7 தலைப்புகளில் 29 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.கருத்துச் செறிவுமிக்க கட்டுரைகள் வாசிக்க இலகுவான மொழி நடையில் நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கின்றன.
நல்ல வாசகன் ஒருவன் சமூக பிரக்ஞையுடன் படைப்பு மொழியும் கைவரப் பெற்றிருந்தால் மட்டுமே இத்தகைய கட்டுரைகள் சாத்தியமாகும்.
ராமநாதனுக்கு குறிப்பிடத்தகுந்த கல்வி பின்புலமும், வெளிநாடுகளில் பணியாற்றிய அனுபவமும், தேர்ந்த இலக்கிய வாசகன் என்ற தகுதியும் இருக்கிறது.
இளம் வயது சிவாஜி ரசிகனாக தன்னை அடையாளப்படுத்துபவர்,தமிழணங்கின் நிறம் குறித்தும் முற்போக்கு சிந்தனையுடன் ஆராய்கிறார்.
சீனர்களின் நம்ப முடியாத ஒழுக்கம் குறித்தும், பொதுவுடைமை தத்துவம் வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ள நாடு என்ற அளவில் அந்நாட்டினைக் குறித்தும் இக்கட்டுரைகளின் மூலம் அறிய முடிகிறது.
இந்திய ரயில்வேயை பொறுத்த அளவில் வடநாட்டினர் மிகுதியாக (முறையற்ற வழிகளிலும்) பயன்படுத்தினாலும், வருவாய் தென்னகத்திலிருந்தே மிகையாகக் கிடைப்பதும், ரயில்வே உள் கட்டமைப்புகளில் தமிழகம் போன்ற தென்னக மாநிலங்கள் காரணம் இன்றி புறக்கணிக்கப்படுவதையும் இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப் போகிறோம்?
புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்ட நாளில், செங்கோல் குறித்தும், நாட்டின் முதல் குடிமகன் புறக்கணிக்கப்பட்டமை குறித்தும், இருக்கை அமைப்புகளில், எண்ணிக்கையில், பொருத்தமற்ற நடவடிக்கைகள் தொடர்பாகவும் செய்திகள் காணக் கிடைத்தன.
வலதுசாரிகளின் மறைமுகத் திட்டங்கள் குறித்து அறிய நேர்கிறபோது பெரும் அச்சமே தோன்றுகிறது.
மக்கள் தொகையை நேர்மறையாக சிந்தித்து மனித வளத்துடன் தொடர்புபடுத்தும் வாய்ப்பு இருந்த போதும் முழுமையாக அவ்வளத்தை பயன்படுத்த திராணியற்ற ஆட்சியாளர்களால் ஒட்டுமொத்தமாக மக்களின் வாழ்க்கைத் தரம் குறையவே செய்கிறது.
மக்கள் தொகையின் அடிப்படையில் உலகின் பெரிய நாடு என்ற பெயர் நமக்கு என்ன சிறப்பைத் தந்து விடப்போகிறது?
வலதுசாரிகளை நடுநிலையோடு விமர்சிப்பவர் பிரதமரின் பேச்சு தடைபடக் கூடாதா?, டெலிபிராம்ப்டர் பயன்படுத்துவது அவ்வளவு பெரிய தவறா என்றவாறு விவாதிக்கையில் அவரது நடுநிலை பளிச்சிடுகிறது.
இதேபோன்ற தர்க்க ரீதியான விவாதமே எம்பிக்களுக்கு ஊதியம் எந்த வகையில் எல்லாம் அவசியப்படுகிறது? என்பதை நியாயப்படுத்துவதிலும் வெளிப்படுகிறது.
பெண்ணாகப் பிறந்தவள் காலம் முழுக்க உழைத்துக் கொண்டே இருக்கிறாள். அவளது உழைப்பை சமூகம் எந்த வகையிலும் அங்கீகரிப்பது இல்லை. அந்த வகையில் தமிழக அரசால் வழங்கப்படும் பெண்களுக்கான உரிமைத் தொகை நிச்சயம் சமூக மேம்பாட்டிற்கு பயன்படும்.
இனி எத்தனை காலமானாலும் பெண்கள் உடுத்தும் முறையை குறை சொல்லிக் கொண்டே இருப்பினும் எந்த உடைகளை அணிவது என்ற உரிமை ஆண்களைப் போன்றே பெண்களுக்கும் உள்ளது என்பதை ஏற்கும் பக்குவமும், பெண்ணை சக மனித உயிராக நாகரீகமாக காணும் குணமும் ஆண் சமூகம் வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
தமிழருக்கு குடும்பப் பெயர் தேவையா? என்று ஆராயும் கட்டுரை ஆதார், பான் கார்டுகளை பெற்ற காலங்களின் சங்கடங்களை நினைவுபடுத்தியது.
அசைவ உணவுப் பிரியர்களை தர்ம சங்கடங்களுக்கு உட்படுத்தும் மேட்டிமைத்தனங்களை ஒரு கட்டுரை சுட்டுகிறது.
தூய்மையின் அடையாளமாக வெண்மை நிறமும், எதிர் நிலையாக கருப்பு நிறமும் வழங்கப்படுவதை மற்றொரு கட்டுரை சாடுகிறது.
கொரோனா கால நினைவுகளை மீட்டெடுத்தன அத்தலைப்பில் எழுதப்பட்ட நான்கு கட்டுரைகளும்.
புலம்பெயர் தொழிலாளர்களின் அவல வாழ்வினை பிறிதொரு நான்கு கட்டுரைகள் பேசுகின்றன.
வாழ்வாதாரத்திற்காக கூலி வேலைக்கு வருபவர்களிடம் வெறுப்பை விதைக்க வேண்டியதில்லை. அலுவலர் நிலையில் நமது வாய்ப்புகளைப் பறித்துக் கொண்டு ஒன்றிய அரசு அலுவலகங்களில் வந்தமர்பவர்களே நமது பிள்ளைகளுக்கு அச்சுறுத்தல் அளிக்கிறார்கள் என்ற சிந்தனை மிகவும் நியாயமானது.
வலது சாரி பிற்போக்குத் தனங்களை பல கட்டுரைகள் நுட்பமாக பகடி செய்கின்றன.
தேர்தல் குறித்த கட்டுரைகளும், பெண்ணியம் சார்ந்த கருத்துகளை முன்வைக்கும் கட்டுரைகளும், அதிகாரம் தொடர்பான துணிச்சலான கருத்துகளை முன்வைக்கும் கட்டுரைகளும் நூலின் இறுதியில் அமைகின்றன.
அன்னியர் ஆட்சிக் காலத்தில் அவர்தம் வசதிக்காக ஏற்படுத்தப்பட்ட ஆர்டர்லி முறை, சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் கழிந்த போதும் இன்னமும் தொடர்வது பெரும் அவலம்.
சமகால நிகழ்வுகள் குறித்தும், மேம்பட்ட சிந்தனைகள் தொடர்பாகவும் வாசிக்க விரும்புபவர்கள் அணுக வேண்டிய நூல் இது.
நூலின் தகவல்கள் :
நூல் : தமிழணங்கு என்ன நிறம்? (Thamizhanangu Enna Niram)
சமூகம் அரசியல் சார்ந்த கட்டுரைகள்
ஆசிரியர் : மு.ராமநாதன் (Mu.Ramanathan)
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
பக்கங்கள் : 176 பக்கங்கள்
விலை : ரூபாய் 170
நூலைப் பெற : https://thamizhbooks.com/product/thamizhanangu-enna-niram/
நூல் அறிமுகம் எழுதியவர் :
சரவணன் சுப்பிரமணியன்
மதுராந்தகம்
தமிழணங்கு என்ன நிறம்? (Thamizhanangu Enna Niram) – நூல் அறிமுகம்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.