சமீபத்தில் நான் பங்கெடுத்த நான்கு வார பறையிசை பயிற்சி முகாமில், நேரில் சந்தித்த இசைக் கலைஞர் திரு. மு.வெ.ஆடலரசு அவர்களின் பேச்சைக் கேட்கும் போதே, நாட்டுப்புற இசை குறித்த எண்ணற்ற புதிய தகவல்களையும், தனது இசை ஆய்வுப் பயணம் குறித்த அனுபவங்களையும் அறிந்து வியப்பில் ஆழ்ந்திருந்தேன். தொடர்ந்து, மாற்று ஊடக மையத்தின் சமூக வலைதள அறிவிப்பின் வாயிலாக, ஆடலரசு அவர்கள் எழுதிய “இசை மொழியும் ஆதி இனமும்” என்ற இந்த நூல் அறிமுகமானது.
இந்நூலின் முன்னுரையில், பறையிசை குறித்த அறிவியல் தன்மை தொடங்கி, அதனைப் பயிலும் போது வெளிப்படும் இயங்கியல் தன்மை வரை சுருக்கமாக அறிமுகம் செய்கிறார். இந்த ஆய்வுகளுக்கு”இசை அரசியல்” என்ற முக்கியமான தலைப்பின் மூலம், இந்நூல் பேச இருக்கும் கருதுகோளை முன்வைத்து, நாட்டுப்புற இசை பற்றிய ஆய்வுகள் அரசியல் நடவடிக்கைகளாக மாறவேண்டும் என வலியுறுத்துகிறார்.
தமிழர்களின் மிகத் தொன்மையான தோலிசைக் கருவியான பறை, சங்க காலத்தில் செய்திகளை அறிவிக்கவும், போர்க்களத்தில் வீரர்களுக்கு ஊக்கமளிக்கவும், இறுதிச் சடங்குகளிலும் பயன்படுத்தப்பட்டது. ‘அறை’ (பேசுதல்) என்ற சொல்லிலிருந்து பறை என்ற சொல் தோன்றியது. இது வெறும் இசைக் கருவியாக மட்டுமின்றி, தமிழர் பண்பாட்டின் அடையாளமாகவும் விளங்குவது குறிப்பிடத்தக்கது. பழங்கால இசை பற்றியும், அவற்றைப் பதிவுசெய்து பாதுகாக்கும் எகிப்து நாட்டின் இசை வரலாறு தொடங்கி, வண்டு துளையிட்ட மூங்கிலில் காற்று புகுந்து உருவாக்கிய பூமியின் முதல் இசை வரை பேசுகிறார்.
இசை குறித்த பல்வேறு அறிவியல் விளக்கங்களை, நமது வாழ்வோடு பிண்ணி இருக்கும் இசையை பற்றிய அறிஞர்களின் மேற்கோள்களை கொண்டு விளக்கும் அதே நேரம், இசையை உயர்ந்த / தாழ்ந்த நிலைகள் எனப் பாகுபாடு பார்க்கும் வீணர்களைச் சாடுகிறார். உலகின் முதல் இசை – மனிதனின் கைதட்டல் தான் என்னும் அதேநேரம், காலப்போக்கில் அப்போதைய ஆதி இசையை இரசிக்க முடிந்த மனிதனின் முதல் ஆற்றலையும் ஆர்வத்தையும் கண்டு வியப்பு தான் மேலிடுகிறது.
இசை குறித்த அறியாமைகள் முதல், நாட்டுப்புற இசை குறித்து, மேலை நாடுகளில் உள்ள கருத்துக்களை ஆய்வு செய்து, அவர்களின் மேற்கோள்களுடன் நம் நாட்டுக் கலைகளுடன் பொருத்திப் பார்க்கிறார்.
16 கைதட்டல்கள் 8 மணி நேரப் புத்துணர்ச்சியைத் தரும் வல்லமை கொண்டது. கும்மிப் பாட்டும் நடனமும் கைதட்டலின் வாயிலாக முன்னெடுக்கப்பட முக்கியமான கலை வடிவம், குறிப்பாக திருநங்கைகள் இதனை தங்கள் பாதுகாப்பிற்காக பயன்படுத்துவது, போன்ற புதிய விளக்கங்களைத் தருகிறார், ஆசிரியர்.
இசை எந்தெந்த இயல்களுடன் போராடியது, சண்டை செய்து வந்தது என்பதை ஒவ்வொன்றாக விவரிக்கிறார். இசைத் தூய்மை என்ற கருத்தில் இருந்து, இசையை வெகுஜனப்படுத்திய இளையராஜா என்று சமூகத்தில் ஏற்பட்ட மாற்றத்திற்கான முக்கியமான அம்சத்தை விரிவாக எழுதி இருக்கிறார்.
இசை குறித்து நடத்தப்பட்ட ஆய்வுகளில் முக்கியமான ஒன்றாக சி.வி.ராமன் விளைவை விளக்கிய இந்நூலில், மிருதங்கம் மற்றும் வயலின் ஆகியவற்றின் ஒலி அதிர்வெண்களைக் கொண்டு, மென்மேலும் புதிய முடிவுகளைத் தந்தன என்கிறது. அவர் ஆய்வுகளின் மூலம் இசையை அறிவியலாக்கியவர் – அதேநேரம், பறை போன்ற பழமையான இசைக் கருவியை ஏன் ஆய்வு செய்யவில்லை என்றும், பறை இசைக்கருவியை மையமாகக் கொண்டு ஆய்வு செய்த ஆய்வாளர் பாக்யராஜின் முடிவுகள் இசையுலகில் கவனிக்கப்படாதது குறித்தும், தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறது.
மேலும், நிறக் கவர்ச்சி அரசியல் இசை ஆய்வுகளை எவ்வாறு அணுகியது, வேற்று மொழி இசை என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தியது, சமூகப்
பொதுப்புத்தியில் அது எவ்வாறு பார்க்கப்பட்டது போன்ற நுட்பமான தகவல்களை அடுக்குகிறார்.
அடுத்தடுத்து, இசையின் நான்கு முக்கிய வகைமைகள், அவற்றுள் பழங்குடி இசையும், நாட்டுப்புற இசையும், செவ்வியல் மற்றும் வெகுஜன இசைக்கு முன் பெரும் அதீத பொருளாதார அரசியலை விரிவாகப் பேசுகிறார். இவ்வாறு, பாரதி புத்தகாலயத்தின் புக் டே வலைத்தளத்தில் வெளியிட்ட கட்டுரைகளை தொகுத்து உருவாக்கப்பட்ட இந்த நூல், 2020ம் ஆண்டு சிறந்த படைப்பிற்கான விருதை தமிழக அரசிடம் இருந்து பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
நூலின் உள்ளர்த்தமும் கருத்துக்களும் புதியதாகவும், அரிதானவையாகவும் உள்ளன. அதேநேரம், சொற்கோர்வையும் அச்சுப் பிழைகளும் இல்லாமல் இருந்தால், தடையின்றி படிக்க முடியும்.
இவ்வாறு, தான் பார்த்த, கேட்ட, நேரடியாக அனுபவித்த தகவல்களைக் கொண்டு, விரிவான இந்த ஆய்வு நூலை வெளியிட்டுள்ளார், நாட்டுப்புற இசைக் கலைஞரும் ஆய்வாளருமான, முனைவர் ஆடலரசு அவர்கள். நாட்டுப்புறவியலில் இசையின் பங்கு குறித்து, உலகளாவிய அளவில் இருந்த பல்வேறு வரலாற்றுத் தகவல்களை, தேடித் தொகுத்த இந்நூல் பண்பாடு குறித்த முக்கியமான ஆவணமாக விளங்குகிறது. இந்தத் தகவல்களை வாசிக்கும் அதேநேரத்தில், தமிழர்களின் ஆதிக்கலைகளைப் பயிலும் வாய்ப்பும் கிடைத்ததில், மகிழ்ச்சி அடைகிறேன்.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | இசை மொழியும் ஆதி இனமும் |
| ஆசிரியர்: | மு.வெ.ஆடலரசு |
| வெளியீடு: | |
| விலை: | ₹.140 (10% Discount Price ₹.125) |
| அறிமுகம் எழுதியவர்: | ✍🏻 சங்கர்.T.A.B, சென்னை. |
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

