுப்பு. தமிழகத்துப் பெண்களில் 82% பேர் ‘ஊதியமற்ற வீட்டுவேலை’களை மேற்கொள்ளும்போது, ஆண்களில் 24% பேர்தான் அப்படியான வீட்டு வேலைகளில் ஈடுபடுகிறார்கள்.

கொம்புளானா

இந்த இடத்தில் அ.முத்துலிங்கம் எழுதிய ஒரு சிறுகதை நினைவுக்கு வருகிறது- கொம்புளானா

(“மகாராஜாவின் ரயில் வண்டி”, காலச்சுவடு, 2001). தமிழில் பெரிய ழானா இருக்கிறது. சின்ன லானா இருக்கிறது. இடையில் இது என்ன கொம்புளானா? அது சாந்தனுக்குக் கை வருவதில்லை. எட்டு வயதுப் பையன். அம்மாவோடும் ளகரத்தோடும் சண்டைப் போட்டுக்கொண்டு விளையாடப் போய்விடுகிறான். அடுத்து அம்மா மகளை மாறுவேடப் போட்டிக்குச் சிங்காரித்து அனுப்புகிறாள். அன்று அவளுக்குப் பிறந்த நாள். அவளாகவே கேக் செய்து, அவளாகவே சமைத்து, அவளாகவே உடுத்தி, அவளாகவே காத்திருக்கிறாள். கணவனும் பிள்ளைகளும் வந்ததும் அவசரப்படுத்துகிறார்கள். இவள் கேக்கை வெட்டிய பிறகு மிகவும் அலங்காரமாகாச் சுற்றிய ஒரு பரிசுப்பொருளை கணவன் கொடுக்கிறான்.

அவள் கேட்ட நைக்கி நடக்கும் சப்பாத்தாக இருக்குமோ? ஜிம் உடுப்பாக இருக்குமோ? புக்கர் பரிசு பெற்ற புத்தககம் ஒன்று கேட்டிருந்தாள். அதுவாக இருக்குமோ? பார்சலைப் பிரிக்கிறாள். அது ஒரு சைனிஸ் வொக். நூடுல்ஸ் போன்ற உணவு வகைகளைச் சமைப்பதற்கு ஏதுவான பாத்திரம். ‘அம்மா, இனிமேல் நூடுல்ஸ் செய்யுங்கோ’ என்கிறார்கள் பிள்ளைகள். இனிமேல் இட்லி, தோசை, இடியாப்பம், அப்பம், புட்டு, உப்புமா என்ற சமையல் சாகரத்தில் நூடுல்ஸும் சேர்ந்துவிடும். அவளுக்கு திகைப்பாகவும் அவமானமாகவும் ஏமாற்றமாகவும் இருக்கிறது. அவளது கண்களுக்குப் பின்னால் ஒரு சமுத்திரம் குடியிருந்தது. ஆனால் அவள் தடுத்து வைக்கிறாள். கதையில் வரும் இந்த அம்மாவைப் போலத்தான் பெண்களில் பலரும் தமக்கு இழைக்கப்படும் அநீதியைச் சகித்துக்கொண்டுதான் ஒவ்வொரு நாளையும் கடத்துகிறார்கள். அவர்களுக்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை. ஊதியமும் கிடைப்பதில்லை.ஊதியமற்ற வேலை

வீட்டு வேலைக்கு ஊதியம் என்கிற இந்தக் கோரிக்கை புதியதன்று. 1972ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இதற்காக ஓர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. விரைவில் இது பல மேற்கு நாடுகளுக்கும் பரவியது. இந்தியாவில் 2012ஆம் ஆண்டு மன்மோகன் சிங் அரசில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த கிருஷ்ணா திராத் வீட்டுவேலை செய்யும் மனைவிமார் ஊதியம் பெற வேண்டுமென்றார்; அதைக் கணவன்மார்தான் வழங்க வேண்டுமென்றார். பல சமூக நலம் விரும்பிகள் அந்த விவாதம் அதற்கு மேல் போகாமல் பார்த்துக் கொண்டனர்.

ஒரு பக்கம் கமலஹாசன் போன்றவர்கள் இந்த ஊதியத்தை அரசு வழங்கவேண்டும் என்கிறார்கள். கிருஷ்ணா போன்றவர்கள் கணவன்மார் வழங்கவேண்டும் என்கிறார்கள். கங்கனா போன்றவர்கள் இப்படி ஓர் ஊதியமே வேண்டாம், யாவும் நலமே என்கின்றனர்.

வீட்டுப் பணிகளுக்கு ஊதியம் வழங்குவதை எதிர்ப்பவர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். முதல் வகை ஈன்று புறந்தருதல் எந்தலைக் கடனே, அதற்கு ஊதியம் வழங்கி அவமானப்பாடுத்தாதீர்கள் எனும் கங்கனா வகையினர். இரண்டாம் வகையினர் பெண்கள் கசக்கிப் பிழியப்படுவது உண்மைதான், ஆனால் ஊதியம் வழங்கினால் அந்தப் பணி அவர்களுக்கேயானது என்று விதிக்கப்பட்டுவிடும், ஆகவே ஊதியம் வழங்கக் கூடாது என்பவர்கள்.

ஆக, ஃஊதியத்தை எதிர்ப்பவர்கள் இருக்கிறார்கள், ஆதரிப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் இப்படி ஓர் ஊதியம் பரவலாக வழங்கப்பட்டதாகச் செய்திகளில்லை. எனில், இரண்டு வாரங்களுக்கு முன்பு (5.1.21) வந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பொன்று வீட்டு வேலையையும் ஒரு தொழிலாகக் கருதவேண்டும் என்று வாதிடுவோர் கையில் ஓர் ஆயுதமாய் மாறக்கூடும்.

2014ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த சாலை விபத்தில் ஸ்கூட்டரில் பயணித்த ஒரு தம்பதி உயிரிழந்தனர். கணவன்- ஆசிரியர். மனைவி- இல்லத்தரசி. இவர்களின் இரண்டு பிள்ளைகள் தாத்தாவின் பராமரிப்பில் இருக்கிறார்கள். இவர்கள் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து ரூ40.7 இலட்சம் இழப்பீடு கோரினார்கள். டெல்லி உயர்நீதிமன்றம் இதை ரூ.22 இலட்சமாகக் குறைத்தது. இவர்கள் மேல்முறையீட்டுக்குப் போனார்கள். உச்சநீதிமன்றம் தம்பதிகளுக்கான இழப்பீட்டைக் கணக்கிடும்போது மனைவியின் வீட்டுப் பணிகளுக்கும் ஊதியத்தை கணக்கிட்டது. இப்போது அது இழப்பீட்டை ரூ.33.20 இலட்சமாக உயர்த்தி உத்தரவிட்டிருக்கிறது. பெண்களின் வீட்டு வேலைக்குச் சமூக மதிப்பும் பொருளாதார மதிப்பும் உண்டென்பதை உலகம் அறியட்டும் என்றும் நீதியரசர்கள் தமது தீர்ப்புரையில் சொல்லியிருக்கின்றனர்.

ஆனால் இப்படி ஒரு தீர்ப்பையும் இழப்பீட்டையும் அந்த இல்லத்தரசியின் மறைவுக்குப் பிறகே அவரது பிள்ளைகளால் பெற முடிந்திருக்கிறது. உயிரோடு வாழும்போதே வீட்டுப் பணியாற்றும் பெண்களுக்கு ஊதியமும் அங்கீகாரமும் கிடைக்க என்ன வழி? வளர்ந்த நாடுகளின் நிலை எப்படி இருக்கிறது?நல்லொழுக்கம் கல்லாமல் பாகம்படும்

ஹாங்காங்கை எடுத்துக் கொள்வோம். அங்கே மாதர் அனைவரும் பள்ளிப்படிப்பை முடித்தவர்களாக இருப்பார்கள். பெரும்பாலான பெண்கள் வேலைக்குப் போவார்கள். வசதியிருப்பவர்கள் பணிப்பெண்களை வைத்துக் கொள்வார்கள். வீட்டு வேலைகளைக் கணவனும் மனைவியும் பங்கு போட்டுக் கொள்வார்கள்.

இருபதாண்டுகளுக்கு முன்பு மா-ஆன்-ஷான் என்கிற ஒரு புறநகர்ப் பகுதியில் வேலை பார்த்தேன். உடன் பணியாற்றிய ஒரு சீன நண்பர் வேலை நேரம் முடிந்ததும் வீட்டுக்கு விரைவாகப் போவதில் துடியாக இருப்பார். நண்பருக்கும் அவரது மனைவிக்கும் ஓர் உடன்பாடு இருந்தது. முதலில் போகிறவர் இரவு உணவைச் சமைக்க வேண்டும். இரண்டாவதாகப் போகிறவர் பாத்திரம் கழுவவேண்டும். நண்பருக்கு இரண்டாவது வேலை பிடித்தமில்லை. அதனால் மனைவிக்கு முன்பு வீட்டிற்கு போகவேண்டும் என்பார். சாத்தியப்படாத நாட்களில் அவருக்குப் பிடிக்காவிட்டாலும் பாத்திரம் கழுவித்தான் ஆகவேண்டும். அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். அந்தப் பிள்ளைகள் அப்பாவும் அம்மாவும் வேலைகளைப் பங்கு போட்டுக் கொள்வதைப் பார்த்துத்தான் வளர்ந்தார்கள். இப்போது அவர்களுக்கும் மணமாகிவிட்டது. வீட்டு வேலைகளைத் தத்தமது துணைவருடன் பகிர்ந்து கொண்டிருப்பார்கள். அதை அவர்களுக்கு யாரும் தனியாகச் சொல்லித்தர வேண்டியதில்லை.

ஆனால் நமது நிலைமை நேர்மாறானது. நமது பள்ளிப் புத்தகத்தில் குடும்பம் என்கிற பாடத்தில் வரையப்பட்டிருக்கும் சித்திரத்தில் அப்பா நாளிதழ் வாசித்துக் கொண்டிருப்பார்; அம்மா அகப்பையுடன் அடுப்பின் முன் நின்று கொண்டிருப்பார். ஏனெனில் குடும்பத்தில் பொருள்
ஓங்கி வளர்ப்பவன் தந்தை;

மற்றைக் கருமங்கள் செய்பவள்தான் அன்னை. இந்தச் சித்திரம்தான் கொம்புளானா கதையிலும் வெளிப்படுகிறது. அந்தக் கதையைப் படித்தபோது எனக்கு இப்படித் தோன்றியது. கதையில்ப் வருகிற அப்பா பெரிய ழானா. பிள்ளைகள் சின்ன லானா. அம்மாதான் கொம்புளானா. இந்தக் கொம்புளானா சுயநலம் கருதாமல் தமிழுக்கு எவ்வளவு உழைக்கிறது. ஆனால் ஒருவருக்கும் அதன் மதிப்புத் தெரியவில்லை. அதன் பயன்பாட்டைச் சந்தேகிக்கிறார்கள். அதை அங்கீகரிக்க மறுக்கிறார்கள். தமிழுக்கு ழகரமும், லகரமும் மட்டுமில்லை, ளகரமும் கண்டிப்பாக வேண்டும்.

அப்படியான அங்கீகாரம் கிடைக்கும்போது காலாகாலமாக நிறுவப்பட்டு வந்திருக்கும் ஓர் அநீதி நேராக்கப்படும். பெண்களுக்கு ஊதியம் என்பதைக் கொள்கை அளவிலாவது ஒப்புக்கொள்கிற மன நிலைமைக்கு நமது சமூகம் உயரும். அடுத்து, வீட்டுவேலைகளைச் செய்வது தங்களுக்கு இழுக்கல்ல, மாறாக அப்படிச் செயவதன்மூலம் மனைவிமாரைக் கண்ணியப்படுத்துகிறோம் என்றும் ஆண்கள் உணர்வார்கள்.

மு இராமனாதன், எழுத்தாளர்,
ஹாங்காங்கின் பதிவு பெற்ற பொறியாளர்.
தொடர்புக்கு: [email protected]