மு.முபாரக் எழுதிய “ஆ காட்டு” கவிதை தொகுப்பு புத்தகம் | Mubarak's Aaa Kattu Tamil Book Review | பேரா. எ.பாவலன் | www.bookday.in
மு.முபாரக் எழுதிய “ஆ காட்டு” கவிதை தொகுப்பு புத்தகம் | Mubarak's Aaa Kattu Tamil Book Review | பேரா. எ.பாவலன் | www.bookday.in

மு.முபாரக் எழுதிய “ஆ காட்டு” கவிதை தொகுப்பு – நூல் அறிமுகம்

 “ஆ காட்டு” கவிதை தொகுப்பு – நூல் அறிமுகம்

கவிஞனின் மகத்தான செயலூக்கத்தால் நாள்தோறும் மொழி பரிணாம வளர்ச்சி அடைந்து வருகிறது. உலக மொழிகளில் புதிய புதிய சொற்கள் உருவாவதும் அதற்கான கலைச்சொற்கள் தோன்றுவதும் தமிழுக்கு புதிதல்ல. பாரதி கூறியதைப் போல “சென்றிடுவீர் எட்டுத் திக்கும் — கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!” என்னும் நிலை மாற்றம் அடைந்துள்ளது. இன்று தமிழ்மொழிக்கு இணையாக ஆங்கிலத்தில் கலைச்சொற்கள் கண்டுபிடிக்கும் வரலாறு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் உலகில் சிறந்து விளங்கும் ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியைக் (Oxford Dictionary) குறிப்பிட முடியும்.  தமிழ்ச் சொற்கள் அந்த அகராதியில் கலந்திருக்கின்றன. அப்பா, அம்மா இரு சொற்களும்  பயன்படுத்தப்பட்டதை எண்ணிப் பார்க்கும்போது,  முன்பெல்லாம் ஆங்கிலத்தில் ஒரு புதிய சொல் தோன்றினால்? அதற்கு இணையான தமிழில் கலைச்சொற்கள் தேடிய காலம்போய், தமிழ்மொழிக்கு இணையான கலைச் சொற்களை ஆங்கிலம் மற்றும் இதர மொழிகளில் பொருள் தேடவேண்டிய காலத்தில் இருந்து கொண்டிருக்கிறோம் என்பது வரலாற்றின் பேரெட்டை காலம் எப்படி புரட்டிப்போட்டு இருக்கிறது என்பதை சிந்திக்க வேண்டும்.

மொழிக் கலப்பு தோன்றுவதற்கு பல்வேறு காரணம் இருந்தாலும், மிகமுக்கிய காரணம் தமிழில் தோன்றிய நூல்களின் பெருக்கம். நாள்தோறும் நூல்கள் தோன்றுவதும் பெருகுவதும் இதற்கு முக்கியகாரணம். ஆண்டொன்றுக்கு தமிழில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் பல்கிப்பெருகி வருகிறன. சிறுகதை, நாவல், நாடகம், பயண இலக்கியம், ஆராய்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள் என்னும் வரிசையில் கவிதையும் அடங்கும். இதில் சரிபாதி கவிதையாக இருப்பது மகிழ்ச்சிக்குரியது. காரணம் எல்லோருக்கும் இயல்பாய் வருவது கவிதைதான். அதனால் தங்களை கவிஞர்களாக உருவகப்படுத்திக் கொண்டு கவிதை எழுதத் தொடங்குகிறார்கள். அதனால் அவர்களுக்குக் கவிதை இயல்பாய் வருகிறது.

ஒரு படைப்பின் வெற்றி தோல்வி என்பது காலம் தீர்மானிக்கும். எதிர்காலத்துக்கு தேவையானதை நிகழ்காலத்தில் பேசும் படைப்பாக இருந்தால் அதை மானுட சமுதாயம் கொண்டாட தவறியதில்லை. 2000 ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றிய சங்க இலக்கியம் இன்றும் மக்கள் கொண்டாடும் ஒரு பேரிலக்கியமாக விளங்குகிறது.  சங்க இலக்கியம் தொடங்கி சமகால இலக்கியம் வரை எண்ணற்ற படைப்புகள் வந்திருந்தாலும் மானுட சமுதாயத்தை அலங்கரிக்கும் படைப்புகள் நிலைபெற்று வாழும் இலக்கியமாகவும் இருந்து வருகிறது. கவிதையை பொறுத்தவரையில் இன்றும் நான் ஒரு மாணவன் தான் என்று சொன்ன இன்குலாப், அதேபோன்று எட்கார் ஆலன்போ சிறந்த இடத்தில் சிறந்த வார்த்தைகளை கொண்டு எழுதப்படுவது கவிதை என்கிறார். இந்த இரு கவிஞர்களின் கருத்துக்கள் மிக முக்கியமானவை.

அந்த வகையில் முபாரக் ஆ காட்டி எனும் கவிதையைச் சுட்ட முடியும். இது கவிஞரின் முதல் தொகுப்பு. ஆனால் வாசித்து முடித்த பின்பு அப்படி தோன்றவில்லை. 1. கவிதை எழுத வருவதற்கு முன்பு நிறைய கவிதையைப் பற்றிய புரிதலோ வாசிப்போ அல்லது தேடலோ இருந்திருக்க வேண்டும். 2. கவிதையைப் பரிசாராத்த முறையில் முயற்சித்திருக்க வேண்டும். அதன் அடிப்படையில் கவிதைக்கான கட்டமைப்பைக் கண்டறிந்த பின்பு இப்படிப்பட்ட ஓர் அற்புதமான படைப்பைத் தந்திருக்கக் கூடும் என்று எண்ணத் தோன்றுகிறது.

ஆ காட்டு கவிதைகள் நறுக்கு தரித்தார் போல துளிப்பா வடிவம் கொண்டு அமைந்துள்ளது.  அதுவெல்லாம் முழுமையான ஹைக்கூ வடிவம் என்று சொல்ல முடியவில்லை. சில கவிதைகள் நீண்டு இருப்பதையும் ஹைக்கூ வடிவத்தை அல்லது இலக்கண கட்டமைப்பை மீறியதாக இருக்கின்றன. பெரும்பாலான கவிதைகளில் பாடுபொருள் எல்லை மீறிய செயலைப் போல எல்லாவற்றையும் பாடியுள்ளார். கவிதையின் பாடுபொருள் பின்வரும் பொருண்மையில் அமைந்திருப்பதைக் காணமுடிகிறது. அம்மா, நீர்நிலை ஆக்கிரமிப்பு, மரணம் ஏற்படுத்தி செல்லும் வலி, வாடகை வீடு, மகள், அப்பாவின் ஸ்பரிசம், சாலை ஓரத்தில் அடிபட்டு கிடக்கும் நாய்க்குட்டி, ஏழையின் கண்ணீரை மழையுடன் ஒப்பிடும் காட்சி, தந்தை மகள் உறவு, அம்மாவின் மரணம்,  பின் நவீனத்துவம், சமூக அவலம், தேவன் சுமந்த சிலுவையின் பாரம், கல்வியின் முக்கியத்துவம், தாயும் சேயும், குடும்பத் தலைவி, உணவு பரிமாறும் அம்மா, விவசாயின் அவலம், தாய் பாசம், மதுவால் ஏற்படும் கேடு, காதல், பசி, தாய்மையின் உணர்வு, பௌத்தம், பேரழிவு, செருப்பு, குழந்தையின் மனநிலை, தனிமை சுகமானது, காடு அழிப்பு, மரணத்தின் தருணம் இப்படி எண்ணற்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் தன்மையில் அவருடைய கவிதைகளின் பாடு பொருள் அமைந்துள்ளன. அவற்றில் பெரும்பங்கு தாயைப் பற்றியும் தாய்மையைப் பற்றியும்  கொண்டாடும் வகையில் அமைந்திருப்பது வரவேற்கத்தக்கது.

மரணத்தைப் பற்றிய அவர் சில இடங்களில் சொல்லி இருக்கிறார். அந்த கவிதைகளை வாசிக்கும் பொழுது, இதுபோன்று சிந்தனை என்னுள் நிழலாடியது.

மரணம் எல்லோர் வாழ்விலும் நீக்கமற நிறைந்து வாழும் ஒரு சடங்காக மாறிவிட்டது. அதனால் மரணம் இல்லாத வீடு ஒன்று இல்லை. இப்படித்தான் ஒரு கிராமத்தில் ஒரு குழந்தையின் மரணம் நிகழ்ந்துவிடுகிறது. இழந்த உயிரை திரும்ப கொண்டு வருவதற்காக தாய் மன்றாடுகிறாள்; போராடுகிறார். நீண்ட காலமாக குழந்தை இல்லாமல் இருந்த அந்த தாய்க்கு அப்பொழுதுதான் அந்த குழந்தை பிறந்திருந்தது. அந்த தளிர் வளர்ந்து சிறு குழந்தையான போது பாம்பு தீண்டி குழந்தை இறந்துவிட்டது. அதன் ஆற்றாமையால் அழுத கண்ணீராய் அந்த தாய் மாரடைப்பு புலம்புகிறாள். அப்பொழுது அந்தக் குழந்தையை மீட்டுத்தரச் சொல்லி அந்த வழியாக வந்த புத்தரிடம் கேட்கிறாள். புத்த இயல்பாக மாண்ட உயிரை மீண்டும் வர வைக்க முடியாது. இது உலக இயற்கை என்ற போதும் அந்தத் தாய் அவரை விடுவதாக இல்லை. இறுதியாக புத்தர் மரணம் இயற்கையானது என்பதை புரியவைக்கும் விதமாக மரணம் நிகழாத வீட்டிலிருந்து கொஞ்சம் உப்பு வாங்கி வந்தால் உன் குழந்தையை உயிர்பித்து தருவதாக கூறினார். அந்தத் தாய்க்கு ஒரு நம்பிக்கை பிறந்தது. உப்போடு தானே வரவேண்டும் இதோ கொண்டு வருகிறேன் என்று சொல்லி புறப்பட்டு செல்கிறாள். வீதி எங்கும் ஒவ்வொரு வீடாக கதவைத் தட்டி உப்பு வேண்டியதன் காரணத்தை சொல்லி கேட்கும் பொழுது அனைவரும் தங்கள் வீட்டில் இழந்த உயிர்களையும் உறவுகளையும் பற்றி கூறி உப்பு தர முன் வந்தாலும் அதை பெற முடியாமல் அடுத்தடுத்த வீடுகளுக்கும் வீதிகளுக்கும் நகரங்களுக்கும் ஊர்களுக்கும் சென்று முயற்சித்தாலும் அவளால் இறப்பு இல்லாத வீட்டில் ஒரு பிடி உப்பைப் பெறமுடியாமல் திரும்பி புத்தபிரானிடம் சரண் அடைகிறாள். புத்தரும் தாயின் கண்ணிருக்கு ஆறுதல் சொல்லி வழி அனுப்புகிறார்.

இப்படி மரணம் அழுத்தி விட்டு செல்லும் பாடும் மிக அழுத்தமானது. கொடுமையானது. என்றாலும் மரணச் செய்தியை கவிஞர் முபாரக் அவர்கள் சொல்லும் பொழுது அதன் துயர் நிறைந்த வலியை எப்படி கடக்க முடியும் என்பதை

யாரென்று தெரியவில்லை
எப்படியென்று
அறியவில்லை
எந்த ஊர்
எனக் கேட்கவில்லை …

RIP
என்ற ஒத்த வார்த்தையில்
கடந்து கொண்டிருக்கிறோம்…
ஒவ்வொரு மரணத்தையும்

எனும் கவிதையில் ஒளிந்து கொண்டிருக்கும் உணர்வு சொல்ல முடியாத துயரத்தை வெளிப்படுத்துகிறது ஆனால் இன்றைய அவசர உலகில் நின்று பேசுவதற்கு கூட நேரம் இல்லாத சூழலில் மரணம் மனிதனை எளிதாக வெற்றி கொள்கிறது என்றுதான் சொல்ல தோன்றுகிறது.

நானாய் அழுது
நானாய் சிரித்து
நானாய் வாழும்
இந்தத் தனிமை
வாழ்வில் ஒருபோதும்
நானாய் இருந்ததில்லை
நான்!
எனும் கவிதையும்
நதியைக் கொன்றவர்கள்
அதன் அருகே
புதைத்துக் கொண்டிருக்கிறார்கள்…
இறந்தவரின் சடலத்தை
எனும் கவிதையும்
வறண்ட நிலத்தில்
சோளக்காட்டு பொம்மை
விவசாயி

முபாரக் எழுதிய இதுபோன்ற எண்ணற்ற கவிதைகள் மானுடத்தையும் ஜனநாயகத்தையும் பற்றி பாடுவதாக அமைந்துள்ளன. பாரதி சொல்வதைப் போன்று “பேசாதவற்றை பேசத் துணிந்தேன்” என்பதை போன்று, இங்கு எத்தனையோ பெரிய விஷயங்களை பேசவேண்டி இருக்கிறது. குறிப்பாக தனிமனித ஒழுக்கம், சமூக ஒழுக்கம், சாதி கொடுமை, மதவெறுப்பு, பெண் விடுதலை போன்ற தளங்களில் தன்னுடைய கூர்மையான பார்வையை திருப்ப வேண்டும்.

கவிஞர் முபாரக் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செல்வார் என்ற நம்பிக்கை துளிர் விடுகிறது

📚 நூலின் விவரங்கள்:

தலைப்புவிவரம்
நூலின் பெயர்:“ஆ காட்டு” நாவல்
தொகுப்பாசிரியர்:மு.முபாரக்
வெளியீடு:படைப்பு-Padaippu
விலை:₹.
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 பேரா. எ.பாவலன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *